Thursday, August 02, 2012

கலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா

தம்பலகாமம்
தம்பலகாமம் பட்டிமேட்டில் வாழ்ந்த கந்தப்பு கோணாமலை என்னும் பெரியார் வைராவியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் மூதாதையர்கள் குளக்கோட்டு மன்னனால் சோழநாட்டிலுள்ள மருங்கூர், காரைக்கால், திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டவர்கள் என கோணேசர் கல்வெட்டின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

பட்டி என்னும் சொல் முல்லை நிலங்களைக் குறிக்கும் என்பர் கற்றறிந்தோர். தமிழகத்தில் பாண்டிநாட்டிலேயே பட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றது. ‘கோயிற்பட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

வரலாற்றுரீதியாக பட்டிமேடு தம்பலகாமத்தில் பேசப்பட்ட இடமாகும். 17ஆம் நூற்றாண்டுக்குரிய சித்திர வேலாயுத காதல் எழுதிய திரு.வீரகோன் முதலியார் பட்டிமேட்டில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பராபரிப்புக்காரர்களில் ஒருவராகிய திரு.கோபாலு கதிர்காமத்தம்பி (தோம்பர்) அவர்களும், வைராவியார் திரு.நடராசா அவர்களும் பட்டிமேட்டைச் சேர்ந்தவர்களே.
ஏறக்குறைய இக்கோயில் தர்மகத்தாசபைத் தலைவராக முப்பது வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய திரு.கா.சிவசுப்ரமணியம் அவர்களின் தந்தையாகிய திரு.காளியப்பு 1928ஆம் ஆண்டில் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கு ஒரு கட்டிடத்தை நன்கொடையாக வழங்கினார் தற்பொழுது இது ‘காளியப்பு மண்டபம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதுபோன்று இவரது துணைவியார் திருமதி காளியப்பு மகமாரிப்பிள்ளை அவர்களும் பட்டிமேட்டிலுள்ள திஃசாரதாவித்தியாலயத்திற்கு தனது காணியை அன்பளிப்பாக வழங்கி அரும்பணியாற்றினார். ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் கல்விக்காகச் செய்த அருஞ்செயலை அனைவரும் இன்றுவரை போற்றிப் புகழ்கின்றனர்.

பழமையில் உடையார் என்ற உயர்ந்த பதவியை வகித்தவராகிய திரு. நமச்சிவாயம் என்பவரும் பட்டிமேட்டைச் சேர்ந்தவரேயாகும். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டிமேட்டில் வைராவியார் குடும்பத்தில் பிறந்த திரு.கந்தப்பு கோணாமலை என்பவர் ‘மத்தளம்’ ‘கஞ்சரா’ என்னும் இரு வாத்தியக் கருவிகளிலும் தலைசிறந்த கலைஞராக விளங்கினார். நாட்டு வைத்தியம், மாந்தரீகம் போன்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

திரு.கந்தப்பு கோணாமலைக்கும் அவரது தர்மபத்தினி தில்லையம்மாவுக்கும் ஐந்து பிள்ளைகள் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள; ஆண்களில் மூத்தவர் திரு.கோ.சுப்பிரமணியம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் மறிகாறத் தொழும்பாளர். இத்தொழும்பு அவரது மனைவி வழியாகக் கிடைத்தது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் அருவ வழிபாடுகளான, கந்தளாய்க் குள மகாவேள்வி, நாயன்மார் கோயில் மடை, மாகாம மூர்க்க மாதா வேள்வி, கல்வி மேட்டில் நடைபெறும் பத்தினித் தேவி விழாபோன்ற கிராம தேவதை வழிபாடுகளின் நாயகர்களாகத் திகழ்பவர்கள் தற்பொழுது அருவ வழிபாட்டு முறைகள் வழக்கொழிந்து போன நிலையில் உள்ளதால் இவர்களின் சிறப்பினை இன்று உணரமுடியாத நிலையில் உள்ளோம்.

இரண்டாது மகன் நமது போற்றுதலுக்குரிய கலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா அவர்கள.; 1942ஆம் ஆண்டு பிறந்த இவர் தந்தையிடம் பெற்ற கல்வி மூலம் மத்தளம், கஞ்சிரா போன்ற கருவிகளை கேட்போர் வியக்கும் வண்ணம் மீட்டும் ஆற்றல் பெற்றிருந்தார்.

1967ஆம் ஆண்டு திருகோணமலை தட்சணகான சபா இசைக் கல்லூரிக்கு மிருதங்க ஆசிரியராக திரு.நா.ஆறுமுகம் பிள்ளை வந்திருந்தார். அவரிடம் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இருவாத்தியங்களையும் முறையாகப்பயின்றார்.

அக்காலப் பகுதிகளில் திருகோணமலையில் நடைபெற்ற பல கச்சேரிகளுக்கு குருவோடு சென்று வாசித்து அபரிதமான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். சைவப்புலவர் இ. வடிவேல் அவர்களும் காந்தி ஐயா அவர்களும் இணைந்து தனக்குப் பொன்னாடை போர்த்து கௌரவித்ததையும் ‘லய ஞான மணி’ பட்டத்தை வழங்கியதையும் தனது வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத சம்பவம் எனக் குறிப்பிடும் இக் கலைஞா; பாடகர் கலாபூசணம் கந்தர்வ கான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களுடன் இணைந்து கச்சேரிகள் நடாத்தியதையும் தம்பலகாமம் ஆதிகோணநாயக்கோயில் மண்டபத்தில் பஐனைகளை ஒழுங்காக நடாத்தி மன அமைதி பெற்றதையும் நினைவு கூறுகிறார்.

 வைத்தியம் மாந்திரீகம் ஆகிய கலைகளிலும் கைதேர்ந்த இக் கலைஞர் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையிலும், திருகோணமலை தட்சணகான சபாவிலும் மிருதங்க வகுப்புகளை நடாத்தியுள்ளார்.

தம்லகாமம் சாயி சேவா சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தம்பலகாமம் மகாவித்தியாலய மண்டபத்தில் இளைஞ; சிறார்களுக்கு மிருதங்கம் கஞ்சிரா ஆகிய வாத்தியக் கருவிகளை கற்றுத் தரும் வகுப்பொன்றை நடாத்தி வந்தார், எனினும் இம்முயற்சி நிறைவாக முற்றுப் பெறாமல் போனது துரதிஷ்ட வசமேயாகும்.

இத்தகைய சிறந்த கலைஞரை தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் பரிபாலனசபை 2008ஆம் ஆண்டு ‘மிருதங்க இசையின் விற்பனர்’ என்னும் மகுடம் சூட்டி வாழ்த்தியது.

2006 மே 22ஆந் திகதி அரசு இவரது கலைச்சேவைக்கு உபகாரமாக வழங்கப்படும் ‘கலாபூசண விருதை’ வழங்கி கௌரவித்தது.
இந்த அரிய கலைஞருக்குப்பின் அவர் வாரிசாக எவரும் இல்லை என்பதை அறியும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாகவே உள்ளது.

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment