Thursday, July 25, 2013

இலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1

தம்பலகாமம்

‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ என்கிறார் ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் திரு.ஆர். ஆளவந்தார் அவர்கள்(1). உலக கவனத்தையீர்த்த இந்த இடப்பெயராய்வு (Toponymy )18 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு அறிவியல் துறையாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
ஆதிகால மக்கள் தங்களது வாழ்விடங்களை நிலைப்படுத்திய பின்பு அவர்களது வாழ்விடங்களை பிற குழுக்களுக்கு அடையாளப்படுத்தவும் , இடங்களைப் பிரித்தறிவதற்காகவும் தாம் வாழ்ந்த இடங்களுக்குப் பெயர்களைச் சூட்டலானார்கள். இவற்றில் பல்வேறு வகைப்பாடுகள் இருந்தது. அவை

1. இயற்கைச் சூழல் தொடர்புடைய பெயர்கள் - நீர்நிலைப்பெயர்கள், நிலப்பெயர்கள், மரப்பெயர்கள், பறவை,விலங்குப் பெயர்கள் என்பன.
2. கடவுட் பெயர்கள்
3. அரசர்,அதிகாரிகள் என்போரின் பெயர்கள்
4. புராண,இதிகாச,இலக்கியப் பெயர்கள்
5. தொழில் முறைகள், சாதிப் பெயர்கள்
6. அரசியல்,சமய நடவடிக்கைகள் தொடர்புடைய பெயர்கள் என்பன அவற்றுட் சிலவாகும்.

இவ்வாறு உருவான சில இடப்பெயர்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்ததை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. வரலாற்றில் இடப்பெயர்கள் மாற்றமைடைந்து வந்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அரசர்கள் தாங்கள் வெற்றிகொண்ட பிரதேசங்களின் பெயர்களை மாற்றியமை, ஆட்சியாளர்கள் தங்களால் தானமாக பிறருக்கு வழங்கப்பபட்ட ஊர்களின் பெயர்களை மாற்றியமை, அறிஞர்களால் அரசியல்,மொழி,கலாச்சாரப் பின்னணியில் மாற்றியமைக்கப்பட்ட இடப்பெயர்கள் என்பன அவற்றுள் சிலவாகும்.

தம்பலகாமம்

ஓரு நாட்டின் வரலாற்றுண்மைகளையும், பண்பாட்டுச் செய்திகளையும் புதைபொருட்களும், கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், நாணயங்களும், மட்பாண்டங்களும் முதுமக்கள் தாழிகளும், இலக்கியங்களும் எடுத்துச் சொல்வது போன்று, இடப்பெயர்களும் வரலாற்று ஆய்வுக்கு உறுதுணை செய்கின்றன. எனவே தமிழில் “இடப்பெயராய்வு” ஒரு முக்கிய ஆய்வுத் துறையாக வளர்ந்து வருவதை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாற்றின் தொன்மை பற்றிய தேடல்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் இடப்பெயர் ஆய்வு முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழர் இடம்பெயர் ஆய்வுகளில் பின்வரும் காரணிகள் செல்வாக்கு செலுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

1). இலங்கையில் தொல்குடிகளாக வாழ்ந்த திராவிடர்கள்.
2). வணிக,அரசியல் மற்றும் குடியேற்றம் தொடர்பான இலங்கை – இந்திய தொடர்புகள்.
3). தமிழ், சிங்களம் ஆகியவற்றில் உள்ள வட இந்திய மொழிகளின் செல்வாக்கு.
4) இலங்கையிற் தமிழர் வளர்த்த பௌத்தம்( தமிழ் பௌத்தர்கள், தமிழ் தேரர்கள், சோழர்கள் (2))
5). காலணித்துவ ஆட்சி
6). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் காலவரையறைப்படி அட்டவணைப்படுத்தப்படாமை. (ஏறக்குறைய 150 தமிழ்ச் சாசனங்கள் உள்ளன என்பது ஒரு கணிப்பீடாகும். (3) ) அத்துடன் வரலாற்றாதாரங்களையும், கலாச்சாரச் சின்னங்களையும் பேணிக்காப்பதில் தமிழர் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றோடு பண்டைக்காலம் முதலாக ஒரு மொழியின் இலக்கண வரம்பிற்கமைய ஆக்கம் பெற்று வழங்கிவந்த இடப்பெயர்கள், காலப் போக்கில் பேச்சு வழக்கில் சிதைந்து அதன் தோற்றக் காரணம், பெயர் விளக்கம் என்பன மறைந்துபோக, அவற்றுக்குப் பிற்காலத்தோரால் புதிய காரணகாரியந் தொடர்பான விளக்கங்களும் கதைகளும் புனைந்துரைக்கப்பட்டிருப்பதையும் கருத்தில்கொள்ளவேண்டியுள்ளது.

தம்பலகாமம்


கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்

(திரிகோணாசல புராணம் )

மேற்படி விடையங்களின் பின்னணியில் தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வே இத்தொடர் கட்டுரையின்  நோக்காகும்.
த.ஜீவராஜ்
தொடரும்.....


ஆதாரங்கள்

1.ஆளவந்தான், ஆர், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் ,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
2. இலங்கையிற் தமிழ்ர் வளர்த்த பௌத்தம்,  இலங்கையிற் தொல்லியலாய்வும் திராவிடக் கலாச்சாரமும் திருமதி.தனபாக்கியம் குணபாலசிங்கம் 2001.
3. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. சுவையான பகுதி. தொடருங்கள்.. காத்திருக்கின்றோம்..

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete