Tuesday, August 14, 2012

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி

 திருமலை

 தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் திறந்த வெளிச்சுற்று வழிபாடுகளில் தலையாயது கந்தளாய்க் குளத்து மகாவேள்வியாகும். கந்தளாய் நீர்த்தேக்கத்தை நிறைக்கும் கங்கைபோன்ற ‘பொட்டியனாற்று’ ஓரம் உள்ள ‘கால்நாட்டு மண்டபம்;’ என்னும் இடத்தில் மேள தாள சீர்களுடன் ‘கன்னிக்கால்’ நட்டு பல கொட்டகைகள் அமைத்து நாராயண மூர்த்திக்கும் இலட்சுமி தேவிக்கும் திருமண வைபவமாகப் நடைபெறும் மாபெரும் அருவ வழிபாடாக இது விளங்குகிறது.
கங்காணம், தானத்தார், வரிப்பத்து, அடப்பன்மார்கள், கட்டாடியார், இணைக்கட்டாடியார் ,மறிகாறர் பன்னிருவர், மற்றும் ஆதிகோணநாயகர் கோயிலில் வயல் மானியம் பெறும் பெரும்பாலான தொழும்பாளர்கள் இவ்விழாவில் ஊழியம் புரிவர்.

இலட்சுமி நாராயணனின் திருமணத்திற்கு வருகை தருமாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் தம்பலகாமம் வயல்வெளிகளுக்கு நீர் பாயும் மதகருகேயுள்ள ‘ராஜகளரி’ என்னும் இடத்தில் உறைவதாக நம்பப்படும் கண்ணபிரானின் பிரிய மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

நாராயண மூர்த்தியின் திருமணத்திற்கு அட்டதிக்குப் பாலகர்கள், பிரம்மா, சரஸ்வதிதேவி மற்றும் தேவ மாதர்கள்,மங்கலர்கள்,பாண்டவர்கள் மற்றும் அமரர்கள் அரூபிகளாக வநதிருப்பர் என்பது ஐதீகம்.பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இம்மண விழாவில் பலவிதமான கிரிகைகள் நடைபெறும்.ஒவ்வொரு நாளும் இரவு பகலாக வரும் நூற்றுக் கணக்கான ஆண்,பெண்களுக்கு கொட்டகைக்குள் வரிசையாக விரிக்கப்பட்டிருக்கும் வெள்ளையில் பந்தி பந்தியாக இருக்க வைத்து கல்யாணச் சாப்பாடு வழங்கப்படும்.

அமரர்களான மங்கலர் நூற்றியொருவரின் பிரதிநிதிகளாகக் கடமையாற்றும் மறிகாரர் என்னும் பன்னிருவர் அவர்களின் குருவான கட்டாடியார் தலைமையில் ஒவ்வொருநாளும் நடைபெறும் பூசையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதப்பெட்டகத்திற்கு பூசை வழிபாடுகள் செய்து பெட்டகத்திலுள்ள ஆயுதங்கள் சிலவற்றைப் பயபக்தியுடன் தமது குருவாகிய கட்டாடியார் மூலம் பெற்றுக் கொண்டு குழுமாடு பிடிக்கும் ஆயுதங்களோடு மேள வாத்தியங்கள் முழங்க காட்டுக்குச் செல்வார்கள்.

இவர்கள் பன்னிருவரில் இருவர் இஸ்லாமியச் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும்கோயிலூடாக வழங்கப்பட்ட மானியவயல்கள் உண்டு.பின்னாளில் இத்தொழும்பு வழக்கொழிந்து போனதாகச் சொல்லப் படுகிறது.

தம்பலகாமம் நாயன்மார்திடலில் நாராயண வழிபாடாகச் செய்யப்படும் வழிபாடுகளிலும் ‘பட்டாணி’ என்ற ஒரு மடை வைக்கப்படுகிறது. இந்த மடையைப் பெறும் உரிமை இஸ்லாமியச் சகோதரர்களுக்கு உண்டு. இந்த வழமை பல நூற்றாண்டுகளுக்குப் பழமை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

குழுமாடுகள் ஐந்தாறு எனப் பிடிபட்டவுடன் இரவில் நடைபெறும் பொங்கல் விழாவுடன் வேள்வியை நிறைவு செய்வார்கள். இந்த இறுதிநாள் விழாவுக்கு திருகோணமலை மாவட்டத்தின் சகல பகுதிகளில் இருந்தும் ஆண், பெண்,இளைஞர் யுவதிகள் என்று பல்லாயிரக் கணக்கானோர் வந்து கூடுவார்கள். மறிகாரர்கள் தலைக்கொன்றாக பன்னிரெண்டு பானைகள் இருபக்கமும் வரிசையாக வைத்துப் பொங்குவார்கள்.இவர்களின் குருவாகிய கட்டாடியார் ஒரு பெரிய பானையில் பொங்குவர்.

நீர் குறைந்து கந்தளாய்க்குளம் வற்றிக் காணப்படும் காலத்தில் குளத்தை நிறைக்க இந்த மகா வேள்வி செய்யப்படுகிறது. எங்கும் தீப அலங்காரங்களாக ஜொலிக்கும் இவ்விடத்தில் கருங்குன்றுகள் போன்ற குழுமாடுகள் பார்க்கவே பீதியை ஏற்படுத்தக் கூடியவைகளாக சீறிச் சினந்தவைகளாக வரிசையாக மரங்களில் ‘வெழுக்கயிறுகளால்’ பிணைக்கப்பட்டு ஆகங்காரத்துடன் மரங்களைச் சுற்றிச் சுற்றி வரும்.

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய ஆண்டு உற்சவ விழாவை மையமாக வைத்து ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்றாக கந்தளாய்க்குள மகாவேள்வி தம்பலகாமம் நாயன்மார்திடல் வைரத்தடி மடை வைபவம், கள்ளிமேட்டு ஆலையடி முன்றலில் கண்ணகி கோவலன் மணவிழாவாக நடை பெறும் மடை வைபவம், மாகாமத்தில் நடைபெறும் மூர்க்கமாதா வேள்வி, சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை போன்ற மகுடாகம திறந்த வெளி அருவ வழிபாடுகள் சுற்றிச் சுற்றி நடைபெற வேண்டுமென்ற நியதிகள் உண்டு.

 இந்த ஆலயத்திற்குக் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி நாராயண மூர்த்தி வழிபாட்டிற்காகவும் பத்தினித்தேவி மூர்க்காம்பிகா போன்ற பல தெய்வ வழி பாட்டிற்காகவும் செலவிடப்பட வேண்டும் என்பது பழைய நியதியாகும்.இது ஒரு வருடம் பொங்கல் மறு வருடம் மடை என்ற அடிப்படையில் நடைபெறும். எண்ணிப் பன்னிரெண்டாயிரம் எண்ணாமல் பன்னிரெண்டாயிரம் வெற்றிலை, பாக்கு, பழம்,பூ ஆகியவற்றை மடையில் வைப்பது மரபு. குளக்கோட்டு மன்னன் கந்தளாய்க் குளத்தைக் கட்டிய பின்னர் மகா விஸ்ணுவின் ஆணைப்படி அக்குளத்திற்குக் காவலாக விநாயகர்,; காளமாமுனி, புலத்தியர், மங்கலர், வீரபத்திரர், வதனமர், வைரவர், அண்ணமார், ஐயனார், பூதகணங்கள், கன்னிமார், பத்தினி, காளி போன்ற தெய்வங்களை காவலாக வைத்ததாகவும் இக் காவல் தெய்வங்களுக்கு ஒரு வருடத்தில் மடையும் மறு வருடத்தில் வேள்வியும் செய்யும் படியும் குளக்கோட்டன் பணித்திருந்தான் என்பதும் ஐதீகம்.

உருவ அருவ வழிபாடுகள் தவறாமல் செய்யப்படின், துன்பம் அற்று மக்கள் எல்லாம் சுகமாக வாழ்வர் என்றும் சொன்ன விதிகள் தவறி ஏனோ தானோ என்ற வகையில் நடந்தால் வேளாண்மை விளைவழிந்து மக்கள் துன்பமுற்றுச் சோர்வார்கள் எனவும் கல்வெட்டுப் பாடல் ஒன்று எச்சரிக்கை செய்கிறது.

“அன்ன அரன் பூசைவிதி அபிஸேகம் விழாமுதல் அழகாய்ச் செய்தால்
மின்னுநிறை விளக்கேற்றிக் கிராமதேவதை பூசை விளங்கச் செய்தால்
இன்னலின்றி மக்களெல்லாம் மிகு நிதி சந்ததிகளுடன் இனிதுவாழ்வார்
சொன்ன இந்த முறை தவறில் விளைவழிந்து துன்பமுற்றுச் சோருமாக்கள்.”

மக்களின் வாழ்வை மையமாகக் கொண்டு விவசாயம் செழிப்படைவதற்காக மேற் கொள்ளப்பட்ட இந்த கிராமதேவதை பூசைகள் தற்பொழுது வழக்கொழிந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
( வழக்கொழிந்து வரும் வழிபாடு - ஆவணப்படுத்தலுக்காக...)

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன் அவர்களே

      Delete
  2. பழைய வழக்கங்களை புதுமை என்ற பெயரில் கைவிட்டு வருகிறோம்.தங்கள் ஆவணப் படுத்தும் முயற்சி போற்றத்தக்கது.

    ReplyDelete
  3. நான் அறியாத புதிய தகவல்கள், பாடல்.
    பயனடைந்தேன். நன்றி

    ReplyDelete
  4. தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி

    ReplyDelete
  5. அற்புதமான தகவல்கள் இம் முறை நடைபெறும் வேள்வியினை பதிவு செய்து எதிர்கால சந்ததியினருக்கு கொடுக்கவேண்டியது நமது கடமையாகும்.

    ReplyDelete
  6. பாரம்பரிய தகவல்களை அறியும்படி பதிவிட்டதற்கு நன்றி.
    ஸ்ரீ

    ReplyDelete
  7. சிறப்பு. மீள்கிறது வழக்கு.

    ReplyDelete
  8. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete
  9. அருமையான இன்னபல தகவல்கள்,,,, சோனக சகோதரர்களுக்கும் தம்பலகாமம், கோணேச்சரத்துக்கும் இடையிலான உறவு தொடர்பான உங்கள் தரவுகள் மிகமிக பெறுமதிமிக்க பொக்கிசமானது.
    அதுபற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டால் அங்கே மறைந்திருக்கும் மிகப்பெரும் உண்மை புலனாகும்.
    இதுபற்றி எனது ஆய்வுக்கட்டுரை ஒன்றிலும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன் - ஆனால் அவைபற்றிய ஆதாரங்களைத் திரட்டுவது எனக்கு மிகப்பெரும் கடினமாய் உள்ளது.
    உங்கள் இந்த கட்டுரையில் மட்டுமே ஒரேயொரு ஆதாரம் கிடைத்தது.
    தவிர இந்த உண்மை வரலாற்றின் தோற்றுவாய்க்கும், கந்தலாய்க்குலம், மகாபராக்கிரம சமுத்திரம், வெண்டரசன்குளம் கட்டுமானப் பணிகளுக்கும், மாவீரன் அலெக்ஸ்சாண்டருடனான குளக்கோட்டு மன்னன் போருக்கும் தொடர்புகள் உள்ளது புலனாகின்றது - ஆதாரங்களையும், தரவுகளையும் அணுகும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றை வெளிக்கொண்டுவாருங்கள். தமிழ்கூறு நல்லுலகம் உங்களை வானுறையும் தெய்வத்துள் வைக்கும் - நன்றி (நடேசன் சேனவெளிக்குளம்)

    ReplyDelete