Wednesday, September 29, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 12

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11
அவர் படுக்கையை விட்டெழ ரொம்பநாளாகும் என்றார்களே பிரபு

உண்மைதான்.... ஆனாலும் தளபதி தம்பன் நினைத்தால் எமனையே புறமுதுகிட வைத்து விடுவார் என்பதல்லவா பிரபலம், அவனை ஒருமுறை உற்றுப்பார்த்தவர் தொடர்ந்தார்.


அவருக்குப் பரிபூரண சுகம் இல்லைதான். ஆனாலும் அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் அவர் உடல்நிலைபற்றி மலையாளத்தில் நல்ல அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள்... அதைக்கேட்ட இவர்... எனக்கிப்போ பரவாயில்லை என்றும் கலம் ஏறி வந்துவிட்டார் போலிருக்கிறது..... நானும் அவரைக் கண்டபிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.

தளபதி குணமாகி வந்து விட்டார் என்ற சேதி உறைத்ததும் உதயகுமரனின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்து மறைவதை மன்னர் அவதானித்தாரோ இல்லையோ.... அவர் முகத்தில் இள நகை படர்ந்தது.


தளபதி தலைநகர் திரும்பியதற்கென்ன அங்கேயே அவருக்கு நிறைய அலுவல்கள் காத்திருக்pன்றன. தம்பன் கோட்டைப் பொறுப்பைவிட மேலான பொறுப்புக்கள் அவருக்கு இருக்கப் போகின்றன. தம்பன் கோட்டை தொடர்ந்தும் உன் பொறுப்பில்தான் இருக்கும். என்றார்... அவர் சிரிப்பு அகன்றது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க முனைவது அவருக்கு புரிந்தது... ஆனாலும் அவனைப்பேச அனுமதிப்பதாகக் காணோம்.


சரி சரி நீ எப்போது கிளம்பப்போகிறாய்? என்று கேட்டார்.

நாளைய பொழுது புலர்ந்து வரும் வேளையில் புறப்பட ஆயத்தம் பண்ணச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறேன் பிரபு


நல்லது நானும் நாளையே கிளம்புகிறேன். அதோ இரதத்தையும் தயார்படுத்துகிறார்கள். என்று சுட்டிக்காட்டினார். தங்கமாய் மின்னிய அவரது இரதம் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல, உனக்கும் ஓய்வு வேண்டும். விடைபெற்றுக் கொள். என்று கூறிவிட்டு உரையாடல் முடிந்து விட்டது என்பது போல் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு ஆசனத்திற்காக நகர முற்பட்டார் சக்கரவர்த்தி.


உதயகுமரனுக்கோ முகம் வாடிவிட்டது. இனி மன்னனுடன் பேசமுடியாது. வந்தவேலை நிறைவேறப்போவதுமில்லை. ரங்கநாயகியிடம் நான் என்ன சொல்வேனோ?... இதை நினைக்கும்போதே அவன் முகம் கறுத்து வாடியது.

வேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.

உதயகுமரா...! என்று அழைத்தார். அவன் இரண்டே எட்டில் அவர் அருகில் நின்றான். நீ வாலிபன், துடிப்புக்கள் அதிகமான பருவம், அதனால்தான் நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நீ அரசகுலத்தினன் என்பதையோ, அரசகுலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது என்பதையோ மறந்துவிடாதே... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்... நீ சிந்தித்துப்பார்.... மக்கள்.... நாடு... இதை முன்நிறுத்தியே முடிவு எடுக்கவேண்டியவர்கள் அரசகுலத்தினர். நீ முன்னேற்றம் அடையவேண்டும், பேர் புகழ் ஈட்டவேண்டும், என்பதுதான் என்னுடையதும் உன் அன்னை இரத்தினாவதி தேவியினதும், உன் சிற்றன்னையினதும் எதிர்பார்ப்பு....எங்கள் எதிர்பார்ப்பைச், சிதைத்துவிடாதே... அரசகுலத்தவருக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கமுடியாது....இருக்கவும் கூடாது...


அரசர் பேசப் பேச சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னைப்பற்றித் தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.!


நீ போகலாம்... என்று உள்அறைக்குச் சென்றுவிட்டார் மன்னர். அவனால் ஓரடி கூட எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது. தம்பன் கோட்டையில் அவன் கட்டியது வெறும் மணல் கோட்டைதானா? மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி...? அவளை மறந்துவிடவேண்டியதுதானா?


தளபதி தலைநகர் வந்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு வகையில் ஏக்கம் பிடித்துவிட்டது. அப்படியென்றால் தம்பரிடம் கோட்டையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு தலைநகருக்கு கிளம்பவேண்டியிருக்குமே... அப்படியானால் ரங்கநாயகியை எப்படி சந்திப்பது? என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா? என்று ஆசை கிளம்ப, மன்னரிடமே அதை சொல்லிவிடுவது என்று சிந்திக்க தலைப்பட்டான்.


ஆனாலும் எந்த சிந்தனைகளும், திட்டங்களும் மன்னரின் முன்னிலையில் எடுபடவேயில்லை.... மாறாக அரச குலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள் எங்களை ஏமாற்றிவிடாதே, என்ற மன்னரது வார்த்தைத் தொடர்கள் அவன் நாடி நரம்புகளை எல்லாம் ஒடுங்கச் செய்துவிட்டன.


அதுமட்டுமல்ல மன்னரது ஆற்றல்மீது அவனுக்கேற்பட்டுள்ள மலைப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவரை விஞ்சி இந்த இராச்சியத்திலும் சரி, நாட்டிலும் சரி எதுவும் நடந்துவிடமுடியாது என்ற எண்ணம், அவனுக்கு அரசர் மீது இருந்த மதிப்பைப் பலமடங்கு உயர்த்தி விட்டது.


எனினும் தன் வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது அவனுக்குக் கோபத்தைத் தந்தது.... தன்னால் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது என்ற எண்ணம் தலைதூக்கியபோது ஆத்திரமல்ல இயலாமை அவனை மேற்கொண்டது.


நடைப்பிணமாக வீரர்களுடன் விருந்தினர் விடுதிக்குத் திரும்பினான் உதயகுமரன். அவன் மனதில் உற்சாகம் அற்றே போய்விட்டது.தான் எடுக்கப்போகும் முடிவால் யார் யாருக்கு என்ன நடக்கக் கூடும் என்று சிந்தித்துப்பார்த்தே களைத்துப்போனான். வழியில் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவனைக் குழப்பவில்லை. அவன் குதிரைகூட துள்ளல் நடையில்தான் போய்க் கொண்டிருந்தது. எஜமானைக் குழப்ப அதற்கும் இஸ்டம் இருக்கவில்லை.


அன்று பூரணை முழுநிலவு நாள்! ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.தொடரும்......

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....

{ படங்கள் இணையத்தில் இருந்து }

Monday, September 27, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11
திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.


இனி...


தம்பன் கோட்டையை விட்டுப்புறப்பட்ட அந்த அணி சதுர்வேத மங்கலம் என்ற கந்தளாயை நோக்கி நகர்ந்தது. தளபதியைப்போல வீரர்களும், குதிரையை ஓட விரட்டாமல், சிறு பாய்ச்சலிலேயே செல்ல அனுமதித்தனர்.பயணம் சேனை வழிக்கல்வழியூடாகச் செல்லலாயிற்று. சேனைவழிக்கல்வழி சதுர்வேத மங்கலத்திற்கும் (கந்தளாயிற்கும்) தம்பலகாமத்திற்கும் இடையில் இரு ஊர்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாகும். இரண்டு ஊர்களுக்கும் இடையே 24 மைல் தூரம் அடர்ந்த காடு ஆகும். இந்தப் பெரும் வனத்தை ஊடறுத்து அமைவதுதான் இந்த ஒரே பாதையான சேனைவழிக்கல்வழி. பொதுவாக இது மாட்டு வண்டிப்பாதையாகவே அமைந்திருந்தது.இரண்டு ஊர்களையும் இக்கானக நெடுஞ்சாலை இணைத்து நின்றதால் இரண்டு ஊர்களதும் அரச நிர்வாகம் இவ்வழியின் இரண்டு மருங்குகளையும் இரு ஊரவர்க்கும் பங்கு வீதம் அளந்து கொடுத்து சுமார் ஐந்து முழ அகலத்திற்கு மரம் செடி கொடிகளை வெட்டியழித்து துப்பரவு செய்யப்பணித்திருந்ததால் இந்தப் பெரும் வனத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய எட்டு முழத்திற்கும் (25 அடிவரை) அதிக அகலமான இப்பாதைவழியில் பயணிகள் அச்சமின்றிப் போகக்கூடியதாக இருந்தது.
காலத்திற்குக் காலம் வழியின் இருமருங்கும் ஐந்து முழ அகலம் என்று காடு வெட்டி துப்புரவு செய்திருந்தாலும் பாதையை ஒட்டி நின்ற பாலை, இலுப்பை போன்ற விருட்சங்களை விட்டு வைத்தும் இருந்தனர். எண்திசையும் கிளை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல் தந்தவண்ணம் இம்மரங்கள் இருந்தன.வழியில் இத்தகைய மரங்கள் இரண்டு ஒன்றாகி இருந்த இடத்தில் நிழல்போதுமானதாக இருந்ததால் ... குதிரைகளை ஓரமாகக் கட்டிவிட்டு அத்தனைபேரும் அமர்ந்து, கொண்டுவந்திருந்த புளிச்சாதத்தை சாப்பிட்டு சில கணங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.வேறெங்கும் நிற்காமல் சதுர்வேதமங்கலத்தை (கந்தளாய்) வந்தடைந்த உதயகுமரனையும், குதிரைப்படைவீரர்களையும் மகாநாட்டு நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் விடுதியில் தங்கவைத்து, உடலில் படிந்திருந்த தூசியையும், வியர்வையையும் அகற்ற குளியலுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.நாட்டின் நாலா புறமுமிருந்து கோட்டைத்தளபதிகள், படைவீரர்கள் என்று மட்டுமல்லாது மடாதிபதிகள், சமய அறிஞர்கள் வேதவிற்பன்னர்கள், யோகிகள், சமயப் பிரமுகர்கள், சைவப் பெருமக்கள் என்று திரள் திரளாய் வந்து சதுர்வேத மங்கலத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர். அரோகரா ஒலிகளும் ,ஓம் உச்சாடனங்களும் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தன.

அன்று மதியத்திற்கு பின்னர் பொலன்னறுவையிலிருந்து கலிங்க விஜயவாகு மன்னர் நால்வகைச் சேனைகளும் புடைசூழ, வாத்திய கோஷங்கள் முழங்க, அமர்க்களமாக சதுர்வேதமங்கலம் வந்தடைந்தபோது, உதயகுமரனும், ஏனைய தளபதிகள், அதிகாரிகளுடன் சென்று வணக்கம் செலுத்தினான்.

அன்று மாலையே விழா ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்... மன்னர் அதிகளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்காமல் ஒரு சில முக்கியமான கோட்டைகளின் தளபதிகளுடன் மட்டும் கலந்துபேசினார். அவர் உதயகுமரனின் முறை வந்தபோது, தம்பன் கோட்டையின் குறிப்புக்களைச் சொல்லி விபரங்கேட்டபோது, அவன் அசந்தேபோனான். இத்தனை தெளிவாக கோட்டையின் மூலைமுடுக்குகள், பாதாள அறைகள், களஞ்சிய சாலை... சிறைக்கூடம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிராரே... என்று வியந்தான். மறுகணம் இல்லையென்றால் பௌத்தர்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்யமுடியுமா என்று கலிங்கவிஜயபாகு சக்கரவர்த்தியின் ஆட்சிவண்ணத்தை மெச்சவும் செய்தான்.
வேளையானதும் மேள தாள சீர்களுடன் அரசர் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் கூட பல பாகங்களிலிருந்தும் தவசிரேஷ்டர்கள், தத்துவ ஞானிகள், யோகிகள், வேதாகமப்பண்டிதர்கள், அரச பிரதிநிதிகள், தளபதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று வந்திருந்து மண்டபத்தை நிறைத்திருந்தவர்கள் மன்னரைக் கண்டதும் எழுந்து நின்று ஜயகோஷம் எழுப்பி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மன்னர் தமக்கான சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சபையும் அடங்கியது.விழா ஏற்பாட்டாளர்கள், சம்பிரதாயபூர்வமாக, மன்னரை விழித்து, தலமை தாங்கி அம்மாநாட்டை ஆரம்பித்து வைக்குமாறு அவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டனர்.கலிங்க விஜயபாகுச் சக்கரவர்த்தியும் எழுந்து, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, குத்துவிளக்கேற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆத்திசூடி பாடப்பட்டதும், மன்னர் மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார்.கலீரென கம்பீரமான குரலில் பேசத்தொடங்கினார் மன்னர். சபை மகுடியில் கட்டுண்ட நாகம்போல கவனம் திரும்பாமல் செவிமடுக்கலாயிற்று...
தொடர்ந்து ஒவ்வொருவராக முறையெடுத்துப் பேசலாயினர். சமயஅறிஞர்கள், யோகிகள், வேதவிற்பன்னர்கள் என்று தாங்கள் கடைப்பிடிக்கும் தெய்வக் கொள்கைகளை விளக்கி உரையாற்றலாயினர். எல்லோரது பேச்சும் மன்னர் குறிப்பிட்ட உபநிடதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதாகவே அமைந்தன. இவ்வாறாக ஆரம்பித்த வேதாகம மாநாடு மூன்று நாட்களாக இடம்பெற்றன. இடையிடையே சமயக் கருத்துக்களை விளக்கும் நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துக்கள், சங்கீதக்கச்சேரிகள் என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளால் மாநாடுகளை கட்டிக் கொண்டிருந்தது.


உதயகுமரனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. அவன் சிந்தனையெல்லாம் குடமுருட்டியாறு, வெண்மணற்பரப்பு, ரங்கநாயகி ஆகியவற்றிலேயே நிலைத்திருந்தது. எப்படியாவது மன்னருடன் பேசி அவளை மணம்முடிக்க அனுமதி பெறவேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழலாயிற்று.மாநாட்டு நிகழ்வுகள் களியாட்டங்களுடன் நிறைவு பெற்றன.... சகலரும் மாநாட்டைப் பற்றியும், அதை ஏற்பாடு செய்த மன்னரைப்பற்றியும் புகழ்ந்தபடியிருந்தனர். அரசரும் மறுதினமே ராஜதானி திரும்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த கோட்டைத் தளபதிகள், அயல்நாட்டு பிரதிநிதிகள், பிரமுகர்கள் சக்கரவர்த்தியை வணங்கி சந்தித்து விடைபெற்று வணங்கிக் கொண்டு ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.


தன்பங்கிற்கு விடைபெற உதயகுமரன் அவசரப்படவில்லை. மன்னருடன் ஆறுதலாக ரங்கநாயகி பற்றி காதில் போட்டு எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்பதில் அவன் முனைப்பாக இருந்தான்.
உதயகுமரனும் சிலவீரர்களும், இளஞ்செழியனும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். அமர்ந்திருந்த அரசர் உப்பரிகைச்சாரளத்தின் பக்கமாக உதயகுமரனை அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் செய்தது உதயகுமரனின் வீரர்களுக்கு பெருமையாக இருந்தது. தங்கள் தளபதி சக்கரவர்த்திக்கு நெருங்கியவர் என்பதில் அவர்களுக்கு ஏதோ உயர்ந்த எண்ணம். உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. என்றார்.உதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.
தொடரும்......


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

தொல்லைதரும் பேன்கள் / Pediculosisமனித உடலில் புற ஒட்டுண்ணியாக வாழ்ந்து மனிதருக்குப் பெரும் துன்பம் தருகின்ற கிருமி பேனாகும். இவை மனித குருதியை உறிஞ்சிக்குடிக்கின்றன , அத்துடன் இவற்றின் கழிவுகளால் மனித உடலில் ஒவ்வாமை ஏற்படுகின்றது ,இவற்றோடு இவை சில வகையான நோய்களைப் பரப்பும் தன்மையையும் கொண்டிருக்கிறது.

Saturday, September 25, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9இனி...

ஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா?... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது? நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா?நம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது? அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...

அவள் கண்கள் கலங்கின.ரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்உட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான்
தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்! ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.


உதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா? உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.


என்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி ! நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...


எனக்கது தெரியாதா என்ன? அவள் மனதுக்குள் சொன்னாள்.உண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட, சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.


வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.அரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.நியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா?


அவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.உண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.


அதெப்படி ...? அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.


வழிவரும்...! நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...என்ன? என்பதுபோல் அவனைப்பார்த்தாள்.


உனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா? சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா?ஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா? இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.இதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான்! இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்


அப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா?


அவள் குழப்பமாகப் பார்த்தாள்.அவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே
செய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.ஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.


என்னை மறந்து விடமாட்டீர்களே?


என்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே?
என்னை இன்னுமா நம்பவில்லை? அவன் குரலில் தெரிந்த வேதனை அவளை உசுப்பியது.


இல்லை... உங்களை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...பயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.விரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.அவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.


திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
தொடரும்.....

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Tuesday, September 21, 2010

HEART ATTACK + CHOLESTEROL / மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்


உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.

இருதயம் எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது. இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக் குழாய்களின் மூலம் பெறுகிறது.

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8
இனி...


கோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.


இன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன்? அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா?, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா? எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே! என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.


Monday, September 20, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8
பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.
இனி...

ரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.

நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?

அவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.


ஆம் அப்பா! அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.

அவர் மறித்தார்.
அவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா?

ஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா?


அவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.வேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து
விடாதே...
அவர் அவசரம் காட்டினார்.

ஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...


அவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.மகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.


புதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.

அம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.அவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து
இறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.


இதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.


அவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா? அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....?| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...? அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா? என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.அவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.எனக்குப் பசிக்கவில்லை அத்தைஎன்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு
படுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா?

பால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்
சும்மா விட்டுவிடுங்கள் அத்தை.வயதானபிள்ளையை அப்படி விட்டுவிடலாமா? பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.


அவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.பொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன்? அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா?

யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.


அத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா?

எதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது. தொடரும்......

ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Wednesday, September 15, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6


இனி...

உண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

Tuesday, September 14, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6


தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........

தொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.அவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.


என்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா? புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...?

அவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்?.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.


உண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.


தம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.


உதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.


புதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.


அவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.


அவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா? இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா? தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.


அவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான்! அவள் எனக்கு மனைவியாவாளா? அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.


உயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.


தொடரும்......

ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Monday, September 13, 2010

தம்பன் கோட்டை

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5


தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.

கலிங்கத்து விஜயபாகு (
மாகன் )கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.


இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்
(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.


தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).


இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.


தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.


(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.
தொடரும்......
ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }