Wednesday, April 17, 2013

கோணேசர் பிறந்தார் - பகுதி 1

தம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்ஆதிகோணநாயகர் அவதரித்த
அற்புதம் நிறைந்த வரலாற்றை
ஆதியோடந்தமாய் எடுத்துரைக்க
ஐங்கரன் அருளை வேண்டிப்
பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்து
பயன்பெற வேண்டும் என்பதினால்
ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்
எளிதாக்கித் தருகிறேன் ஏற்றருள்க.


குளமும் கோட்டமும் அமைத்ததினால்
குளக்கோட்டு மன்னன் எனும் நாமம் பெற்று
வளமாக இந்நாட்டை ஆட்சி செய்த
வரலாறு போற்றுகின்ற அந்த மன்னன்
மக்களின் வாழ்வுதனை மலரச் செய்ய
வழியமைத்த வரலாற்றுச் செய்திதனை
இக்கவிதை மூலமாய் எடுத்துரைக்க
எனக்கருள் புரிய வேண்டுகிறேன்.

குளமும் கோட்டமும் அமைத்த பின்னர்
குதூகலமாய் இருந்த மன்னன் முகத்தில்
கலக்கமும் கவலையும் சூழக்கண்ட
கருணைநிறை அமைச்சன் அருகில் சென்று
மன்னவா தங்களின் மனக்குறைக்கு
மறுக்காமல் காரணத்தைச் சொல்க என்று
பணிவாகக் கேட்கவும் மன்னன் சொல்வான்
பார்புகழும் அமைச்சரே! பகர்தல் கேட்பீர்.

கடல் மோதும் ‘திருகோண’ நாதனுக்கு
கரை ஓத நீர் மடுக்கும் திருக்குளமும்
அடல் மிக்க ஆலயமும் அமைத்து விட்டேன்
அதிலொரு குறைபாடு கண்டுள்ளம்
இடர்பட எனதுள்ளம் பேதலித்து
இருக்கிறேன் இதுதான் உண்மை
உடனிருந்து எனக்கறிவு புகட்டுகின்ற
உத்தமரே! இதற்கு ஒரு உபாயத்தை

தந்தருள வேண்டுமென தலைவன் சொல்ல
தர்மத்தை நன்கறிந்த வசிட்ட மாமுனி
‘வேந்தனே!உன் கருத்தை விளங்கச் சொல்லு
விரைந்ததற்கு ஆவன செய்வேன்’ என்றார்.
‘குளமும் கோட்டமும் அமைத்து விட்டேன்
குடியிருக்க மக்களைக் கொணர்ந்து சேர்த்தேன்.
வளம் மிகுந்த நாட்டில் மக்கள் என்றும்
வறுமையில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும்.

மழை வேண்டும் போது மழை பொழிய
வழி பாட்டில் வழிவகை செய்ய வேண்டும
வெயில் வேண்டும் என மக்கள் வேண்டும் போது
வெயில் வேண்டும் மக்கள் மகிழ்ச்சியாக
எப்போதும் இருப்பதற்கு ஏற்றதான
இறைவழி பாட்டை இயற்ற வேண்டும்
தந்தருள வேண்டும் தவத்தில் மேலோய்
தாள் பணிந்து வேண்டுகிறேன் என்றான் மன்னன்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு
மன்னவன் தெரிவித்த கருத்துக்களை
சிரத்தையுடன் செவி மடுத்த தவ சிரேஸ்டர்
சிந்தனையில் ஆழ்ந்து மூழ்கிப் போனார்.
ஆதி மூலப் பரம்பொருளாய் அறவோர் போற்றும்
அசையாத தன்மை கொண்ட பிரமம் தன்னை
ஓதி யுணர்ந்த உத்தமர்கள்
உயர்வாகப் பாடிவைத்த உண்மைகளை

நீதியென உணர்ந்த தர்ம சீலர்
நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து
ஆதியிலும் பிரமத்தின் அருளைப் பெற
அவசியம் நேர்ந்த போதெல்லாம்
மேதினியில் சிறந்த ஆற்றல் பெற்றோர்
எழிதாக மேற்கொண்ட கருமங்களை
ஆதியோ டந்தமாய் அறிந்த கோமான்
அவ்வாறு செய்தலே! நலமென்றறிந்தார்.

அசையாமல் அகண்டமாய் அகிலமெங்கும்
அற்புதமாய்க் காட்சி தரும் பிரமத்திடம்
மிகையாக உலகப் பொருட்கள் தமை
வேண்டிப் பெறுதல் இயலா தென்று
துறை போகக் கற்றறிந்த மேலோர் சொல்வார்.
தூயவரும் இதனை நன்கறிவார்
மறை போற்றும் மேலோர் ஒன்று கூடி
வழி கண்டார் இதற்கு மாயையெனும் தத்துவத்தால்

பிரமத்தில் ‘மாயை’ என்னும் சாயல் சேர்ந்து
பிரபஞ்சத்தின் பேரொழியாய் இருந்த பிரமம்
தன்மை குன்றி உலகை வழி நடத்தும்
சதுர்புய முடைய இறைவனாய்த் தோன்றியது.
இறைவனிடம் இவ்வுலகப் பொன் பொருளை
இறைஞ்சிப் பெறுதல் இயலா தென்றும்
ஆன்ம ஈடேற்றம் ஒன்றை மட்டுமே!
அருளாகப் பெறலாம் என்பர் மேலோர்.

வேதசாஸ்த்திரங்கள் அறிந்தோர் சொல்லும்
விடயங்களை அணுவணுவாய் அறிந்த மேலோன்
ஓதியுணர்ந்தோர் உள்ளங்களில்
உயர்வாக வீற்றிருக்கும் இறைவன் தாளைப்
பணிந்து பலமுறை வணங்கி மேலும்
பலன் தரும் வழிபாட்டு முறையொன்றை
இணைந்து பலரும் போற்றும் வண்ணம்
இயற்றினார் மன்னனும் மகிழ்ச்சி பெற்றான்.

மக்களுக் கிரங்கிடும் வண்ணம் இறைவனை
வடிவமைத்து மாதுமை பங்கனாக
திக்கெலாம் புகழ் கீர்த்தி பரவிட
கிங்கரர் கணங்களைச் சேர்த்து
எக்காலமும் புகழ் ஓங்கும் நிலையில்
இறைவனை மனிதனாய்க் கீழ் இறக்கி
கோணேசர் என்ற நாமமும் சூட்டிக்
கும்பிட்டான் வசிட்ட மாமுனிவன்.

வே.தங்கராசா

உசாத்துணை

1. திரிகோணாசலப் புராணம்.
2. கோணேசர் கல்வெட்டு.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

 1. Thangan paadal atputham. Kavingan kavingananthan. thodaue;J eluthuka.
  Kernipiththan

  ReplyDelete
 2. Thangan paadal atputhamanathu. atht;ket;ra padam eduppaanathtghu. thodarnthu eluthuka
  Kernnypiththan

  ReplyDelete
 3. Thangan paadal atputham. Kavingan kavingananthan. thodaue;J eluthuka.
  Kernipiththan

  ReplyDelete