Wednesday, May 24, 2023

ஆழி மழைக்கண்ணா! - (ஆதினி பகுதி 9)


அறிவாட்டி பூமகள் நரபலியானதைச் சொல்லி முடித்த கடைசி நிமிடங்களில் ஆதினி மூச்சு விடவும் மறந்து போயிருந்தாள். குளிரில் நனைந்த கோழிக்குஞ்சாக அறிவாட்டியின் மடியில் தஞ்சமாகி இருந்த ஆதினிக்கு அடுத்து என்ன நடந்தது என்று கேட்பதற்கே தயக்கமாக இருந்தது.


நடந்த துயரத்தை மீள ஞாபகப்படுத்திச் சொல்லி வந்ததாலோ என்னவோ அறிவாட்டி அயர்ச்சியாகி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின்னர் அவளிடம் இருந்து ஒரு பெரிய பெருமூச்சு வந்தது. சிறுவயதில் அறிவாட்டிப் பாட்டிக்குள் புகுந்த குளிர் காற்றுத்தான் அப்போது சுடுமூச்சாக வெளியேறுகிறது என்று ஆதினி நினைத்துக் கொண்டாள். அவள் பயம்கொள்ளும் அளவு அந்தப் பெருமூச்சுக் காற்றின் உஷ்ணம் இருந்தது.

எல்லாம் முடிஞ்சு நான் கண்விழிச்சுப் பார்க்க நாலு நாளாகிட்டுதாம். அதுவரைக்கும் உடம்பு அடிக்கடி நெருப்பாகிக் கொதிச்சதோட எனக்கு சுயநினைவு வருவதும் போவதுமாக இருந்ததாக பிறகு சொல்லி திட்டினாங்க. அறிவாட்டியின் வாய் வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் அந்நேரத்தில் பட்ட வேதனைகளை அறிவாட்டியின் முகத்தில் படர்ந்த கவலை ரேகைகள் காட்டிக் கொடுத்தது. வைரவர் நரபலியை தடுக்கப் போனதால் அறிவாட்டியின் குடும்பத்தினரும், ஊரவரும் அறிவாாட்டி மேல் அதிக கோபத்தோடு இருந்திருப்பார்கள் என்பதனை ஆதனி புரிந்து கொண்டாள். 

நான் சுயநினைவு இல்லாமல் கிடந்த இரண்டாவது நாளில் எனது அம்மா மூச்சுத் திணறி, வாந்தி எடுத்து இறந்து போயிருக்கிறா. வைரவர் மடையை குழப்ப நான் செய்த பாவம்தான் என் அம்மாவுக்கு தண்டனையாக கிடைத்திருக்கிறது என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்திச்சாம் என்று தழுதழுத்த குரலில் அறிவாட்டி சொல்லி வரும்போது அறிவாட்டியின் கண்களின் ஓரத்தில் சிறிதாக அரும்பிய கண்ணீர்த் துளிகளை ஆதினி துடைத்து விட்டாள். அறிவாட்டி பாட்டிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் ஆதினி தவித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அந்த குடிசையில் அமைதி நிலவியது. இந்தப் பழம் கதையெல்லாம் நீ ஏன் என்னட்ட கேட்ட? என்று அறிவாட்டி ஆதனியைப் பார்த்து கேட்டாள். பாட்டி நீங்க எப்படி தேவரடியாராகப் போனீங்க என்று கேட்டன் அதுல இருந்துதான் இந்தக் கதையெல்லாம் தொடங்கிச்சு என்று ஆதினி கூறினாள். 

ம்.....ம்... இப்பத்தான் நீ கேட்டதுக்கு பதில் சொல்லப் போறேன். அம்மா இறந்த துயரம் மறையிறதுக்குள்ள அப்பாவும் அதே மாதிரி மூச்சு திணறி என் மடியிலேயே உயிர் விட்டார். நான் செய்த பாவத்துக்கு ஏன் என் தாயையும், தந்தையையும் பழி வாங்கின? என்று வைரவர் சாமி இருந்த திசையைப் பார்த்து பலமுறை உரத்த சத்தம் போட்டு அழுதன். அந்தச் சின்ன வயசுல அது மட்டும்தான் என்னால செய்ய முடிஞ்சுது. ஆசையா வளர்த்த அம்மா , அப்பா இறந்த அதிர்ச்சியில் நான் இருக்கும்போதே என் அன்புத் தம்பி மாதவன் கத்தியை எடுத்துக்கொண்டு என்னை கொல்ல வந்தான். 

ஏன் பாட்டி என்று அலறினாள் ஆதினி.

வைரவர் மடையை குழப்ப முயற்சி செய்த ஆதினிதான் உன் அம்மா , அப்பா சாவுக்கு காரணம் என்று ஊரவர் எல்லாம் என் தம்பியிடம் ஓதியிருக்கிறார்கள். மாதவன் அப்ப சின்னப்பிள்ளை. கத்திய பிடிச்சிட்டு இருந்த அவன் கைகள் என்னைக் கண்டதும் நடுங்கிக் கொண்டிருந்தது இண்டைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது. அண்டைக்குத்தான் நான் அவன அவ்வளவு கோபத்தோட பார்த்தன். அதுதான் அவன நான் பார்க்கிற கடைசி நாளெண்டு நான் நினைக்கல.

இப்பையும் அவர் கோபத்தோட இருப்பார் என்று நினைக்கிறீங்களா பாட்டி? ஆதினி கேட்டாள்.

தெரியல. ஒரு முறை திருக்கோணேச்சர விஷ்ணு ஆலயத்தில நான் நடனமாடிக் கொண்டிருந்தத மாதவன் ஒளிச்சிருந்து பார்த்ததா பிறகு கூட்டத்திலிருந்த எங்க ஊர்க்காரங்க சொன்னாங்க. ஆனால் நான் தேடிப் பார்க்கக்குள்ள அவன் அங்க இல்ல. 

பூமகளையும், பெற்றோரையும் இழந்த சோகத்தோடு சொந்தத் தம்பியையும் பிரிந்த துன்ப நிலை அந்தச் சின்ன வயதில் அறிவாட்டியை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்பதை ஆதினி விளங்கிக் கொண்டதால் அமைதியாக இருந்தாள். அறிவாட்டி ஏன் தேவரடியாராகப் போனாள் என்பதை கடைசிவரை அறிவாட்டி சொல்லவில்லை. அதை ஆதினியும் கேட்கவில்லை. ஊரும், உடன்பிறந்தவனும் வெறுத்தொதுக்கிய அறிவாட்டியை தேவரடியாராக ஆலயத்தில் ஒப்படைப்பதைத் தவிர கோதையம்மாளுக்கு வேறு தெரிவுகள் ஏதும் இருந்திருக்காது என்பது ஆதினிக்கு தெளிவாகப் புரிந்தது.

சிறிது நேரம் தூவானமாக ஓய்வெடுத்திருந்த மழை மீண்டும் கன மழையாக பெய்யத் தொடங்கியது. மழையின் வீரியத்தால் குடிசைக்குள்ளும் சிறு சிறு மழைத்துளிகள் ஆங்காங்கே விழத் தொடங்கியது. தொடர் இழப்புகளின் வலியால் தளர்ந்துபோய் இருந்த அறிவாட்டிப் பாட்டியை தேற்ற என்ன செய்யலாம் என்று நீண்ட நேரம் ஆதினி யோசித்துக்கொண்டிருந்தாள்.

குரு சோர்ந்து போகும் தருணங்களில் கற்ற வித்தையால் மட்டுமே சீடனால் அவரைத் தேற்ற முடியும் என்று அறிவாட்டிப் பாட்டி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியது அப்போது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. சட்டென எழுந்து தனது உடைகளைச் சரி செய்து கொண்ட ஆதினி குடிசையின் நடுப்பகுதிக்குச் சென்று முறைப்படி அறிவாட்டியை வணங்கினாள்.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

குடிசைக்கு வெளியில் கேட்ட கனமழையின் இரைச்சலையும் தாண்டி மெல்லிய மனதை வருடும் ஆதினியின் குரல் அறிவாட்டியின் குடிசை முழுவதையும் நிறைக்கத் தொடங்கியது. பாடலுக்கேற்றபடி தன் அங்க அசைவுகளால் அறிவாட்டிப் பாட்டியிடம் கற்ற நடனத்தை அவள் முன்னாலேயே அரங்கேற்றினாள் ஆதினி. தான் சாய்ந்து அமர்ந்திருந்த சுவரில் தன்னை மீளவும் நன்றாக நிலைப்படுத்திக் கொண்டு நடனத்தில் மனமொன்றிப் போனாள் அறிவாட்டிப்பாட்டி. 

கந்தளாய்ச் சதுர்வேதி மங்கலத்தின் விஷ்ணு ஆலயமான விஜயராஜ விண்ணகரத்தில் அறிவாட்டி வாழ்ந்த காலப்பகுதியை ஆதினி மீள ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள். தினமும் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடப்படும் பொழுது அறிவாட்டி ஆடுகின்ற இந்த நடனம் அவள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அறிவாட்டி அவளையும் அறியாமல் கடந்து வந்த சோகங்கள் அனைத்தையும் மறந்து ஆதினியின் நடனத்தில் மெய்மறந்திருந்தாள்.

மழைக் கடவுளை நோக்கி மனம் உருகி பாடப்பட்ட அந்த பாடல் அந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. கடலுக்குள் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு வானத்தில் ஏறி ஊழிக்கால இறைவனின் திருமேனியைப் போல் உடல் கறுத்துப் பின் மழையாகப் பொழிவதை ஆதினி தனது நுண் அங்க அசைவுகள் மூலம் உருவகித்து ஆடிக்கொண்டிருந்தாள். இறுதி வரிகளில் மழை நீர் நிலைகளை நிறைத்து அதில் மகிழ்ச்சியாக நாங்கள் நீராட வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகின்ற போது ஆண்டாளாகவே அவள் மாறிப்போனதாக அறிவாட்டிக்குப்பட்டது.


அறிவாட்டிப் பாட்டி தனது நடனத்தை கூர்ந்து கவனிக்கின்றாள் என்ற போதும் அது அவள் மனதில் எழுந்த துயரமான சிந்தனைகளை ஆறுதல் படுத்தியதா இல்லையா என்பதை ஆதினியால் புரிந்து கொள்ள முடியாது இருந்தது. தன்னுடைய குரு எப்போதும் குற்றம் பொறுக்க மாட்டாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆதினி ஒரு குறும்பு செய்தாள். இரண்டாவது முறையாக அதே பாடலைப் பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்த ஆதினி வலிமையும் அழகும் உடைய பத்மநாபனின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்கை உருவகப்படுத்துமிடத்தில் வேண்டுமென்றே பிழை விட்டாள். அடுத்த கணம் அவள் எதிர்பார்த்தது நடந்தது. திடீரென எழுந்த அறிவாட்டி அவள் விட்ட தவறை சுட்டிக்காட்டிச் சரிசெய்தபடி ஆதினியுடன் இணைந்து ஆழி மழைக்கண்ணா பாடலுக்கு நடனமாடத் தொடங்கினாள். மாலை நேரத்தில் இடையர்கல்லின் குடிசை ஒன்றில் குரு, சிஷ்யை இணைந்து அரங்கேற்றிய நடனத்தை மழை மாத்திரம் கரவொலி புரிந்து கண்டு மகிழ்ந்தது. 

விஜயராஜ விண்ணகரத்தின் நினைவுகளோடு அறிவாட்டி ஆடத் தொடங்கினாலும் பின்னர் அவளது மனம் முழுக்க முன்னம் திருக்கோணேச்சரத்தில் நடந்த நிகழ்வொன்றில் மூழ்கிப்போனது. ஆதினி மாதவனை ஞாபகப்படுத்தியது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிவாட்டி நினைத்துக் கொண்டாள். அலை கடல் மோதும் மலைகளின் மேலே கடலுக்குள் நீண்டிருந்த மலையின் உச்சியில் கோணேசர் மாதுமையுடன் குடியிருந்தார். கோணமாமலை நிலப்பரப்புடன் தொடர்பு பட்டிருந்த சமதரைப் பகுதியில் வானுயர்ந்த கோபுரத்துடன் சக்திக்கு என்று தனியான கோயில் இருந்தது. இவை இரண்டிற்கும் நடுவில் சிறிய குன்றொன்றின் மேல் அழகிய கோபுரத்தோடு கருங்கல்லாலான விஷ்ணு ஆலயம் அமையப் பெற்றிருந்தது. ஆலயத்தின் விசாலமான மண்டபத்தில் கடல் கடந்து வந்த பல தேசத்தவர் கூடியிருக்க அரங்கேறிய நடன நிகழ்வும் அதில் தளபதி சேதராயன் கைகளால் தான் தலைக்கோலி பட்டம் பெற்றதும் மனக்கண்ணில் சித்திரமாக ஞாபகத்துக்குவர அறிவாட்டியின் உடலில் ஒருவித புத்துணர்ச்சி எழுந்தது. அது அவள் நடனத்திலும் பிரதிபலித்தது.

அறிவாட்டிப் பாட்டியின் நடனத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ஆதினி அதிசயித்தாலும் அது என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியாது இருந்தது. ஒருவகையில் தான் நினைத்ததை சாதித்து விட்டேன் என்று அவள் மனதுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டாள். மூன்றாவது முறையாக ஆழி மழைக்கண்ணா பாடலைப் பாடி நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் தூரத்தே கேட்ட பறையொலி கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. 

தொடரும்.............

                                                            நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  ஆனி  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment