Tuesday, July 30, 2013

“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2

 தம்பலகாமம்

வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது.(1) என்று சொல்கிறார் திரு.ஆர். ஆளவந்தார்.

இலங்கைத் தமிழர் இடபெயர் பற்றிய ஆய்வில் அப்பெயர்கள் தமிழகத்து இடப்பெயர்க் கூறுகளுடன் ஒப்பிடக்கூடியதாகவும், அதேவேளை சில இடப்பெயர்கள் இலங்கைத் தமிழர் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதைக் காணக்ககூடியதாக இருக்கிறது. இலங்கையில் தமிழ் மொழி பெருங்கற்படைக்காலத்தில் வழக்கில் இருந்தமைக்கு சான்று பகிரும் பிராமிச் சாசனங்கள் இந்தியாவிலுள்ள பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களில் காணப்படாத தமிழ் மொழிக் கலப்புடன் காணப்படுவதை இங்கு குறிப்பிடலாம்.(2)

இலங்கையில் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடபெயர்களை ஆராய்கையில் அவை வரலாற்றுக்காலம் முதல் தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் முழுவதும் பரவி இருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.

மாவட்டரீதியில் அவ்விடப்பெயர்கள் வருமாறு.

யாழ்ப்பாண மாவட்டம் - கொடிகாமம், தம்பகாமம், வலிகாமம், வீமன்காமம்
முல்லைத்தீவு மாவட்டம் – பனங்காமம்
அம்பாறை மாவட்டம் - இறக்காமம் (ஏறுகமம் )
மட்டக்களப்பு மாவட்டம் – பழுகாமம்
மொனராகலை மாவட்டம் - கதிர்காமம்
பொலநறுவை மாவட்டம் - சந்தணகாமம் (இன்றைய கல்லோயா)
திருகோணமலை மாவட்டம் - தம்பலகாமம், உரகிரிகாமம், கிரிகண்டகாமம், மேன்காமம்
மன்னார் மாவட்டம் – வலிக்காமம், முதலியான்காமம்
அனுராதபுரம் மாவட்டம் - அனுராதகாமம் (பழைய பெயர்),கணகாமம்

“காமம்” என்னும் ஈற்றுப்பெயர்  கொண்டமைந்த இடப்பெயர்கள்  - தம்பலகாமம் - பகுதி 1

மேற்கூறிய இடப்பெயர்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் தமக்கென தனியான இடத்தினைக் கொண்டதாக  இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தேவநம்பியதீசன்  (கி.மு 247 - 207 ) அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலத்தல் மகாவலிகங்கைப் பிரதேசத்தில் 32 தமிழ்ச் சிற்றரசுகள் ஆண்டுகொண்டிருந்ததாக மகாவம்சம் ( XIX.54) சொல்கிறது. இப்பிரதேசங்களில் கதிர்காமம் மற்றும் சந்தணகாமத்தைச் சேர்ந்த தமிழ் சிற்றரசர்கள் தேவநம்பியதீசனின் அழைப்பினை ஏற்று புனித அரசமரக்கிளை நாட்டும் விழாவில் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.(3)

கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்து வந்த விஜயனின் மந்திரிகளில் ஒருவரான அனுராதரினால் இலங்கையில் முறைப்படி அமைக்கப்பட்ட முதல் குடியிருப்புப் பகுதியே அனுராதகாமம் இதுவே பிற்காலத்தில் அனுராதபுர  நகரமாக மாற்றியமைக்கப்பட்டது. அத்தோடு கி.மு 5 ம் நூற்றாண்டில் இருந்து கி.பி 4 ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில் அனுராதபுர அரசிற்கு அருகில் இருந்த பல பிராந்திய சிற்றரசுகளில் கணகாமமும் ஒன்றாகும். கணகாமம் என்பது ஒரு வணிககக்குடியிருப்பு ,அங்கு வணிககக்குழுக்களுக்குரிய தலைவனின் நிர்வாகம் இருந்ததை மிகிந்தலை பிராமிக் கல்வேட்டு உறுதிப்படுத்துகிறது.(4)

இன்று ஐந்து நிர்வாகப் பிரிவுகளைக் கொண்ட பிரதேசமாக உள்ள வலிகாமம் என்பது ஒரு கிராமத்தின் பெயராக இருந்து பின்னர் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாக மாறியது என்பர். யாழ்ப்பாண  வைபவமாலை, வையா பாடல்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு மணற்றி, மணற்றிடர் என்ற தூய தமிழ்ப் பெயர்கள் முன்னர் வழங்கியமை  அறியப்படுகின்றது. மதுரை மன்னன் வரகுணபாண்டியன் இந்த “மணற்றியை” வென்ற செய்தியை “மன்னோரழிய மணற்றி வென்றான்” என்ற பாடல்  கூறுவதாய் அமைந்தள்ளது.சங்கத் தமிழில் வால் எக்கர் என்பது வெள்ளை மணல் திட்டுகள் அல்லது வெள்ளை மணல் தொடர்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். சிலப்பதிகாரத்தில் வரும் வாலுகம் வெள்ளை மணலை குறிக்கும். எனவே மணற்றி – மணற்றிடர் - மணலூர் வலிகாமம் ( வலி + காமம் = மணல் கிராமம்) என்பன ஒரேயிடத்தைச் சுட்டும் தமிழ்ப்ப் பெயர்கள் என்பது புலனாகின்றது.

“வீமன்” என்ற கூத்துக் கலைஞன் அல்லது வீமன் என்ற தலைமகன் ஒருவன் விரும்பி வந்து தங்கி வாழ்ந்த இடமே “வீமன்காமம்” என்று கருதப்படுகிறது. இதனருகில் “கூத்திவளவு” என்ற இடம் இருப்பது பண்டை நாட்களில் இங்கு பாரதக்கதையோடு தொடர்புடைய கூத்துக்கள் ஆடப்பட்டமை தொடர்பானது என்பது சிலர் கருத்தாகும். (5)

பனங்காமம் பற்று வன்னிபமாகிய நல்ல மாப்பாணன் வழங்கிய ஓலை அடங்காப்பற்றிலே அதிகாரஞ் செலுத்திய வன்னியரின் ஆவணங்களில் ஒன்றாகக்கொள்ளப்படுகிது.(6)அதேபோல்05.06.1893 ஆந்திகதியிடப்பட்ட உயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்திலிருந்த இருமரபுத் தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னியம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுரிமை தொடர்பான பிரச்சனை ஒன்றைத் தீர்த்து வைத்ததைச் சொல்கிறது. கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம் உரகிரிகாமம், கிரிகண்டகாமம்  என்னும் நிலாவெளிக்குள் அடங்கிய தற்போது வழக்கொழிந்துபோன இரு இடப்பெயர்களை அடையாளப்படுத்துகிறது.

பழுகாமம் வன்னிபம்பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், நாட்டார் பாடல், ஐரோப்பியர் எழுதிய ஆவணங்கள் என்பவற்றின் மூலமாக அறிய முடிகின்றது. இவர்கள் சுதந்திர அரசாக இருந்ததோடு சிலகாலங்களில் கண்டி மன்னனின் மேலாதிக்கத்துக்கும் உட்பட்டிருந்தார்கள் என அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே “காமம்” என்னும் ஈற்றுப்பெயர்  கொண்டமைந்த இடப்பெயர்கள் இலங்கையில் தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் முழுவதும் பரவி இருந்ததைக் காணக்கூடியதா இருக்கிறது. எனினும் காமம் ,கிராமம் என்ற இலங்கைத் தமிழர் இடபெயர்  சொல் சமக்கிருத '(g)கிராம" என்ற சொல்லிலிருந்து உருவானது என்ற வாதம் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமக்கிருத காமா என்பதே சிங்களத்திலும்(கம,கமுவ) ,பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது என்பது இதற்கு வலுச்சேற்கும் கருத்தாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் மொழியியல் அறிஞர்கள் காமம் என்ற திராவிடச்சொல் தமிழில் இருந்து வடசொல் ஆனது என்பர்.

 "கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர் (தொல். சொல். உரி. 355)

கமம் என்ற சொல்லுக்கு பொருள் நிறைவு என்பதாகும் . கமம் என்ற சொல்லே காமம் என்றானது. சங்கத் தொடரில் வரும் " கமஞ் சூல் மாமழை " என்பதற்கு சூல்நிறைந்த முகில் என்பதே பொருள். அதோடு அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர். காமம் மிக்க கழிபடர் கிளவி என்று தூது இலக்கியம் அதைத்தான் சொல்கிறது.

நிறைவு எனப் பொருள்பட்ட இந்தக் கமம், மக்கள் நெருங்கி வாழும் ( உறு - ஊர் போல் ) இடத்தினைக் குறிக்க பொருள் விரிவு பெற்று காமம் ஆனது என்பர். கமம் என்றசொல் பயிர்செய்கை நிலத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

காமம்¹ kāmam (அக. நி.) 1. Village; ஊர். 2. Inhabitant; குடி.

எனவே இலங்கையில் தமிழர் வாழ்ந்துவரும் பிரதேசங்களில் வழக்கில் இருக்கும் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர்  கொண்டமைந்த இடப்பெயர்கள் ஊர் என்ற பொருள்படவே அமைந்திருக்கிறது எனலாம்.
த.ஜீவராஜ்
தொடரும்.....

மேலும் வாசிக்க

‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ 

ஆதாரங்கள்
1. ஆளவந்தான், ஆர், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் ,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
2இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
3. இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும் திருமதி.தனபாக்கியம் குணபாலசிங்கம் 2001.
4. இலங்கை வரலாறு பேராசிரியர்.சே. கிருஷ்ணராசா 2005
5. இடப்பெயர் ஆய்வு கலாநிதி இ. பாலசுந்தரம் 1988
6. வன்னியர் கலாநிதி சி. பத்மநாதன் 1970

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. arumaiyana aaivu. valka pallandu. thodaurka ippani!
    Kernipiththan.

    ReplyDelete