Monday, May 15, 2017

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி - புகைப்படங்கள்


மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால்  இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை

1. ஆகம வழிபாடு  (  பெரும்தெய்வ வழிபாடு )- கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை

2.  கிராமிய வழிபாடு (  சிறுதெய்வ வழிபாடு ) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.


சிறுவயது முதல் இவ்விரு வழிபாட்டு முறைகளையும் காணும் பாக்கியம் பெற்றவர்களில் ஒருவனாக இருந்து வருகிறேன். பல்வேறு காரணங்களால் கிராமிய வழிபாட்டு முறைகளே மனத்துக்கு நெருக்கமானதாக உணர்கிறேன்.

சிறுதெய்வ வழிபாடுகளின் முக்கிய பண்பு அவை பிராமணரால் பூசை பண்ணப்படாதவை என்பதாகும். "கட்டாடியார்' என அழைக்கப்படும் பூசகர்களால் இவ்வழிபாடு நெறிப்படுத்தப்படுகிறது. இங்கு கட்டாடியார்' பல்வேறு சாதியினரைச் சேர்ந்தவராக இருப்பார்.

சிறு தெய்வங்களுக்குரிய கிரியை முறைகள் வேறு. அவை சடங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்சடங்கு ஆகமம் சாராத பத்ததி வழிபாட்டு முறையில் அமையப்பெற்றவை. நாள்தோறும் ஆறு காலப் பூசை அவற்றிற்கு நடைபெறாது. அவற்றிற்குரிய விழாக்களும், பூசை முறைகளும் பெருந்தெய்வ முறைகளிலிருந்தும் வேறானவை.

விமானம்,கோபுரம்,உள்மண்டபம்,வெளிமண்டபம் போன்ற ஆலய அமைப்புக்களோ வேத, ஆகம நெறி முறைகளுக்கு அமைந்த பூசைமுறைகளோ சிறுதெய்வங்களுக்கு இல்லை. ஓரிரு நாட்கள் முதல் மாதக்கணக்கில் வழிபாடு நடத்தும் முறையைச் சிறுதெய்வ வணங்க முறையிலேதான் காண முடியும்.

இந்த வகையில் கந்தளாய்க் குளத்து மகா வேள்வி மழை வேண்டிப் பிராத்தனை செய்யும் கிராமிய வழிபாட்டு முறையின் கீழ் விவசாயிகளையும் , மந்தை வளர்ப்பாளர்களையும் , ஊர்ப் பொதுமக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இருக்கிறது.

இச்சடங்கு முறை பல்வேறுபட்ட கிராமிய வழிபாட்டு முறைகளின் ஒருங்கிணைப்பாகவும் காணப்படுகிறது. வதனமார் வழிபாடு, திருக்குளத்து காவல்தெய்வ வழிபாடு , நாராயண வழிபாடு என்பனவற்றை இது உள்ளடக்கி இருக்கிறது.


கந்தளாய் குளக்கட்டின் பிரதான கதவுக்கு அருகில் உள்ள சோலையில் 61 ஆண்டுகளின் பின்னர் இவ்வேள்வி நடைபெறுகின்றது. இறுதியாக 1951,1956 இல் கந்தளாய்க் குளத்து மகா வேள்வி நடந்ததை நம் முன்னோர்கள் அங்குள்ள கற்பாறையில் கல்வெட்டுக்களாக பொறித்திருக்கின்றார்கள்.

திருக்குள சடங்கை நடாத்தும் கட்டாடியார் என்றழைக்கப்படும் பூசாரி சம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். குளக்கரையில் கிடைத்த கல்வெட்டுகளின் படி 1951 இல் ந.கணபதிப்பிள்ளை கட்டாடி அவர்களும் , 1956 இல் காத்தமுத்து சித்திரவேல்  கட்டாடி அவர்களும் இச்சடங்கினை நடத்தி இருக்கிறார்கள். சித்திரவேல் பூசாரியின் மருமகனான நடராசா பூலோகராசா இம்முறை வேள்வியைத் தலைமையேற்று நடாத்திக்கொண்டுருக்கிறார்.


மனதுக்கு பிடித்தமான குளக்கரையும், மலையும், காடும் சங்கமிக்கும் பிரதேசத்தில் கந்தளாய்க் குளத்து மகா வேள்வி நடந்துகொண்டிருக்கிறது.

“அன்ன அரன் பூசைவிதி அபிஸேகம் விழாமுதல் அழகாய்ச் செய்தால்
மின்னுநிறை விளக்கேற்றிக் கிராமதேவதை பூசை விளங்கச் செய்தால்
இன்னலின்றி மக்களெல்லாம் மிகு நிதி சந்ததிகளுடன் இனிதுவாழ்வார்
சொன்ன இந்த முறை தவறில் விளைவழிந்து துன்பமுற்றுச் சோருமாக்கள்.”

என்று கோணேசர் கல்வெட்டுச் சொல்லும் கிராமதேவதை பூசைகளில் ஒன்றான கந்தளாய்க் குளத்து மகா வேள்வியினை வாழ்வின் முதல் முறையாக காணும் சந்தர்ப்பம் அண்மையில் வாய்த்திருந்தது.குளக்கோட்டு மன்னனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இக்கந்தளாய்க் குளத்து மகா வேள்வி மிக நீண்ட இடைவெளியின் பின்னால் இடம்பெறுவதனால் அச்சடங்கை முறையாக ஆவணப்படுதுவதற்க்கு தரவுகளைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.

மிக அரிதாகக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பலரது கூட்டு முயற்ச்சியால் முழுமையாக இதனை ஆவணப்படுத்த முடிந்தால் அதுவே எமது சமுகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய  வெற்றியாக இருக்கும்.

கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50861 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்,  8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர். நீண்டகாலம் இடம்பெற்றுவந்த திட்டமிட்ட குடியேற்றங்களால் சுமார் 3.4 வீதம் (1748 / 50961) தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக கந்தளாய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.comஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. படங்கள் அருமை

    ReplyDelete
  2. அருமையானதொரு பதிவு. kalveddukal.com வலைத்தளத்திலும் சில விடயங்களை வெளியிட்டிருக்கிறேன்.

    ReplyDelete