Tuesday, April 22, 2014

பல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் (Nalanda Gedige) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையின் மையப்பகுதியென  ( 7.6699136N, 80.6458444E ) உறுதிப்படுத்திய இடம் இதுவாகும். A9 பிரதான வீதியில், தம்புள்ளைக்கு தெற்குப் பக்கமாக 20 கி.மீ தூரத்தில், பிரதான பதையில் இருந்து கிழக்கே 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நாலந்த கெடிகே என்னும் சிலை மண்டபம்.

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இயற்கையின் அரவணைப்பில் குளத்தால்(  Bowatenne Tank ) சூழப்பட்டு அமைதியாகக் காட்சிதரும் இந்த வணக்கத்தலம் வரலாற்றைத் தேடும் ஆர்வலர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவருமிடமாக இருக்கிறது. இக்கட்டிடம் பல சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டது.

01. இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப்பகுதியாகும்.
02. இங்குள்ள சிற்பங்கள் இந்து - பௌத்த அடையாளச் சின்னங்களைக் கொண்டமைந்துள்ளன.
03. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் மகாயான பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டது.
04. 8ம் – 10ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
05. இந்து - பௌத்த கலாச்சாரத்தை இணைத்து கட்டப்பட்டிருந்தும் ஒப்பிடும்போது பெருமளவுக்கு அறியப்படாத ஒரு தொல்லியல் சின்னமாகவே இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
06. இங்கு காணப்படும் சிலைகளில் குபேரன் சிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
07. மேற்குறித்தவற்றுடன் இன்னுமொரு சிறப்பும் இதற்குள்ளது. அதாவது இப்போது நாம் பார்ப்பது நகர்த்தப்பட்டு, மீளமைக்கப்பட்ட கட்டிடமாகும்.

1970 களில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நினைவுச் சின்னம் இருந்த இடம் முற்றாகவே நீருக்குள் அமிழ்ந்து அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது இச்சின்னத்தை ஒவ்வொரு கல்லாகக் கழற்றி எடுத்த தொல்லியல் துறையினர் அதனை முன்னைய இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் ( இப்போது உள்ள இடத்தில் ) நிலத்தினை மண்போட்டு உயர்த்தி பின்னர் அதில் மீளக் கட்டினர்.

இந்தத் தொல்லியல் களம் ஒரு சிலை மண்டபத்தையும், ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. சிலை மண்டபம் இந்துக் கோயில் போன்று கட்டிட அமைப்புக்களை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே பௌத்த, இந்து சிற்பங்கள் காணப்படுகின்றன.

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இச்சிலை மண்டபம் முகமண்டபம், உள்மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது. அத்துடன் பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் எனப்படும் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபத்தின் விமானமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

சிலை மண்டபத்தின் கருவறையில் புத்தர் சிலையுடன் மகாயான போதிசத்வர் அல்லது அவலோகிதேசுவரர் எனக்கருதத்தக்க சிற்பமும் ஒரு பிள்ளையார் சிலையும் காணப்படுகிறது.
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இச்சிலை மண்டபத்தின் சுவர்களில் நமக்கு நன்கு பரீட்சயமான இந்து சிற்ப வடிவங்கள் பலவற்றினைக் காணலாம். காவற்தெய்வங்கள், காமசூத்திரா சிற்பம், இலட்சுமி சிலை, ஆவுடையார் என்று நீண்டு செல்கிறது இந்தப் பட்டியல்.

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

சிலவேளைகளில் வரலாறுத் தேடல்கள் பல சுவாரிசயங்களைக் கொண்டு கட்டியெழுப்பட்ட மர்ம நாவலைப் போன்று காட்சிதரும். இந்தச் சிலை மண்டபத்திற்கும் அப்படியொரு பக்கமிருப்பது விசாரித்தபோது அறியக்கிடைத்தது. அதற்குக் காரணம் இங்கிருக்கும் குபேரனது சிலையும், இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு சிலை உருவமும் ஆகும். இவை இரண்டையும் பற்றிக் கீழே குறிப்பிடப்படும் செய்திகளின் வரலாற்று ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாதவை. சிங்களக் கிராமங்களில் காணப்படும் செவிவழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.


நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige
நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige


இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விச்வரஸ் மற்றும் கோகஸியின் மகனான இவருக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர் என்பது இதிகாசங்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி. பௌத்த மதத்திலும் குபேரன் ( කුවේර රජ ) உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். இலங்கையில் சிங்களவர் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இலங்கையில் இராவணனின் ஆட்சிக்கு முன்பு இவர் இலங்கையை ஆண்டதாக கிராமப்புற சிங்களவரிடையே நம்பிக்கைகள் உள்ளன.

இச்சிலை மண்டப கட்டிடச் சிற்பங்களில் காணப்படும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று இந்தக் குபேரன் சிலையாகும். இவற்றோடு இதற்கு எதிர் முனையில் இருக்கும் இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு சிலை உரு இந்திரஜித் உடன் தொடர்புபட்டது.

இந்திரஜித் இராமாயணக் கதையில் வரும் இராவணனின் மகனாவான். மேகநாதன் என்ற இயற்பெயருடைய இவன் தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது என்பது இதிகாசத்தின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் தகவல்.

மிகப்பழமைவாய்ந்த சிங்களக் கிராமங்களில் இந்திரஜித் பிரம்மாவை வேண்டித் தவம் செய்த இடமாக இத்தலத்தைக் கருதுகிறார்கள். அவர்கள் இராவணனை 'Gange Bandara Deviyo' (A Synonym for King Raavana) என்று வணங்கும் வழக்கம் உடையவர்கள். இவர்களிடையே பரவலாக உள்ள கர்ணபரம்பரைக் கதைப்படி, பண்டைய நாட்களில் ( இவ்வாலயம் அமைவதற்கு முன்) இந்திரஜித் இப்பிரதேசத்தில் இருந்து மிகக் கடுமையான தவம் ஒன்றினை பிரம்மாவை நோக்கி மேற்கொண்டான். அது அதிக வலிமை கொண்ட ஒரு ஆயுதம் அல்லது விமானம் ஒன்றினைப் பெறுவதை நோக்கமாக கொண்ட தவமாகும். எனினும் அத்தவம் குழப்பப்பட்டதனால் அதனை அவனால் அடையமுடியாது போனது என்கிறார்கள்.

இந்த நிகழ்வினை மையப்படுத்தியே பின்னாட்களில் இந்ததத்தலம் அமைக்கப்பட்டபோது தவத்தில் இந்திரஜித்திற்கு உதவிய அதி சக்திவாய்த மனிதர் அல்லது தேவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது உருவினை கட்டிடத்தில் வைத்ததாக கருதுகிறார்கள். சிலை மண்டபத்தின் விமானத்தின் கூரையின் ஒரு பக்கம் குபேரனும் மறுபக்கம்  அடையாளம் காணப்படாத ஒரு சிலை உருவும் இருப்பதற்கான கதை இதுதான்.

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige


இக்கதைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது என்றாலும் இக்கட்டிடம் இன்னும் ஆராயப்படாத பல வரலாற்றுப் புதையல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதிபட நமக்குப் புலப்படுத்துகிறது. இந்தக் கட்டிடத்தின் முன்மண்டப கூரையாக இருந்திருக்கக்கூடிய பல கற்தூண்கள் அருகில் சிதறிக் கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

மாத்தளை நோக்கிய எமது பயணத்தில் எண்ணி 30 நிமிட நேரமே இந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றிப்பார்க்கக் கிடைத்தது.மீண்டும் ஒருமுறை கிடைத்தால் ஆறுதலாக ஆராயவேண்டுமென்ற ஆவல் மனதில் நிறைய இருக்கிறது.

மாத்தளைக்கும், தம்புள்ளைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாள சம அளவு தொலைவில் உள்ள இச்சிலை மண்டபம் இவ்விடங்களுக்குச் சுற்றுலா செல்லும் வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களால் தவிர்க்கக்கூடாத இடமென்பதில் ஐயமில்லை.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Dear Dr
    you have given a beautiful picturesque of Nalanad Godige. I have visited these places and seen . You also given a descriptive heritage of Pallaver , Buddhist artistic scenery. Sri Lanka is the mother land for Sinhalese and Tamils. The politicians betrayed our people. Now these can be solved only by the patriotic Sri Lankan Originally our culture is not different from Sinhalese. Most of the Sinhalese are very good people with good understanding. I congratulate for your tremendous task and the beautiful photography. Thank you for the information
    Kernipiththan

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete
  3. அருமையான பதிவு .❤️ நானும் 2021 ஆம் ஆண்டு இங்கு பயணித்தேன் அதிக இரகசியங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான இடமாக இது இருக்கவேண்டும் என இன்று வரை அது சம்பந்தமான தகவல்களை தேடிக்கொண்டே இருக்கின்றேன்…

    ReplyDelete