Saturday, April 20, 2013

இருவரும் ஒருவரானோம்

இருவரும் ஒருவரானோம்

ஆலங்கேணி என்னும்
அழகிய கிராமத்தில்
கோல மயிலான அந்தக்
கோமளத்தைக் கண்டேன்.
வாலைப் பருவம் அவள்
வதனம் அழகின் பிறப்பிடம்
சாலை ஓரத்தில்
சடுதியாச் சந்தித்தேன்.

Wednesday, April 17, 2013

கோணேசர் பிறந்தார் - பகுதி 2

தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்



அன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்
அமைய வேண்டும் என்பதற்காய்
தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்க
தென்னவன் இராவணன் முயன்றபோது
வலக்காலைத் தூக்கி மன்னவனை
வதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டு
வடிவமைத்தார் கோணேசர் திருவுருவை
மகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.

கோணேசர் பிறந்தார் - பகுதி 1

தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்



ஆதிகோணநாயகர் அவதரித்த
அற்புதம் நிறைந்த வரலாற்றை
ஆதியோடந்தமாய் எடுத்துரைக்க
ஐங்கரன் அருளை வேண்டிப்
பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்து
பயன்பெற வேண்டும் என்பதினால்
ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்
எளிதாக்கித் தருகிறேன் ஏற்றருள்க.

Wednesday, April 10, 2013

தம்பலகாமம் தந்த சிறந்த சிந்தனையாளன் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து

பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து

‘கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு’ எனக் கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களால் பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட கள்ளிமேடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கிராமமாகும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாகிய ‘ஆலையடி வேள்வி வளாகம்’ இத்திடலிலேயே அமைந்துள்ளது.

தம்பலகாமத்தில் மிகப்புகழ்பெற்ற ஆயுள்வேத வைத்தியர்களும், மிகச்சிறந்த கலைஞர்களாகிய அண்ணாவிமார்களும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். குறிப்பாக இருகரங்களாலும் ஆர்மோனியம் வாசிக்கும் அற்புதக்கலைஞராகிய திரு. கணபதிப்பிள்ளை அண்ணாவியார் கலாபூசணம் லயஞானமணி திரு. சண்முகலிங்கம், அவரது தம்பியாகிய திரு மகாலிங்கம், ‘சண்இசைக்குழுவின்’ ஸ்தாபகர் திரு. முருகதாஸ் ,தலைசிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் திரு.நாகராசா ,சிற்பக்கலைஞர் திரு.கிருபானந்தன் ஆகியோர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே.

இத்தகைய சிறந்த கள்ளிமேட்டில் கோணாமலை ஐயாத்துரை என்பவருக்கும் அவரது தர்மபத்தினி தங்கத்திற்கும் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து அவர்கள்.

ஆரம்ப காலங்களிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அமரர் சரவணமுத்து அவர்கள் தம்பலகாமத்திலிருந்து தமிழகம் சென்று அங்கு கல்வி கற்று ஆங்கிலத்திலும் புலமைபெற்று பண்டிதராகப் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார்.

Thursday, April 04, 2013

கலாவிநோதன் கலாபூசணம் அமரர் சித்தி அமரசிங்கம்

சித்தி அமரசிங்கம்

கலாவிநோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் கலைஞர் திரு.தம்பிமுத்து என்பவரின் மகனாக 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை கலைஞர் தம்பிமுத்து அவர்கள் நாடகங்களை நெறிப்படுத்துவதிலும் ஒப்பனை மற்றும் ‘மேடையலங்காரம்’ போன்றவற்றிலும் தலைசிறந்து விளங்கினார். இவர் தயாரித்த பல நாடகங்கள் தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் மேடையேற்றப்பட்டு அமோக ஆதரவைப்பெற்றன.

Monday, April 01, 2013

தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்

ஆலயம்
13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.