Wednesday, October 29, 2008

எல்லாமே முடிந்துபோயிருந்தது…..

எல்லாமே
முடிந்து போயிருந்தது

ஊர்த்தொடக்கமே
உதிரத்தால் உறைந்திருக்க
வாழ்விழந்த மக்களது
மரண ஓலம்
வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது

நீண்டு வளர்ந்த எத்தனையோ
தென்னைகள் ஏற்றிருந்தன
‘செல்’ விழுப்புண்களை - இருந்து
இலக்கின்றி விழுந்தவையெல்லாம்
எதையாவது அழித்திருந்தன.

‘மாலா’ அக்காவின்
மண்வீட்டுக் கூரைபிளந்து
கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’
தரையில் சிதறியிருந்தது
அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல

கண்ணன் மாமா
விமலன் அத்தான்
பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன்
இன்னும் எத்தனையோ
இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே
எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்
பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்

சசி அக்கா
குண்டு மாமி
குஞ்சி மகள் என்று
நீண்ட வரிசைக்கப்பால்
என் கிராமமும் சேர்ந்து
கற்பிளந்து போயிருந்தது.

பாதைகளில் ‘ரயர்’ குவியல்
வீடுகளில் இரத்தக்கறைகள்
வயல்வெளியில் பிணக்குவியல்
இன்னும் எல்லாம்
அப்படியே இருக்கிறது.

சிற்றூர் பிரளயத்தில்
நாங்கள் மட்டுமல்ல
கோணேசரும் தப்பவில்லை
கோயிலெல்லாம் குண்டுதுளைத்து
குற்றுயிராய் இருந்தது

எங்கோ ஏதோவோர்
சண்டை நடந்ததற்காய்
இங்குநாங்கள்
சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


த.ஜீவராஜ்

Monday, October 27, 2008

தமிழ்மணம் நட்சத்திரவாரம்



அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்மந்தமான ) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே என சின்னதாய் ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் கிடப்பில் போட்டிருந்தது எனது வலைப்பூக்கான முயற்சிகளை. பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.

சற்றும் மனந்தளராத விக்கரமாகித்தனாக இணைய வேதாளத்துடனான எனது வலையேற்றும் முயற்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு மீள ஆரம்பிக்கப்பட்டது.அதிஸ்டவசமாக இலவச வலைத்தளம் உருவாக்குவதற்கான முயற்சியில் கூகிளில் தேடியலைந்துகொண்டிருந்தபோது  ‘தமிழில் எழுதலாம் வலையில் பரப்பலாம் வாருங்கள்’ என்ற அழைப்பு என்னையும் உள்ளழைத்துக்கொண்டது. பிறகென்ன இருவாரங்கள் தட்டுத்தடுமாறி முட்டி மோதி,பல நாட்கள் உறங்காமலே விடிய, ஒருவாறு 13.08.2008 அன்று எனது முதல் பதிவினை வெற்றிகரமாக வலையேற்றினேன்.

என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?

வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.

மீண்டுமொருமுறை தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

த.ஜீவராஜ்

Tuesday, October 14, 2008

வலி வந்தவனுக்குத்தான் தெரியும்



முறிந்து போனதற்கு
முற்றுப்புள்ளி வைப்பதுதானே
முறையென்றாய்
எனக்கென்னவோ அது
முட்டாள்த்தனமாய்ப் படுகிறது

முடிந்ததும் மூடிவைப்பதற்கு – என்
காதலொன்றும்
கற்றல்களுக்கு மட்டுமான
புத்தகமல்ல அகராதி
அடிக்கடி திறந்து – என்
அகவாழ்வின் அர்த்தங்களைப்
புரிந்துகொள்ளுமிடம்

அது என்
கனவுகளின் திறவுகோல்
கவிதைகளின் உற்பத்தித்தானம்
என் வாழ்வில்
விரல்விட்டெண்ணக்கூடியதாய்
விடிந்திருந்த பொழுதுகள்

அது
அடுத்தவர்களால்
புரிந்துகொள்ளமுடியாத
சோகங்களின் தொகுப்பு
ஆன்மாவின்
அழுகையால் மட்டுமே
ஆறுதல்படுத்தக் கூடிய
வாழ்வியல் துன்பம்

தொலைந்து போனதற்காய்
துயர்கொள்ளல்
உடைந்துபோனதற்காய்
உருக்குலைதல் எல்லாம் - உலக
விலைகொள் பொருட்களுக்கு
மட்டுமான விதிகளல்ல
விலைபேசமுடியாத
இதயத்தின் தொலைவுகளுக்கும்
இதுபொருந்தும்

மன்னித்துக்கொள்
என்னால்
மரணத்திலும் - அவளை
மறக்கமுடியாது
உனக்குப்
புதிராக இருக்கும்

வலி
வந்தவனுக்குத்தான் தெரியும்
வார்த்தைகளால்
புரியவைக்கலாம் என்பது
பொய்
 த.ஜீவராஜ்

Saturday, October 11, 2008

இது இறுதி அழைப்பு


உன்நினைவலைகள்
ஒன்றோடொன்று
உரசிக்கொண்டதில்
என் நெஞ்சுக்குள்
தீப்பிடித்துக்கொண்டது

Thursday, October 09, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008,திருகோணமலை,இலங்கை.

 Thampalakamam
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008, திருகோணமலை, இலங்கை. தொடர்பான புகைப்படத் தொகுப்பு ஜீவரத்தினம் தங்கராசா அவர்களின் உதவியுடன் தம்பை நகர் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளது.
http://thampainakar.blogspot.com/

Tuesday, October 07, 2008

நினைவுகளில் போராட்டம்...



ஞாயிற்றுக் கிழமை
மழைபொழியும் மாதம்
ஊசிகுத்தும் குளிர்
உடம்பை மூடிய
தடித்த போர்வை
இறுக்கி மூடிய
என்னறைக் கதவுகள்
கண்ணுக்குள்
உறக்கமும், விழிப்பும்
நெஞ்சுக்குள்
இன்றைக்கு ஒதுக்கி வைத்த
நேற்றைய வேலைகள்
நினைவுகளில் போராட்டம்
எழும்புவதா ?
இன்னும் கொஞ்சம்
படுப்பதா ?
 த.ஜீவராஜ்


Monday, October 06, 2008

வாங்க பகிரலாம்

மருத்துவம்
வணக்கம்,
நலமா ?
தலைப்பில் சொன்னது போல் இது பகிரலுக்கான தளம். எனவே கேள்விகளோடு ஆரம்பிக்கிறேன்.

கணிதம் கற்று உயர்வாய்…



கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

கணக்கு வராதென்று
கவலைப்பட்ட சிலபேர்
கணக்கில் மேதையாக
வந்த கதைகள் உண்டு

தெய்வம் நம்முன் தோன்றி
செல்வம் தருவதில்லை
முயற்சி என்றும் வாழ்வில்
இகழ்ச்சி அடைவதில்லை

கடுமையான உழைப்பில் நீ
கவனம் செலுத்த வேண்டும்
பெருமை உனக்கு வந்து
பேரும் புகழும் சேரும்

மனத்தைக் கணக்கில் வைத்து
மகிழ்ச்சியோடு கற்றால்
வருமே உனக்குக் கணக்கு
வாழ்வும் வளமும் பெறலாம்

இதயம் எதிலும் தோய்ந்தால்
ஏற்றமுண்டு மகளே
உதயமாகும் வாழ்வு இந்த
உண்மை புரிந்து பாடு

சாதனைகள் படைத்தோர் இந்தச்
சங்கதிகள் அறிவார் நல்ல
போதனைகள் கேளு இதைப்
புரிந்து கொண்டு பாடு

முயற்சி என்றும் வாழ்வில்
முடங்கிப் போவதில்லை
உயர்ச்சியுண்டு மகனே நீ
உணர்ந்து வெற்றி கொள்ளு

எண்ணும், எழுத்தும் வாழ்வை
ஏற்றங்காணச் செய்யும்
கண்ணின் மணியே நீயும்
கணிதம் கற்று உயர்வாய்.

கலாபூசணம் வே.தங்கராசா


Saturday, October 04, 2008

BLADDY WAR ..


வலை (சினி) வாசகர்களுக்கு என் வணக்கங்கள்....

நண்பர் (தோழர் என்றழைக்கப்போய் ஏதும் பிரச்சனையில் மாட்டாமலிருக்க) விஷ்ணு நம்மையும் இந்த தொடர்விளையாட்டில் மாட்டிவிட கொஞ்சநேரம் மோட்டைப் பார்த்துக்கொண்டு உக்காரவேண்டியதாய்ப் போயிற்று. நமக்கெல்லாம் கேள்வி கேட்டுத்தானே பழக்கம். இருந்தும் மனதில் பட்டதை பதிலாக்கி இருக்கிறேன் கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்.

சினிமா என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது BLADDY WAR என்ற வாசகம்தான் அதனால் 8வது கேள்வி முதலாவதாக.............

###8. தமிழ் தவிர வேறு இந்திய உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய ஆங்கில சினிமாக்கள் பார்ப்பதுண்டு. மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழிப்படங்கள் நேரங்கிடைத்தால் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த பொஸ்னியப் படம் ஒன்றில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஊனமுற்ற குழந்தை ஒரு காப்பகத்திலும் தந்தை சிறைப்பிடிக்கப்பட்டும் போக, இருவரும் மீள இணைவதற்கான போராட்டமே திரைக்கதை. படத்தினிடையில் அந்தப் பெண்குழந்தை சொல்வதாக வரும் வசனம் ‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...

###1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

கேட்டுப்பார்த்ததில் இரண்டுவயதில் என்றார்கள். பார்த்த படம் ‘நிறம் மாறாப் பூக்கள்’ யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில். நானெங்கே பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் படம் பார்க்க திரை தவிர்த்து மிச்ச எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அழுது அடம்பிடிக்காமல் சமர்த்துப் பையனாய் இருந்தேனாம். இன்னும் அந்தப் படம் நான் பார்க்கவில்லை. இருந்தும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம் (என்னதான் இருந்தாலும் முதல்ப்படம் அல்லவா?)
நினைவு தெரிந்து பார்த்த முதல்ப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான வியட்நாம் யுத்தம் சம்பந்தமான படம். பெயர் ஞாபகமில்லை.
என்ன உணர்ந்தீர்கள்?உணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..

###2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
மொழி, கதை ஊகிக்கக்கூடியது என்றாலும் கவிதைபோல இருந்தது படம்.

###3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது? எங்கே? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன் ,வீட்டில் , #@$%^$#&^%*&$^%#

###4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நாயகன்,
மணிரெத்தினம் அவர்கள் கதைசொல்லிய விதம் வேலைக்குப்போக வெளிக்கிட்டாலும் ஒருமுறை உட்கார்ந்து பார்க்கச் சொல்லும். தவிர்த்து சலங்கை ஒலி, அன்பே சிவம், மௌனராகம், குணா, அழகி, இம்சையரசன் 23ம் புலிகேசி,சிறைச்சாலை, தவமாய்த் தவமிருந்து, பாலச்சந்தர் அவர்கள் சினிமா .........என்று நீண்டுகொண்டு போகிறது வரிசை.

###5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அரசியலா............. வேணாம் விட்டிடுங்க.

###5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
‘என் கண்மணி இளமாங்கனி எனைப்பார்த்ததும் …’ ரொம்பப் பிடிச்ச பாட்டு. வெளிவந்தது 1978ல் என்கிறார்கள். ஆச்சரியப்படவைக்கிறது ஒலிப்பதிவு . பழைய படங்களில் வரும் பிரமாண்டக் காட்சிகளும் பிரமிக்கவைக்கும்.

###6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பத்திரிகை வாசிக்கையில் சினிமாச் செய்திகளையும் வாசிப்பதுண்டு. விரும்பிப் படிப்பது வேற்றுமொழி (ஈரானிய, ஆங்கில) படவிமர்சனங்களை (ஒருவேளை பார்க்க கிடைக்காமலேயே போகுமல்லவா?)

###7.தமிழ்ச்சினிமா இசை?
வேறுயார் இசைஞானிதான். ஜென்சியின் பாட்டு ரொம்பப்பிடிக்கும். இந்தி, ஆங்கில அல்பங்களும் விரும்பிக் கேட்பதுண்டு.

###9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)

###10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய விமர்சனங்களுக்கப்பால் நல்ல படங்களும் வரத்தான் செய்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள். புதுமுயற்சிகள் செய்கிறார்கள் இருந்தும் சில வட்டங்கள் தாண்டி வெளிவர மறுக்கிறது தமிழ் சினிமா.

அண்மையில் ஒரு யப்பானிய படம் பார்த்தேன் இரண்டாம் உலப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் வனவிலங்குக் காப்பக விலங்குகளைச் சுட்டுக்கொண்றுவிட உத்தரவிடுகிறது அரசு. குறிப்பிட்ட சரணாலயத்தில் உள்ள தாய் யானை இந்தக் கட்டளைக்கமைய சுடப்பட அதன் குட்டியைக்காப்பாற்ற யானைப்பாகனும் சில குழந்தைகளும் மேற்கொள்ளும் போராட்டமாக அமைந்திருக்கிறது திரைக்கதை. சலிப்பில்லாமல் இறுதிவரை ஒன்றித்துப் பார்க்க வைக்கிறது படம். நம்மவர்கள் வட்டந்தாண்டி வெளிவரவேண்டும். வரவேற்கக் காத்திருக்கிறோம்.

###11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள் செய்திகள் எதுவுமே பத்திரிகைகள் தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நிகழ்வு எனக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என நினைக்கிறேன். பார்க்கவேண்டியவையென குறித்துவைத்த படங்கள் நிறைய இருக்கிறது.சினிமா வாழ்வின் ஒரு அங்கம் அது வாழ்க்கையல்ல...தமிழர்களுக்கு என்ன ஆகும் ??????

இது ஒரு தொடர் பதிவென்று நண்பர் சொல்லி இருந்தார் இருந்தும், வலைக்குப்புதியவன் என்பதாலும் எனக்குத் தெரிந்தவர்கள் ஏலவே இத்தொடரில் இணைந்திருப்பதாலும் எனது தொடரை இத்துடன் முடிக்கிறேன்.

நன்றி விஷ்ணு, சினிமா தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு.....



த.ஜீவராஜ்

Friday, October 03, 2008

ஆடக சௌந்தரி

ஆடக சௌந்தரி

வரராமதேவன் என்ற சோழ மன்னன் திருக்கோணமலையிலுள்ள சுவாமி மலையின் தவப் பெருமையைப் புராண வாயிலாக அறிந்து கடல் கடந்து திருமலை வந்து சுவாமி மலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைக்கும் திருப்பணி வேலைகளைச் செய்து வந்தான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.