Monday, February 17, 2014

திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்


இதுவரை நாம் திருகோணமலையில் சோழர்கள் என்னும் தொடரில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் (இலங்கை) சோழவம்சத்து இளவரசர்கள் அரசப்பிரதிநிதிகளாக முடிசூடி ஆட்சி செய்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம்.
திருகோணமலையிற் சோழர்கள்  
திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள் 

இனி…..
இதுவரை சோழ இலங்கேஸ்வரர்களாக இருவர் வரலாற்றாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முதலாம் இராஜேந்திர சோழனின் மகன். இவர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்றளைக்கப்பட்ட கந்தளாய்ச் சாசனத்தால் அடையாளம் காணப்படுகிறார். இவர் தனது தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் முடி சூடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர். சங்கவர்மன் என்னும் பட்டப்பெயரினைக் கொண்டவர்.

இரண்டாவதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட  சோழ இலங்கேஸ்வரன் பற்றிய தகவல் கொழும்பு அருங்காட்சியகத்துச் சாசனம் மூலம் அறியக் கிடக்கிறது. கால அடிப்படையில் சங்கவர்மனுக்குப் பிறகு  ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவர் இரண்டாம் இராஜேந்திர சோழனின் புதல்வர்களில் ஒருவர். உத்தமசோழன் ,விக்கிரமசலாமேகன் என்ற பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர். எனவே உத்தமசோழன் சங்கவர்மன் ஆகிய இருவரும் சோழ இலங்கேஸ்வரன் என்ற பெயருடன் ஒருவர் பின் ஒருவராக இலங்கையில் ஆட்சி புரிந்தனர் என்பது சாசன ஆதாரங்கள் மூலம் உறுதியாகிறது.


முதலாம் சோழ இலங்கேஸ்வரன்  தொடர்பான தகவல்களைத் தரும் கந்தளாய்ச் சாசனம் ஒரு வரலாற்று ஆவணம் என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இச்சாசனம் அரசனின் பெயர், அது எழுதப்பட்ட காலம், இராஜராஜ சதுர்வேதி மங்கலம் தொடர்பான தகவல்கள், பெருங்குறிப் பெருமக்கள் மற்றும் வரிசேகரிப்பாளன் தொடர்பான விபரங்கள், கந்தளாய்க் குளத்துடன் தொடர்புடைய நீர்ப்பாசன வாய்க்கால்களைப் பற்றிய தீர்மானங்கள் என்பன பற்றிய செய்திகளைத் தருகிறது.

இக்கூட்டம் அக்காலத்தில் கந்தளாயில் இருந்த சிவன்கோயில் மண்டபம் ஒன்றில் கூட்டப்பட்டதையும் அக்கூட்டத்தின் முடிவுகள்  மண்டபத்தூணில் சாசனமாகப்  பதிப்பிக்கப்பட்டதையும் அனுமானிக்க முடிகிறது. கற்பலகைச் சாசனமாகிய கந்தளாயச் சாசனம் சேதமடைந்து இரு துண்டங்களாகக் கிடைத்ததினால் மேற்படி கூட்டத்தில் மகாசபையினர் கூடி என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்பது தெளிவாகவில்லை.


இச்சாசனம் முதலாம் இலங்கேஸ்வரனை ஸ்ரீ கோ சங்கவர்ம உடையாரான ஸ்ரீ சோழ இலங்கேஸ்வர தேவர் என்று விளிக்கிறது. சோழ மன்னர்களை ‘கோ’ ‘உடையார்’ ‘தேவர்’ என்ற அடைமொழிப் பெயரால் கௌரவமாக அழைக்கும் சம்பிரதாயம் அக்காலத்தில் தமிழக சோழ மண்டலங்களில் வழக்கமாக இருந்தது. அவ்வொழுங்கின் படியே சோழ இலங்கேஸ்வரனும்   அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதனைச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.

அடுத்ததாக இக்கூட்டம் இடம்பெற்ற காலம் அவ்வரசனின் பத்தாவது ஆட்சியாண்டுக்குரியது என்பதனையும் அது ஒரு மாசிமாத செவ்வாய்க்கிழமை இரவு என்பதனையும்  இச்சாசனம் குறித்து நிற்கிறது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர்களான இந்திரபாலா, குணசிங்கம் போன்றோர் சாசனம் விபரிக்கின்ற நிகழ்ச்சி கி.பி.1033 இல் அல்லது கி.பி.1047 இல் நடைபெறிறிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கின்றனர். எனவே முதலாம் இராஜேந்திர சோழனின் மகன் இலங்கையில் சிறிதுகாலம் ஆட்சி புரிந்துள்ளான் என்பது உறுதியாகின்றது. முதலாம் சோழ இலங்கேஸ்வரன் தொடர்புடைய கந்தளாய் மானாங்கேணிச் சாசனங்கள் இரண்டும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அரசன் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து  இக்கூட்டத்தினைக் கூட்டிய மகாசபையாளரான பெருங்குறிப் பெருமக்கள் கந்தளாய்க் குளத்திற்கு உரித்தான வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங் கண்ணாறு என்பன தொடர்புடைய தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டதைக் குறிப்பிடுகிறது. எனவே சோழ இலங்கேஸ்வரன் காலத்தில் கந்தளாயில் நீர்ப்பாசன வசதியுள்ள வயல் நிலங்களும் கந்தளாய்க் குளமும் வாய்க்கால்களும் அதனை ஆதாரமாகக் கொண்ட சீரான நீர்ப்பாசன முறையும் இருந்தன என்பதற்குச் சான்றாக இச்சாசனம் விளங்குகிறது.


இச்சாசனத்தில் வரும் ‘நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி’ என்ற தொடர் கந்தளாயில் அமைந்திருந்த அம்மன் கோயிலைச் சேர்ந்த அந்தணன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி அறவிடும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. எனவே கந்தளாய் எல்லைக்குள் ஈஸ்வரம் (சிவன் கோயில்) ஒன்றும் அம்மன் கோயில் ஒன்றும் அமைந்திருந்ததை இச்சாசனம் ஆதாரப்படுத்துகிறது.

பதினோராம் நூற்றாண்டில் அமைந்திருந்த சமய சமூக நிறுவனங்கள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் இச்சாசனம் திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரனின் ஆட்சிக்காலத்தினை ஆதாரப்படுத்திநிற்கிறது.
த.ஜீவராஜ்
- முற்றும் -

ஆதாரங்கள்

1.  சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி  2012
2. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
3. வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003
4. தமிழ் விக்கிப்பீடியா
5. திருகோணமலையில் இரு சோழர்கால கல்வெட்டுக்கள் - பேராசிரியர் செ.குணசிங்கம் - வீரகேசரி,ஈழநாடு, தினகரன் - 1972


மேலும் வாசிக்க

திருகோணமலையிற் சோழர்கள்  
திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள் 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

 1. Dear Dr
  I always think about you and your activities. You are really very good work to bring about our heritage. I do not know to type these things in Tamil as comments. My humble request is to bring these in the form of documentation - book. Please tell appa to write these. Thanks a lot for the tremendous task.
  Kernipiththan

  ReplyDelete

 2. இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் ஈழத் தமிழரின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவுமென நம்புகிறேன்.

  ReplyDelete

 3. இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் ஈழத் தமிழரின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவுமென நம்புகிறேன்.

  ReplyDelete
 4. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

  ReplyDelete