Monday, September 20, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8
பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.
இனி...

ரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.

நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?

அவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.


ஆம் அப்பா! அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.

அவர் மறித்தார்.
அவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா?

ஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா?


அவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.வேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து
விடாதே...
அவர் அவசரம் காட்டினார்.

ஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...


அவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.மகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.


புதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.

அம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.அவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து
இறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.


இதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.


அவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா? அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....?| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...? அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா? என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.அவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.எனக்குப் பசிக்கவில்லை அத்தைஎன்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு
படுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா?

பால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்
சும்மா விட்டுவிடுங்கள் அத்தை.வயதானபிள்ளையை அப்படி விட்டுவிடலாமா? பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.


அவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.பொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன்? அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா?

யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.


அத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா?

எதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது. தொடரும்......

ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment