Sunday, August 18, 2019

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.

புதைபொருட்களும், கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், நாணயங்களும், மட்பாண்டங்களும், முதுமக்கள் தாழிகளும், இலக்கியங்களும் ஓரு நாட்டின் வரலாற்றையும், பண்பாட்டுச் செய்திகளையும் எவ்வாறு எடுத்துச் சொல்கின்றனவோ அது போலவே இடப்பெயர்களும் அவ்விடத்தின் வரலாற்று ஆய்வுகளுக்கு உறுதுணை செய்கின்றவையாக அமைந்திருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ள இத்தேடல் முயற்ச்சி உதவிபுரிந்தது.

மேற்குறிப்பிட்ட தொல்பொருட்கள் எல்லாம் பண்டைய நாட்களில் அறிவு சார்ந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்டவையாக இன்று அகழ்வாராச்சிகள் மூலம் எமக்குக் கிடைக்கின்றது. ஆனால் புராதான காலம் முதல் வழங்கப்பட்டுவரும் இடப்பெயர்கள் நுணுக்கமான அறிவின்றி சாதாரண பொதுமக்களால் படைக்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவேதான் மனித வாழ்வின் பொதுவான அம்சங்களை தொல்பொருட்களைவிட இடப்பெயர்கள் மிகச் சிறப்பாக உணர்த்தும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன.


இடப்பெயர்
நாடோடிக் குழுக்களாக வாழ்ந்த ஆதிகால மக்கள் ஒரு குறித்த இடத்தில் தங்களை நிலைநிறுத்தி வாழ முற்பட்டபோது இடப்பெயர்கள் தோற்றம்பெறத் தொடங்கியது எனலாம். அடையாளப்படுத்தலின் தேவையுடன் உருவான புராதானமான இடப்யெர்கள் பெரும்பாலும் ஆதிமனிதன் இயற்கையுடன் கொண்டிருந்த மிக நெருங்கிய தொடர்புகளை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. அதனால் அவை நீர்நிலை, நிலப்பண்பு, தாவரம், விலங்கு, பறவை என்பவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சியைத் தொடர்ந்து புராண, இதிகாச , இலக்கிய , கதாபாத்திரப் பெயர்களும்,கடவுள் பெயர்களும், சாதி, தொழில்முறைப் பெயர்களும், அரசர், தலைவர்கள், அதிகாரிகள் பெயர்களும் இடப்பெயரில் இணைந்து கொண்டது. இவற்றோடு வரலாற்று நிகழ்வுகள், பிறநாட்டு அரசியல் தொடர்புகள், சமய நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகள் என்பனவும் இடப்பெயர் ஆக்கத்தில் முக்கியபங்கு வகித்தன.

இடப்பெயர் ஆய்வு

இடப்பெயர்களின் பொருள் , பயன்பாடு, தோற்றவரலாறு, வகைப்பாடு என்பன பற்றி ஆய்வு செய்யும் துறை இடப்பெயர் ஆய்வு (Toponymy ) எனப்படுகிறது. இடப்பெயர் ஆய்வானது வரலாறு, மொழியியல், தொல்லியல் போன்ற துறைகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இவ்வாய்வு பல காலங்களுக்கு முன்னால் அந்நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதர்களின் இருப்பைப் பறைசாற்றுவதோடு அவர்கள் தொடர்பிலான பல்வேறு விடையங்களை அறிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது.

தமிழர்கள்இடங்களுக்குப் பெயர் சூட்டுவதில் சில ஒழுங்குமுறைகளைக் கொண்டிருந்தனர். அவர்களால் சூட்டப்பட்ட இடப்பெயர்கள் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் தொல்காப்பியர் கூற்றுக்கமைய அங்கு வாழ்ந்த மக்களுடன் தொடர்புடைய வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்குகின்ற தன்மை வாய்ந்தவையாக அமைந்திருந்தன.

அவ்வாறு அவர்களால் சூட்டப்பட்ட பெயர்களை அவற்றின் பொதுவான தன்மையின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம். அந்த வகைகளுக்கு இங்கு உதாரணமாக காட்டப்பட்டிருக்கும் இடப்பெயர்கள் முன்னர் தம்பலகாமப் பற்று (இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய் ) பிரதேசத்திற்குள் அடங்கியிருந்த சில ஊர்கள், குளம், ஆறு, வயல்நிலங்கள் என்பவற்றிற்குச் சொந்தமானவை என்பதைக் கருத்தில் கொள்க.

(1) நீர்நிலைப்பெயர்கள். - குடமுருட்டி ஆறு, காட்டாறு , உப்பாறு, பெரியாத்துமுனை, நடுவூத்து, பரவிபாஞ்சான், பொற்கேணி, பேராறு , வட்வனாறு , கரிக்கட்டைமலையாறு , பாலம்போட்டாறு , ஊற்றடி, நெடுங்கேணி , தீனேரி , சாவாறு

(2) நிலப்பெயர்கள் (நிலவியல்பு – நிலத்தோற்றம்) – பட்டிமேடு,கள்ளிமேடு, பெரியவர்ணமேடு , சின்னவர்ணமேடு, கரைச்சைத் திடல், மாகாமம் , நெடுந்தீவு, குட்டிக்கரச்சை, முனைச்சேனை, பாரதிபுரம், சிப்பித்திடல், குஞ்சரடப்பன்திடல், சம்மாந்துறை , பிள்ளைகொல்லிமணல் , வில்லுவெளி

(3) தாவரப்பெயர்கள் - ஈச்சந்தீவு , ஆலங்கேணி , மாஞ்சோலை ,மாஞ்சோலைச் சேனை , ஈச்சங்குளம் , குறிஞ்சாக்கேணி , நடுப்பிரபந்திடல் , நீர்நாவற்குளம் , தாமரைவில் , கண்டல்காடு இ முள்ளிப்பொத்தானை

(4) பறவைப்பெயர்கள் - மயில் தீவு, காக்காச்சிப்பித்திடல் ,

(5) விலங்குப் பெயர் - குரங்கு பாஞ்சான் , புலியூத்துக்குளம் ,

(6) கடவுட் பெயர்கள் - நாயன்மார்திடல் , ஐயனார்திடல் , பத்தினிபுரம் , சிவசக்திபுபுரம் , சுவாமிமலை

(7) அரசர் அதிகாரிகள் பெயர்கள் - வெண்டரசன் குளம் , பூவரசந்தீவு ,மணியரசன் குளம் , குஞ்சரடப்பன் திடல் , பாண்டியன் ஊற்று ;

(8) புராண இதிகாச இலக்கியப்பெயர்கள் - சூரன்கல்

(9) தொழில்முறை, சாதிப்பெயர்கள் - வண்ணாத்திடல், கரையான் வயல் , பிராமணர்கீத்து , தம்பட்டக்காரன் கீத்து , பிராமணமேடு , குருக்கள் மேடு . முதலியார் வயல் . சின்னக் கரையான் வயல் , வண்ணான் வயல் , குயவனாறு , கொல்லன் மடு , பூசாரிவேட்டை

(10) அரசியல், சமய, சமூக நடவடிக்கைகள் தொடர்புடைய பெயர்கள் - கோவில்குடியிருப்பு , தெலுங்கு நகர் , பறங்கிக் கீத்து , புதுக்குடியிருப்பு , சமாவைத்ததீவு

மேற்கூறியசிற்றூர்ப் பெயர்களும் ஆறு குளம் வயல் நிலங்களின் பெயர்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியவையாகும். இவ்வாறான ஆய்வுகள் இங்கு வாழ்ந்த மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதோடு அவர்களது தொன்மையான வரலாற்றுப்பதிவுகளையும் வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழிமுறையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தம்பலகாமம் ஊர்ப்பெயர் வரலாறுகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக்கிராமம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப்பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல் மலை காடு குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.

மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம் திட்டமிட்ட குடியேற்றங்கள் பாரிய உள்நாட்டு வெளிநாட்டு இடப்பெயர்வுகள் இயற்கை அழிவுகள் படுகொலைகள் வன்செயல்கள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவுமொன்று.

‘தம்பலகாமம்’ என்ற பெயர் இன்றைக்குச் சுமார் எண்ணுறு வருடங்களுக்கு முன்பாகவே வழக்கில் இருந்துவரும் ஊர்ப்பெயர் . இதனைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட ‘தம்பலகாமம் கல்வெட்டு’ ஆதாரப்படுத்துகிறது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ‘தம்பலகாம ஊர்’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்பலகாமம் என்ற ஊரின் பெயர் காலத்துக்குக் காலம் இங்கு மேலாதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்களாலும், இலக்கிய விற்பனர்களாலும் மாற்றப்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது.

‘தம்பலகாமப் பற்று’
இலங்கையில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னால் இப்பிரதேசத்தில் சுதந்திரச் தமிழ்ச்சிற்றரசாக இயங்கிய வன்னிபங்கள் இப்பிரதேசத்தின் பெயரினை ‘தம்பலகாமப் பற்று’ எனப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பின்னர் அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் வன்னிபங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் நிர்வாகிகளாகச் செயற்பட்ட காலத்திலும் அப்பெயரையே பாவித்திருக்கிறார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரை வன்னிபங்களின் முக்கிய ஆவணங்களில் அப்பெயர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தம்பலகாமப் பற்று என்பது இன்றைய தம்பலகாமப் பிரதேசத்துடன் கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் போன்ற இடங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயூர் தம்பலகாமம்
1917 ஆண்டுக்குரிய இறப்புத் தொடர்பான கள்ளிமேட்டுக் கல்வெட்டு “தம்.கள்ளிமேடு” என இறப்பு இடம்பெற்ற இடத்தினைக் குறிக்கின்றது. தம்பலகாமத்தைச் சேர்ந்த கள்ளிமேடு என்பதனையே இது சுருக்கமாகச் சொல்கின்றது. இதன் மூலம் தம்பலகாமத்தில் இருந்த சிற்றூர்களை அடையாளப்படுத்தும் போது ‘தம்’ என்று அவற்றின் தாயூரான தம்பலகாமத்தை குறிக்கும் வழமை அக்காலத்தில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.


இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட வீடு, வயல், காணி உறுதிகளிலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தமிழ் ஆவணங்களிலும் ‘திரு.தம்.கந்தளாய், திரு.தம்.கிண்ணியா, திரு.தம்.ஆலங்கேணி’ போன்ற சொற்றொடர்களைக் காணலாம். அத்துடன் இன்று வழக்கொழிந்து போய்விட்ட “புறோநோட்டு” என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்களிலும் இவ்வகையிலேயே தம்பலகாமப்பற்றின் கீழிருந்த சிற்றூர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

தமனதோட்ட ‘Tamanatota’
1658 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர்த்துக்கீசர் இலங்கைமீதான ஆதிக்கத்தினை இழந்தவேளையில் கண்டி இராட்சியம் திருகோணமலை மீது தனது மேலாதிக்கத்தினைச் செலுத்தியது. அக்காலப்பகுதியில் கண்டி இராட்சியத்தில் பல மாகாணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ‘தம்பன் கடவை’. தம்பன் கடவையின் துறைமுக நகரமாக தம்பலகாமம் சில காலம் செயற்பட வேண்டி இருந்தது. கடல்வழி வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட திருகோணமலையின் பகுதிகளில் ஒன்றாக தம்பலகாம குடாக்கடல் முக்கியத்துவம் பெற்றிருந்தமை இதற்கான காரணமாகும். கண்டி அரசின் மேலாதிக்கம் காரணமாக இப்பகுதி அவர்களால்   ‘Tamanatota’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

Tamblegam , Tampalagam
இதனைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர், பிரித்தானியர் மேலாதிக்கத்தின் போது இப்பிரதேசம் உச்சரிப்பு (ஒலி ) பிரச்சனையால் Tamblegam, Tampalagam போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.


‘தம்பை நகர்’ , ‘தம்பலகமம்’
ஊரின் பெயர் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அறிஞர்கள், இலக்கிய வாதிகள், சமூக அமைப்புக்கள் என்பனவற்றாலும் மாற்றம் பெறுவதுண்டு. அந்தவகையில் 17 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் இவ்வூரின் பெயரினை பின்வருமாறு பதிவு செய்கிறது.திரிகோணாசலப் புராணம் ‘தம்பை நகர்’ என்றும் வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் அதனை ‘தம்பலகமம்’ என்றும் பதிவு செய்திருக்கிறது. ‘தம்பை நகர்’ , ‘தம்பலகமம்’ என தமிழ் மக்களால் இவ்வூர் அழைக்கப்பட்ட சமகாலத்திலேயே இப்பிரதேசத்தின் மீது அதிகாரம் செலுத்திய கண்டி, ஐரோப்பிய அரசுகள் ‘Tamanatota’ Tampalagam , Tamblegam என இப்பிரதேசத்தை அடையாளப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பலகமுவ (Thambalagamuwa )
2018 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணக்கெடுப்புகளின்படி 20614  முஸ்லீம்களும் 7554  சிங்களவர்களும் 6563 தமிழர்களுமாக 34731 பேர் வாழ்கின்ற இப்பிரதேசம் இன்று தம்பலகமுவ (Thambalagamuwa ) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் மாற்றம் சில தசாப்தங்களுக்கு முன்னால் செய்யப்பட்டு இன்றுவரை அரச நிர்வாக ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இப்பிரதேசத்தில் அடங்கியிருக்கும் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒரு கிராமத்தில் புராதானமான ‘தம்பலகாமம்’ என்ற பெயர் இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 75 வீதமான தமிழ்பேசும் (தமிழர்கள் + முஸ்லீம்கள்) மக்கள் இப்பிரதேசத்தினை தம்பலகமம் இ தம்பலகாமம் என அழைக்கின்ற சமகாலத்திலேயே அரச நிர்வாக ஆவணங்களில் தம்பலகமுவ (Thambalagamuwa ) என்று இப்பிரதேசம் அடையாளப்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

ஒரு ஊர்ப்பெயருக்கு அளிக்கப்படும் விளக்கம் முதலில் அப்பகுதியின் வரலாற்றாராய்ச்சியில் இருந்தே தொடங்கவேண்டும். அவ்வூரின் பெயர் ஆகப்பழைய ஆவணத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதைத்தான் முதலில் தேடவேண்டும் என்று கேரள நாட்டுப்புறவியல் ஆய்வாளர் பேராசிரியர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் பதிவு செய்திருக்கிறார் . அத்துடன் ஒருபோதும் ஓர் புராதான இடத்தின் பெயர் ‘வைக்கப்பட்டது’ என்ற கோணத்தில் ஆராயக்கூடாது என்றும் ‘உருவாகிவந்தது’ என்ற கோணத்திலேயே ஆராயவேண்டும் என்றும் சொல்கிறார் அவர். பெரும்பாலும் இடப்பெயர்கள் மக்கள் வழக்கிலிருந்து உருவானவையாகவே இருக்குமேயன்றி அறிஞர்கள் உருவாக்கியதாக இருக்காது என்பதுதான் அவர் கூற்றின் பொருள்.

தம்பலகமுவ என்ற பெயர் அரச ஆவணங்களிலும், பொது நிறுவனங்களிலும் வலுவாக காலூன்றிவரும் காலகட்டத்தில், புதிது புதிதாகத் தோன்றி வரும் புத்தர் சிலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வாசல்வரை வந்துவிட்ட சூழ்நிலையில் எண்ணூறு வருடப் பழமை வாய்ந்த தம்பலகாமம் கல்வெட்டு என்னும் சாசன ஆதாரத்தினை தம்பலகாமம் என்னும் வரலாற்றுப்புகழ் கொண்ட ஊரின் பெயர் ஆய்வின் ஆதாரமாகக் கொள்கிறது இக்கட்டுரை.

தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணமான இக்கல்வெட்டு இன்றைக்கு சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டது. இச்சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும் இச்சாசனத்தில் அரசனின் பெயர் அடையாளங் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் கல்வெட்டின் மைப்படியான பிரதியினை ஆராய்ந்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அதனை ஒரு அடி ஏழு அங்குல நீளமுள்ள கற்பலகைச் சாசனமாகப் பதிவு செய்கிறார். எல்லாமாகப் பதினொரு வரிகளைக்கொண்ட துண்டமாகிவிட்ட தம்பலகாமம் கல்வெட்டில் முதல் நான்கு வரிகள் தெளிவற்று இருக்கிறது. அதன் ஐந்தாவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் வாசித்துப் ஆவணப்படுத்தி இருக்கிறார்.


5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

என்றமைகிறது கல்வெட்டின் வாசகங்கள். கல்வெட்டின் ஒன்பதாவது வரி (9. தம்பலகாம ஊ) ஊரின் பெயரினைத் தெளிவாக குறிப்பிடுகிறது. இதன் மூலம் இச்சாசனம் தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அத்தோடு புராதானமான இப்பெயர் ஏறக்குறைய 800 வருடங்களாக இடையறாது வழங்கி வருகின்றது என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துவிடுகிறது.

இன்றுள்ள பலர் காமம் என்பதனை இடத்தின் ஈற்றுப்பெயராக ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள். காமம் என்ற இந்த ஈற்றுப்பெயர் மூலவடிவத்திலேயே மக்கள் செறிந்து வாழும் ஊர்களைக் குறிக்கும் வழக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் இலங்கையில் உள்ள பல சிற்றூர்களின் பெயர்களில் அது இன்றும் நிலைத்திருக்கிறது.

பெரும்பாலான இலங்கைத் தமிழர் இடப்பெயர்கள் தமிழகத்து இடப்பெயர்க் கூறுகளுடன் ஒப்பிடக்கூடியதாகவும், அதேவேளை சில இடப்பெயர்கள் இலங்கைத் தமிழர் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதைக் காணக்ககூடியதாக இருக்கிறது. இவ்வாறான தனித்துவ அடையாளம் கொண்ட இடப்பெயர்கள் பல இலங்கைத் தமிழர் வரலாற்றின் தொன்மையை நிலைநாட்டும் உறுதியான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு தனித்துவ அடையாளம் கொண்ட இலங்கைத் தமிழர் இடபெயர்களில் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடபெயர்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இலங்கையின் மாவட்டரீதியில் அவ்விடப்பெயர்கள் வருமாறு.

யாழ்ப்பாண மாவட்டம் – கொடிகாமம், வலிகாமம், வீமன்காமம்
முல்லைத்தீவு மாவட்டம் – பனங்காமம்,அம்பாகாமம்
கிளிநொச்சி மாவட்டம் - தம்பகாமம்
அம்பாறை மாவட்டம் - இறக்காமம், சாகாமம் (திருக்கோவில்)
மட்டக்களப்பு மாவட்டம் – பழுகாமம், உறுகாமம்
மொனராகலை மாவட்டம் - கதிர்காமம்
பொலநறுவை மாவட்டம் - சந்தணகாமம் (இன்றைய கல்லோயா)
திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம், உரகிரிகாமம், கிரிகண்டகாமம், மேன்காமம், வெல்காமம், மாகாமம்
மன்னார் மாவட்டம் – வலிக்காமம், முதலியான்காமம்
அனுராதபுர மாவட்டம் - அனுராதகாமம் (பழைய பெயர்),கணகாமம்
கண்டி – வத்துகாமம்
மகாவம்சம் – கும்பகாமம், நந்திகாமம், காணுகாமம் (மகாவம்சம் குறிப்பிடும் இவ்விடங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை)

இலங்கையின் பல மாவட்டங்களில் காணப்படும் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் இலங்கைத் தமிழர் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாகவும், இவை இலங்கையில் தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் முழுவதும் பரவி இருந்ததை ஆதாரப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதைக் காணக்ககூடியதாக இருக்கிறது.

காமம் ,கிராமம் என்ற இலங்கைத் தமிழர் இடப்பெயர்ச் சொல் சமஸ்கிருத '(ப)கிராம" என்ற சொல்லிலிருந்து உருவானது என்ற வாதம் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமஸ்கிருத காமா என்பதே சிங்களத்திலும் (கம, கமுவ) , பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது என்பது இதற்கு வலுச்சேர்க்கும் கருத்தாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியியல் அறிஞர்கள் காமம் என்ற திராவிடச்சொல் தமிழில் இருந்து வடசொல் ஆனது என்கிறார்கள்.

"கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர் (தொல். சொல். உரி. 355) கமம் என்ற சொல்லுக்கு பொருள் நிறைவு என்பதாகும் . சங்கத் தொடரில் வரும் " கமஞ் சூல் மாமழை " (திருமுருகாற்றுப்படை) என்பதற்கு சூல்நிறைந்த முகில் என்பதே பொருள். அதோடு அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர். "காமம் மிக்க கழிபடர் கிளவி" (நற்றிணை) என்று தூது இலக்கியம் அதைத்தான் சொல்கிறது.
‘கமம்’ என்ற சொல்லில் இருந்துதான் ‘காமம்’ என்ற சொல் உருவானது. கமம் என்பதை உரிச்சொல்லடியாகக் கொண்டு முதல் நீண்டு வழங்கிய பெயர்ச்சொல்லே காமம்.

காமம் kāmam (அக. நி.) - 1. Village ஊர். 2. Inhabitant; குடி.

இன்று இலங்கைத் தமிழ் இடப்பெயர்களில் வரும் காமம் என்ற ஈற்றுச்சொல் சிற்றூரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். மக்கள் அன்பாகக் கூடி மனநிறைவுடன் வாழும் இடத்தினைக் குறிக்க இது பயன்படுகிறது. எனவே இடப்பெயர்களில் வரும் காமம் என்ற ஈற்றுச்சொல் காதல் அல்லது பாலியல் சம்பந்தமானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த அடிப்படையில் சேற்று வயல் நிறைந்த விவசாயக் கிராமமான தம்பலகாமம் என்னும் ஊரின் இடப்பெயரினை நோக்கினால்.

‘தம்பலகாமம்’ என்பது, ( தம்பல் + காமம் )
‘தம்பல்' - சேறு ( தம்பலடித்தல் - பயிரிடுதல், உழவு செய்தல்) ,(தம்பலாடல் - சேறடித்தல் அல்லது சேறாடால் )
'காமம்' - ஊர் (1. Village ஊர். 2. Inhabitant; குடி. )

‘தம்பலகாமம்’ என்பது தம்பல் + காமம் என்ற இரு தமிழ்ச்சொற்களின் புணர்நிலைத் தொடராக அமைந்து அழகாகப் பொருளுணர்த்துவதை அறியலாம். இங்கு ‘தம்பல்' என்பது சேறு என்னும் பொருளில் வருகிறது. தம்பல் என்பதினை அடிச்சொல்லாக கொண்டுவரும் தம்பலடித்தல் என்பது பயிரிடுதல், உழவு செய்தல் என்பனவற்றைக் குறிப்பதாகவும், தம்பலாடல் என்பது சேறடித்தல் அல்லது சேறாடால் என்ற பொருளுணர்த்துவதாகவும் இருக்கிறது. இதன் மூலம் ‘தம்பல்' என்பது தம்பலகாமத்தின் நீர்வள, நிலவளச் சிறப்பை நமக்கு உணர்த்தி நிற்கிறது. காமம் என்பது மக்கள் நெருங்கி வாழும் ( உறு - ஊர் போல் ) இடத்தினைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது. எனவே ‘தம்பலகாமம்’ என்ற ஊர்ப்பெயர் காரணப்பெயராக அமைந்து வரலாற்றுக் காலம் முதல் வழங்கி வருவதை அறியலாம்.


தற்போதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இவ்வூரின் பெயரை வரலாற்றாதாரம் கொண்ட புராதனமான பெயரான தம்பலகாமம் என அழைப்பதே பொருத்தமானது என்பதே இவ்வாய்வின் முடிவாகும்.

வரலாற்றை அறிதலும் அதனை பேணிக்காத்தலும் வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

 1. Great work... Arguments have been well supported and logically structured...

  ReplyDelete
 2. Dear Dr. I take this opportunity to congratulate your research work on our heritage. our people never bother about these. I have gone through your research work. Our leaders can file a case against the name Thampalagamuwa. Will any of our Tamil communities come forward to do this. We have to fight to win our right. Thank you S.Arulanantham

  ReplyDelete
 3. வரவேற்கிறேன் நல்ல பயனுள்ள ஆய்வு

  ReplyDelete
 4. fantastic post, veryy informative. І'm wondering
  why the opposite experts of tһis sector ⅾon't realize this.
  You muѕt continue үоur writing. I'm sure, you'ѵe a gгeat readers' base аlready!

  ReplyDelete