Wednesday, March 26, 2014

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - புகைப்படங்கள்


இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் எதிர்வரும் 04.04.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள புத்தக வெளியீட்டில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2  வெளியிடப்பட இருப்பதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.

பேராசிரியர் சி.பத்மநாதன்

அண்மையில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தபோது மேற்கூறிய தகவலினைத் தெரிவித்தார். அத்துடன் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2 என்னும் இந்நூல் கி.பி 1300 முதல் கி.பி 1900 வரை இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்ச் சாசனங்கள் பற்றிய விபரங்களையும், விளக்கங்களையும் தன்னகத்தே விரிவாகக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார். இதற்கு முன்னுள்ள காலத்துக் கல்வெட்டுக்கள் பற்றி இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 1 இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2 இல் திருக்கேதீஸ்வரம் பற்றிய சாசனங்கள், பொலநறுவைச் சிவாலயம் பற்றிய கல்வெட்டுக்கள், புத்தளத்தில் உள்ள முதலாம் இராஜேந்திரன் காலத்து ஐந்நூற்றுவர் வணிகர்களின் சாசனம் என்பன புதிய ஆராச்சி முடிபுகளுக்கு அமைய விபரிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கையில் முனேஸ்வரம் முதல் தேநுவரை கோவில் வரையிலான பல கல்வெட்டுக்கள் இரண்டு விசாலமான பகுதிகளில் வாசகங்களின் விளக்கங்களோடு அமைந்துள்ளன.

யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள கல்வெட்டுக்கள் தனித்தனியான பகுதிகாக இடம்பெற்றுள்ளன. திருகோணமலையிலேயே பெரும்தொகையான தமிழ்ச் சாசனங்கள் இதுவரை கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 1 இல் இடம்பெற்று விட்டன. ஆயினும் மிக முக்கியமான ஐந்து கல்வெட்டுக்கள் இத்தொகுதியில் வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2

மேற்கூறிய ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு புதிதாக அடையாளம் காணப்பட்டவையாகும். அவற்றில் ஒன்று திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசாமி கோவில் கற்தூண்களில் காணப்படுகின்ற நான்கடிச் செய்யுள் வடிவ சாசனமாகும். அவை முறையாகப் படியெடுக்கப்பட்டு அதன் வாசகங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

( கண்டுபிடிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் 700 வருடப் பழமையான அவ்வரிய பொக்கிசங்கள் பலர் வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரை உரியமுறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடையமாகும்.)

திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசாமி கோவில்
திருகோணமலை தமிழ் கல்வெட்டுக்கள்
திருகோணமலை தமிழ் கல்வெட்டுக்கள்
திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசாமி கோவிலில் நிலத்தில் கிடக்கும் கற்தூண் சாசனங்கள்

13 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டியர் அடைந்த வெற்றியின் சின்னமாக உருவாக்கப்பட்ட இச்சாசனம் வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் 700 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றினை உடையது என்பதனை ஆதாரப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அடுத்த சாசனம் திருமங்கலாய்க் கோவிலுக்குரிய வெண்கல மணியொன்றிலே காணப்படும் வாசகமாகும்.திருமங்கலாய் பற்றிக்கிடைக்கும் ஒரேஒரு சாசனமான இது இந்நூலில் ஆய்வுபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

திருகோணமலைக் கோட்டை வாசலில் காணப்படும் கல்வெட்டு புதிதாக ஆராயப்பட்டு ஆது 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிலங்கை வன்னியர்களால் கண்டி அரசன் சார்பில் ஒரு வெற்றித்தூணாக நிலைநாட்டப்பட்டதென்ற கருத்து இந்நூலில் முன்வைக்கப்படுகிறது.

கங்குவேலிச் சாசனம் இவையாவற்றிலும் சிறப்பு மிக்கதாகும். அது 14 ஆம் நூற்றாண்டில் திருமலை வன்னியனார் திருகோணமலைப் பிராந்தியத்தில் சுதந்திரமாக ஆட்சி புரிந்தமையை ஆதாரப்படுத்தும் ஆவணமாக விளங்குவதை இந்நூல் விபரிக்கிறது. அத்துடன் கோணேசர் கல்வெட்டிலுள்ள சில முக்கியமான அம்சங்களையும் இச்சாசனம் உறுதி செய்கிறது. இவற்றோடு வெருகல் சித்திர வேலாயுத சுவாமிக் கோவில் கல்வெட்டும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 1 நூலைப்போலவே இந்நூலும் இலங்கைத் தமிழர்களின் மொழி, அரசியல், சமூக ,பண்பாட்டு அம்சங்களை விளக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதனை அவருடனான உரையாடல் மூலம் அறிய முடிந்தது.

அண்மையில் தனது 74 வது ( மார்ச் 20, 1940 ) அகவையை நிறைவு செய்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களுடனா உற்சாகமான கலந்துரையாடலின் முடிவில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2  நூலினைப்பார்க்கும் ஆவல் மிகுந்திருந்தது.

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2
இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2

மிகுந்த சுறுசுறுப்புடன் தொடர்ந்து இயங்கிவரும் அவரால் பல்கலைக்கழகம் சார்ந்த மிக உயரிய பதவி ஒன்று விரைவில் சிறப்பிக்கப்பட உள்ளதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடையமாகும். சிறியநேர இடைவெளியில் அவரைச் சந்திக்கக் கிடைத்ததும், அவருடனான உரையாடல்களும் வாழ்வில் மறுக்க முடியாத அனுபவமாகும்.

தமிழ்ச் சாசனங்கள் தமிழ்மொழி வழக்கின் அடையாளங்கள் என்பதோடு அவை தமிழர் சமுதாயத்தின் பண்பாடு, பாரம்பரியம் என்பன தொடர்பான சின்னங்களுமாகும். எனவே அவற்றினைப் ஆராய்ந்து அறிவதும், பேணிப் பாதுகாப்பதும் நம்மனைவரதும் கடமையாகும்.

நட்புடன் ஜீவன்.

..................................................................................................................................................................

பேராசிரியர் சி.பத்மநாதன் 

பேராசிரியர் சி.பத்மநாதன்


பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் , கல்விமானும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், கல்விசார் மதியுரைஞராகவும் பணிபுரிகின்றார். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் இலண்டன் பல்லைக்கழகத்தில் தமது PhD  பட்டத்தைப் பெற்றார்.

வகித்த உயர்பதவிகள்
வரலாற்றுப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: 1986-1994
தலைவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இலங்கை: 1994-1999
வரலாற்றுப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்: 1999-2006

எழுதிய நூல்கள்
The Kingdom of Jaffna , Part 1, Colombo, 1978, 310 pages.
வன்னியர், யாழ்ப்பாணம் 1970, 110 பக்.
The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tamil), Kumaran Book House, Colombo- Chennai, 2001, 404 pages.
இலங்கையில் இந்து கலாசாரம், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2000, 467 பக்.
இலங்கையில்வன்னியர், குமரன் புத்தக நிலையம், கொழும்பு, 2003.
ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை, 2004
இலங்கையில் இந்து சமயம், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2004, 476 பக்.
இலங்கையில் இந்து ஆலயங்கள்,குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2006, 470 பக்
இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (Tamil Inscriptions of Sri Lanka), இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006.
இந்துக்கோயில்கள் கட்டடங்களும் சிற்பங்களும்.

இவரது தொகுப்பிப்பும், செவ்விதாக்கமும்
Temples of Siva in Sri Lanka (Chief Editor), Colombo, Chinmaya Mission of Sri Lanka, 1999
History and Archeology of Sri Lanka Volume I, Reflections on a Heritage. Historical Scholarship on Premodern Sri Lanka Part I (640 pages) Eds. R.A.L.H Gunawardana, S. Pathmanathan, M. Rohanandheera, Colombo: Central Cultural Fund, Ministry of Cultural and Religious affairs, 2000.
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- II, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1992.
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- III, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1996
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IV, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1998
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- V, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2001
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VI, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2003
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- I, திருத்திய பதிப்பு,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2005
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,, 2005
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VIII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IX, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2008
இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- X, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010
இலங்கையில் இந்து ஆலயங்கள், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,1993
இந்து கலாசாரம் பாகம்- I,– Architecture and Sculpture: ,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2002
இந்து கலாசாரம் பாகம்- II, – Dances and Paintings: இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2003
இந்து ஆலயங்கள்: Architecture and Sculpture, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010

நன்றி - http://ta.wikipedia.org/

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. பகுதி 2 நூலை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா ஐயா

    ReplyDelete