Wednesday, May 03, 2023

நரபலி - (ஆதினி பகுதி 8)


திடுக்கிட்டு எழுந்தேன். தலையை தடவிக் கொண்டிருந்த கனகவல்லிப் பாட்டி ஆதரவோடு என் தோள்களைப் பிடித்து அமரச் செய்தாள். பூக்கட்டிப் பாத்துட்டாங்களா பாட்டி என்று பயத்தோடு கேட்டேன். 

ம்...... நீ எழும்பிறதிற்கு கொஞ்சம் முதல்தான் பறையொலி பெரிசாக கேட்டது. பூக்கட்டி பார்த்துட்டாங்கண்ணு நினைக்கிறன்.

எனக்கு நெஞ்சு நின்று விடும் போலிருந்தது.

யார் மேல பாட்டி பூ விழுந்திருக்கும்? 

தெரியல, பூசையால ஆட்கள் வந்தால்தான் கேட்கலாம் என்றாள் பாட்டி. 
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முற்றத்தில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தேன். வீட்டின் பின்புறம் இருந்து யாரோ விசும்பி அழுதபடி தனியாக பேசிக் கொண்டிருப்பது கேட்டது. எட்டிப் பார்த்தேன். பூமகளின் பாட்டி மண் தரையில் முழங்தாளிட்டு உட்கார்ந்து  திருக்கோணேச்சரம் இருக்கும் திசையை பார்த்து கைகூப்பி வணங்குவதும், அழுவதுமாக இருந்தாள். சில வேளைகளில் கை நிறைய மண்ணை அள்ளி தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். ‘பூசைக்குப் போன நாலு பேரும் இவளுக்கு பேத்தி முறைதான்’ என்று எனது காதுக்குள் சொன்னாள் கனகவல்லிப்பாட்டி. திடீரென வீட்டிற்குள் இருந்து பூமகளின் தாயின் அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் திகைத்து நின்றோம். எங்கள் இருவரையும் தள்ளிவிட்டு பூமகளின் பாட்டி வீட்டிற்குள் பாய்ந்து சென்றார்.

வீட்டின் நடுப்பகுதியில் இருந்த மரத்தூணில் சாய்ந்தபடி வைராவியர் இருந்தார். வழக்கத்துக்கு மாறாக அவரது கண்கள் கலங்கியிருந்தது. அவர் நெஞ்சில் வாடிய மலராக சுருண்டபடி பூமகள் படுத்திருந்தாள். பூமகளை இறுக்கியணைத்தபடி அவளுடலில் தலை புதைத்து பூமகளின் தாய் அழுதுகொண்டிருந்தாள். வாசலில் நின்ற என்னை கண்டதும் வீரிட்டு அழுதபடி ஓடி வந்த பூமகள் என்னை இறுக்கக் கட்டிக் கொண்டாள். சிறிது நேரத்திற்க்குப் பிறகு ‘நிலமகளுக்கு என்னைத்தான் பிடித்திருக்காம்’ என்ற வார்த்தைகள் மட்டும் அவள் வாயிலிருந்து வெளிவந்தது.

என்னைக் கனகவல்லிப் பாட்டியும், பூமகளை அவளது பாட்டியும் எப்படிப் பிரித்தார்கள் என்பது இன்றும் என் நினைவில் இல்லை. பூமகளின் வீட்டிற்குள் இருந்த அவரது சொந்தங்கள் எல்லாம் மெல்ல மெல்ல வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்கள். அழுது அடம்பிடித்து வரமறுத்த நான் ‘பூமகளுக்கு இன்னும் அரை நாள் பொழுதுதான் அவள் குடும்பத்தோடு சேர்ந்திருக்க இருக்கிறது’ என்ற கனகவல்லிப் பாட்டியின் மந்திர வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவளுடன் இழுபட்டுச் சென்றேன்.

அடுத்த நாள் வைரவர் மடையில் என்னென்ன நடக்கும் என்பதை கனகவல்லிப் பாட்டி விரிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். அவள் ஆயுளுக்குள் எங்கள் ஊரில் நடக்கும் மூன்றாவது நரபலி இதுவென்றாள். நேரடியாக பார்க்காவிட்டாலும் பின்வந்த நாட்களில் வைரவர் மடையில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து தான் கேட்டறிந்த நிகழ்வுகளை துல்லியமாக ஒழுங்குபடுத்தி சொல்லிக் கொண்டு வந்தாள் அவள்.

பாட்டி ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்த போதும் என் மனம் எல்லாம் பூமகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது. கதை சொல்லிக் கொண்டு நடந்து கொண்டிருந்த பாட்டியை இடைமறித்து ‘ஏன் பாட்டி சாமி நரபலி கேக்குது’ என்றேன். ‘ஊரைக் காக்க ஒருத்தர பலி கொடுக்கிறது வழக்கம்தானே’ என்ற பாட்டி வைரவர் சாமி கூட ஒரு காலத்துல இந்த ஊரைக் காத்து சாமியாய்ப் போனவர்தான் என்றாள்.

ஏன் பாட்டி பூமகள் அப்பாவால இத தடுக்க முடியாதா? பதில் எனது மனதுக்குத் தெரிந்திருந்தும் வாய்விட்டுக் கேட்டேன்.

ஊர் நலனுக்காக தங்களை அர்ப்பணிச்சவங்கம்மா வைராவி பரம்பரை. அரச பணியில் அரசருக்கு மெய்ப்பாதுகாவலர்களாக இருக்கும் வைராவிகள் அரசருக்கு ஒரு ஆபத்து என்றால் தங்கள் உயிரைக் கொடுக்கவும் அஞ்ச மாட்டாங்க. அதுமாதிரி ஊர்க் கோயிலில பணியாற்றும் வைராவிகள் ஊர் நலனுக்காக தங்கள் உயிரை கொடுக்க எந்நேரமும் சித்தமாக இருப்பாங்க.

பாட்டி சொல்லிக் கொண்டு வந்தவை எல்லாம் காதுக்குள் கேட்டதேயன்றி எனது மனதுக்குள் எதுவும் செல்லவில்லை. ‘பலி கொடுத்தால் ஊரில நோய் இல்லாமல் போய்விடுமா பாட்டி’ என்றேன். கனகவல்லி பாட்டி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஒன்றையும் யோசிக்காமல் படு வைரவர் துணையால எல்லாம் சரியாயிடும்’ என்றாள் பாட்டி. என்னை நான் வசிக்கும் நாயன்மார் திடல் வீட்டில் சேர்த்து விட்ட திருப்தியோடு தான் இருக்கும் நடுப்பிரப்பன் திடலை நோக்கி நடக்க தொடங்கினாள் கனகவல்லிப் பாட்டி.

அப்பா அன்று முழுவதும் வீட்டிற்கு வரவே இல்லை. வைரவர் மடையின் வேலைகளில் இரவு பகலாக ஈடுபட்டிருந்தார். அம்மாவும், தம்பியும் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே உறங்கிப் போயிருந்தார்கள். எனக்கு உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப கனகவல்லி பாட்டி சொல்லி வந்த விடயங்களை மனதுக்குள் மீட்டுப் பார்த்துக் கொண்டேன்.

நாளை இருள் பிரியாத அதிகாலை வேளையில் தலை முழுகி, அலங்கரித்து, வெள்ளை உடையில் பூமகளை அழைத்துச் செல்வார்கள். வைரவர் சாமியின் முன்னால் பெரிய மடை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். உரிய இடத்தில் கரும் பாவாடை தரையில் விரிக்கப்பட்டு அதன் மேல் பூமகள் அமர்ந்திருப்பாள். பூசை தொடங்கும். வாத்தியங்கள் முழங்கும். உரிய நேரத்தில் பூசாரி பூமகளின் காதிற்குள் மந்திரத்தை ஓதுவார். மந்திரத்தின் முடிவில் பூமகள் மயக்கமுற்று விழுவாள். ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பாடையில் பூமகளை கிடத்தி கோயிலடிக்கு தெற்காக உள்ள வெம்பு மயானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு ஏற்கனவே வெட்டியிருக்கும் குழியினுள் புதைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விடுவார்கள். பின்னர் தலைமுழுகி, புதிய ஆடைகள் அணிந்து வைரவர் ஆலயத்திற்கு மீளவும் வந்து பூசையினைத் தொடர்வார்கள்.

கனகவல்லிப் பாட்டி கூட்டி வரும்போது கூறிய ஒவ்வொரு விடயங்களையும் நான் திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டேன். என்னுடைய முடிவில் நான் தெளிவாகவே இருந்தேன். எப்படியாவது பூமகளை காப்பாற்றி விட வேண்டும். ஊர் மக்கள், கொடிய நோய், தாய், தந்தை ஆசைத் தம்பி ஏன் வைரவர் சுவாமி கூட என் மனக்கண் முன் நிழலாடவில்லை அனைத்தையும் பூமகள் ஆக்கிரமித்து இருந்தாள். புதையுண்ட பூமகளைக் காப்பாற்றியதும் திருகோணேச்சரத்திற்கு நெல் எடுத்துச் செல்லும் மாட்டு வண்டில்களில் ஏறி கோயிலில் தஞ்சம் புகுவது என்று திட்டமிட்டுக் கொண்டேன்.எங்களுக்கு நினைவு தெரிந்த பல ஆண்டுகளாக வெம்பு மயானம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஒரு முறை நானும், பூமகளும் அங்கு சென்று விளையாடிப் பின்பு அருகிலுள்ள வயல்களில் வேலை செய்தவர்கள் எங்கள் வீட்டில் அதைச் சொல்லி பெற்றோரிடம் அடி வாங்கித் தந்திருந்தார்கள். அதனால் எனக்கு மயானத்துக்குப் போவது பெரிதாக பயம் தருவதாக இருக்கவில்லை. நித்திரை கண்ணைச் சுழட்டிய ஒவ்வொரு கணமும் பூமகளின் முகம் நினைவுக்கு வந்து விழிப்படையச் செய்தது.

எப்போது உறங்கினேனோ தெரியாது. பறையொலி கேட்டதும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். அவசர அவசரமாக ஆடைகளைச் சரி செய்து கொண்டு அம்மாவையும், தம்பியையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெதுவாக வீட்டுக்கு வெளியில் வந்தேன். நிலவொளியில் பாதைகள் தெளிவாகத் தெரிந்தன. முன்னம் நடந்து போன அதே வயல் வரம்புகளுக்கு ஊடாக விறுவிறுவென நடந்து கொண்டிருந்தேன். ஊர்மனைகளுக்குள் இருந்து கேட்கும் நாய்களின் ஊளையிடும் ஓசை ஒரு வித பயத்தை தந்தது. வயல்வெளியில் வீசிக் கொண்டிருந்த ஈரக் காற்று என் படபடப்பை மேலும் அதிகமாக்கியது. இப்போது பூமகளை வைரவர் மடையில் உட்கார செய்திருப்பார்கள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உள்ளுணர்வு உந்தித்தள்ள மிக வேகமாக நடந்து வந்த என்னை குடமுருட்டி ஆறு தடுத்தது. பகல் வேளையிலேயே கடப்பதற்கு பயமாக இருக்கும் முதலைகள் உலவும் அந்த ஆற்றை எப்படி கடந்தேன் என்று இப்போதும் புரியவில்லை. எனக்குள் யாரோ இருந்து இயக்கியது போலிருந்தது. வயல் வரம்பில் நடந்து பழக்கப்பட்ட கால்கள் என்பதால் நான் திட்டமிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாகவே வெம்பு மயானத்துக்கு அருகில் வந்து சேர்ந்தேன்.

மயானத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வயலோரமாகக் கிளைபரப்பி உயர்ந்து வளர்ந்து இருந்த ஆலமரத்தில் ஏறி வசதியான பகுதியில் அமர்ந்து கொண்டேன். எனது பார்வைக்கு எட்டியதாக மயானத்தின் மறுபக்கத்தில் பூமகளுக்காக வெட்டப்பட்டிருந்த புதைகுழி நிலவொளியில் சிறிதாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் கோயிலடியில் இருந்து தீப்பந்தங்கள் நகர ஆரம்பித்தன. மனதைத் திடப்படுத்திக் கொண்டு கையில் கிடைத்த ஆலம் விழுதை பற்றிப் பிடித்தபடி எழுந்து நின்று பார்த்தேன். நிலவொளியில் மங்கலாகத் தெரிந்த சிறு உருவங்கள் மெல்ல மெல்லப் பெரிதாகி மயானத்தை நோக்கி வந்தன.

அருகில் நெருங்கியபோது நிலவொளியில் பாடையில் வெள்ளை நிற ஆடையால் மூடப்பட்டிருக்கும் பூமகளின் உடலை கண்டதும் என் தைரியமெல்லாம் உடைந்து போய் ஓஓஓ... என்று அழவேண்டும் போல் இருந்தது. எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது. மிக விரைவாக வெட்டி இருந்த குழியினுள் பூமகளின் உடலைக் கிடத்தி அவசர அவசரமாக அதன் மேல் மண் நிரப்பி குழியை முற்றாக மூடினார்கள். கனகவல்லி பாட்டி சொல்லியது போல சிறிதாக ஏதோ ஒரு சடங்கை மூடப்பட்ட குழிமேல் பூசாரி செய்தார். அதன் பின் அனைவரும் திரும்பி பார்க்காமல் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

சுற்றும் முற்றும் பார்த்து யாரும் காவலுக்கு இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக மரத்திலிருந்து இறங்கத் தொடங்கினேன். அப்போதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. ஊரை நோக்கி நடக்கத் தொடங்கிய பூசாரி திடீரென திரும்பி மயானத்தை நோக்கி வந்தார். வந்த வேகத்தில் ஏதோ ஒரு பாடலை உரத்த குரலில் பாடி ஆடத் தொடங்கினார். அவரை தொடர்ந்து வந்த வாத்தியக்காரர்களும் அவர் பாடலுக்கு ஒத்திசைத்தனர். ஆலயத் தொண்டர்கள் அதிர்ச்சியோடு அவர்களைச் சுற்றி இருந்தனர்.

எனக்கு உண்மையில் அழுகை வந்து விடும் போல் இருந்தது. என்னுடைய பூமகள் மயக்கம் தெளிந்து மூச்சை எடுப்பதற்கு கிடங்கில் போராடிகொண்டிருப்பாள். நான் அவளைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். பூசாரி தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன் நான். திடீரென்று பூசாரி இரு கைகளையும் மேலே தூக்கி ஏதோ ஒரு சைகை செய்தார். வாத்திய ஒலிகள் அனைத்தும் சட்டென நின்றன. ஆலய தொண்டர்களும், வாத்திய கலைஞர்களும் பின்தொடர பூசாரி ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அவசர அவசரமாக நான் மரத்திலிருந்து கீழே இறங்கத் தொடங்கினேன். மரக்கிளைகள் மெல்ல அசைய இலைகளின் சத்தத்தோடு மிகவும் குளிர்ந்த காற்று ஒன்று வீசத் தொடங்கியது. நான் நிதானிப்பதற்குள் பனிமேகம் ஒன்று என்னைப் பின்னால் இருந்து இறுக்கி அணைப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. மிகவும் பரிச்சயமான வாசனையொன்றை என் நாசிகள் உணரத் தொடங்கியது. எனக்கு ஏதோ ஒன்று புரிவது போலவும் புரியாமல் குழப்பமாக இருப்பது போலவும் இருந்தது. விழுதுகளைப் பற்றி இருந்த கைகளின் வீரியம் குறையத் தொடங்கியது. கிளைகளின் மேல் உறுதியாக நின்ற கால்கள் தடுமாறத் தொடங்கியது. பின்னால் இருந்து அணைத்த பனிமேகம் தன்னுள் இருந்த குளிர் அனைத்தையும் என் உடலுலுக்குள் பாய்ச்சி விட்டு மறைந்து போனதுபோல் உணர்ந்தேன். கைகள் வலுவிழந்து விழுதுகளை விட்டன. கால்கள் தளர்ந்தது. எனது உடல் காற்றில் மிதந்தபடி மரத்தின் கீழ் இருந்த வயலுக்குள் விழுந்தது. பலர் ஓடி வருவது போல சத்தங்கள் கேட்டது. 

தொடரும்.

                                                             நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  வைகாசி  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )


 ஒலி வடிவில் கேட்க..........

 


 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment