Thursday, August 02, 2012

ஆழ் கடலைப்பாருங்கோ


ஆழ் கடலைப்பாருங்கோ
ஆகா என்ன அழகிது
நீல நிறமானது
நீண்டு பரந்து தோன்றுது


அலைகள் வந்து மோதியே
அழகழகாய்த் தோன்றுது
வலைகள் வீசிப்பரதவர்
வாழ்க்கை நடத்த உதவுது.

மீன்கள் துள்ளி பாய்கின்ற
வேகம் என்ன வேகமோ?
வானில் அலையும் மேகத்தை
தழுவ ஆவல் கொண்டதோ?

தோணிகளில் அமர்ந்து அந்த
துணிவு மிக்க மீனவர்
கோணிப் பைகளில் மீன்களைப்
கோலிப் போடும் அழகைப்பார்!.

பாய் விரித்த படகுகளில்
வலை விரித்த பரதவர்
சாயும் பொழுதில் ஒன்று கூடி
மீன் பிடிக்கும் அழகைப்பார்!.

பகலவனும் ஆழ் கடலில்
பாதி மறைந்து செல்வதேன்?
அவனும் மீன் பிடிக்கவோ
ஆழ் கடலில் மூழ்கிறான்?.

சுனாமி என்ற கொடியவன்
தோன்றிக் கடலில் துஷ்டனாய்
விரோதி போல எம்மையே
அழித்த கதை அறிவோமே.

கடலைப் பார்த்து அன்று நாம்
கவிதை பாடி மகிழ்தோமே
கடலின் கொடுமை கேட்டின்று
கலங்கி அழுது வாழ்கிறோம்.

கடல்களின்றி உலகிலே
காவியங்கள் தோன்றுமா?
உடல்கள் வாழ முடியுமா?
ஊர்கள் செழிக்க முடியுமா?

இயற்கை நமது வாழ்க்கையை
ஏற்றம் காணச் செய்யுமே
எதற்கும் கடலில் கவனமாய்
இறங்கி வாழப் பழகுவோம்.

சுனாமி தோன்றும் வழிகளைத்
துரிதமாக அறிந்து நாம்
கவனமாக வாழ்ந்திட்டால்
கடலைக் கண்டு அச்சமேன்?

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment