Tuesday, November 27, 2012

உதயனை யானை போட்ட கல்நெருக்கம்

என்னுரை     -   ரங்கநாயகியின் காதலன்
 தம்பலகாமம்
முத்தும் செந்நெல்லும், தேனும் விளைகின்ற
தத்தி நீர்வழியும் தம்பலகாமத்தில்
கத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்
தித்திக்கும் சுவையூட்டும் செந்தமிழே நீ வாழ்க.

Monday, November 19, 2012

கரடிப் பழமொழிகள் உணர்த்தும் கருத்துக்கள்

கரடி பழமொழி

இன்றைய நாகரிக மனிதன் பல இலட்சம் ரூபா செலவு செய்து மாடிவீடுகளைக்கட்டிக் குபேர வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் மனித குலத்தின் காட்டுவாழ்க்கைச் சகாக்களான மிருகங்கள் பறவைகள் மரம் ,செடி ,கொடி வகைகளை மறந்து விடவில்லை.

Friday, November 16, 2012

சரித்திரம் படைப்பாய் என்றார்

குரு

சத்திய காமன் என்னும்
சரித்திர புருசன் ஓர் நாள்
விசித்திர மான எண்ணம்
விரைவாக மனதில் தோன்ற
தாயிடம் சென்று அவள்
தாழினைப் பற்றிச் சொல்வான்
அம்மா நான் பிரமம் பற்றி
அறிய நல்லாவல் கொண்டேன்.

Tuesday, November 13, 2012

அற்புதக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்

அற்புதக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்

‘ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள்’ சித்திரம் சிற்பம் போன்ற கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். கல்லில் கடவுள் உருவங்களைச் செதுக்கும் சிற்பக்கலை சாஸ்த்திர ரீதியானது. பலவிதமான சிறப்பியல்புகளை உடையது.

ஒரு குருவிடம் பக்தி சிரத்தையுடன் சீடனாக நெடுங்காலம் இருந்து கற்றுத் தேற வேண்டிய ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயினும் தம்பலகாமம் பொற்கேணிக் கிராமத்தில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் சிற்பக்கலையை யாரையும் குருவாகக் கொண்டு கற்காமலே கருங்கல்லில் மிகவும் சிரமம் தரும் தெய்வ உருவமான ஐங்கரக்கடவுளின் திருவுருவை அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார்.

Monday, November 12, 2012

பயனுள்ள சில இணையத்தளங்கள்!


ஆரோக்கியத் தளம்
ஆரோக்கியத் தளம் - மருத்துவ உதவிக் குறிப்புகள்


தமிழ் ,சிங்களம்  ஆகிய  மொழிகளில் மருத்துவ உதவிக் குறிப்புகளை வழங்கும் இணையத்தளம். பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை அளிப்பதுடன் ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

  இணையத்தள சுட்டி         http://wedananasala.org/home/


 உடல்நலம்
 உடல்நலம்  - வலைத்தளம்

பன்மொழி இணையத்தளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  இணையத்தள சுட்டி          http://ta.vikaspedia.in/

Thursday, November 01, 2012

கப்பல் துறை

கப்பல் துறை,திருகோணமலை

உலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இது மிகப்பழங்காலத்தில் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட காரணப் பெயராகும்.

தம்பலகாமம் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் ‘தம்பை நகர்’ என்ற பெயருடன் வணிகப்பெரு நகராக விளங்கியிருக்க வேண்டும் என்றும், அங்கு வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் கடல் துறையான கப்பல் துறையிலிருந்து கப்பல் ஊர்ந்து ‘திரைகடல் ஓடியும் திரைவியம் தேடினர்’ என்றும் , எப்பொழுதும் கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்த இடம் ‘கப்பல்துறை’ எனப் பெயர்பெற்றது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள காடுகளில் ஆங்காங்கே காணப்படும் சிதைவுற்ற கட்டடங்களும் செதுக்கப்பட்ட கற்தூண்களும் இக்கருத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.

குளக்கோட்டு மன்னன் தம்பலகாமத்தில் அமைத்த கோணேஸ்வரத்திற்குத் தீர்த்தமாகக் கப்பல்துறையில் அமைந்த ‘பாவநாச ஏரி’ப் பிரதேசம் காலஓட்டத்தில் கரைந்து காடாகி இன்று இலைமறை காயாக உள்ளதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புத உண்மையாகும்.
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரிப்பத்து வைராவியார் குடும்பத்தினர் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இத்தீர்த்தத் தடாகத்திற்குச் சென்று பொற்கல்லிட்டு வழிபாடியற்றி வருவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 29, 2012

வானிலை எச்சரிக்கை - 29.10.2012


வானிலை எச்சரிக்கை 29.10.2012
வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை மையம் வழங்கியது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. முல்லைத்வில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும் இதேபோன்ற காலநிலை நிலவும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


WEATHER FORECAST FOR 30th OCTOBER 2012
(Issued at 12.00 noon. on 29th October 2012)
The deep depression in the Bay of Bengal  is centered about 200 km east of Mullattivu coast in the morning today. It is likely to move Westward causing heavy showers and strong winds over most parts of the country and surrounding sea areas. It is expected to intensify further in to a marginal cyclone ( not severe ) and move over northern part of Sri Lanka tonight.
 Shallow and deep sea areas off the coast extending from  to Batticaloa via Jaffna and Trincomalee, will experience very rough conditions, strong winds and intermittent rain. 


Wednesday, October 24, 2012

வாணி விழா - புகைப்படங்கள் - திருகோணமலை சிவானந்த தபோவனம்

வாணி விழா - புகைப்படங்கள் -  திருகோணமலை சிவானந்த தபோவனம்

திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தில் 24.10.2012 மாலை இல்லச் சிறுவர்களால் இயல், இசை , நாடகத்துடன் நடாத்தப்பட்ட வாணி விழா  தொடர்பான புகைப்படங்கள்.

நகை சுமந்த நங்கையர்


“கோகிலா வருகிறாயா திருவிழாவுக்குப் போகலாம்” என்று பக்கத்துக் குடிசைக்காரி கனகம்மா கேட்டாள்.

“போகலாம் தான் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி கூட இல்லாமல் எப்படியக்கா அவ்வளவு சனக்கூட்டத்திற்குள் போவது?”என்று கேட்டாள் கோகிலா.

Saturday, October 20, 2012

சிவப்புக் கோடுகள்

பாடசாலை

சுஜாத்தா தன் கையில் கட்டியிருந்த சிற்றிசனில் நேரத்தைச் சரிபார்த்துக் கொண்டே வீதியில் பார்வையைத் தெளித்தாள். தூரத்திலே அவள் பிரயாணம் செய்ய வேண்டிய ‘கிண்ணியா’ பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த ‘டிமோ’ பஸ்ஸில் முண்டியடித்து ஏறி ஒரு ‘சீற்றை’ பிடித்தவாறே‘சைனாபேக்கு’( China Bay ) ஒரு ‘டிக்கட்’ வாங்கிக் கொண்டு அப்பாடா எனப் பெருமூச்சு விட்டாள்.

Tuesday, October 16, 2012

மேகலாவின் காதலன்

thampalakamam

தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் கதிர்காமத்தம்பிப் போடியாரின் வளவில் ‘நெல்லுப்பட்டறை’ பிரித்து விவசாயிகள் விதைநெல் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். போடியாரின் வளவு மாட்டு வண்டிகளும் மனிதர்களும் நிறைந்து காணப்பட்டது. சுப்பிரமணியம் என்ற நெற் செய்கையாளரும் போடியாரிடம்தான் வழக்கமாக விதைநெல் எடுப்பவர் ஆயினும் இம்முறை அவர் விதைநெல் வாங்க வரவில்லை. ‘என்ன காரணம். இம்முறை மணியம் விதைநெல் வைத்திருக்கிறானோ?’ என்று போடியார் எண்ணினார்.

Monday, October 15, 2012

அவர் திருந்தினார்

thampalakamam

மணி பிற்பகல் இரண்டு.
அந்தப் பையன் எதிர்பார்த்திருந்தபடியே பாடசாலை முடிவதைக்குறிக்கும் மணி அடித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டது. காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டுமணிவரை அந்தப்பாடசாலைக் கட்டிடத்திற்குள் அடைபட்டுக் கிடந்த தங்களிடம் ‘கணக்கென்றும்’ என்றும் ‘வாசிப்பு’ என்றும் ‘சுற்றாடல்’ என்றும் ஆசிரியர்கள் இடையிடையே வந்து அதிகாரத்தோரணையில் கஸ்டம் கொடுத்ததெல்லாம் நின்று இப்போது வீட்டுக்குப் போகிறோம் என்ற ஆனந்த உணர்வுடன் மாணவர்களும் மாணவிகளும் வீடுகளை நோக்கி வீதியில் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தனர்.

Thursday, October 11, 2012

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம் - புகைப்படங்கள்

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்

திருகோணமலைப் பட்டணத்திலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்தில் நிலாவெளிக்குச் செல்லும் பாதையில் உப்புவெளிக் கிராம எல்லையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள இடம் ‘சோலையடி’ என அழைக்கப்படுவதால் இவ்வாலயம் சோலை வைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.

மங்கை உமையாள் ஒருபாக வடிவம் கொண்ட பேரிறைவா!

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே! உன்றன் திருத்தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கி விடு
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் அறியார் உன் அருளை.

Monday, October 08, 2012

மலை முரசு - திருகோணமலை செய்திகளைத் தாங்கிய வார இதழ்

மலை முரசு

திருகோணமலை செய்திகளைத் தாங்கி வாரம்தோறும் பிரசுரமாகும் மலை முரசின் 10 வது  ( 30.09.2012)  இதழ் வாசிக்கக் கிடைத்தது.  மலைமுரசு  தொடர்பான சில தகவல்கள்.

Sunday, October 07, 2012

முல்லை அமுதனின் காற்றுவெளி இலக்கிய சஞ்சிகை

முல்லை அமுதன்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,  இலங்கை)  ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முல்லைஅமுதன் அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தவர்.

Friday, October 05, 2012

அவனும் அவளும்

அவனும் ,அவளும்

அவன் பெயர் அமுதன் நல்ல
அழகிய இளங் கலைஞன்
தமிழினில் இனிமை கொஞ்சும்
தரமிக்க கவிதை செய்வோன்!
தம்பை மா நகரம் தந்த
தனித்துவம் மிக்க நல்ல
குடும்பத்தின் இளையோனாக
குதூகலமாக வாழ்வோன்.

Tuesday, October 02, 2012

கவிதைக்கு கிடைத்த பரிசு

கவிதைக்கு கிடைத்த பரிசு

குமரிப்பெண்கள் வாலிபர்களை எதிரும் புதிருமாகச் சந்திக்க நேர்ந்தால் வெட்கமடைந்து தலைகுனிந்து கால் பெருவிரலால் பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதுதான் இயல்பு. ஆனால் பெரிய அளவில் வாய்ச்சவடால் அடிக்கும் வாலிபச் சிங்கங்கள் கூட அழகான பெண்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டால் கூனிக்குறுகி கோணங்கித்தனமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

Tuesday, September 25, 2012

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - புகைப்படங்கள்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

அமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின்  எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

Sunday, September 23, 2012

நள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்

தம்பலகாமம்

இரவு பதினொரு மணி பௌர்ணமிக்கு முதல்நாள் ஆகையால் நிலவு பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. நித்திரை வராததால் சித்திரா பாயில் புரண்டுகொண்டு கிடந்தாள்.சித்திராவின் இளம் மனதைப் பலவிதமான இன்ப துன்ப நினைவுகளும் யோசனைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

Thursday, September 20, 2012

திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் நகர்வலம் - புகைப்படங்கள்

விநாயகர்

திருகோணமலை பொதுவைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி விழா 19.09.2012 புதன்கிழமை மாலை சிறப்புற கொண்டாடப்பட்டது.

Wednesday, September 19, 2012

பாடம் பயில வாருங்கோ! - சிறுவர் பாடல்

பாடம் பயில வாருங்கோ

மாணாக்கரே! மாணாக்கரே!
வந்து கேளுங்கோ! உங்கள்
வாழ்வு மலர வழிகள் சொல்வேன்
கேட்டுச் செல்லுங்கோ!

Monday, September 17, 2012

கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம்

வே.சங்கரலிங்கம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ‘பருத்தியடைப்பு’என்னும் பகுதியில் சாதாரண தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள். ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் திருநெல்வேலி முத்துத் தம்பி வித்தியாலயத்திலும் கற்ற இவர் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக்கல்விக்கு ‘முழுக்குப் போட்டு’விட்டு கலைத்துறையில் ஈடுபடலானார்.

தனது சொந்த மாமா திரு.கே.கே.குமாரசுவாமி அவர்களிடமும், இந்தியாவில் இசைக்கல்வி பயின்று இலங்கை வந்து ஊர்காவற்துறையில் பருத்தியடைப்பு என்னும் இடத்தில் இசையாசிரியராகக் கடமையாற்றிய தனது சித்தப்பாவான திரு.தில்லையம்பலம் அவர்களிடமும் வயலின் கற்றுக்கொண்டார். இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடகாலத்திற்கும் மேலாக வயலின் கற்றுக்கொண்ட இவர் வயலினைத் துறைபோகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவினால் 1938 ஆம் ஆண்டு இந்தியா பயணமானார். மதுரையில் இரண்டு வருடங்களும் நாகர் கோயிலில் ஆறு வருடங்களும் இவர் வயலின் கற்றுக்கொண்டார்.

Tuesday, September 11, 2012

தரணி போற்ற வாழலாம்

தம்பி

கத்தி கொண்டு களங்கள் பல
கண்ட காலம் போச்சு
புத்தி இன்று போரிலே
புதுமை காண லாச்சு.

Sunday, September 02, 2012

திருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது.  “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.

தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
Alenkerny

இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.  இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

Tuesday, August 28, 2012

உயர்ந்த மனிதன் ஆகலாம்

tamil children songs

உலகிலுள்ள இயற்கையில்
உயர்ந்த பண்பு உண்டு பார்!
உணர்ந்து நீயும் கைக்கொண்டால்
உயர்ந்த மனிதன் ஆகலாம்.

Sunday, August 26, 2012

நாடகக்கலைஞர் இராமலிங்கம் இரத்தினசிங்கம்

Ramalingam Ratnasingam


திருகோணமலை மாவட்டத்தில் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திரு.இ.இரத்தினசிங்கம் என்னும் நாடகக் கலைஞர்.  தி.சேனையூர் மத்தியகல்லூரியில் ஆரம்ப வகுப்புமுதல் க.பொ.த.சாதாரண தரக்கல்வியையும் மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரக்கல்வியையும் யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சியையும் முடித்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமானிப் பட்டத்தையும் பெற்றவராவர்.

கல்வி கற்கும்காலத்தில் நாடகத்துறை,கவிதை,சிறுகதை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். நாடகத்துறையில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.எஸ்.அருளானந்தம் அவர்களும், எழுத்துத் துறையில் திரு.வ.அ.அவர்களும் இவருடைய மதிப்பிற்குரிய குருமாராவார்கள்.

Wednesday, August 22, 2012

புரிந்து உலகில் வாழுவோம்

Children-song

பந்து விளையாடலாம்
பாய்ந்து ஓடி வாருங்கள்
சிந்துகின்ற வியர்வையில்
தேகம் பல மாகுமே!

Tuesday, August 21, 2012

சதிபதிகள் ஒற்றுமையாய் வாழலானார்

குடும்பம்

திருமணம் செய்து கொண்டால் வாழ்விலுள்ள
சிரமங்கள் குறைந்து விடும் என்று எண்ணி
முருகேசன் வள்ளியம்மை கரம் பிடித்து
முழுசாக ஒரு வருடம் ஆகு முன்பே
தீராத மனக்கவலை சதிபதிக்குள்
சிறு சண்டை சச்சரவு வாக்கு வாதம்
வாராத நாட்களில்லை அக்கம் பக்க
மக்களெலாம் கூடிநின்று புதினம் பார்ப்பார்.

Monday, August 20, 2012

அம்மா

amma

அம்மா எங்கள் அம்மா
அன்பு காட்டும் அம்மா
சும்மா என்னைத் தூக்கி
துயரம் போக்கும் அம்மா.

Tuesday, August 14, 2012

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி

 திருமலை

 தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் திறந்த வெளிச்சுற்று வழிபாடுகளில் தலையாயது கந்தளாய்க் குளத்து மகாவேள்வியாகும். கந்தளாய் நீர்த்தேக்கத்தை நிறைக்கும் கங்கைபோன்ற ‘பொட்டியனாற்று’ ஓரம் உள்ள ‘கால்நாட்டு மண்டபம்;’ என்னும் இடத்தில் மேள தாள சீர்களுடன் ‘கன்னிக்கால்’ நட்டு பல கொட்டகைகள் அமைத்து நாராயண மூர்த்திக்கும் இலட்சுமி தேவிக்கும் திருமண வைபவமாகப் நடைபெறும் மாபெரும் அருவ வழிபாடாக இது விளங்குகிறது.

Monday, August 13, 2012

எங்கள் ஆசான்


எங்கள் ஆசான்

எங்கள் ஆசான் இனியவர்
எதற்கும் அஞ்சா நெஞ்சினர்
கண்கள் போலும் கல்வியைக்
கற்றுத் தரும் பண்பினர்

Wednesday, August 08, 2012

பரதவிக்கும் காலம் வரும்!


மண்ணாசை பொன்னாசை மயக்கம் வந்தால்
மனிதனின் பகுத்தறிவு மழுங்கிப் போகும்
எண்ணாத செயல்களையும் எண்ணும் நெஞ்சு
இழிசெயல்கள் புரிவதற்கும் துணிவுண்டாகும்
கண்ணாக தினம்போற்றி மதித்துவந்த
காரியங்கள் அடிசாய்ந்து தலைகீழாகும்
பண்ணாத தவறுகளைச் செய்யத் தூண்டும்
பாபத்தின் அடிசேர்க்கும் பண்பு நீங்கும்

ஆசைகளை வேலியிட்டுத் தடுக்காவிட்டால்
அனர்த்தம் தான்பிறர் சுகத்தைச் சூறையாடும்
யோசனையே மிகுந்துவிடும் மனுப் படைப்பின்
நோக்கங்கள் கெட்டுவிடும் நொந்தவர்க்கு
நேசத்தைக் காட்டியவர்க்;குதவி செய்யும்
நினைவெல்லாம் அகன்றுவிடும் நிஸ்டூரமாய்
பாசமற்று மனுக் குலத்தோர் அரக்கராகிப்
பரதவிக்கும் ஓர் காலம் வந்தேதீரும்.

Tuesday, August 07, 2012

பல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்


எண்ணூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமையுடையது தம்பலகாமம். தொல் பொருள் திணைக்களத்தால் “மைப்படி” எடுக்கப்பட்டுள்ள 13ஆம் நூற்றாண்டுக்குரியதான தம்பலகாமத்துக் கல்வெட்டால் இதனை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தம்பலகாமத்தில் பழமையில் சங்கீதத் கலையும் ஆயுள் வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

Sunday, August 05, 2012

நல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி


கல்விச் சிறப்பால் மிக உயர்ந்து
கலைகள் வளரும் யாழ்ப்பாண
நல்லூர்ப் பதியில் உறைகின்ற
ஞானக் கொழுந்தே அடியார்கள்
அல்லல் போக்கி அருள் சுரக்கும்
நல்ல புகழை எடுத்தோத
நாவிற் கருள்வாய் விநாயகனே.

குன்று தோறும் விளையாடும்
குமரா அமரர் குறை தீர்க்க
சென்று அமரர் செருக்கழித்த
செவ்வேள் என்னும் திறலோனே!
மன்றுள் ஆடும் மகாதேவர்
மனதைக் கவரும் பேரழகா
என்று என்றன் துயர் போக்கி
இன்பம் அருள்வாய் இறையோனே.

Thursday, August 02, 2012

கலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா

தம்பலகாமம்
தம்பலகாமம் பட்டிமேட்டில் வாழ்ந்த கந்தப்பு கோணாமலை என்னும் பெரியார் வைராவியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் மூதாதையர்கள் குளக்கோட்டு மன்னனால் சோழநாட்டிலுள்ள மருங்கூர், காரைக்கால், திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டவர்கள் என கோணேசர் கல்வெட்டின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

பட்டி என்னும் சொல் முல்லை நிலங்களைக் குறிக்கும் என்பர் கற்றறிந்தோர். தமிழகத்தில் பாண்டிநாட்டிலேயே பட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றது. ‘கோயிற்பட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

வரலாற்றுரீதியாக பட்டிமேடு தம்பலகாமத்தில் பேசப்பட்ட இடமாகும். 17ஆம் நூற்றாண்டுக்குரிய சித்திர வேலாயுத காதல் எழுதிய திரு.வீரகோன் முதலியார் பட்டிமேட்டில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பராபரிப்புக்காரர்களில் ஒருவராகிய திரு.கோபாலு கதிர்காமத்தம்பி (தோம்பர்) அவர்களும், வைராவியார் திரு.நடராசா அவர்களும் பட்டிமேட்டைச் சேர்ந்தவர்களே.

காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்


எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது தம்பலகாமம். ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முன்பு வணிகப் பெருநகராக தம்பலகாமம் விளங்கியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இதற்கு “தம்பலகாமம் கல்வெட்டு” சான்று பகருகின்றது.

இத்தகைய சிறப்புப் பெற்ற பெரு நகரில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் புகழோங்க வாழ்ந்தவர்தான் காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்.

இசைமணி திரு.க.சண்முகலிங்கம்


இராகமாலிகா இசை நிகழ்ச்சி 
தம்பை நகர் தந்த புகழ் பூத்த கலைஞர்களில் ஒருவர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் என்றால் அது மிகையாகாது. இராக, தாள நுட்பங்களை நன்கு அறிந்த இவர் ஒரு தலைசிறந்த ஆர்மோனிய வித்துவானுமாவார். திருகோணமலை மாவட்டத்தில் இரு கரங்களாலும் சரளமாக ஆர்மோனியம் வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு எவருமில்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். நாடகங்களை நெறிப்படுத்தி, தம்பலகாமம் கல்வி மேட்டிலுள்ள ஆலையடிப் பிள்ளையார் கோயில் முன்றலில் அரங்கேற்றி தம்பலகாமம் வாழ் மக்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியவர். இவரது நாடகங்களைக் காண திருமலையிலிருந்தும், மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தம்பலகாமத்திற்கு வந்து செல்வது நாடறிந்த உன்மையாகும்.

கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கும் அவரது தர்மபத்தினி சிவகாமி அம்மையாருக்கும் ஐந்து பிள்ளைககள் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். இவர்களில் 1936ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், 22ம் திகதி மகனாக பிறந்தவர்தான் நமது புகழ் பூத்த கலைஞர், பாடகர், கலா பூசணம,; கலைமணி,கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்கள். கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தனது மூத்த மகனான சண்முகலிங்கத்தை இளம் வயதிலிருந்தே தான் நெறிப்படுத்திய நாடக ஒத்திகைகளுக்கு அழைத்துச் சென்று கேட்போரைப் பரவசப் படுத்தும் வகையில் இராக தாள நுட்பங்களைக் கற்றுத் தந்து பாடுவதற்கான இசை ஆற்றலையும் உருவாக்கினார்.

எவ்வாறு அமைதி கொள்ளும் ?


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் 

பைந்தமிழ் மொழியில் வல்ல
பாவலா! தம்பை தந்த
செந்தமிழ் போற்றும் எங்கள்
தீந்தமிழ் கவிஞர் கோனே!
எந்தையே தமிழை உன்றன்
இறையெனப் போற்றி வாழ்ந்த
விந்தையை எண்ணி நாங்கள்

வியப்பினில் ஆழ்வதுண்டு

சிந்தனையைப் போற்றுவோம்


காக்கை ஒன்று மரத்திலே
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.

கணினி

கணினி என்ற கருவி யொன்று
கருத்தில் தோன்றுதே இதைக்
கவனி என்று உலகம் இன்று
பரணி பாடுதே.

மனிதனும், மிருகமும்


உணவு தேடிக் காக்கையார்
ஊரைக் கூட்டி உண்ணுவார்
பணத்தைத் தேடி மனிதர் நாம்
பதுக்கி வைத்து வாழ்கிறோம்.

வாழ்வாங்கு வாழும் வழி


விடியற்காலை நாலு மணிக்கு
விழிக்க வேண்டும் தோழரே
கடிதிற் காலைக் கடன்கள் முடித்து
கடவுள் பாதம் தொழுவமே.

வேளை தோறும் பண்புகள்


பாலர் நாங்கள் கூடி நின்று
பாடிப் பாடி ஆடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்

உனக்குள் ஒன்றுண்டு



உனக்குள் ஒன்றுண்டு இதை
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு

முழு மனிதராகுவோம்


இந்து, யேசு, புத்தர், என்று
எதற்குச் சண்டை தோழரே
இறைவன் ஒன்று என்னும் தீபம்
ஏற்ற வேண்டும் எங்குமே

வாழும் வழி தெரியணும்


ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்

விழாவும், பாராட்டும்... திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம்


இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் லிங்கநகர் பகுதியில் தி/ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. நகரின் புறத்தே பெரும்பாலும் வசதிகுறைந்த மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலை 1977 ஆம் ஆண்டு பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா மகராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டது.