Wednesday, April 17, 2024

கொரோனாவும் மஞ்சள் பையும் - சிறுகதை


கொரோனா கால வைத்தியசாலை நடைமுறைகள் ஒரு போர்க்கால நிலவரம்போல் காணப்பட்டது. தினமும் அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா சிகிச்சைக்காக போராடும் மருத்துவத் துறையினரை ஓய்வில்லாமல் உழைக்கவைத்துக்கொண்டிருந்தது. நாடே கொரோனா அச்சத்தில் உறைந்திருந்ததினால் வீதிகளில் மருத்துவத் துறையினரையும், அத்தியாவசிய சேவைகள் புரியும் அலுவலர்களையும், காவல் துறையினரையும் தவிர்த்து மிக அரிதாகவே சாமானியர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

விசாகன் துடிப்பான இளைஞன். அவன் அரசு மருத்துவமனையில் வேலைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. சிற்றூழியரான அவன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய கூடியவன் என்ற பெயரை வேலையில் இணைந்து கொண்ட சிறிது காலத்திற்குள்ளேயே பெற்றுக்கொண்டவன். அதனால் புதிதாகக் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டபோது அங்கு அவனை பணிக்கமர்த்திக் கொண்டார்கள்.

ஏலவே ஆளணிப்பற்றாக்குறையுடன் செயற்பட்டுக்கொண்டிருந்த வைத்தியசாலை மருத்துவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள்வரை கடமை நேரத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்து நிலைமையை ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தது. விசாகனின் அன்றைய மலை நேரக் கடமை முடியும் நேரம் விடுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை ஒன்றின் காரணமாக இரண்டு மணிநேரம் நீண்டுபோனது. 

நீண்டநேரம் அணிந்திருந்த பல அடுக்கு கொரோனா பாதுகாப்பு கவசங்களை முறையாகக் கழட்டி உரிய கழிவகற்றும் கொள்கலனில் போட்டபின்பு வேர்வையில் தோய்ந்துபோயிருந்த உடலை சுத்தப்படுத்திக் கொண்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்றான் அவன். மனம் முழுவதும் வீட்டு நினைப்பாகவே இருந்தது இரவு 8 மணிக்கு வேலை முடிந்து செல்லும் போது செய்யவேண்டிய வேலைகள் என்ற ஒரு பட்டியலை அவன் வைத்திருந்தான் ஆனால் இப்போது நேரம் 10 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வைத்தியசாலையிலிருந்து அவனது வீட்டுக்கு 20 கிலோமீட்டர் தூரம். உந்துருளியில் செல்வதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது எடுக்கும். அன்றைய நாளின் வேலைப்பழு காரணமாக உடம்பெல்லாம் புண்ணாக நொந்தது அவனுக்கு. உடல் வலியோடு நித்திரைக் கலக்கமும் இருந்ததால் தன்னால் பூரண அவதானத்துடன் வாகனத்தை செலுத்தக் கூடியதாக இருக்காது என்று நினைத்தவனாக தேனீர் அருந்துவதற்காக சிற்றுண்டிச் சாலையை நோக்கி நடக்கலானான்.

இரவு எட்டு மணிக்கு பணிமாற்றிக்கொள்ளும் ஊழியர்களின் நடமாட்டம் ஓய்ந்துவிட்டபடியால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, மருந்து வழங்குமிடம், வாகனத்தரிப்பிடம் என்பன அமைதியில் உறைந்து கிடந்தது. கொரோனா இடர்காலமென்பதால் 24 மணித்தியாலங்களும் இயங்கிக்கொண்டிருந்த சிற்றூண்டிச்சாலையின் வெளிச்சம் மிகத் தூரத்தில் தெரிந்தது. சிற்றூண்டிச்சாலைக்கான நடைபாதையின் இடது பக்கமாக இருந்த நோயாளர்களுக்கான காத்திருப்பு மண்டபத்தில் சொற்பமாகப் பரவியிருந்த வெளிச்சத்தில் அந்த நேரத்தில் மூன்று பேர் உட்கார்ந்திருப்பது அதிர்ச்சியைத் தந்தது அவனுக்கு.


ஒரு வயதான முதியவரும், அவருக்கருகில் அவரது வயதை ஒத்த பெண்மணியும் பின்னிருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். வீடு செல்ல வேண்டும் என்ற அவசரம் இருந்தாலும் அவர்கள் மூவரும் அமர்ந்திருந்த நிலையினைப் பார்த்தபோது விசாகனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஏதேனும்  உதவி தேவைப்பட்டால் தன்னாலானதைச் செய்து கொடுக்கலாம் என்று நம்பிக்கையோடு அவர்களை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும் மகன் வந்துட்டான் போல என்று சொன்னபடி பெரியவர் மிக மிக மெதுவாக விசாகன் பக்கம் திரும்பினார். பெரியவரின் ஒரு பக்க தோளில் சாய்ந்திருந்த அவரது மனைவி உடலை அசைக்காமல் மெதுவாக தலையை உயர்த்திப் பார்த்தார். வைத்திய விடுதியிலிருந்து வீடு செல்வதற்காக பரிந்துரைக்கபட்டவர்கள் தங்களது பிள்ளைக்காக காத்திருக்கிறார்கள் போல என்ற எண்ணத்தில் அவர்கள் அருகில் சென்ற விசாகன் மகன் வர நேரமாகுமா? சாப்பாடு ஏதும் வாங்கித் தரவா? என்று கேட்டான்.

அதுவரை சாந்தமாக இருந்த பெரியவரின் மனைவி திடீரென உரத்த குரலில் இவனென் மகனில்லை. அவன் வரமாட்டான். நம்பி நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. அவன் வரமாட்டான்வரமாட்டான் என்று ஆவேசமாக கத்த தொடங்கினாள். ஆகா வீட்டுக்குபோற நேரத்தில வந்து வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டேனே என்று விசாகன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான். இந்த நேரத்தில நாம காத்திட்டு இருக்கிற பாத்திட்டு அந்தப் பிள்ள பாவம் விசாரிக்க வந்திருக்கு அதிட்டப் போய் உன்ர புலம்பலை சொல்லாத என்று அதட்டினார் பெரியவர். இவளால போற இடத்திலயும் நிம்மதி இல்ல தம்பி என்று சலித்துக்கொண்டார் அவர்.

பெரியவருக்கும் அவரது மனைவிக்கும் பின்னாலிருந்த நடுத்தர வயது பெண்மணி விசாகனை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பெரியவரின் மனைவி கத்தத் தொடங்கியதும் எழுந்து நின்று அவர் தலையை வருடிக் கொண்டிருந்தாள். விசாகனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. பெரியவர் சாந்தமாக பரவாயில்லை தம்பி மகனுக்கு பலமுறை சொல்லியாச்சு அவன் வந்து எங்கள கூட்டிப் போவான் நீங்க யோசிக்காம போங்க என்று கூறினார். அதற்குமேல் அங்கு நிற்பது பொருத்தமாக இருக்காது என்று எண்ணிய விசாகன் சிற்றுண்டிச் சாலையை நோக்கி நகர எத்தணித்தான்.

மகன் வராட்டியும் பரவாயில்ல போண்பண்ணி மாடிப்படிக்கு கீழ இருக்கிற அலுமாரிக்குள்ள என்ற மஞ்சள்ப்பை இருக்கு அத எடுக்கச் சொல்லுங்க என்று பெரியவரின் மனைவி அவசரமாக விசாகனைப் பார்த்துச் சொன்னார். இவளுக்கு விசர். மனிசரெல்லாம் சாக கிடக்குதுகள் இவள் காசு, நகை எண்டு கத்திட்டு கிடக்கிறாள் என்று பெரியவர் எரிச்சலோடு கூறினார். இவருக்கு என்ன தெரியும் நான் இரத்தத்தப் பிழிஞ்சு சேத்த காசு தம்பி அது. விசயம் தெரியாம வீடு மாறிப் போயிடுங்கள் எண்டுதான் பயப்பிடுறன் என்று சலிப்போடு சொன்னார் பெரியவரின் மனைவி.

தன்னை நோக்கிச் சொன்னாலும் அவர்களது தனிப்பட்ட உரையாடலுக்குள் மூன்றாவது மனிதனான தான் நிற்பது நாகரீகமான செயலில்லையென உணர்ந்தான் விசாகன். மூவரும் நீண்டநேரக் காத்திருப்பாலும், பசியாலும் சோர்ந்து இருந்தது போலிருந்தது. இருங்க உங்களுக்கு சாப்பிட ஏதும் வாங்கிட்டு வாரன் என்று கூறியவாறே அவர்களது பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தான் விசாகன். பெரியவர் தனது இயலாமையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தலையசைத்து போலிருந்தது அவனுக்கு. பெரியவரின் மனைவியின் முகத்திலும் ஆவேசம் குறைந்து மெல்ல சாந்தம் பரவத்தொடங்கி இருந்தது. அவர்களோடு இருந்த பெண் மீளவும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 


அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகளை பொதி செய்யுமாறு ஊழியரிடம் கூறிவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் விசாகன். அவனது எண்ண ஓட்டம் எல்லாம் அம்மூவரையும் சுற்றியதாகவே இருந்தது. சாதாரணமாக மாலை 6 மணிக்குப் பிறகு பார்வையாளர்களையும், வெளிநபர்களையும் வைத்தியசாலை வளாகத்துக்குள் அனுமதிப்பதில்லை என்ற நடைமுறை இருந்தது. கொரோனா இடர் காலமென்பதால் சிலவேளை இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் இரவு பத்து மணிவரை மூவர் எப்படி வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரின் கண்ணில்படாமல் வெளிநோயாளர் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கிறார்கள் என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்து மறைந்தது.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பெரியவரின் மனைவி ஏதோ நகை, பணம் பற்றிக் கூறிய விடயங்கள். வழமையாக பெண்கள் பெரும்பாலும் பொது இடங்களில் அதிலும் குறிப்பாக மூன்றாவது நபரின் முன்னால் பணம் சம்பந்தமான விடயங்களை பேசவே மாட்டார்கள். கொரோனா நோயின் உக்கிரம் இவ்வாறெல்லாம் மக்களை உளரவைக்கிறது என்று அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

தேநீர் அருந்தி முடிந்ததும் அவசர அவசரமா சிற்றூண்டிப்பையை வாங்கிக்கொண்டு ஒரு தண்ணீர்ப் போத்தலையும் எடுத்துக்கொண்டு வீடு போகவேண்டும் என்ற அவசரத்தோடு பெரியவரை நோக்கி விறுவிறுவென்று நடந்து சென்றான். இருவரும் தூங்கி விட்டார்கள்போல் இருந்தது. பெரியவர் கதிரையில் மூலையில் சாய்ந்து உறங்கி இருந்தார். அவரது மனைவி பெரியவரின் தோளில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தார். பின்னால் இருந்த பெண் இருக்கையில் கால் நீட்டி உறங்கியிருந்தாள். நேரம் 10.10ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வீடு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருமுறை கூப்பிட்டுப் பார்த்துவிட்டு பெரியவர் எழுந்திருக்காததால் அவரது தோளைப் பிடித்து உலுக்கினான் விசாகன். தற்செயலாக அவனது கைதவறி அவரது முழங்கையில் பட்டது.

அவரது உடல் ஜில்லென்று குளிர்ந்துபோய் இருந்தது. சந்தேகத்தில் அவரது மூச்சுக்காற்று அசைவினைப் பார்த்தான் அவன். மூச்சு நின்று போயிருந்தது. நாடித்துடிப்பும் இல்லை. அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. தவறாக ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புலனாகியது. தோளில் சாய்ந்திருந்த பெரியவரின் மனைவியின் தலையைச் சற்று நிமிர்த்திப் பார்த்தான் அவரும் இறந்துபோயிருப்பது உறுதியானது.

அவனது உடம்பெல்லாம் பற்றி எரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. தலைசுற்றி கால்கள் எல்லாம் மரத்துப்போவதுபோல் இருந்தது அவனுக்கு. திடீரென வியர்த்துக்கொட்டியதில் உடையெல்லாம் நனைந்து போயிருந்தது.  ஒரு பத்துநிமிட நேரத்திற்குள் தன்னுடன் கதைத்தவர்கள் எப்படி திடீரென இறந்திருக்க முடியம். தான் பார்ப்பது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது அவனுக்கு. ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட அவன் உதவி வேண்டி தட்டுத்தடுமாறி ஓட்டமும் நடையுமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினான்.

அவன் அவசர சிகிச்சைப் பிரிவை அடையவும் ஏதோ ஒரு தேவைக்காக அதனுள் இருந்து தாதி பகவதியம்மா வெளியேறவும் சரியாக இருந்தது. அந்த வைத்தியசாலையின் பிரதான தாதிய உத்தியோகத்தர் அவர். வயதில் மூத்தவர். மிகவும் கண்டிப்பானவர். அங்குள்ள ஊழியர் அனைவருக்கும் அவர்மீது ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. சாதாரண நேரங்களில் அவரைக் கண்டால் பவ்யமாக வணக்கம் வைத்துவிட்டு விரைவாக அந்த இடத்தினைவிட்டு நகர்ந்துவிடுவான் விசாகன்.

அந்த சூழ்நிலையில் அவரைக் கண்ட பின்புதான் அவனுக்கு போக இருந்த உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. அந்த நிகழ்வு தந்த அதிர்ச்சியில் முதலில் அவனுக்கு பேசவே முடியவில்லை. விக்கி விக்கி எதையோ சொல்லிக்கொண்டு போனவன் என்ன பிரச்சனை எண்டு தெளிவா சொல்லு  என்று  பகவதியம்மா  அதட்டலோடு கேட்டபின்தான் ஒருவாறு விசயத்தைச் சொன்னான். அங்கு ஒரு பெரியவரும் வயசான அம்மாவும் செத்து கிடக்கிற மாதிரி இருக்குது உடனே வாங்க ஏதாவது உதவி செய்யணும் என்று பரபரத்தான்.

திறந்த நிலையில் இருந்த அவசர சிகிச்சைப் பிரிவின் கதவினை முழுமையாக மூடிவிட்டு அவர்கள் கதைப்பது உள்ளுக்குள் இருப்பவர்களுக்கு கேட்காது என்பதை உறுதி செய்தபின் பகவதியம்மா சைகை மூலமாக அவனைச் சத்தம் போடாமல் இருக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் அதிர்ச்சியிலிருந்து மீளாத விசாகன் பெரியவரின் குடும்பத்தினர் இறந்து கிடந்த இடத்தை நோக்கி கைகளை நீட்டிக் காட்டி அங்க……. அங்க… அன்று கரகரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தான்.

நீண்டகால அனுபவம் உள்ள பகவதியம்மா அவனது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு சத்தம் போடாமல் தன் பின்னால் நடந்துவருமாறு விசாகனிடம் சைகை செய்தபடி பெரியவரை அவன் பார்த்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்து சென்றார். உதவிக்கு வேறு யாரையும் கூப்பிடாமல் இருவரும் தனியாக அந்த இடத்தை நோக்கிப் போவது அவனுக்கு உள்ளூர பயத்தினை அதிகப்படுத்தி இருந்தது. தயங்கித் தயங்கி அவர் பின்னால் போய்க் கொண்டிருந்தான். இடத்தை நெருங்க நெருங்க இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

என்ன ஆச்சரியம் வெளிநோயாளர் தரிப்பிடம் வெறுமையாகக் கிடந்தது. பெரியவரும் மனைவியும் அவர்களுக்கு உதவியாக பின்னால் இருந்த நடுத்தர வயதுப் பெண்மணியும் காணாமல் போயிருந்தனர். அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. கண்களை கசக்கியபடி வெளிநோயாளர் தரிப்பிடம் முழுவதும் தேடிப்பார்த்தான். அந்த மண்டபத்தில் யாருமே இல்லை. அவன் தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைத்துக் கொண்டது போல் இருந்தது. மண்டபத்தையும் தாதியை மாறி மாறி பார்த்தான். அவனால் எதையுமே சொல்ல முடியவில்லை. அவரும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை என்பதை அவரது முகபாவனை விசாகனுக்கு உணர்த்தியது. போவோம் என்றபடி சைகை காட்டிவிட்டு பகவதியம்மா அவசர சிகிச்சை பிரிவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்து வரும்போது பகவதியம்மா சொல்லிக்கொண்டு வந்த விபரங்கள் சற்று நிதானமான மனநிலைக்கு வந்துவிட்ட விசாகனுக்கு தான் அன்று சந்தித்த பெரியவரின் குடும்பத்தினர் ஐந்து நாட்களுக்கு முன்னமே இறந்துவிட்டார்கள் என்பதை உறுதிபட உணர்த்தியது. அந்த அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒரு மிகத் துயரமான நிகழ்வது . நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடத்தொடங்கிய ஆரம்ப நாட்களது. ஒரே நாளில் ஒரே வீட்டைச் சேர்ந்த மூவர் இறந்தது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.

வைத்தியசாலைக்கு அனுமதிக்கும்போதே பெரியவருக்கு உயிரில்லை.  வேலைக்காரி  நீண்டகாலமாக  அஸ்துமா நோயினால்  அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவர் என்பதால்  விடுதியில் அனுமதித்து  சில மணிநேரங்களில் அவரது உடல்நிலை  மோசமாகி  தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு  மாற்றும் தருவாயில்  இறந்துபோயிருக்கிறார். 

பெரியவரின் மனைவியின் உயிர்  அன்றைய நாளில்  நள்ளிரவுவரை கொரனாவோடு போராடியிருக்கிறது. வயதாலும்  ஏலவே இருந்த நோய்களாலும்  சிரமப்பட்டுக்கொண்டிருந்த  பெரியவரின் மனைவி  பலைமுறை அமெரிக்காவில் இருக்கும்  அவரது மகனுடன் தொடர்பு கொள்ள  பிரயத்தனம் செய்திருக்கிறார். மருத்துவ ஊழியர்கள்  அதற்குரிய  தொலைத்தொடர்பை  ஏற்படுத்திக்கொடுக்க முனைந்த வேளையில்  அவர் நிலை மோசமாகி  தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்ரிலேட்டருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கடைசியில் மகனுடன் பேசாமலேயே  அவர்  இறந்துபோயிருக்கிறார்.

இந்தக் காலப்பகுதியில் பதிய கொரோனா விடுதிக்காக சிறப்புப் பயிற்சியெடுக்க கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்கள், தாதியர், சிற்றூழியர்கள் கொண்ட குழுவில் விசாகனும் இருந்தான். இதனால் இந்தத் துன்ப நிகழ்வை ஒரு செய்தியாக கேட்ட்டிருந்தானே ஒழிய பெரியவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அவன் அறிந்திருக்கவில்லை.

பகவதியம்மா சொல்லிவந்த விடையங்களில் இருந்து மேலும்சில விடயங்களை விசாகனால் அறியமுடிந்தது. பெரியவரின் குடும்பம் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களின் ஒரேயொரு மகனுடன் நீண்ட காலம் வசித்துவந்திருக்கிறார்கள். நாட்டில் கொரோனா பரவுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவர்களுடைய காணிப் பிரச்சினை ஒன்றினைத் தீர்க்கும் பொருட்டு பெரியவரும் அவரது மனைவியும் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக தூரத்து சொந்தமான ஒரு விதவைப்பெண் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவர்களோடு இணைந்திருக்கிறார். காணிப் பிரச்சினைகள் தீர்ந்ததும் மீளவும் அமெரிக்கா திரும்புவதற்கான எல்லா முன்னேற்பாடுகளோடும்தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் விதி பெரியவரின் தம்பியின் வடிவத்தில் கொரோனாவாக வந்திருக்கிறது. இலண்டனில் இருந்து வியாபார நிமித்தம் ஊருக்கு வந்திருந்த அவருடைய தம்பி சில நாட்கள் பெரியவரின் வீட்டில் தங்கிச் சென்றிருக்கிறார். அவர் மூலமாகத்தான் இவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

பெரியவரும் குடும்பத்தினரும் இறந்த நேரம் நாட்டில் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்ததால் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி அவர்களின் உடலங்கள் அரச பாதுகாப்பில் எரிக்கப்பட்ட்டிருக்கிறது. கொரோனாவின் தீவிரம் காரணமாக நாடுகளுக்கிடையேயான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் பெரியவரின் மகனால் அந்த இறுதி நிகழ்வில்கூட கலந்து கொள்ள முடியாமல்போனது.

நடந்த நிகழ்வுகளை ஒரு கதை போல அவசரப்படாமல் நிதானமாகச் சொல்லிக்கொண்டு வந்த பார்வதியம்மா இறுதியாக முடிக்கும் பொழுது பெரியவரின் குடும்பம் அவருக்கு ஒரு வகையில் நீண்டதூர சொந்தம் என்பதையும் சொன்னார். அத்தோடு அமெரிக்காவில் இருக்கும் அவருடைய மகன் இரண்டு நாட்களுக்கு முன்புகூட அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தாய் தந்தையரின் இறுதிக் கணங்கள் பற்றி விசாரித்தத்தை கவலையோடு கூறினார்.

அன்றைய இரவு வைத்தியசாலை விடுதியில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலை விசாகன் வீடு செல்லத் தயாரானான். இடையில் என்ன தோன்றியதோ தெரியவில்லை பகவதி அம்மாவிடம் இறந்த பெரியவரின் மகனின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டான். பெரியவரின் மகன் ஏற்கனவே மிக நொந்துபோய் இருக்கிறான். கடைசி நேரத்தில கூட அவன்ர அப்பா, அம்மாவ கிட்ட இருந்து பாக்க ஏலாம போய்ட்டு எண்டும் இறுதி சடங்கு கூட தன்னால செய்ய ஏலாம போய்ட்டு ஒரே சொல்லிச் சொல்லிக் கத்திக்கொண்டு இருக்கிறான். நீ ஏதும் புதுசாச் சொல்லி அவன காயப்படுத்திப்போடாத என்று அறிவுறுத்தியபடி தொலைபேசி இலக்கத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுத்தி பகவதியம்மா விசாகனிடம் கொடுத்தார்.


வீடு சென்றதும் உடைகளை மாற்றிக்கொண்டு மனைவி தந்த தேனீரைப் பருகிவிட்டு தோட்டத்தில் வேலைசெய்யத் தொடங்கினான் விசாகன். காலை ஏழரை மணி இருக்கும் மனைவியுடன் காலை உணவருந்திக் கொண்டிருந்தான். அவனது மனைவி முதல் நாள் இரவு அவனுக்கு ஏற்பட்ட பணிச்சுமைபற்றி விசாரித்துக்கொண்டிருந்தாள். மனைவி பயந்து போய்விடுவாள் என்ற அச்சத்தில் விசாகன் பெரியவரின் கதை தொடர்பில் எதையும் சொல்லவில்லை. பொதுவாக கொரோனாவால் ஏற்படுகின்ற பணிச்சுமை பற்றியும் தினந்தோறும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பிலும் பேசிக்கொண்டிருந்தான்.

சாப்பிட்டுவிட்டு கைகழுவ எழுந்த விசாகனிடம் சொல்வதற்கு அவன் மனைவிக்கு ஒரு சுவாரிசமான கதை இருந்தது. அவள்போடும் பீடிகைகளைப் பார்த்தே ஏதோ தான்செய்த வீரபிரதாபங்கள் எதையோ சொல்ல எத்தணிக்கிறாள் என்பதை ஊகித்தான் விசாகன். இஞ்சேரப்பா நேற்று இரவு ஒரு பதினொரு மணியிருக்கும் நம்மட வீட்டுக் கூரையில யாரோ நடக்கிற மாதிரி இருந்திச்சி. சத்தம் கேட்டதும் நாங்க சரியா பயந்திட்டம். நானும் அம்மாவும் அது கள்ளனாத்தான் இருக்கும் எண்டு நினைச்சி எங்கட நகை எல்லாத்தையும் மஞ்சள் பையில போட்டு சாமி அறையில் சாத்தி வைச்சிருக்கிற  பெரிய பிள்ளையார் படத்திற்கு பின்னால் ஒழிச்சு வைச்சிட்டம். கனநேரம் முழிச்சிருந்தம் பூனைதான்போல பிறகு ஒரு சத்தத்தையும் காணல நாங்க படுக்க ஒரு மணியாகிடிச்சு என்றாள்

அவள் சொல்லிவந்ததையெல்லாம் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்த விசாகன் நல்லகாலம் கள்ளன் வரல்ல வந்திருந்தா சொல்லிவச்சமாதிரி நேரா பிள்ளையாருக்குப் பின்னால இருந்த மஞ்சள் பையோடு நகையெல்லாம் எடுத்துட்டு போய்யிருப்பான் என்று சொல்லி அவளை கிண்டல் அடித்தான். முறைத்துப் பார்த்த மனைவி தனது முழங்கையால் விசாகனின் மார்பில் இடித்துவிட்டுப்போனாள். மஞ்சள்பை என்றதும் விசாகனின் மூளைக்குள் திடீரென ஒரு வெளிச்சம் பத்தி மறைந்ததுபோல் இருந்தது.

உண்மையில் பெரியவரைப் பார்த்ததையும் பிறகு சிற்றுண்டிச்சாலைக்கு போய்வந்தபின் அவர்களது இறந்த உடலைப் பார்த்ததையும் பகவதியமாவிடம், சொன்னானே தவிர பெரியவரின் மனைவி கதைத்த விடயங்கள் தொடர்பில் அவரிடம் அவன் எதுவுமே சொல்லி இருக்கவில்லை. மகன் வந்துபார்க்காத மன உளைச்சலில் அவர் பேசுகிறார் என்றே அவன் நம்பியிருந்தான். மனதுக்குள் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்ட விசாகன் அவசரஅவசரமாக உடையை மாற்றிக் கொண்டு அவன் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் கடையை நோக்கி ஓடினான். இந்த மனிசன் இப்ப எங்க விழுந்துகெட்டு ஓடுது என்றபடி மாட்டுக்குத் தண்ணி வைக்கப்போனாள் விசாகனின் மனைவி.

வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி அட்டை ஒன்றை கடையில் அவசரமாக வாங்கிவந்த விசாகன் பெரியவரின் மகனுடைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டான். விசாகனின் நடவடிக்கைகள் வழக்கத்துக்குமாறானதாக இருந்ததால் தனது காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு குறுக்கும் நெட்டுக்குமாக நடந்து திரிந்த விசாகனின் மனைவிக்கு அவன் சொல்லிக்கொண்டிருந்ததில் மஞ்சள்ப்பை என்பது மட்டும்தான் தெளிவாகக் கேட்டது.

இது ஒரு லூசு மனுசன் மஞ்சள்ப்பைக்குள்ள நகைகளை வைச்சி நாங்க  ஒழிச்சதெல்லாம் போன்ல யாருக்கோ சொல்லிக்கொண்டு கிடக்குது என்று திட்டிக்கொண்டே குசினிக்குள் போனாள் விசாகனின் மனைவி. பகவதியம்மா சொல்லிய அறிவுரைகள் எல்லாம் விசாகனுக்கு தெளிவாக ஞாபகத்தில் இருந்தது. எனவே பெரியவரின் மகனோடு பேசும்போது பெரியவரின் மனைவி இறப்பதற்கு முன்னால் மஞ்சள்ப்பை தொடர்பான தகவலை தன்னிடம் சொன்னதாகவும் தொலைபேசி இலக்கம் கிடைக்காததால் இத்தனை நாள் தாமதமாகிவிட்டது எனவும் அவருக்கு விளக்கமாகச் சொன்னான்.

மறுநாள் இரவு எட்டு மணிக்கு கடமை முடிந்து வீடு திரும்பும்போது பகவதியம்மா தற்செயலாக எதிர்ப்பட்டார். என்ன விசாகன் இண்டைக்கும் வருவாங்களோ என்று சிரிப்போடு கேட்டார். இல்லை மிஸ் இனி அவங்க வரமாட்டாங்க என்று தான் பெரியவரின் மகனுடன் கதைத்த விபரங்களை விவரமாகச் சொன்னான் விசாகன்.

வீடு வந்தபின்னும் பேய்க்கதை முடிவதாக இல்லை கெஞ்சி, கொஞ்சி, கோபித்து, முரண்டு பிடித்து என்று ஒருவாறு தன்னுடைய எல்லா வித்தைகளையும் பயன்படுத்தி முழுக் கதையையும் கேட்டுக்கொண்டாள் விசாகனின் மனைவி. கதையை கேட்டதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. தொடர்ந்தும் அது தொடர்பில் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தாள். விசாகனுக்கு முதல்நாள் நித்திரை இல்லாத அலுப்பும் தொடர்ச்சியான வேலை தந்த களைப்பும் மிகுந்த அயர்ச்சியை தந்தது. அவனுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு நித்திரை வந்தது.

இஞ்சேரப்பா என்னதான் மகன் மேல கோபம் இருந்தாலும் நகை வச்ச மஞ்சப்பையைப் பற்றி அமெரிக்கா போய் மகனிடம் சொல்லி இருக்கலாம் தானே ஏன் அந்த அம்மா உங்ககிட்ட சொன்னவ என்று கேட்டாள் விசாகனின் மனைவி. நித்திரை கலக்கத்தில் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு கணம் குழம்பினான் மறுகணம் அதில்லம்மா அவ செத்தது இலங்கையில மகன் இருக்கிறது அமெரிக்காவில அவைக்கு விசா கிடைக்கல்லபோல அதான் என்ன தேடி வந்திருக்கிறா என்றபடி மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான் விசாகன்.


 தம்பலகாமம்  த. ஜீவராஜ்


நன்றி

சிறுகதை மஞ்சரி பங்குனி 2024 (இதழ் -44)






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment