Thursday, April 03, 2014

திருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1

திருகோணமலை வரலாறு

வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும்.
தம்பலகாமம் கல்வெட்டுச் சொல்லும் வரலாறு

தம்பலகாமம் கல்வெட்டு

1..................................
2.................................
3................................
4.................................
5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ(ர்)
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
269 ம் பக்கம்

1.  ‘உடையார்’  - உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும்.
2.  ‘ஜகதப்ப கண்டன்'  - ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும். ஜகதப்ப என்பது ஒரு விருதுப்பெயர். வீரசாதனை புரிந்தவர்களுக்கு உரியது. பதினோராம், பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் ,மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.

கந்தளாய், கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக அல்லது வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

3.  தம்பலகாம ஊ(ர்)  -  தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் தம்பலகாமம் கல்வெட்டு ஆகும். 

காலம் -  இச்சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்க மாகனின் ( 1215 - 1255 )  ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
வாசித்தவர் -  பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் 
இடம் -  இலங்கை தொல்பொருள் திணைக்களம்


இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்
இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்

ஸ்ரீ பலவன் புதுக்கு
டி யான் ஆதித்தப்
பேரரையன் ஸ்தவ்யா
றாமய னா மானாவதிளானா
ட்டு வெல்க வேரான 
ராஜராஜ பெரும்ளிக்கு
வைத்த னொந்தா வி
ளக்கு 1 பசு 8
4


இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
412  ம் பக்கம்

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.

இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர்,அவரது ஊர்ப் பெயர் ,பதவி அல்லது விருதுப் பெயர் அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்த பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் ,8 பசுக்களையும் மற்றும் பல பொருட்டகளையும்(சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவு செய்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி.புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது.

காலம் - 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இடம் - இராஜராஜப் பெரும்பள்ளி இன்றைய வெல்கம் விகாரை )


நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு
நிலாவெளி தான சாசனம்

ஸ் (வஸ்தி ஸ்ரீ)…
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
406 ம் பக்கம்


நிலாவெளி தான சாசன விளக்கம்

‘கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் ,சந்திரனும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும்.

வரலாற்றுத் திருகோணமலை
கனகசபாபதி சரவணபவன்
பக்கம் 125-126


1. திருகோணமலை வரலாற்றில் இப்பெயரினைப் பதிவுசெய்த ஆவணங்கில் இதுவே மிகப்பழமையானது.
2. கோணமாமலை - திருகோணமலைக்கு 7 ம் நூற்றாண்டுமுதல் வழங்கபட்டுவந்த இந்தப் பெயர்வடிவம் ( உ+ ம்  - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் திருக்கோணமலைப் பதிகம் ) இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
3. மச்சகேஸ்வரம் -  திருக்கோணேச்சரத்திற்கு புராணகாலம் முதல் வழங்கிவந்த பெயர்களில் ஒன்றான மச்சகேஸ்வரம் இச்சாசன காலத்தில் வழக்கில் இருந்ததை இது அறியத்தருகிறது.
4உரகிரிகாமம், கிரிகண்டகாமம் என்னும் நிலாவெளிக்குள் அடங்கிய தற்போது வழக்கொழிந்துபோன இரு இடப்பெயர்களை அறியக்கூடியதாக இருக்கிறது.
5. நில எல்லைகள் - இச்சாசம் எழுதப்பட்ட காலத்தில் நில எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததை அதன் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

6. தானம் - திருக்கோணேச்சர ஆலயத்திற்கு சுமார் 250 வேலி ( 1700 ஏக்கர் ) நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் இச்சாசனம் திருகோணமலை வரலாற்றுத்தேடலில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.


காலம் கி.பி 11ஆம் நூற்றாண்டு
இடம் -  நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது.
கண்டறிய உதவியவர்  -  திரு.நா.தம்பிராசா 
வாசித்தவர்கள் -      திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம்


தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி

திரியாய் மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு

ஸ்ரீ அபைய 
லா மேகச் ச
க்கரவர்த்திகள்
ஸ்ரீ ஜயபா ஹூ தே
வர்க்கு யாண்டு ப
தின் எட்டாவது தம்
பால் ஜீவிதமுடைய
கணவதித் தண்டநாத
நார் உதுத்துறை விக்
கிரமசலாமேகர் நால்
படையையும் ஆஸ்ரி
த்து பேருமிட்டு விக்
கிரிம சலாமேகன்
பெரும் பள்ளி திருவே
ளைக்காறர் அபையம்

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
432 ம் பக்கம்

1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில் மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.

கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

சோழருடைய ஆட்சி விலக்கப்பட்ட பின்னரும் திருகோணமலையில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழ்ப் படையான வேளைக்காறப் படை இங்கு விக்கிரமசலாமேகன் நாற்படை என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இதிலிருந்த நாற்படையில் ஒரு பகுதியினர் பௌத்த சமயச் சார்புடையவர்கள் என்பதனையும் அறியக்கூடியதாக இருக்கிறது.
த.ஜீவராஜ்

 தொடரும்....


ஆதாரங்கள்

1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிங்கள இனவாதிகள் கூறுவது போன்றே, யாழ்ப்பாண அரசுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களே கிடையாது என்று (போத்துக்கேயருக்கு முன்பு இலங்கையில் தமிழரக்ள் இல்லை என்றார் என்று கூடக் கூறினார் என நம்புகிறேன்.) சில சிங்களவர்களின் சொம்பு தொக்கிகள் கூறிக் கொண்டு திரியும் போது, நீங்கள் என்னடாவென்றால், இலங்கையிலுள்ள தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். :-)

    ReplyDelete