Wednesday, February 01, 2023

பெரிய வதனமார் (ஆதினி பகுதி 5)


எல்லைக்கல் நாட்டப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. காலை வேளையில் ஊரின் நடுப்பகுதியிலிருந்து கேட்ட பறையொலி அனைவரையும் ஒன்று கூடச்செய்தது. ஆதினியும், சகோதரர்களும் தந்தையோடு ஒட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்து நின்றார்கள். பறையறிவிப்பவன் கூட்டம் கணிசமாக சேர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு ஓலைச்சுவடியில் இருந்ததை உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான். நாட்டில் நிலவும் வரட்சியைப்போக்க மழைவேண்டி வழிபடும் கந்தளாய்க் குளத்து மகாவேள்வியை பங்குனி மாதத்தில் நடத்த திருக்கோணேச்சர தொழும்பாளர்களும், கந்தளாய் பெருங்குறிப் பெருமக்களும் தீர்மானித்திருப்பதால் அதற்குரிய அனைத்து ஆயத்தங்களையும்  மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பு சொல்லியது.

இடையர்கல்லில் அறிவிப்பு முடிந்ததைத் தொடர்ந்து இடைச்சேரியின் ஏனைய ஊர்களை நோக்கி பறை அறிவிப்பவன் நகர்ந்து சென்றான். கேசவன் இடையர்கல் இளைஞர்களோடு கதைத்துக் கொண்டிருந்தான். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டுவந்து தனது தாயிடம் ஒப்படைத்துவிட்டு நேராக அறிவாட்டியின் வீட்டை நோக்கி விரைந்தாள் ஆதினி. குடிசையின் திண்ணையில் பனையோலையாலான பெட்டியொன்றினை பின்னிக்கொண்டிருந்தாள் பாட்டி.

என்ன விசேஷம் ஏதோ பறை அறிவிக்கிறார்கள் ?

கந்தளாய்க்குள வேள்வி நடத்தப் போறாங்களாம்.

ம்... ம்.. கடைசியா ஆறு வருசத்துக்கு முன்னால நடந்தது என்று பாட்டி சொல்லும்போதே அவர் முகத்தில் சில மகிழ்ச்சி ரேகைகள் மின்னி மறைந்தன.

சதுர்வேதி மங்கலத்தில வருசத்துக்கு ஆறேழு பெரிய விழாக்கள் நடக்கும். ஆனா நம்மட சேரிப்புறச் சனங்கள் கொண்டாடிற பெரிய விழா இதுவொன்றுதான் என்றாள் பாட்டி.

மழை வேண்டி வைக்கிற பூசையா பாட்டி இது ?

மழை வேண்டி மட்டுமில்லம்மா, கந்தளாய் குளம் நிரம்பி அணை உடைக்கிற மாதிரி இருந்தா சிவப்பு பட்டு எடுத்துவந்து வேள்வி செய்வாங்க. அது மழையை நிப்பாட்டச் சொல்லி செய்யிற பூசை. மழை வேணுமிண்டா பச்சைப் பட்டு கட்டுவாங்க .

பட்டு எங்கிருந்து எடுத்து வருவாங்க பாட்டி ?

கோணேச்சரத்தில இருந்துதான். தொழும்பாளர்கள் கொண்டுவருவாங்க.

யார் பூசை வைப்பா?

கட்டாடிதான். சம்பூர்ல இருந்து கூட்டி வருவாங்க . பூசை,  வேள்வி எண்டு சொல்றதைவிட இது ஒரு கல்யாண வீட்டு விசேஷம் எண்டு சொல்லலாம். கந்தளாய்க்குளக்  கரையோரமாக இருக்கிற பொட்டியன் ஆற்று ஓரத்தில வேள்விக்காக  மேளதாள சீர்வரிசையோட கன்னிக்கால் நாட்டி, கொட்டகைகள் போட்டு நாராயண மூர்த்திக்கும், இலட்சுமி தேவிக்கும் திருமணம் செய்து வைப்பாங்க. வேள்வி நாட்கள் பூராவும் வதனமார் காவியம், குளக்கட்டுக் காவியம் எல்லாம் படிப்பாங்க. வேள்வி சிறப்பா நடந்து கந்தளாய்க் குளத்துக்கு காவலா இருக்கிற நாராயண மூர்த்தியின் மனம் குளிர்ந்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை என்றாள் பாட்டி.

நீங்க வேள்விக்கு  போயிருக்கிறீங்களா பாட்டி?

ஆமா இரண்டு தடவை …...  எண்ணி பன்னீராயிரம், எண்ணாமல் பன்னீராயிரம் வெற்றிலை , பாக்கு , பழம் படைச்சு பூசை எல்லாம் நடக்கும். திருவிழா மாதிரி சனங்கள் ஆண்களும், பெண்களும் கல்யாண வீட்டுக்கு போற மாதிரி போவாங்க . எத்தன பேர் போனாலும் பந்தி போட்டு சாப்பாடு வைப்பாங்க. இரவிரவா பூசைக்கு நடுவில பாட்டு, கூத்து எண்டு ஒரே கலகலப்பாய் இருக்கும்.

வேள்வி தொடக்கத்தில கேசவன் உன்ன தோள்ள வைச்சிட்டு கோமதியோட வருவான். அப்ப நீ சின்னப்பிள்ளை. பிறகு அவன் வதனமாரோட போய்ட்டதால பிறகு கோமதியும் , நீயும் வரல்ல.

வதனமார் எண்டா யார் பாட்டி ?

நம்மட இடைச்சேரி இளைஞர்கள்தான். எல்லாரும் வதனமார்தான். ஆனா ஒரு வேள்விக்கு பன்னிரண்டு வதனமாரத் தேர்வு செய்து அனுப்புவாங்க.

எங்க பாட்டி?

காட்டுக்குத்தான். கோணேச்சரத்தில  இருந்து கொண்டுவந்த ஆயுத பெட்டகத்திற்கு தினந்தோறும் பூசை வைப்பாங்க. பூசை எல்லாம் முடிஞ்சு அதில இருக்கிற ஆயுதங்களை எடுத்து இடைச்சேரிக்காரங்க  பன்னிரண்டு பேரிடம் கொடுப்பாங்க. அதோட அவங்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியா மந்திரிச்ச கயிறும் பூசையில இருந்து கிடைக்கும். எல்லாத்தையும் எடுத்திட்டு காட்டுக்குள்ள போற வதனமார் காட்டில அலைஞ்சு திரிகிற குழுமாடுகளை வேள்விக்காகப் பிடிச்சு வருவாங்க. இந்த வேள்வியில வதனமார்தான் காவிய நாயகர்கள்.  வதனமார் குழுமாடு பிடிச்சாத்தானே வேள்விய முடிக்கலாம். வேள்வி முடிஞ்சதும் வதனமார் காட்டில செய்த வீரதீர செயல்கள்தான் ஊர்முழுக்கப் பேச்சாக இருக்கும்.

மந்திரித்த கயிற்றுடன் காட்டில் மாடு பிடிக்கச் செல்லும் வதனமார்


அப்பா போவாரா பாட்டி?

பன்னிரண்டு வருசத்துக்கு முன்னால கேசவன்தானே  பெரிய வதனமார் . அந்த நேரத்தில அவனப்பற்றித்தானே ஊரெல்லாம் பேச்சா இருந்திச்சு. காட்டில அவன் செய்த வீரதீர செயல்கள் எல்லாம் கதைகதையா பேசிட்டு இருந்தாங்க. உங்கப்பனுக்கு மந்திரம் தெரியும், காட்டுவழியும் நல்லா தெரிஞ்சவன்.

அப்பா கரடியோட சண்ட பிடிச்சத அம்மா ஒரே சொல்லுவா ஞாபகம் இருக்கு. ஆனா அவர் வதனமாராப் போய்த்தான் சண்டபிடிச்சார் எண்டது இப்பத்தான் தெரியுது.

வதனமார மறிகாரர் எண்டும் சொல்லுவாங்க. அவங்க கொண்டுபோற கயிறு வெழுக் கயிறு. மான்தோலில செய்தது. நல்ல வைரம் பாஞ்ச கயிறு. நீர் நிலைக்கு வாற குழுமாட பொறிவைச்சு அந்த கயித்தாலதான் பிடிப்பாங்க. இல்லை துரத்திப்பிடிக்கணும்.

என்ன பாட்டி காட்டுக்குப் போனமாதிரியே பேசுறிங்க.....

இந்தப் பதினஞ்சு வருசமா உங்க ஊரிலதானே இருக்கிறன். இதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டதுதான்.

குளத்துவேள்வி எப்படி இருக்கும் எண்டு பார்க்க ஒரே ஆர்வமாக இருக்குது பாட்டி என்றாள் ஆதினி.

கொஞ்சம் இரு என்று கூறியபடி எழுந்த பாட்டி குடிசையின் ஓரத்தில் இருந்த மண்குடுவை ஒன்றிற்குள் கைவிட்டு கவனமாக எதையோ எடுத்தாள். அவள் கையில் இரண்டு ஓலைச்சுவடிகள் இருந்தன. அதில் ஒன்றை பத்திரமாகத் திருப்பி பானைக்குள் வைத்துவிட்டு மற்றையதை ஆதினியிடம் கொடுத்தாள். ஆர்வத்தோடு எழுந்து அதனை பக்குவமாக வாங்கிய ஆதினி என்ன ஓலை பாட்டி இது என்று வினாவினாள். அடுத்த கணம் குளக்கட்டு காவியம் என்று இரகசிய குரலில் முணுமுணுத்தது அவளது வாய்.

ஆமா, கந்தளாய் குளக்கட்டு காவியந்தான் அது என்றாள் பாட்டி சாதாரணமாக.

இது எப்படி பாட்டி உங்களுக்கு கிடைச்சது என்று வியப்புடன் ஆதினியின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவந்ததேயன்றி அவள் கண்கள் ஓலையில் இருந்து அசையவேயில்லை.

யார் தருவா? ஆண்கள் மட்டுந்தான் பாடணும் என்று ஒளிச்சு ஒளிச்சுப் படிக்கிற பாட்டை எனக்கு யார் தருவா? என்றபடி மீண்டும் தான் விட்ட இடத்தில் இருந்து பனையோலைப் பெட்டியினைப் பின்னத் தொடங்கினாள் பாட்டி.

மனப்பாடம் செய்து எழுதினீங்களா பாட்டி?  என்றபடி சந்தேகத்துடன் பாட்டியை ஊடறுத்துப் பார்த்தாள் ஆதினி.

கொடுப்புக்குள் சிரித்தவாறே தலையாட்டினாள் பாட்டி. சதுர்வேதி மங்கலக்காரங்க இவங்களுக்கு எதையும் காட்டமாட்டாங்க. இவங்க தாங்க பாடுற காவியத்த எங்கட்ட இருந்து ஒளிச்சு வைக்கிறாங்க என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் பாட்டி.

சரி பாட்டி ஏதோ சாகசம் செய்து பாட்ட ஓலையில எழுதிட்டிங்க. இதைவச்சு என்ன பிரயோசனம். உங்களத்தான் வேள்வியில பாட விடமாட்டாங்களே என்றாள் ஆதினி சிரித்தவாறே.

யார் கண்டது ஆயிரம் வருசத்துக்கு பிறகு நான் எழுதின காவியத்தத்தான் உலகம் படிக்குதோ தெரியாது.

தான் பின்னி முடித்த பனையோலைப் பெட்டியுடன் எழுந்த பாட்டியின் முகத்தில் முன்னொருபோதும் இல்லாத மலர்ச்சியையும், நிறைவையும் ஆதினி அவதானிக்கத்தவறவில்லை.

இருந்தாலும் ஊரில சொல்லிறமாதிரி உங்களுக்கு கர்வம் அதிகம் பாட்டி என்றாள் ஆதினி.

கூடவே பிறந்தது என்று சொன்ன பாட்டி, எனக்கு கொஞ்சம் மந்திரமும் தெரியும் என்றாள். காட்டில வாழுற விச ஜீவராசிகள், யானை , கரடி, புலி எல்லாத்திடையும் வாய கட்டிற மந்திரமெல்லாம் தெரியும் என்று சொல்லியபடி கண்சிமிட்டினாள்.

காட்டுக்கு போறது பயமா பாட்டி என்று குழந்தைத்தனமாக ஆதினி கேட்டாள்.

ம்..... ம்... காட்டுக்குப் போறது ஒண்டும் விளையாட்டில்ல. மலைக்காடு பயங்கரமானது. கந்தளாயில இறங்கினா சிலநேரம் குழுமாடு தேடி அனுராதபுரம் வரைக்கும் மறிகாறர் போகவேண்டி இருக்கும். பாம்பு,யானை, கரடி, புலி, சிறுத்தை மட்டுமில்லை எத்தனையோ விச உயிரெல்லாம் இருக்கிற காட்டில வழிதவறிட்டா வெளியிலவாறது அவ்வளவு இலகு இல்ல. உன்ர அப்பா காட்டுவழி நல்லா தெரிஞ்சவன். கடைசியா நடந்த வேள்வியில வதனமாருக்கு வழிகாட்டியாப் போனது கேசவன்தான் என்றாள் பாட்டி.

அறிவாட்டியின் இறுதி வரிகள் ஆதினியைத் திடுக்கிட வைத்தது.

அப்ப இந்த முறையும் அப்பாவ கூப்பிடுவாங்களா  பாட்டி? ஒருவித பதட்டத்துடன் கேட்டாள் ஆதினி.

பெரியவதனமார் நான்குபேர் இருந்தாங்க. அதில ஒருத்தர் போனமுற வந்த வெள்ளத்தில இறந்திட்டார். மற்றவர் கை , கால் இழுத்து படுக்கையில கிடக்கிறார். அடுத்தவர் மாதோட்டத்திற்கு யானை வியாபாரத்திற்குப் போயிட்டார். அப்ப இந்த முறையும் கேசவனத்தான் கூப்பிடுவாங்க எண்டு நினைக்கிறன். அறிவாட்டி கூறிமுடிக்கவும் ஆதினி சடாரென எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது.

இந்த வயதில அப்பாவால முடியுமா பாட்டி? எனக்குப் பயமாக்கிடக்குது. அவரால இப்ப ஏலாது பாட்டி என்று கூறிக்கொண்டே  அவசரமாக வீட்டை நோக்கி நடக்கலானாள்.

ஆதினியின் பதட்டம் அறிவாட்டியையும் தொற்றிக்கொண்டது. அவள் எழுந்து வளவின் முடிவுவரை வந்து ஆதினியை வழியனுப்பி வைத்தாள். ஓட்டமும் நடையுமாகச் செல்லும் அந்தச் சின்னப்பெண்ணின் உருவம் மறையும்வரை அவள் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.


தொடரும்.........


நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  மாசி  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )



ஒலி வடிவில் கேட்க..........



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment