Wednesday, January 04, 2023

பிடிவாதக்காரி - ( ஆதினி பகுதி 1 )


முழுமையாக விரட்டிவிட முடியாதபடி எனது கண்களின் ஓரத்தில் நித்திரை குடியிருந்தது. குளியலறைச் சத்தங்களையும் தாண்டி மகளின் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது. மனைவி குசினிக்குள் தேனீர் தயாரித்தபடி திட்டிக்கொண்டு இருந்தாள்.

இருட்டு நேரத்தில இப்ப என்ன அவசரத்துக்கு இவள் விழுந்து கெட்டு போகணும் எண்டு அடம்பிடிக்கிறாள். வயசுக்கு வந்த பொம்பிளப்பிள்ளை எண்ட ஒரு பயமும் இல்லை. எல்லாம் இந்த மனுசன் கொடுக்கிற இடம். எல்லா சத்தங்களையும் தாண்டி மனைவியின் பேச்சும் சலிப்பும் மிகத்தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்விபயிலும் மகள் விடுமுறை வந்ததும் திருகோணமலைக்கு ஓடுவது ஊர்மேல் உள்ள பாசம் என்று மனைவி நினைத்துக்கொண்டிருக்கிறாள். இன்றைக்கு எங்க சுத்தப் போறாளோ என்று பயந்து கொண்டிருந்தேன் நான்.

நேரம் அதிகாலை 2.30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. ஏலவே கட்டி வைக்கப்பட்டிருந்த பயணப்பொதிகளை பத்திரமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இருந்தேன். எனக்கும் மனைவிக்கும் இடையில் பிள்ளைகள் தொடர்பில் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் இருந்தது. அது மனைவியின் பக்கம் இருந்து வந்த ஒரு வற்புறுத்தலுடன் கூடிய உடன்படிக்கை என்றும் கொள்ளலாம்.

நம்மிட பிள்ளைகளுக்கு எது வேணுமெண்டாலும் சொல்லிக்கொடுங்க ஆனா இந்த வரலாற்றைத் தேடுறன் எண்டு நீங்க அழிஞ்சமாதிரி அதுகளையும் அழிச்சிடாதிங்க என்ற வாக்கியந்தான் அந்த கண்டிப்பான ஒப்பந்தத்தின் சுருக்கம். வெளிப்படையாக ஒப்பந்தம் என்று நான் சொல்லிக்கொண்டாலும் தனிப்பட்டரீதியில் மீறமுடியாத உத்தரவே அதைக் கருதவேண்டியிருந்தது.

எங்கள் ஒப்பந்தத்தைக் காப்பதில் நான் நேர்மையாகவே நடந்துகொண்டிருந்தேன். ஆனால் விதி வலியது பிள்ளைகள் தாங்களாகவே சுயதேடல்கள் ஊடாக வரலாற்றுப் பொக்கிஷங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக வளர்ந்து வந்தார்கள். அதுமட்டுமில்லாது  தங்களுக்குப் புரியாதவற்றைத் தெளிந்துகொள்வதற்காக சிலவேளைகளில் என் விருப்பத்தையும் மீறி இரகசியமாக என்னை தங்களுடன் கடத்திச் சென்றுவிடுவார்கள்.

இயலுமானவரை பிள்ளைகளுடன் சேர்ந்து ஒப்பந்தமீறல்களைச் செய்யாமல் இருப்பதற்கும் ஒருவேளை தவிர்க்கமுடியாமல் செய்தால் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும் எனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் பயன்படுத்தி திண்டாடிக்கொண்டிருந்தேன் நான். இன்றைய கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணமும் அது ஆரம்பிக்கின்ற அதிகாலை வேளையும் எனக்கு மிகுந்த சந்தேகத்தை தருவதாக இருந்தது.

மகள் ஏதோ திட்டம் போட்டு வைத்திருக்கிறாள் போலிருந்தது எனக்கு. இத்தனை அவசரம் அதற்காகத்தான் இருக்கும். நாளை ஞாயிற்றுக்கிழமை அவளுடைய நண்பிகளுடன் சுற்றுவதற்காக தீர்மானித்திருப்பாள். எனவே இன்று போகும் வழியில் எதையோ பார்த்துவிட்டுப் போகப்போகிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பயண ஆயத்த வேலைகள் முடிந்ததும் எங்களைச் சுமந்துகொண்டிருந்த  வாகனத்தை மிகலாவகமாத் திருப்பி பிரதான வீதியில் மிதமான வேகத்தில் ஓடத்தொடங்கினாள் மகள். ஒரு அவசரமும் இல்ல ஆறுதலா போகலாம் என்றாள் பின்னிருக்கையில் இருந்தபடி மனைவி. ஓம் அம்மா அப்பா முன்னுக்குத்தானே இருக்கிறார் நீங்க பயப்படாம தூங்குங்க என்றாள் மகள்.


வாகனம் சன நெருக்கம் இல்லாத வேளை என்பதால் மெல்ல மெல்ல வேகமெடுத்து பாதையில் விரைந்துகொண்டிருந்தது. முன்னால் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சம் பாதையை மறைத்துப் பயத்தினைத் தந்தது. இருக்கையில் நிமிர்ந்து உற்கார்ந்தவாறு பாத்து ஓடு பிள்ள என்றேன். உங்களுக்கு வயசாயிடிச்சு அப்பா என்றாள் கொடுப்புக்குள் சிரித்தவாறே மகள். பின்னால் இருந்த மனைவி கடவத்தை வரும் முன்னமே உறங்கிப் போயிருந்தாள்.

அப்பா.. நாம இண்டைக்கு கந்தளாய்ச் சிவன் கோயிலுக்கு போறோம். அங்க நங்கை சானியின் கல்வெட்டை நான் பாக்கணும் என்றாள் சாதாரணமாக. சண்டாளி இப்போதாவது சொன்னாளே என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன். கந்தளாய்க்கெல்லாம் சரிவராது அம்மாவுக்கு முழங்கால்நோ இறங்கியெல்லாம் ஏறேலாது நேர வீட்ட போவோம் என்றேன் நான்.

அதெல்லாம் நான் சமாளிச்சுக்கொள்ளிறன் இப்ப எனக்கு நங்கை சானியப் பற்றிச் சொல்லுங்க என்றாள் சிரித்தவாறே மகள். கரைச்சல் குடுக்காத பிள்ளை, எனக்கு அதெல்லாம் மறந்துபோச்சு என்றேன் சற்றுக் கடுமையாக.

மறக்கிற விசயம் மாதிரித் தெரியலையே அப்பா. நங்கை சானியிட கல்வெட்டைப் பற்றி நீங்க எழுதின கட்டுரைத்தாளில ஆதினி, நந்தன், கேசவன், அறிவாட்டி இன்னும் கனபேரப்பற்றி நீங்க குறிப்பெல்லாம் எழுதி வச்சிருக்கிறத பார்த்தனான். பென்சிலால எழுதின சிலது கொஞ்சம் அழிஞ்சும் போயிட்டுது. என்ன நாவல் எழுத முயற்சி செய்தீங்களா?

மகள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே எண்ணங்கள் கடகடவென காலங்கள் கடந்து வரலாற்றுத் தேடல்களுக்குப் பின்னால் பைத்தியம் பிடித்ததுபோல அலைந்த காலங்களுக்குள்போய் சிக்கிக்கொண்டது.  வரலாற்றுப்போதை தலைக்கேறி பித்துப்பிடித்தது போயிருந்த காலப்பகுதியொன்றில் வரலாற்று நாவல் எழுதவும் நான் முயற்சி செய்திருந்தேன். யார்செய்த புண்ணியமோ அவ்வாறான அபாயகரமான சோதனைகளில் இருந்து தமிழ் இலக்கிய உலகம் தப்பித்துக்கொண்டது.

நிஜவாழ்க்கையின் அழுத்தங்கள் என்னை உலுப்பி சுயநினைவுக்கு கொண்டுவந்து, என்கால்களைத் தரையில் தொடச்செய்த நாளொன்றில் நான் தேடித்தேடிச் சேகரித்த வரலாற்றுப் புதையல்களையெல்லாம் மூட்டைகட்டிவைத்துவிட்டு ஒரு சாதாரண குடும்பத்தனாக மாறிப்போனேன். சுமார் இருபது வருடங்களுக்கு பின் நங்கை சானியை ஞாபகப்படுத்துகிறாள் மகள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் கந்தளாயில் நடமாடித்திரிந்த அந்தப்பெண்ணும் அவள் காலத்தவராக நான் கற்பனைபண்ணி வைத்திருந்த மனிதர்களும் எனது மனக்கண்ணில் மறுபடியும் வந்துபோனார்கள்.

சொல்லுங்கப்பா........பிளீஸ்……. சொல்லுங்க….. மகள் விடுவதாக இல்லை.

சிறுவயது முதலே மகனுக்கும், மகளுக்கும் கதை கேட்பது என்றால் அலாதி பிரியம் ஏதோ வசியம் செய்தவர்கள் போல மனம் ஒன்றி நேர காலம் பார்க்காமல் கதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். நானும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வாயில் வந்ததடி கதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

உருண்டோடி போன இத்தனை வருடங்கள் அவர்களது உடலிலும், வயதிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறதே தவிர கதை கேட்பதில் அவர்களை இன்னும் குழந்தையாகவே வைத்திருப்பது ஆச்சரியம் தருவதாக இருந்தது. வேறு அவசர வேலைகள் வரும்பொழுது மகனை ஒருவாறு பேசி சமாளித்து கதை சொல்வதில் இருந்து விலகிவிடலாம் ஆனால் மகள் ஒரு பிடிவாதக்காரி தனக்கு திருப்தி வரும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்பாள் இலேசில் அவளிடமிருந்து சாக்குப் போக்குச் சொல்லி தப்பிப்பது என்பது இயலாத காரியம்.

பின்னிருக்கையைத் பயத்துடன் திரும்பிப் பார்த்தேன். வயது தந்த அயர்ச்சியில் மனைவி தன்னைமறந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.  மகள் விடுவதாக இல்லை. தனது இறுதி முயற்சியாக நேற்று முழுக்க அலைச்சல் அப்பா, இப்ப எனக்கு நித்திரை வாற மாதிரி இருக்குது என்றபடி உடலை சற்று வளைத்து சோம்பல் முறிப்பது போல் செய்தாள் மகள். நான் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளாமல் இருந்தேன். ஆனாலும் என் நினைவுகள் வரலாற்றுக் காலத்திற்கு போவதும்வருவதுமாக சலனப்பட்டுக்கொண்டிருந்தது.

பேச்சுவார்த்தை பயனளிக்காமல் போகவே வேண்டுமென்றே வீதியில் இருந்த சிறிய பள்ளத்தில் வாகனத்தை போட்டு எடுத்தாள் மகள். நல்லவேளை மனைவி விழித்துக்கொள்ளவில்லை. ஏய்.. உன்ர சேட்டைக்கு ஒரு அளவில்லையா என்று அரட்டியபடி கொஞ்சம் முறைத்துப் பார்த்தேன். மகள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. பிடிவாதக்காரி… ஐந்திலேயே வளைச்சிருக்கணும் என்று என்னையே நான் நொந்துகொண்டேன். இனியும் மௌனமாக இருந்தால் வயலுக்குள் வாகனத்தை இறக்கி ஓட்டினாலும் ஓட்டுவாள் என்று நினைத்தபடி கதையைச் சொல்லத் தொடங்கினேன். இருந்தாலும் வரட்டுக் கௌரவம் விடவில்லை.

நீ கேட்ட கதையில்லை ஒரு பிடிவாதக்காரியிட கதைதான் சொல்லப்போறன். அதில ஒரு ஓரத்தில நங்கை சானியும் வருவா என்றேன் பொய்க்கடுப்புடன். என்ர அப்பாவப்பற்றி எனக்குத் தெரியாதா என்று தொடங்கி எனக்கு ஐஸ் வைப்பதற்காக என்னென்வோவெல்லாம் மகள் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு எதுவுமே காதுக்குள் விழவில்லை.

மனது முழுக்க கந்தளாய்க் கதைக்களம் நிறைந்திருந்தது. கந்தளாய்ச் சிவாலயத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்தக் கல்வெட்டுக்களைத் தடவிய நாள்முதல் கருவாகி ஒருமாத காலத்துக்குள்ளேயே முழு உருவாகிப்போன ஆதினியின் கதை இருபது ஆண்டுகள் பிரசவிக்கப்படாமல் எனக்குள் ஒளிந்துகொண்டிருப்பதை அப்போதுதான் உணரத்தலைப்பட்டேன். இந்தக் கால இடைவெளி எனக்குத்தான் வயதைக்கூட்டியிருக்கிறதே தவிர கதை அதே இளமையோடு இருப்பதுபோலவே தோன்றியது.

கனகாலத்துக்கு முதல் யோசிச்ச கதையச் சொல்லிறன். இடையில கேள்விகேட்டு என்ன  குழப்பக்கூடாது. ம்… போட்டுக் கேட்டால் காணும் என்று சொன்னதோடல்லாமல் என்னதான் கதையக்கேட்டாலும் ரோட்டில கவனம் இருக்கணும் என்று கண்டிப்பான குரலில் கூறினேன். பதிலுக்கு ம்…. என்ற சத்தம் மட்டும் பக்கத்தில் இருந்து வந்தது.

தொடரும்.........


நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

நன்றி   -  2022  நவம்பர்  தாய்வீடு இதழ்


நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )



ஒலி வடிவில் கேட்க..........





இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment