Tuesday, September 21, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8
இனி...


கோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.


இன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன்? அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா?, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா? எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே! என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.
ஒன்று எனது குலம்... நான் ராஜகுலத்தினன்... ஒரு நட்டுவகுலப்பெண்ணை திருமணம் செய்ய அரச குடும்பம் என்றுமே சம்மதிக்கப்போவதில்லை. அடுத்தது, அன்னை இரத்தினாவதிதேவி இதற்கு ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை, மன்னர்... அவருக்கென்று சில கொள்கைகள், அரச குடும்பம் பற்றிய கனவுகள், தனது சாம்ராச்சியம் தொடர்பாக எங்கள் ஒவ்வொருவர்மீதும் நம்பிக்கை வைத்து தீட்டியிருக்கும் திட்டங்கள்... இவர்களுக்காக என் எதிர்காலத்தை இழக்க வேண்டியதுதானா? என் மனம் கவர்ந்த தேவதையை மறந்து வாழத்தான் வேண்டுமா? எண்ணவே முடியாமல் இருக்கும் இந்த உறவின் பிரிவை எப்படி நிஜமாக எண்ணால் தாங்கிக்
கொள்ளமுடியும்?
புதிய பிரதேசம் என்று இயற்கை எழிலை அள்ளிப்பருகிக் கட்டில்லாக் காளைபோல கட்டிளங்காளை நான் மகிழ்ந்து திரிந்தேனே... இச்சிறு பெண்ணைக் கண்டது முதல் மன நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டேனே! படுக்கை முள்ளாய் குத்தியது. கட்டிலில் இருந்து எழும்பி ஐன்னலுக்கு தாவினான். விண்மீன்கள் துயிலாது காவல் செய்தன.தீடீரென அவன் மனதில் ஒரு மின்வெட்டு யோசனை! ஆம் அப்படித்தான் செய்யவேண்டும்.... அதைவிட்டால் வேறு வழியில்லை. யார் என்ன எதிர்த்தாலும்... அவள்மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சம்மதம் சொன்னால் போதும், அவளையும் அழைத்துக்கொண்டு தென்இந்தியாவுக்குச் சென்று விடலாம். அங்கு சோழ அரசப் பிரதிநிதியாக இருக்கும் சிற்றப்பா கமலசேகரரின் சிபாரிசில் சோழ சைன்னியத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்.நடக்கவேண்டியது நடந்து விட்டது என்று மன்னர் மன்னித்து விட்டாலும் விடுவார்... ஆனால் அன்னை இரத்தினாவதிதேவிதான் பெரிதாகத் துயரப்படுவார்.... இறப்புக்குச் சமனான துயர் அவளை வாட்டி எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்!ரங்கநாயகி எப்படியோ.. வயதான தந்தையை, ஆசானுக்கு ஆசானாக இருக்கின்றவரை இங்கே தனித்து விட்டுவிட்டு நம்முடன் வரச்சம்மதிப்பாளா? ... அவள் மட்டும் வர மறுத்துவிட்டால்? படுக்கைக்குத் திரும்பியவன் நீண்ட நேரம் துயிலவேயில்லை. இரண்டாம் சாமத்தில் காவல் மாறும் ஒலியைக் கேட்டபடியே மெல்லக் கண்மூடத்தொடங்கினான்.
அவள் ஆவலோடு எதிர்பார்த்த பொழுது விடிந்தது. பொழுது விடிந்ததா? இல்லை இரவு முடிந்ததா? அவளுக்கு இது தேவையில்லா ஆராய்ச்சி. பகல் முழுவதும் பதைபதைப்புடன் குட்டிபோட்ட பூனைபோல கூடத்திற்கும் அறைக்குமிடையே அலைந்தாள். கடைசியாக மாலையானதும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அலைமோதும் சிந்தனைக்கு தடைபோடும் முயற்சியாக மணல் பரப்புக்கு வந்த ரங்கநாயகி அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனையோ கட்டறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.குமரன் வந்ததையோ, புரவியை மரத்தில் கட்டிவிட்டு அவளை நெருங்கியதையோ அவள் உணர்ந்து கொள்ளவில்லை. என்ன ரங்கா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? இராகம் பாடலாமா? என்று சிரித்தபடி கேட்டபோதுதான், திடுக்கிட்டுத் தலையைத் திருப்பினாள். அவள் கண்களில் முத்தாகிப் பளபளத்த கண்ணீர்த் துளிகள்!


ஏன்...... ஏன் இந்தக்கலக்கம்?இத்தனை நாட்களாக அவனுடன் அருகே அமர்ந்து பாடி மகிழ்ந்தவள் இன்று அவனைக் கண்டதும் திரண்டு வந்த கண்ணீரை மறைக்க முயன்றவளாய் சரேலென எழுந்து தலை வணங்கி நின்று பிரபு! தாங்கள் கோட்டைத்தளபதி என்று தெரியாமல் இத்தனை நாட்கள் தகுந்த மரியாதை செலுத்தாமல் அபச்சாரம் செய்து விட்டேன். சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா? தொடரும்......

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment