Thursday, October 17, 2019

ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

தேசம் என்பது பெரும்பாலும் ஒரே மொழிமரபு, இனக்குழு, குடிவழக்கு போன்ற ஒன்றித்த இனக்குழுக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கிறது. அத்தோடு தொடர்ந்து வரும் வரலாறு, பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்ற பூமி போன்ற கூறுகளையும் இது உள்ளடக்கியதாக இருக்கிறது.

வடமொழிச் சொல்லான தேஷம் என்பதன் தமிழ் வடிவம் தேஎம் ஆகும். அதன் திரிபடைந்த வடிவமே இன்று நாம் பயன்படுத்தும் தேசம். வடசொல்லைத் தமிழில் எழுதும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும் என்பது தொல்காப்பிய எச்சவியல் விதியினால் அறியப்படுகிறது. வட சொற்கிளவி வடவெழுத் தொரீஇ-எழுத் தொடு புணர்ந்த சொல்லாகுமே என்கிறது தொல்காப்பியம். தேஷம் என்ற வடசொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். இதை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இரு மொழிக்கும் பொதுவான உயிரெழுத்தான எகரத்தைச் சேர்த்து தேஎம் என்றெழுத வேண்டுமென்கிறார் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை விளக்கம் எழுதிய சேனாவரையர் .


சங்க இலக்கியங்களில் தேஎம் என்ற சொல்லின் பயன்பாடு தொடர்பில் விரிவாக ஆராய்ந்த புலவர் சு. முருகேசன் அவர்கள் 'தேசம்' வடசொல்லே என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் தேஎம் என்னும் சொல் பத்துப்பாட்டில் பதினைந்திடங்களிலும், எட்டுத்தொகையில் நாற்பத்திநான்கிடங்களிலும், பதினெண்கீழ்க்கணக்கில் மூன்றிடங்களிலுமாக அறுபத்தியிரண்டிடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். இவற்றில் முப்பதிடங்களில் திசை, திக்கு, வழி, இடம் என்று இடப்பொருளில் வருவதையும். மூன்றிடங்களில் தேயம் என்று இடையினயகரம் பெற்று அழிவு, கலக்கம் என்னும் பொருளில் வருவதையும் பதிவுசெய்கிறார்.

அத்துடன் சங்க இலக்கியங்களில் தேஎம் என்னும் சொல் நாடு என்னும் பொருளில் முப்பத்தியிரண்டிடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் ஆறிடங்களில் தன்னாட்சி செல்லாத வேறு பல, அகன்ற இடத்தையுடைய, பணிந்தவருள்ள தேசமென்று வருகிறது. ஒன்பதிடங்களில் பகைவர் தேசமென்றும், ஆறிடங்களில் முன்பின் அறியாத தேசமென்றும் பதினைந்திடங்களில் மொழி வேறாகிய தேசமென்றும், ஓரிடத்தில் வடுகர் தேசமென்றும் வருகிறதென்று புலவர் சு. முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு சங்க இலக்கியங்களில் தேஎம் என்று வழங்கிவந்த சொல் பின்னர் திரிபடைந்து இன்று நாம் பயன்படுத்தும் தேசம் என்றானது. இன்றைய நிலையில் தேசம் என்பது தமக்கே உரிய புவியியற் பரிமாணங்களைக் கொண்டது. எல்லைகள் குறித்து அடையாளங் காணக்கூடிய நிலப்பகுதிகளைத் தன்னகத்தே கொண்டவை. இவை தனித்துவமான வரலாற்று அனுபவங்களால் உருவான சமுதாய அமைப்பினைப் பிரதிபலிப்பவை. மொழி வழியாகவும், சமூக வழமைகள், பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றின் வழியாகவும் உருவாகிய பொதுமையினை உணர்ச்சிபூர்வமாகப் பிரதிபலிப்பது தேசம் என்றழைக்கப்படுகிறது. தமிழரின் அரசியல் நோக்கில் அமைந்த சிந்தனை வளர்ச்சியின் ஒரு பிரதான கட்டமென பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தேசம் தொடர்பில் தனது கருத்துக்களைப் பதிவு செய்வது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

திருகோணமலையைப் பொறுத்தமட்டில் அது நான்கு வன்னிப் பிரிவுகளாக நிர்வாக ரீதியில் இயங்கி வந்ததினை ஐரோப்பியர் ஆவணங்கள் மூலம் அறியமுடிகிறது. இந்நான்கு வன்னிப் பிரிவுகளும் திருக்கோணேச்சரத்துடன் தொடர்புடையவை. திருக்கோணேச்சரம் திருகோணமலைப் பிராந்தியத்தின் நிலவுடமை மீது கொண்டிருந்த அதிகாரத்தினைப் பிரதிபலிப்பவை. இந்நான்கு பிரிவுகளும் பற்றுக்கள், தேசங்கள் என அழைக்கப்பட்டு வந்தது.. அவையாவன திருகோணமலைப் பற்று (தேசம்) ,கட்டுக்குளப் பற்று (தேசம்) , கொட்டியாரப் பற்று (தேசம்) , தம்பலகாமப் பற்று (தேசம்) என்பனவாகும். இங்கு குறிப்பிடப்படும் சுயாட்சி நிறைந்த இந்நான்கு வன்னிப் பிரிவுகளையும் ஐரோப்பியரின் ஆவணங்கள் ‘இராட்சியங்கள்’ என்றே வரையறுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றினை நான்கு வன்னிமைகள் ஆட்சி செய்தனர். இந்நான்கு தேசத்தினதும் அதிகார மையமாக திருக்கோணேச்சரம் இருந்தது.திருகோணமலைத் தமிழர்களிடையே தேசம் என்ற சொல் வழங்கப்பட்டது தொடர்பில் நமக்குக் கிடைக்கும் முதல் ஆவணம் வெருகல் ‘ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ எனும் நூல். தம்பலகாமத்தினைச் சேர்ந்த ஐ. வீரக்கோன் முதலியார் என்பவரால் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வெருகலில் அமைந்திருக்கும் சித்திரவேலாயுதர் சுவாமி மீது பாடப்பட்ட இந்நூல் கொட்டியாரப்பற்று இருமரபுந்துய்ய இளஞ்சிங்கம் எனும் வன்னிபத்தின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமை பொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை
வன்னிமை தேசத்தார் மகாநாடு தான் கூடி
மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையிலே
எனும் பாடல் வரிகள் தேசத்தார் மகாநாடு பற்றிக் குறிப்பிடுகிறது.


இந்நூல் அரங்கேற்றம் ஒரு பெருவிழாவினை ஒத்த வைபவமாக இருந்தது. இது வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய மண்டபத்தில் தேசத்தோர் சபையோராக இருக்க அரங்கேறியது. இங்கு தேசத்தோர் என விழிக்கப்படுவது கொட்டியாரப் பற்று தேசத்தவரை எனக்கருதப்படுகிறது. இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் தேசத்தவரால் கூட்டப்பட்ட இக்கூட்டம் மகாநாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இது வன்னிபத்தின் தலைமையில் நடைபெற்றதையும் இப்பாடல் குறிக்கிறது. 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் திருகோணமலைப் பிராந்தியங்களை தேசம் எனக் குறிப்பிடும் சமூக வழக்கினையே இந்நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது.

மட்டக்களப்பு தேசம், முக்குவதேசம், யாழ்ப்பாண தேசம் எனும் சொற்றொடர்கள் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் முற்காலங்களில் வழங்கிவந்ததினை பண்டைய நூல்களிலும் , ஆவணங்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. இவற்றுடன் கிழக்கிலங்கையின் பல ஆலயங்கள் தேசத்துக்கோயில் என இன்றும் வழங்கிவருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம். திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் போன்றன தற்போதும் அப்பிரதேச மக்களால் தேசத்துக் கோயிலாக கொண்டாடப்படுவதனை இன்றும் காணலாம்.

போர்த்துக்கேசரினால் திருக்கோணேச்சரம் முற்றாக இடிந்தழிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்த புராதன விக்கிரகங்களில் சில தம்பலகாமத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஆதிகோணநாயகர் ஆலயம் உருவாது. இவ்வாலயம் உருவான பின்னர் திருகோணமலையில் இருந்த நான்கு பற்றுக்களின்மீதும் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் செல்வாக்குச் செலுத்தியது. திருக்கோணேச்சரம் எவ்வாறு திருகோணமலை முழுவதும் நிலமானிய முறையினை நடைமுறைப்படுத்தி செயற்பட்டு வந்ததோ அதே நடை முறை திருக்கோணேச்சரம் அழிக்கப்பட்டதன் பின்னர் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தம்பசிட்டி, வியாபாரிமூலையில் கிடைக்கப்பெற்ற ஒல்லாந்து அரச முத்திரையுடன் கூடிய தோம்புகளின் அடிப்படையில் (திருக்கோணேச்சரம் போர்த்துக்கீசரினால் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர்) தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் திருகோணமலைப் பற்று ,கட்டுக்குளப் பற்று, கொட்டியாரப் பற்று , தம்பலகாமப் பற்று ஆகிய நான்கு பிரதேசத்தினைச் சேர்ந்த 33 ஊரவர்கள் கொண்டாடி மகிழும் கோயிலாக இருந்ததினை அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே இவ்வாலயம் பழமையில் தேசத்துக் கோயிலாகப் போற்றப்பட்டிருக்கும் என்பதனை புரிந்துகொள்ளமுடியும்.
தேசத்துக் கோயில்களின் ஆலய வழமைகள், திருவிழாக்கள் என்பன பல்வேறு தேசங்களைச் சேர்ந்த ஊரவர்களால் மேற்கொள்ளப்படுவது வழமை. உதாரணமாக இன்றும் தேசத்துக் கோயிலாகப் பொற்றப்படும் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத் திருவிழாக்கள் வல்வெட்டித்துறை முதல் செங்கலடி வரையான ஊர்மக்களால் கொண்டாடி மகிழப்படுவதைக் காணலாம்.


எமது முன்னோர்கள் உருவாக்கிய இந்நடைமுறை பல்வேறு சமூகநல அனுகூலங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகக் காரணங்களுக்கு அப்பால் நீண்ட தொலைவிலுள்ள மக்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் வர்த்தகம், அரசியல் என்பனவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உருவாக்கவல்ல நிறுவனமாகவும் இத்தேசத்துக் கோயில்கள் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கிறமை தொடர்பில் வரலாற்றில் பல பதிவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.


தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் திருகோணமலை தேசம், கட்டுக்குள தேசம், கொட்டியார தேசம் , தம்பலகாம தேசம் ஆகிய நான்கு பிரதேசத்தினைச் சேர்ந்த பல்வேறு ஊரவர்களைக் கொண்ட பலநூற்றுக்கணக்கான ஆலய பரிபாலன உறுப்பினர்களின் விபரங்களை இன்றும் இவ்வாலயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பல ஊரவர்கள் கொண்டாடி மகிழும் தேசத்துக் கோயிலாக பழமையில் போற்றப்பட்டிருக்கும் என்பதனை நாம் இன்று புரிந்துகொள்ளமுடியும். எனினும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் தேசத்துக் கோயிலுக்குரிய திருவிழா வழமைகள் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அண்மைக்காலத்தில் நீண்ட தேடலின் பின்னர் கிடைக்கப்பெற்ற நான்கு ஆவணங்கள் தேசம் தொடர்பிலான மிக முக்கிய ஆவணப்படுத்தலாக அமைகின்றது. அவை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்துடன் தொடர்புடையவை. அவ்வாலயத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழமைகளைப் பிரதிபலிப்பவை. ஆதிகோணநாயகர் ஆலயம் பழமையில் தேசத்துக் கோயிலாக விளங்கிவந்ததை ஞாபகமூட்டுபவை.

முதலாவது ஆவணம் 

முதலாவது ஆவணம் இன்றைக்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. அது தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. தம்பலகாமம் தொடர்பான வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டிருந்தபொழுது எனது முன்னைநாள் ஆங்கில ஆசான் திரு.இந்திரசூரியன் அவர்களிடம் இருந்து இவ்வரிய பொக்கிசம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

திரு. வேதபுராண காவியங்களின் பிரகாரம் தெக்ஷிணகயிலாய, திருகயிலம்பதியாகிய திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் எங்கடவுளாகிய சிவபெருமான் கோணைநாயகனை வணங்கி. தற்காலம் திரு.கொட்டியாபுரப் பற்று மேங்காமத்தில் வசிக்கும் இருமரபுந் துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபமாகிய நான் திரு. தம்பலகமம் கோணைநாயகர் கோவிற் கருமங்களைப்பற்றி பாராபரிப்புத் தத்துவ நியமன உறுதி முடித்துக் கொடுந்த விபரம் (1) என்று தொடர்கிறது 1893 ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் திகதி எழுதப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம்.


திருகோணமலையில் இருந்த நான்கு பிராந்தியங்களும் நான்கு தேசங்களாக கருதப்பட்ட அதேவேளை இங்கு பரம்பரை பரம்பரையாக நடைமுறையில் இருந்துவந்த வழமைகள் தேசவழமைகள் அல்லது தேசவழக்கு என கருதப்பட்டதையும் இவ்வாவணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தினை பராமரிப்பது தொடர்பில் கட்டளைகளை எழுத முனைந்த வன்னிபம் இந்தப்பிரகாரம் நான் பூர்வீகம் தொடக்கம் பாரம்பரியமாக நடந்துவந்த இந்த தேசவழக்கப்படி எனக்குள்ள சொந்த உரித்தைக் கொண்டும் மேற்சொல்லிய கோவில் கூட்டத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டும் அக்கட்டளைகளை வழங்குவதாக பதிவுசெய்திருக்கிறார். இங்கு குறிப்பிடப்படும் பூர்வீகம் தொடக்கம் பாரம்பரியமாக நடந்துவந்த இந்த தேசவழக்கப்படி எனக்குள்ள சொந்த உரித்து என்பது திருகோணமலையின் நான்கு வன்னிப் பிரிவுகளும் நான்கு தேசங்களாக நிர்வகிக்கப்பட்டதையும், அந்நாங்கு தேசங்களின் அதிபதியாக வன்னிபங்கள் செயற்பட்டதையும், இந்நான்கு தேசங்களினதும் சொத்தாக இருந்த இவ்வாலய நடைமுறைகளைப் (தேசவழக்கு ) பேணுவதில் அவர்கள் சிறப்பதிகாரம் பெற்றிருந்தமையையும் குறிப்பால் உணர்த்துகிறது.இவற்றோடு இத்தேசங்களில் ஒவ்வொரு விடையங்களும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதில் தெளிவான ஒழுங்குகள் பின்பற்றப்பட்டன என்பதனை இவ்வாவணத்திலுள்ள பின்வரும் வாக்கியங்கள் நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

சொல்லிய கொவிலாதனங்களால் வரும் சகலவருமானங்களாகிய பணம் நெல்லு முதலான சகல இருப்பும் பூர்வீககாலந் தொடக்கமாகத் தேச வழக்கப்படி ஆருடைய பொறுப்பிலிருந்துவந்ததோ அந்தப்பிரகாரம் அவைகளை இருக்கும்படி செய்துவைக்கவும்.

என்று வன்னிபம் குறிப்பிடும் தேசவழக்கம் கோணேசர் கல்வெட்டு என்ற நூல் குறிப்பிடும் வழமைகளை ஞாபகப்படுத்துகிறது. திருக்கோணேச்சரத்தின் பராமரிப்புக்காக உண்டாக்கப்பட்ட நில புலங்கள், கிராமங்கள், அங்கங்கே குடியமர்த்தப்பட்ட மக்களின் கடமைகள், கோவிற் தொழும்புகளுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் கோவிலுக்குரிய திரவியங்கள். தானியங்கள். எண்ணெய் வகைகள், களஞ்சியப் பொருட்கள் முதலிய சேமிப்புகள் என்பனவற்றைச் செப்பேடுகளாகப் பொறித்து (பெரியவளமைப் பத்ததி) குளக்கோட்டு மன்னனால் வகுக்கப்பட்ட திட்டத்துக்கு அமைய செயற்படுத்தும் பணிகளைக் கனகசுந்தரப் பெருமாள் என்பவர் செய்துவந்ததை கோணேசர் கல்வெட்டு ஆவணப்படுத்துகிறது.

திருக்கோணேச்சரம் முற்றாக அழிக்கப்பட்டு அதன் பின்னால் தம்பலகாமத்தில் ஆதிகோணைநாயகர் ஆலயம் உருவாகி அங்கு திருக்கோணேச்சரத்தின் வழமைகள் முறையாகப் பின்பற்றப்பட்டததை பூர்வீககாலந் தொடக்கமாகத் தேச வழக்கப்படி ஆருடைய பொறுப்பிலிருந்துவந்ததோ அந்தப்பிரகாரம் அவைகளை இருக்கும்படி செய்துவைக்கவும் என்ற வரிகள் ஆதாரப்படுத்துகிறது.

தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் ஆலய தேசவழமைகள் தொடர்பாக ஆவணப்படுத்தி இருக்கும் இவ்வுயில் திருகோணமலை வரலாற்றுப் பதிவுகளில் பல்வேறு முக்கிய தரவுகளைக் கொண்டிருப்பதனால் அதன் முழுமையான வடிவம் பின்னிணைப்பாக இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது ஆவணம்

இரண்டாவது ஆவணம் 1928 ஆம் ஆண்டு தை மாதம் எழுதப்பட்டது. தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக தொண்டு செய்யும் தொழும்பாளர்களுள் ஒருவர் தான் செய்துவந்த தொழும்பினை தனது மகனுக்கு பாரம் கொடுப்பது பற்றி தேசந்தவருக்கும் மற்றும் ஆலயத்துடன் தொடர்புடையோருக்கும் அறியத்தரும் கடிதம் (2) இது. அதனைக் கீழே காணலாம்.

1928 ஆம் ஆண்டு தை மாதம் எழுதப்பட்டது.
சிவமயம்.
திருகோணமலையைச் சேர்ந்த தம்பலகமப்பற்றில் தம்பலகமம் கோயிற் குடியிருப்பில் சைவசமய பிரபல்யமாய் விளங்கும் கோணை நாதேஸ்வர சுவாமி கோயிலுக்கு தேவராசாவென்னும் குளக்கோட்டு மகாராசா, கயவாகு மகாராசாவால் எழுதி கல்வெட்டு என வழங்கி வரும் சாசனத்தை 1831 ஆம் ஆ(ஆண்டு) கார்த்திகை மீ(மாதம்) 26 ஆம் தேதி கெசற்றில் பிரசித்தப்படுத்தியிருக்கிறது. 

அக்கல்வெட்டுச் சாசனத்தில் சொல்லிய பிரகாரமே இருபாகை முதன்மை குருக்கள், தானத்தார், வரிப்பற்றார் என்றும் தொழும்புகாரரும் மற்றும் தொழும்புகாரரும் இதில் சொல்லிய தானத்தார் என்னும் தொழும்பை கோணாமலை வேலுப்பிள்ளை என்பவர் 30 முப்பது வருடகாலமாக பார்த்து எனது தகப்பனார் மரணிக்கு முன்னமே வேலுப்பிள்ளை வயிரமுத்து ஆகிய நானும் 27 இருபத்தேழு வருடம் பார்த்து எனது மகன் கோபாலுப்பிள்ளை என்பவரை 1928 ம் ஆ(ஆண்டு) தை மீ(மாதம்) துவக்கமாக பார்த்து அதிலுள்ள சுதந்திரங்களையும், அதிலுள்ள வருமானங்களையும் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சம்மதித்து ஒப்புவித்துப் போட்டேன் நான் என்பதை நிலமை, தலமை, தேசத்தவர்களுக்கும் மற்றுமுள்ள கொட்டியாபுரம் பற்று, கட்டுக்குளப் பற்றுக்கும், அரசாங்கத்தார் அவர்களுக்கும் அறியத்தருகிறேன்.
இ. (இவ்வண்ணம்)
தம்பலகமம்
கள்ளிமேடு – காரியப்பர்
வேலுப்பிள்ளை வயிரமுத்து
சாட்சி - வே.கதிரவேலு ,க.கோணாமலைகோயில் தொழும்பாளர்களின் உரிமை, கடமை என்பன விபரமாக கோணேகர் கல்வெட்டு எனும் நூலில் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், அதனை அங்கிகரித்து 1831.11.26 ஆம் திகதி அரச வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதையும் குறிப்பிடும் வேலுப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 27 ஆண்டுகளாக தானத்தார் என்ற தொழும்பினை செய்து வந்திருக்கிறார். அவரது மகன் கோபாலுப்பிள்ளை என்பவரை 1928 ஆம் ஆண்டு முதல் அத்தொழும்பை செய்யும் பணிக்கு நியமிக்கும் அதேவேளை, தானத்தாருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், வருமானங்களையும் அவருக்கே ஒப்புவித்து அதனை தேசத்தவருக்கு இக்கடிதம் மூலம் அறிவிக்கிறார்.

இங்கு தேசத்தவர் என்று தம்பலகாமப்பற்றைச் சேர்ந்தவர்களையே வயிரமுத்தது அவர்கள் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. அத்துடன் கொட்டியாபுரம்பற்று, கட்டுக்குளப்பற்று என்பனவற்றை பெயர் குறிப்பிடுவதன் மூலம் அவற்றை வெவ்வேறான தேசங்கள் என்பதையே அவர் குறிப்பால் உணர்த்துகிறார் என்று கொள்ளவேண்டி இருக்கிறது.

மூன்றாவது ஆவணம் 

மூன்றாவது ஆவணம் கந்தளாயில் உள்ள பிள்ளையார் ஆலய சிவன்ராத்திரி விழா (3) ஒழுங்குகள் தொடர்பானது. 11.02.1934 ஆண்டு தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்திடம் மேளக்கச்சேரிக்கான ஒழுங்குகள் தொடர்பில் உதவி கேட்பதாக அமைகிறது. இக்கடிதம் சிவன்ராத்திரியினை முன்னிட்டு கந்தளாய் பிள்ளையார் ஆலயத்தில் அபிசேகம் செய்வதற்கு தேசத்தவர் விரும்பி இருப்பதினை தெரிவிக்கிறது. இது சாதாரண மக்களின் பாவனையில் இயல்பாக இப்பிரதேச மக்களினை தேசத்தவர் என குறிப்பிடும் வழக்கம் நிலவிவந்ததினை ஆதாரப்படுத்துகிறது. அக்கடிதம் கீழ்வருமாறு அமைந்திருக்கிறது.

11.2.34 திரு.தம்பலகமம் ஆதியாகிய கோநேஸ்வர சுவாமிக்குரிய கந்தளாய் பிள்ளையார் கோவிலுக்கு சிவன்ராத்திரி அவிசேகம் தேசத்தவர்கள் செய்ய விரும்பியிருப்பதால் காரியப்பர்,, வயிராவியார் அவர்கட்கு தாள்மையுடன் அறியத்தருவது எங்களுக்கு ஒரு கூட்டுமேளம் (12ல்) திங்கள் கிளமை அனுப்பி வைக்கும்படி தயவாய் கேட்டுக் கொள்கிறோம்.
கோயில் மனேச்சர் பொ.நடராசா - பொ. சரவணப்பெருமாளுக்காக
ஊரவர்களுக்காக. மா.இராசையாஇக்கடிதம் மூலம் தேசத்தவர் என்ற ஆவணமாக்கலுக்கு அப்பால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் கந்தளாய்ப் பிள்ளையார் ஆலயம்மீது கொண்டிருந்த உரிமை, கந்தளாய்ப் பிள்ளையார் ஆலயத் திருவிழா நடைமுறைகள் போன்றவை தொடர்பிலும் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
நான்காவது ஆவணம் 

தேசம் பற்றிய நான்காவது ஆவணம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்துடன் தொடர்புடைய மகாசபைக் கூட்டம் பற்றியது. இது ஒரு முறைப்பாட்டுக் கடிதம் (4). இது திருகோணமலைப் பிராந்தியத்தில் இருந்த நான்கு தேசங்களை தெளிவாக ஆதாரப்படுத்துகிறது.

மகாமேன்மை தங்கிய திரு.டிஸ்திரிக்கோட்டு நீதிபதி அவர்களுக்குத் தாண்மையாய் திரு.தம்பலகமம் கோணநாயகர் கோயில் பராபரிப்புக்காரரான ஏரம்பு கணபதிப்பிள்ளை ஆகியன நான் தரும் மண்டாட்டப் புட்டீசமாவது.

ஜயாவே திரு.தம்பலகமம் கோணைநாயகர் கோயில் காரியங்களைக் குறித்து கூட்டங் கூட வேண்டிய காலங்களில் புராதன ஒழுங்கின்படி திரு.தம்பலகமம், திருக்கோணமலை, திரு கொடியாபுரப்பற்று. திரு கட்டுக்குளப்பகுதி ஆகிய இந்நான்கு தேசத்தில் உள்ள கோயில் உருமையாளராகிய நிலமை, தலைமை, தொளும்புகாறர், தேசத்தவர்களால் மகாசபை கூடி கூட்டம் நடப்பிப்பது வளக்கம். 

இதற்கு மாறாய்த் தம்பலகமத்தவர் சிலர் மாத்திரமே கூடி 1934ம் ஆண்டு பங்குனி மாதம் 19ந் திகதி கூடிய கூட்டம் கோயில் புராதன ஏற்பாடுகளுக்குப் பொருத்தமாய் நடைபெறவில்லை என்பதைப் பற்றி தகுந்த சாட்சிகளைக் கொண்டும், சாதனங்களைக் கொண்டும், வாய்மூலமாயும் அத்தாட்சி செய்யக் கூடும்.

இதை நீதிபதியவர்களின் தயவான கவனத்துக்கு அறியத்தருகின்றேன்.
3270ம் - 3271ம் இலக்கம் கொண்ட இரு உறுதி சாதனங்களாலும்
1169 இலக்க டிஸ்ரிக் கோட்டு தீர்ப்பினாலும் இன்னும் வேறு
இலங்கைத் தேசாதிபதியால் கிடைக்கப்பட்ட சேட்டுபிக்கற் கொப்பி இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.என்று முடிகிறது இக்கடிதம். இதுவொரு முழுமைபெறாத முறைப்பாட்டுக் கடிதம் என்பதனை வாசிக்கும்போதே நாம் புரிந்து கொள்ள முடியும். இக்கடிதம் பலமுறை திருத்தப்பட்டு பின்னர் ஆங்கில அல்லது தமிழ் மொழியில் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

முறைப்பாட்டுக்காரரான ஏரம்பு கணபதிப்பிள்ளை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய பராமரிப்புக்காரர். ஆலயத்தின் புராதன நடைமுறைகள் தொடர்பில் நன்கறிந்தவர். அவை தொடர்பான பல ஆலய ஆவணங்கள், உறுதிகள் ,அரச ஆவணங்கள் என்பவற்றை தனது சேகரிப்பில் வைத்திருந்தவர். எனவேதான் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மேற்படி ஆவணங்களை ஆலய புராதன நடைமுறைகளை உறுதிப்படுத்தும் பொருட்டு பிற்குறிப்பாக குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் முக்கிய பகுதி தேசத்தவர் இணைந்து மகாசபை கூடுவது தொடர்பானது. இவ்வாலயத்தில் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டுவந்த நடைமுறைக்கு அமைவாக ஆலயம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு திருகோணமலைப் பிராந்தியத்தில் இருந்த நான்கு தேசத்தவர்கள் மகாசபை கூடுவதை இக்கடிதம் ஆவணப்படுத்துகிறது. அத்துடன் இவ்வாலயம் இந்நான்கு தேசத்தையும் சேர்ந்த நிலைமை, தலைமை, தொழும்பாளர் ,தேசத்தவர் ( பொதுமக்கள் ) அனைவருக்கும் உரித்துடையது என்பதையும் இது ஆதாரப்படுத்துகிறது.

இங்கு குறிப்பிடப்படும் தேசத்தவர், மகாசபை என்ற சொற்கள் நம்மை 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் நூற்பாவுடன் தொடர்புபடுத்துகிறது. தேசம், தேசத்தவர் என்ற சிந்தனை இப்பிராந்திய மக்களிடையே நீண்டகாலமாக நிலைபெற்றிருந்ததையே இவ்வாவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மேற்கூறிய ஆதாரங்கள் அனைத்தும் பழமையில் திருகோணமலைப் பிராந்தியம் திருகோணமலைப் பற்று ,கட்டுக்குளப் பற்று, கொட்டியாரப் பற்று, தம்பலகாமப் பற்று என்று நான்கு தேசங்களாக வழங்கி வந்ததினை ஆதாரப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அத்துடன் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் நான்கு தேசத்தவர் கொண்டாடி மகிழும் தேசத்துக் கோயிலாக பழமையில் போற்றப்பட்டதை ஆதாரப்படுத்துபவை.

தேசத்துக் கோயில், தேசவழமைகள் என்பன பற்றி அறியத்தரும் இவ்வாவணங்கள் எதிர்காலத்தில் பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு கோணங்களில் ஆரயப்படவேண்டியவை என்பதனைக் கருத்தில்கொண்டு இங்கு அதன் முழுமையான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய நாட்களில் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் வடகிழக்கினை பண்பாட்டுரீதியில (வல்வெட்டித்துறை முதல் செங்கலடி வரையான ஊர்களை) தேசத்துக் கோயில் நடைமுறைக்கூடாக இணைத்ததை விரிவாகப் பார்த்திருந்தோம். இன்று சமூகவலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைந்து பல்வேறு பிரதேசத்தினைச் சேர்ந்த அன்பர்கள் இருப்புக் கேள்விக்குறியாகும் ஆலய வளாகங்களில் ( முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா சிவன் கோயில் ) ஒன்றுகூடி தமது பண்பாட்டு வழிமுறைகளுக்கூடாக அவற்றினைப் பாதுகாக்க முனைவதைக் காணும்போது எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேசத்துக் கோயில் நடைமுறைகள் தொடர்பில் மீளச் சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனை புரிந்துகொள்ளமுடிகிறது.

Dr. த.ஜீவராஜ் (MBBS, MCGP)

ஆவணங்கள்
1. இருமரபுந்தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில் 1893
2. தம்பலகமம் கள்ளிமேடு காரியப்பரின் கடிதம் 1928
3. கந்தளாயில் பிள்ளையார் ஆலய சிவன்ராத்திரி விழா கடிதம் 1934
4. மகாசபைக் கூட்டம் பற்றிய முறைப்பாட்டுக் கடிதம் 1934

பின்னிணைப்பு - இருமரபுந் துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபம் எழுதிய நியமன உறுதி

இல.ஙஉஏ0

திருவேதபுராண காவியங்களின் பிரகாரம் தெஷிணகையிலாய திருகயிலைப் பதியாகிய திருக்கோணமலையிலெழுந்தருளியிருக்கும் எங்கடவுளாகிய சிவபெருமான் கோணைநாயகரை வணங்கி தற்காலம் திரு. கொட்டியாபுரப்பற்று மேங்காமத்தில் வசிக்கும் இருமரபுந்தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபமாகிய நான் திரு.தம்பலகமம் கோணைநாயகர் கோவிற் கருமங்களைப்பற்றிப் பராபரிப்புத் தத்துவ நியமன உறுதி முடித்துக் கொடுத்த விபரம்.
கஅகூங ம் (ஆண்டு) ஆனி மீ ரு ந் திகதி தம்பலகமம் கோணைநாயகர் கோவில்னிடமாக அவ்வூர் குடிசனங்களும் திருக்கோணமலைப்பட்டின வாசிகளில் சிலரும் கூடிய கூட்டத்தில் இவ்வுறுதி முடிப்புக்காரனாகிய என்னைச் சபாநாயகராக ஏற்படுத்தி ---- ---- ---- ----- ----- ---------------------------------பராபரிப்புக் காரராயிரருந்த இருவரில் காலஞ்சென்ற கதிரவேலு ஏரம்பரின்னிடத்துக்கு அவருடைய மகனாகிய ஏரம்பர் கதிரவேலுவைப் பராபரிப்புக்கார---------- கூட்டத்தார் தானே தெரிவு செய்து நியமித்திருக்கிறபடியாலும் இந்தப்பிரகாரம் கூட்டத்தாரால் தெரிவுசெய்து நியமிக்கப்பட்ட பராபரிப்புக்காரன் ஏரம்பு கதிரவேலு என்பவருடன் ஊரவர்களால் முன் தெரிவு செய்யப்பட்டிருக்கிற பராபரிப்புக்காரர் காளியப்பர் சுப்ரமணியம் மென்பவரையும் சேர்த்து கோணைநாயகர் கோயிலுக்கு இரண்டு பராபரிப்புக்காரர் ----- ----- ------ ----- நொத்தாரி ------------ ------ ------ ----- ----- ------ ------- ------- ------ ----- -----
கூட்டத்தில் கொடுக்கும்படி கூட்டத்தில் ஊரவர்களால் நியமிக்கப்பட்ட பதின்மூன்று தத்துவகாரரில் கதித்தபங்காகிய ஒன்பது தத்துவகாரர் இவ்வுறுதி முடிப்புக்காரனாகிய எனக்கு சருவாதிகாரத்தையும் தந்திருக்கிறபடியாலும் ---------------------------------------
இப்பொழுது இவ்வுறுதியினால் சகலரும் அறியும்படி இதன்கீழ் கையொப்பம் வைத்த திரு.கொட்டியாபுரப்பற்று மேங்காமத்திலிருக்கும் முன்சொன்ன இருமரபுத்தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபமாகிய நான் திரு.தம்பலகமம் கோணைநாயகர் கோவிலைப்பற்றியும் அக்கோவிலுக்குடைய சகல அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களைப்பற்றியும் அதில் நடக்கவேண்டிய பூசை திருவிழா வேள்விகள் முதலான மற்றும் வேதசாரச் சடங்குகளைப்பற்றியும் இதன்கீழ் விபரித்தெழுதப்பட்டிருக்கின்ற காரியங்கள் சகலத்தையும் ஒவ்வொன்றையும் செய்து நிறைவேற்றும் பொருட்டு திரு.தம்பலகமம் நாயன்மார்திடலில் வசிக்கும் முன்சொன்ன ஏரம்பு கதிரவேலுவையும் மேற்படி தம்பலகமம் பட்டிமேட்டில் வசிக்கும் காளியப்பர் சுப்பிரமணியத்தையும் குறித்த கோணைநாயகர் கோவிலின் பராபரிப்புத்தத்துவகாரராக இதனால் பெயர் குறித்தும் நிலைப்பட்டுத்தியும் நியமித்தும் ஏற்பட்டுத்தியும் போட்டேன். இப் பராபரிப்புக்காரர்களுக்கு இவ்வுறுதி வழியாகக் கொடுக்கப்படும் தத்துவங்கள் வருமாறு.
முதலாவது. குறித்த கோணைநாயகர் கோவிலுக்குடையதாக இருக்கிற சகல அசைவற்ற ஆதனங்களைக் குத்தகைக்குக் கொடுக்கவும் அவைகளின் வருமானங்களை அறவிட்டு அவ்வருமானங்களிலிருந்து ---------------------- பிரகாரம் கோவில் பூசை திருவிழா முதலியகாரியங்களை ந------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------(மீ)தியாயிருக்கிற அல்லது இனிமேல் வருமதியாக வரக்கூடிய சகல நிலுவைகளையும் கடன்களையும் காரியங்களையும் பொருள்களையும் அறவிடவும் பற்றுச்சீட்டுகள் கொடுக்கவும்.
மூன்றாவது --நிலுவைகளையும் கடன்களையும் காரியங்கள் அல்லது பொருள்களையும் கொடக்கத் தவறுகின்றவர்களுக்கு விரோதமாக நியாயப் பிரமாண முறைப்படி வழக்குத் துரட்சி பண்ணவும். அவ்வழக்கு அல்லது வழக்குகளுக்குப் புறொக்றர்மாரை அல்லது அற்வகேற்மாரை நியமிக்கவும் குறித்த வழக்குத் தீற்புகளுக்கு விரோதமாக இலங்கைச் சுப்றீம் கோட்டுக்கு அபயநடு அல்லது அப்பீல் கொட்கவும் அந்த அப்பீல்களுக்குத் தேவையான பிணை உறுதிகள் மதலான சகல பத்திரங்களுக்கும் கையொப்பமிடவும்.-------------------------
நான்காவது. கந்தளாய்க்குளம் மாகாமம் ஆலடி முதலிய இடங்களில் ---------------------------------------------------------------------------------------------------------------------- களையும் கிராமசாந்திகளையும் வழமைப்பிரகாரம் காலத்திற்குக்காலம் ஒழுங்காக நடப்பிக்கவும் சொல்லிய கொவிலாதனங்களால் வரும் சகலவருமானங்களாகிய பணம் நெல்லு முதலான சகல இருப்பும் பூர்வீககாலந் தொடக்கமாகத் தேச வழக்கப்படி ஆருடைய பொறுப்பிலிருந்துவந்ததோ அந்தப்பிரகாரம் அவைகளை இருக்கும்படி செய்துவைக்கவும்---------------------------------------
ஐந்தாவது. மேற்சொல்லிய பிரகாரம் குறித்த கோவிலில் 1893 வருட ஆனி மீ ருந் தீ கூடிய கூட்டத்தில் நியமித்திருக்கிற பரிசோத--காரர் ஏழு பேர்களும் அல்லது அவர்களுடைய இடத்திற்கு ஊரவர்களால் நியமிக்கப்பட்டு-----------------------களைப்பின் தொடர்ந்து வரும் பரிசோதனைத்-----------------------------ரரெவர்களும் புராதன வழக்கப்படி ---நாயகர் கோவிலுக்கு முதன்மையுரித்துக்--------------களாகிய தம்பலகமம் குருநாட்டாரும்-----------------------------------------------------------------------
குளப்பகுதியாரும் கொட்டியாபுரம் சிந்து நாட்டாரும் ஒருங்கு கூடி இதனால் நியமிக்கப்படும் பராபரிப்புக்காரரிடத்தில் குறித்த கோணைநாயகர் கோவில் வருமானங்களைப் பற்றிய வரவு செலவுக் கணக்கை வெளிப்படத்தும்படி கேட்கும் காலம் இவர்க ளெந்த வேளையும் கணக்குச் சொல்லவும் உத்தரவாதம் பண்ணவும் அவர்கள் விதிக்கும் தீர்ப்புக்கு உள்ளாளிகளாக இருக்கவும் வேண்டியது
இந்தப்பிரகாரம் நான் பூர்வீகம் தொடக்கம் பாரம்பரியமாக நடந்துவந்த இந்த தேசவழக்கப்படி எனக்குள்ள சொந்த உருத்தைக் கொண்டும் மேற்சொல்லிய கோவில் கூட்டத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டும்(குறித்த பராபரிப்புக்க்காரர்களாகிய இவர்களிருவரும் ஒத்தும் தனித்தும் ---------------------------------------------------------------) குறித்த கூட்டத்தின் வரு----தமானப் பத்திரத்தையுமித்துடனணைத்து இந்தப் பராபரிப்புத் தத்துவ நியமனவுறுதி முடித்துக் கொடுத்ததற்கத்தாட்சியாக திருக்கோணமலை கொட்டியாபுரம் மேன்காமத்தில் ஆயிரத்தெண்ணூற்று தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு ஆனி மாதம் பதிநாலாந் திகதி இதிலுமிதைப் போலோ ----விதமான வேறிரண்டு பிரதிகளிலுமிதன்கீழ் கையொப்பங்கள் வைத்திருக்குஞ் சாட்சிகள் கொட்டியாபுரம் மூதூர் தம்பையா முத்துக்குமாரு வன்னிபம் மல்லிகைதீவிலிரருப்பவர்களாகிய பத்தியன் பரிகாரி சிற்றம்பலம் பரிகாரி முருகப்பர் விதானை கணபதிப்பிள்ளை கொட்டியாபுரப்பற்று இ(ஈ)ச்சிலம்பத்தை கதிரவேலு மொந்தப்பிள்ளை கொட்டியாபுரப்பற்று மல்லிகைதீவு சின்னத்தம்பி ஆரியத்தம்பி இவர்கள் முகதா ---லெனதுகையொப்பம் வைத்தேன்.
இ.எ. நல்லபூபாலவன்னிபம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வருடாந்த (2019) ஆய்வரங்கில் சமர்ப்பிப்பதற்கு தெரிவான ஆய்வுக்கட்டுரை.


அன்புள்ளங்களின் வாழ்த்துகளும், ஆலோசனைகளுமே சாதாரண வலைப்பதிவரான என்னை ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. அனைவருக்கும் நன்றியும், அன்பும்.
நட்புடன் ஜீவன்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

 1. Dear Dr.
  It is a marvalouse research work. Thanks a lot. I spoke to your father yesterday. S.Arulanantham

  ReplyDelete
 2. Real instructive and great complex body part of subject matter,
  now that's user friendly (:.

  ReplyDelete
 3. I really treasure your work, Great post.

  ReplyDelete
 4. Great delivery. Outstanding arguments. Keep up the great work.

  ReplyDelete