Friday, April 11, 2014

தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

தூக்கமின்மை Insomnia

நமது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி தூக்கமின்மை (Insomnia) ஆகும். நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை இடையூறு இல்லாமல் நீட்டிப்பதிலும் குழப்பங்கள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று வரையறுக்கின்றனர்.
ஒருவர் நித்திரைகொள்வதற்கு 30 நிமிட நேரத்துக்குமேல் எடுத்துக்கொண்டாலோ அல்லது அவரது தூக்கம் 6 மணிநேரத்திற்கு உட்பட்டதாக இருந்தாலோ அல்லது இரவில் 3 தரத்திற்குமேல்  விழிப்பேற்பட்டு நித்திரை குழம்பினாலோ அவ்வகைத் தூக்கம் ஆரோக்கியம் அற்ற தூக்கமாகக் கருதப்படுகிறது.

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தேவையான அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் காணப்படுகின்றது.

தூக்கமின்மையின் அளவுகோல்கள் வேறுபட்டு இருந்தாலும், அது தெளிவாக மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன,

01. நிலையற்ற (transient) தூக்கமின்மை   -   எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை
02. தீவிரமான (acute) தூக்கமின்மை  -   சற்று கடுமையான/ தீவிரமான தூக்கமின்மை
03. நாட்பட்ட/ நீடித்த (chronic) தூக்கமின்மை   -   முற்றிய தூக்கமின்மை


தூக்கமின்மை Insomnia


நிலையற்ற தூக்கமின்மை: ( transient insomnia) சில நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை நீடித்து இருக்கும் வகைத் தூக்கமின்மையாகும். இது வேறொரு நோய்க்கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும். கடுமையான மனச்சோர்வு அல்லது மன உளைச்சல்  இதற்கு காரணங்களாக இருக்கலாம். அத்துடன் தூங்கும் சூழலில் மாற்றம், தூங்கும் நேரத்தில் மாற்றம் போன்றவையும் காரணங்களாக அமையலாம்.

தீவிரமான தூக்கமின்மை(Acute insomnia) இந்த நிலையில் தூக்கமின்மை ஒருமாத காலம் வரை நீடிக்கலாம். பொதுவாக இது குணப்படுத்தக் கூடிய நிலையாகவே காணப்படும். புதிய வேலை, பரீட்சை பற்றிய பயம் போன்ற காரணிகள் காரணங்களாக அமையலாம். எனினும் அக்காரணிகள் அகன்ற பிற்பாடு இத்தூக்கமின்மை குணமாகிவிடும்.

நாட்பட்ட/ நீடித்த தூக்கமின்மை: (Chronic insomnia) ஒரு மாதகாலத்திற்கு மேற்பட்டதாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருப்பதாகவும் இருக்கும். தூங்கவே முடியாத நிலை, தசைகளில் தளர்ச்சி, மன மருட்சிகள், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. இது அவருக்கு முதன்மையானநோயாக இருக்கலாம் அல்லது மற்றொரு நோயினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

தூக்கமின்மைக்கான காரணங்கள்
01. சில குறிப்பிட்ட மருத்துகள், உணவுவகைகள்
02. வலியை உண்டாக்கும் காயம் அல்லது வேறு காரணங்கள், குடல் ஒட்டுண்ணிகள், மாதவிடாய் காலம், மற்றும் மாதவிடாய் நிறுத்தம்
03. பயங்கரமான கனவுகள், தூக்கத்தில் நடக்கும் வியாதி
04. பயம், அழுத்தம், ஏக்கம், மன அலைச்சல், வேலையில் சிக்கல்கள்,வேலை நேர மாற்றம், பண நெருக்கடிகள், பாலுறவில் அதிருப்த்தி ஏற்படுதல் போன்ற வாழ்க்கைச் சிக்கல்கள்.
05. மிகவும் நேசித்த ஒருவரின் திடீர் மரணம்
06. நரம்பு சம்மந்தமான நோய்கள், மூளை சிதைவுகள், மனநோய்
07. தூங்கும் மனிதனின் சுவாசத்தில் ஏற்படும் சிக்கல்கள் (sleep apnea)
08. Restless legs syndrome கால்களை நகர்த்த வேண்டும் என்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது அல்லது மற்ற உடல் பாகங்களை நகர்த்த வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் ஏற்படும் தூக்கமின்மை.
09. காரணமறியப்படாத தூக்கமின்மை Idiopathic insomnia


தூக்கமின்மை நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்

தூக்கமின்மை Insomnia


1.1 மில்லியன் அமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில் ஒரு இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது என்று கண்டறிந்தனர்.அத்தோடு கடுமையான தூக்கமின்மை உள்ளவர்களின் இறப்பு விகிதம் 15% ஆக இருப்பதையும் உறுதிப்படுத்தினர்.

இதனடிப்படையில் Comorbidity of chronic insomnia with medical problems. Feb-1 2007 என்கின்ற ஆய்வுவின் தரவுகள் கடுமையான தூக்கமின்மை உள்ளவர்களின் இறப்பு விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என்பதனை நமக்கு உணர்த்துகின்றது.
                                                             

நாள்பட்ட தூக்கமின்மை உள்ள நபருக்கான நோய்க்கான  சாத்தியம் 
சாதாரண   தூக்கமுள்ள நபருக்கான நோய்க்கான  சாத்தியம்

இதய நோய்    
 21.9%
 9.5%
உயர் இரத்த அழுத்தம் 
 43.1%
 18.7%
நரம்பியல் நோய்
 7.3%
  1.2%
சுவாச பிரச்சனைகள் 
 24.8%
  5.7%
சிறுநீர் பிரச்சினைகள் 
 19.7%
  9.5%
நாள்பட்ட வலி
 50.4%
 18.2%
குடல் பிரச்சினைகள்
 33.6%
  9.2%

மேற்குறிப்பிட்டுள்ள சுட்டிகள் சாதாரண தூக்கமுடைய நபர் ஒருவரில் நோய்க்கான சாத்தியத்தை கடுமையான தூக்கமின்மை நிலை பலமடங்காக அதிகரிப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும்

இந்தநிலையில் அண்மையில் (Stroke. Published online April 3, 2014 ) வெளியிடப்பட்ட ஆய்வானது தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் என்பதனை ஆதாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தூக்கமின்மை Insomnia


நாள்பட்ட தூக்கமின்மை உள்ள நபருக்கான நோய்க்கான சாத்தியம்
சாதாரண    தூக்கமுள்ள நபருக்கான நோய்க்கான  சாத்தியம்
Any stroke


7.04
3.80


தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதை நான்கு வருடகால இவ்வாய்வின் முடிவுகள் உறுதி செய்கின்றன. தூக்கமின்மையினால் (Insomnia) பாதிக்கப்பட்ட 21 438 பேர்களோடு,  சாதாரண தூக்கமுடைய 64 314 பேர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியபோதே இம்முடிவுகள் பெறப்பட்டன. 

மேலும் பாரிசவாத (Stroke) நோயின் உட்பிரிவுகள் அனைத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு ஆபத்தான காரணியாக தூக்கமின்மை இருப்பதை கீழுள்ள தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

பாரிசவாத (Stroke) நோயின் உட்பிரிவுகள் 
Insomnia (%)
தூக்கமின்மை
No Insomnia (%)
Ischemic stroke

3.84
2.15
Hemorrhagic stroke

1.12
0.85
Unspecified

0.53
0.26
Transient ischemic attack

1.55
0.55



இவற்றோடு இவ்வாய்வில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடையம் என்னவென்றால் இவ்வாய்வுக்கு உட்பட்டவர்களில் இளவயது நபர்களில் பாரிசவாத (Stroke) ஆபத்து மிக அதிகமாகக் காணப்படுவதாகும். அதிலும் குறிப்பாக 18 வயது முதல் 39 வயது வரையுள்ள நபர்களில் பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக தூக்கமின்மை இருப்பதை இவ்வாய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது.

Age Group
Insomnia
தூக்கமின்மை
No Insomnia
18 - 34
1.10
0.14
34 - 39
2.56
0.94
50 - 64
7.10
3.81
≥64
18.85
11.02


எனவே இவ்வாய்வு முடிபுகள் இளவயதில் ஏற்படும் தூக்கமின்மை பற்றி நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்பதனை வலியுறுத்துவதாய் அமைந்திருக்கிறது. எனவே தூக்கமின்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை உரிய வேளையில் மேற்கொள்வதன் மூலம் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது.


 த.ஜீவராஜ்
குறிப்புதவிகள்

Insomnia Linked to Increased Stroke - www.medscape.com Sue Hughes April 07, 2014
Insomnia  -  http://emedicine.medscape.com
தூக்கமின்மை - http://ta.wikipedia.org
Insomnia Subtypes and the Subsequent Risks of Stroke - https://stroke.ahajournals.org


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Dr
    Thank you for the valuable article. Thank God. I have 5hrs sleep. Even if I sleep late I used to get up at 5am. Sleeping hrs from 11.30 - and get up at either 4 .30 or 5am. Is it OK.?
    Kernipiththan

    ReplyDelete

  2. அமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில், 6 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ உறங்குபவரின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது. எட்டரை மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உறங்குபவரின் இறப்பு விகிதம் 15% அதிகரித்துள்ளது.


    உறக்க நேரத்தையும் தூக்கமின்மையையும் கட்டுப்படுத்தும் தூக்க மாத்திரைகளின் உபயோகமும் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். நான்கரை மணி நேரம் தூங்குவது கூட இறப்பு விகிதத்தை மெல்லிய அளவில் அதிகப்படுத்துகிறது.

    ஏழரை மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களிடம் இறப்பு விகிதம் ஏன் அதிகரிக்கிறது என்பது புலப்படாத ஒன்றாகும்,


    Mortality Associated With Sleep Duration and Insomnia

    ReplyDelete