Tuesday, February 11, 2014

விருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

இயற்கை வளம் செறிந்த தம்பலகாமம் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘மாக்கைத்திடல்’ வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புடைய வாழ்விடமாகும். தம்பலகாமத்தின் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் ‘குடமுருட்டி ஆறு’இத்திடலுக்கு அருகாண்மையில் ஓடுகிறது. பழமையில் இத்திடலில் ‘திருமால் கை’ என்ற விஷ்ணு கோயில் இருந்ததாகவும் இதன்காரணமாக இத்திடல் ‘திருமால்கை’ என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திருமால்கை’யே மருவி ‘மாக்கைத்திடலானது’ எனவும் விசயமறிந்த பெரியோர் கூறுவர். இக்கோயிலின் அழிபாட்டிடங்கள் மண்ணில் புதையுண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மீன்பாடும் தேனாடாகிய மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த தங்கராசா ஜீவரத்தினம் அவர்களுக்கும் அவரது தர்மபத்தினி தம்பலகாமம் மாக்கைத்திடலைச் சேர்ந்த திருமதி ஜீவரத்தினம் சாந்தமணிதேவி அவர்களுக்கும் எட்டுப்பிள்ளைகள். ஆண்கள் இருவர். பெண்கள் அறுவர். இவர்களில் ஒருவர்தான் எமது மதிப்பிற்குரிய நாடக நாட்டுக் கூத்துக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி அவர்கள்.

தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியிலும் பின்னர் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயம், மெதடிஸ்த பெண்கள் கல்லூரியிலும் கற்று கல்வி பொது சாதாரண தரத்தில் தேறினார்.

திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

இவரது முதல் நாடகம் 1982இல் முதலாம் இடம் பிடித்தது. ‘எனது அம்மா’ என்ற தலைப்பில் அமைந்த இந்நாடகத்தில் நடித்த இவருக்கு சான்றிதழும் கிடைத்தது. தொடர்ந்து 1983இல் ‘சுமைதாங்கி’ யிலும் 2002இல் கொழும்பில் இடம்பெற்ற சிங்கள நாடக விழாவிலும் , 2010இல் திருகோணமலை சாகித்தியவிழாவில் ‘நறுமணம் எங்கே?’ என்ற நாடகத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.

2011இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட கிழக்கு எழுவானில் கலைவிழாவில் ‘நடந்தது என்ன?’ என்ற நாடகத்தில் ‘தாய்’ வேடத்தில் நடித்தார்.இந்நாடகம் மாவட்ட மாகாண மட்டங்களில் முதல் இடத்தை தட்டிக்கொண்டது. இதில் சிறந்த நடிகை என்ற விருதும் இவருக்குக் கிடைத்தது.

திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

2012 இல் கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டியில் இவர் நடித்த ‘மறுவாழ்வு’ என்னும் நாடகமும் கலந்து கொண்டது. விதவைகளுக்கான மறுவாழ்வு என்ற கருப்பொருளில் இந்நாடகம் அமைந்திருந்தது. இதில் இவர் விதவையாக நடித்தார்.

2013 இல் திருகோணமலையில் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு நடத்திய இசைநாடகப் போட்டியில் இவர் நடித்த ‘ஹரிச்சந்திரா மயான காண்டம்’ திருகோணமலையிலும் பின்னர் மட்டக்களப்பில் மேடையேற்றப்பட்டு மாகாண மட்டத்திலும் முதற்பரிசைப் பெற்றுக்கொண்டது. இதில் இவர் ‘வேதியராக’ நடித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக 2008 இல் மனித உரிமை தினத்திற்காக நடத்தப்பட்ட போட்டியில் இவர் தயாரித்தளித்த ‘வஞ்சகக் கடத்தல்' என்னும் குறுந்திரைப்படம் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 1991 இல் குச்சைவெளி புடவைக்கட்டு கிராமசேவகராக முதல் நியமனம் பெற்ற இவர் இன்று தம்பலகாமம் பாலம்போட்டாறு புதுக்குடியிருப்பு கிராமசேவகராகக் கடமையாற்றுகிறார்.

வேலாயுதம் தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment