Thursday, August 02, 2012

இசைமணி திரு.க.சண்முகலிங்கம்


இராகமாலிகா இசை நிகழ்ச்சி 
தம்பை நகர் தந்த புகழ் பூத்த கலைஞர்களில் ஒருவர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் என்றால் அது மிகையாகாது. இராக, தாள நுட்பங்களை நன்கு அறிந்த இவர் ஒரு தலைசிறந்த ஆர்மோனிய வித்துவானுமாவார். திருகோணமலை மாவட்டத்தில் இரு கரங்களாலும் சரளமாக ஆர்மோனியம் வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு எவருமில்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். நாடகங்களை நெறிப்படுத்தி, தம்பலகாமம் கல்வி மேட்டிலுள்ள ஆலையடிப் பிள்ளையார் கோயில் முன்றலில் அரங்கேற்றி தம்பலகாமம் வாழ் மக்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியவர். இவரது நாடகங்களைக் காண திருமலையிலிருந்தும், மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தம்பலகாமத்திற்கு வந்து செல்வது நாடறிந்த உன்மையாகும்.

கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கும் அவரது தர்மபத்தினி சிவகாமி அம்மையாருக்கும் ஐந்து பிள்ளைககள் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். இவர்களில் 1936ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், 22ம் திகதி மகனாக பிறந்தவர்தான் நமது புகழ் பூத்த கலைஞர், பாடகர், கலா பூசணம,; கலைமணி,கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்கள். கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தனது மூத்த மகனான சண்முகலிங்கத்தை இளம் வயதிலிருந்தே தான் நெறிப்படுத்திய நாடக ஒத்திகைகளுக்கு அழைத்துச் சென்று கேட்போரைப் பரவசப் படுத்தும் வகையில் இராக தாள நுட்பங்களைக் கற்றுத் தந்து பாடுவதற்கான இசை ஆற்றலையும் உருவாக்கினார்.
1946ஆம் ஆண்டு திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆரம்பித்த இவரது கல்வி 1952இல் முடிவடைந்தது. இக்காலப்பகுதியில் இவரது இசையாற்றலுக்கும் இலக்கிய ஈடுபாட்டிற்கும் சைவப் புலவர் பண்டிதர் திரு.இ.வடிவேல் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற விழாக்களில் கலந்து கொண்டு தேவாரப் பண்ணிசை பாடவும், பேசவும் ஆற்றல் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே நல்ல நூல்களைத் தேடிவாசிக்கும் பழக்கத்தை திரு.கு.செந்தில்வேல் அவர்கள்(காந்தி ஐயா) ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நல்ல பழக்கம் வீட்டில் ஒரு நூலகத்தை அமைக்க உதவியது. திருகோணமலை சிவயோக சமாஜம் இவரது இசையாற்றல் வளர்ச்சிக்குப் பல வழிகளிலும் பெரிதும் உதவியது.

இக்காலப்பகுதிகளில் கலா பூசணம், கலாவிநோதன் சித்தி அமரசிங்கம், முத்தழிழரசு சாம்பசிவம், வயலின் வித்துவான் கலாபூசணம் திரு.சங்கரலிங்கம் ஆகியோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது இதன் பயனாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ஆற்லும் அபரிதமான திறனும் பெற்றார். இலக்கியத் திறனும் இராகங்களை இனங்காணும் ஆற்றலும் மிக்க இவர் பாடல்களை அமைத்து அவற்றுக்கு மெட்டும் அமைத்தார். இவர் இயற்றி மெட்டமைத்த பாடல்கள் இரசிகப் பெருமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவைதவிர பாடசாலைகளின் அழைப்பின் பேரில் மாணவர்களின் தமிழ்த் தினப் போட்டி பாடல்களுக்கும் நாடக அரங்கேற்றங்களுக்கும் இசையமைத்து வழங்கி அனைவரதும் பாராட்டுதலுக்கும் உரியவரானார்.

இவரது இளைய சகோதரர் திரு.க. மகாலிங்கம் அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகும். குரல் வளமும் சங்கீத ஞானமும் மிக்க இவர் தனது தமையனுடன் இணைந்து மேடைகளில் பாடியுள்ளார். இதன் காரணமாக இவர்களைத் “தம்பலகாமத்து இரட்டையர்கள்” என இரசிகப் பெருமக்கள் குறிப்பிடுவது வழக்கம்.

தம்பலகாமத்து இரட்டையர்கள்
திருகோணமலை சிவயோக சமாசத்தில் திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் இணைந்திருந்த காலப்பகுதியில் ‘ராக மாலிகா’ என்ற இசைக்குழு மூலமாக பல கச்சேரிகளை யாழ்ப்பாணம், வவுனியா, சம் பூர் போன்ற பல இடங்களிலும் நடத்தியுள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க கலைஞரை 1973ஆம் ஆண்டு தம்பலகாமம் வடக்கு இந்து வாலிபர் சங்கம் தமது முதலாவது ஆண்டு நிறைவு விழாவின் போது ‘இசைமணி’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

திருகோணமலை சிவயோக சமாசத்தில் பஜனை பண்ணிசைகளில் பலகாலங்கள் ஈடுபட்டமைக்காக ‘பண்ணிசை மணி’ என்ற பட்டம் 1980களில் வழங்கப்பட்டது.

திருகோணமலை முத்தமிழ் வளர்கலை மன்றம் 2004இல் இவருக்கு ‘கந்தர்வ கான இசைமணி’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

10.06.2005 இல் தம்பலகாமம் பிரதேச செயலகம் நடாத்திய தேசிய கலை இலக்கியப் பெருவிழாவின்போது இவரும் பாராட்டப்பட்ட கலைஞாகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் அறங்காவல் சபை, தம்பலகாமம் சாயி சேவா சங்கம் என்பன இவரது செயலாற்றலை பெரிதும் பாராட்டி கௌரவித்தன.



எல்லாவற்றிற்கும் மேலாக 2007ம் ஆண்டு அரசு கலாபூசணம் பட்டத்தை வழங்கி இவரது சேவைக்கு மகுடம் சூட்டியது.மேலும் இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவரது மகன் முருகதாஸ் ஆசிரியர் ‘சண் இசைக் குழு’ ஒன்றை நிறுவி இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் வகையில் இளஞ் சிறார்களை பங்குகொள்ளச் செய்து பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து நடாத்தி வருகின்றார். முருகதாஸ், நாகராசா, கிரிதரன், டிலக்ஷணா, விதுஷா, நிஷஷா, துஷாந்தி, அஜந்தன்,பிரகாஷ், யோகராசா, மணிவண்ணன் ஆகிய இளங்கலைஞர்கள் சண் இசைக் குழுவில் இணைந்துகொண்டு பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் பாடிவருகின்றனர்.

இந்த இளம் கலைஞர்களில் பலர்,கலாபூசணம், கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களின் பிள்ளைகளாகவும், பேரப்பிள்ளைகளாகவும் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிட்டு கூறவேண்டிய ஒரு விடயமாகும்.
வே.தங்கராசா






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment