Thursday, August 02, 2012

எவ்வாறு அமைதி கொள்ளும் ?


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் 

பைந்தமிழ் மொழியில் வல்ல
பாவலா! தம்பை தந்த
செந்தமிழ் போற்றும் எங்கள்
தீந்தமிழ் கவிஞர் கோனே!
எந்தையே தமிழை உன்றன்
இறையெனப் போற்றி வாழ்ந்த
விந்தையை எண்ணி நாங்கள்

வியப்பினில் ஆழ்வதுண்டு
கற்றதோ கை மண் அளவு
காவியம் ஆக்கும் திறனை
பெற்றதோ எவ்வா றென்றறியாப்
பிதற்றுவர் உண்மை அறியார்
வாசிக்கும் திறனே உன்றன்
வளர்ச்சிக்கு உந்து கோலாம்
நேசிக்கும் தமிழைப்போற்றி
நெஞ்சினில் நிறைந்தாய் ஐயா

ஆதியாம் கோணை நாதன்
அன்பனாய் நீடு வாழ்ந்தாய்
பதிக்மும் பாடி ஈசன்
பக்கதனாய் மகிழ்ந்திருந்தாய்
ஊதியம் கருதா தென்ற
உணர் வுயர்க் கவிதையாலே
இயற்கையின் நுட்பங்களை 
எடுத்து நீ இயம்பினாயே

வரலாற்று நாவல் மற்றும்
வளமுறு சமூக நாவல்
இதயத்தை வருடிச் செல்லும்
இதமான சிறுகதைகள்
சுவையான கவிதை நூறு
தொடரான கட்டுரைகள்
இவையாவும் தந்த எங்கள்
இறைவா நீ ஏன் பிரிந்தாய்?

தொண்ணூற்றி யிரண் டகவை
தொல்லைகள் எது்வுமின்றி
பண்ணோடு பசுமையான
பல்கலைத் துறைகளோடும்
கண்போல எம்மைக்காத்த
காவலா உன் பிரிவை
எண்ணியே எங்கள் நெஞ்சம்
எவ்வாறு அமைதி கொள்ளும் ?


வே.தங்கராசா

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை அதிகாலை காலம் ஆனார்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment