Wednesday, June 12, 2019

மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி


சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில்  இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.

இத்தகைய காலப்பகுதியில் திருகோணமலையில் தமிழர் இருப்பினை உறுதிப்படுத்தும் முயற்சிகள் , முன்னகர்வுகள் பலராலும் மேற்கொள்ளப்படும் இன்றைய சூழ்நிலையில் திருகோணமலைத் தமிழர்களின் கைகளில சுமார் ஒருநூற்றாண்டுக்கு முன்னர் இருந்து பாதுகாக்கப்படாமல் காணாமல்போன பெரியவளமைப் பத்ததி தொடர்பில் சில தகவல்களை இங்கு பதிவிடுவது அவசியமாகிறது.

வையாபாடல், இராசமுறை, பரராசசேகரன் உலா, கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, கோணேசர் கல்வெட்டு, பெரியவளமைப் பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், மட்டக்களப்பு மான்மியம் என்பன இலங்கையில் எழுந்த வரலாறு கூறும் தமிழ் நூல்களாகும்.

இவற்றில் யாழ்ப்பாண வைபவமாலைக்கு மூலங்களாக அமைந்த இராசமுறை, பரராசசேகரன் உலா ஆகியனவும் கோணேசர் கல்வெட்டிற்கு ஆதாரமான பெரியவளமைப் பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம் என்பனவும் அழிந்தொழிந்துவிட்டன. அவற்றின் அழிவானது, வரலாற்று ஆராய்ச்சியைப் பொறுத்தவரையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும் என்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் பதிவுசெய்திருக்கிறார்.

பெரியவளமைப் பத்ததி

திருக்கோணேச்சரத்திற்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன் அவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகளும், ஆலய நிர்வாகமும் ஒழுங்குமுறை தவறாது நடைபெறுவதற்காகச் சட்ட திட்டங்களை உண்டாக்கி அதனைச் செப்பேடுகளாக பெரியவளமைப் பத்ததியில் எழுதுவித்தான் என கோணேசர் கல்வெட்டு கூறுகிறது.

குளக்கோட்டன்

திருக்கோணேச்சரத்தின் பராமரிப்புக்காக உண்டாக்கப்பட்ட நிலபுலங்கள், கிராமங்கள், அங்கே குடியமர்த்தப்பட்ட மக்களின் கடமைகள், கோவிற் தொழும்புகளுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் கோவிலுக்குரிய திரவியங்கள். தானியங்கள். எண்ணெய் வகைகள், களஞ்சியப் பொருட்கள் முதலிய சேமிப்புகள் என்பனவற்றை கனகசுந்தரப் பெருமாள் என்ற பட்டம் பெற்றவர்கள் தலைமுறை தலைமுறையாக முறையாகப் பதிவுசெய்து வைத்திருந்தனர். எனினும் அவ்வரிய வரலாற்றுத் தரவுகளை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.


அண்மையில் திரு.வே. அகிலேசபிள்ளை அவர்களின் திருக்கோணாசல வைபவம் தரும் தம்பலகாமம் தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது பெரியவளமைப் பத்ததி தொடர்புடைய முக்கிய பதிவொன்று கண்ணில் பட்டது. திருக்கோணாசல வைபவம் எனும் நூல் 1889 ஆம் ஆண்டளவில் திருகோணமலை திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


திருக்கோணாசல வைபவம் தரும் பெரியவளமைப் பத்ததி தொடர்புடைய குறிப்பு

திருக்கோணேச்சரத்தின் திரவிய இருப்பினைப் பதிவு செய்து பாதுகாக்கும் கனகசுந்தப்பெருமாளின் வம்சத்தவர்கள் திருக்கோணாசல நகரிலும், கட்டுக்குளப் பகுதியில் குச்சவெளியென்னுங் கிராமத்திலும், கொட்டியாரப்பகுதியில் சம்பூர், கிளிவெட்டி எனும் இடங்களிலும் தற்காலமிருக்கின்றார்கள். இதில் குச்சவெளிப்பகுதியில் இருப்பவர்கள் தான் தம்பலகமம் கோணநாயகர் கோயில் முன்னீடு செலுத்தி வருகிறார்கள். பெரியவளமைப் பத்ததி என்னுஞ் செப்பேடும் அவர்கள் வசத்தில்தான் இருக்கிறது என்கிறது 1889 ஆம் ஆண்டளவில் திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட அக்குறிப்பு.

திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் பற்றிய முழுமையான விபரம் பெரியவளமைப் பத்ததி எனும் செப்பேட்டில் உடனுக்குடன் பதியப்படும் வழக்கம் இருந்ததையும் அப்பணியினைச் செய்யும் பொறுப்பு கனகசுந்தரப்பெருமாள் எனும் பட்டம் பெற்றவர்களின் வம்சத்தவரிடம் இருந்ததையும் தருகிறது இக்குறிப்பு.

இன்றைக்குச் சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் பெரியவளமைப் பத்ததி குச்சவெளிப்பகுதியில் இருந்த கனகசுந்தப்பெருமாளின் வம்சத்தவர்களிடம் இருந்தது பற்றி திரு.வே. அகிலேசபிள்ளை அவர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறபோதும் அச்செப்பேடுகள் நமது இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கவில்லை என்பது பேரிழப்பே.


பூர்வீக நிலங்கள், கிராமங்கள், திருக்கோணேச்சரத்தின் திரவிய இருப்பு தொடர்பில் பூரண தரவுகளைக் கொண்ட ஆவணமாக எமது முன்னோர் பேணிக்காத்த அருஞ் செல்வம் பெரியவளமைப் பத்ததி.

திருக்கோணாசல வைபவம் குறிப்பிடும்  திருகோணமலை நகரப்பகுதிகுச்சவெளி, சம்பூர், கிளிவெட்டி,  தம்பலகாமம்  அன்பர்கள் உங்கள் ஊரில் 130 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களது முன்னோர்கள் பேணிக்காத்த பெரியவளமைப் பத்ததி எனும் செப்பேடுகளுக்கு என்ன நடந்தது என்று முடிந்தவரை முயற்ச்சித்து தேடிப்பார்க்கலாம். நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment