Saturday, January 07, 2023

வாசுதேவ வாய்க்கால் - (ஆதினி பகுதி 3)


ஆதினியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் அவளுடைய பிடிவாதம். சிறுவயதிலிருந்தே ஆதினியின் பிடிவாதம் ஊருக்குள் பிரபல்யம். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பலமுறை கோமதி தடுத்தும் அதை ஆதினி கேட்பதாக இல்லை. பொழுது புலர்ந்து கேசவன் வேலைக்குப் போய்விட்டதன் பின்னர் வழக்கம்போல ஆதினி வாசுதேவ வாய்க்காலுக்கு வந்துவிட்டாள். அங்கிருக்கும் மிகப் பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் கால்வாய் ஓரங்களில் இருக்கும் இலைக்கறிகளை காலைச்சமையலுக்காக வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டவளாக  எந்தவித பதட்டமும் இல்லாமல் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் அவள்.

கேசவனுக்கு ஐந்து பிள்ளைகள் என்றாலும் ஆதினிக்கும் கேசவனுக்குமான உறவு அலாதியானது. திருமணமாகி சுமார் ஐந்து வருடங்களின்பின் பிறந்த பிள்ளை என்பதால் அதிக செல்லம்கொடுத்து வளர்த்து வந்தான் கேசவன். சிறுவயதிலேயே தோளில் வைத்துக்கொண்டு தான்போகும் இடமெல்லாம் கூட்டிச்செல்வான். ஊரவர்களின் பரிகசிப்புகளையும் ,  மனைவியின் திட்டுக்களையும் அவன் கணக்கெடுத்ததே இல்லை. இடைச்சேரியில் உள்ள இடங்களெல்லாம் ஆதினிக்கு அத்துப்படியானது அப்படித்தான். மந்தை வளர்ப்பிலிருந்து ஆற்றில் நீச்சல் அடிப்பது வரை கேசவனுடன் இணைந்து சிறுவயதிலேயே ஆதினி கற்றுக்கொண்டாள். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான இந்த அந்நியோன்யமான பிணைப்பே பின்னர் ஆதினி பிடிவாதக்காரியாக வளர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

கேசவன் ஆதினியை ஆண்பிள்ளைபோல் வளர்த்து வருகிறான் என்று ஊரவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆதினியும் சளைத்தவள் அல்ல. தந்தைக்கு ஏற்ற சுட்டித்தனமான பெண். எதையும் மிக இலகுவாகக் கற்றுக் கொள்ளும் வல்லமை பெற்றவள். சுமார் ஆறு வயது ஆகும்போதே அவள் தந்தையுடன் இணைந்து வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டாள். சிறுவயது முதலே ஆசைப்பட்டதெல்லாம் தேடிச் சேகரித்துத்தந்த தந்தை முதல் நாள் இரவு ஆத்திரப்பட்டு கன்னத்தில் அடித்தது ஆதினிக்கு மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்தியிருந்தது. எனவேதான் மனதை ஆறுதல்படுத்திக்கொள்வதற்காக அந்தக் காலைவேளையில் வாசுதேவ வாய்க்கால் நோக்கி அவள் ஓடி வந்திருந்தாள்.

வாசுதேவ வாய்க்கால் ஆதினியின் இன்னொரு தாய் போன்றது. அதுமட்டுமில்லை இடைச்சேரி மக்களுக்கெல்லாம் வாழ்வும் வளமும் கொடுக்கும் இயற்கையின் பேரன்பு அது. இடைச்சேரி மக்களதும் கால்நடைகளதும் உணவுக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும் வாசுதேவவாய்க்கால் சிலசமயம் கோபம் கொண்டு வெள்ளமாகி ஊரை அழித்து நாசம்செய்வதுமுண்டு. மிக அரிதாக  விரக்தியுற்று வறண்டு போய்  இடைச்சேரி மக்களை தண்டிப்பதும் உண்டு.  இதனால் ஊர் மக்களுக்கு வாசுதேவ வாய்க்கால்மேல் ஒரு பயங்கலந்த பக்தி உண்டு. பிறக்கும் முதலே ஆதினியை ஊருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது வாசுதேவ வாய்க்காலில் நடந்த சம்பவம் ஒன்றுதான்.

ஒருநாள் கேசவன் மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்பொழுது கர்ப்பமாக இருந்த கோமதி காலைச் சாப்பாட்டுடன் அவனுக்காக வாசுதேவ வாய்க்கால் கரையில் காத்திருந்தாள். திடீரென அங்கிருந்த சிலர் ‘ஐயோ பாம்பு’ என்று கதறியபடி ஓடத் தொடங்கினர். பதறிப்போன கோமதி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள். கேசவன் பார்த்த பொழுது பெரிய நாகபாம்பு ஒன்று கோமதியின் காலை நெருங்கிவருவதைக் கண்டு ஒருகணம் அதிர்ந்து போனான். அடுத்த கணம் உரத்ததொனியில் ‘கோமதி அசையாமல் நில், அசையாமல் அப்படியே நில், காலை அசைக்காதே’ என்று உரக்கக் கத்தினான். கணவனின் பேச்சைக்கேட்டு அசையாமல் நின்ற கோமதியின் கால்களில் ஏதோ ஊர்வது போன்று தெரிந்தபோதுதான் பாம்பு அவளது காலின்மேலாக ஏறுவது புரிந்தது. அந்த நேரத்தில் எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை தைரியம் வந்ததோ தெரியாது. கேசவன் சொன்னபடி அசையாமல் அப்படியே சிலைபோல நின்றாள். அவர்களை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க நாகபாம்பு கோமதியின் கால்களுக்கு மேலாக ஏறிச்சென்றது. பாம்பு போனதும் அருகில் வந்த ஊரவர்கள் கோமதியை அதிசயமாகப் பார்த்தார்கள். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் பிறந்த கோமதியின் பிள்ளைக்கு சர்ப்பதேவி என்று ஊரவர்கள் பெயர்வைத்து அழைக்க அந்தச் சம்பவம்தான் காரணமாக இருந்தது.

இடைச்சேரியில் சர்ப்பதேவியின் கதை மிகப்பரவலாக அறியப்பட்ட தாக இருந்தது. கதை கேட்டபலரும் நாகபாம்பு காலில் ஏறிய சந்தர்ப்பத்தில் கோமதி தைரியமாக அசையாமல் நின்றதால் கருவிலிருந்த சர்ப்பதேவி மிகவும் தைரியமான பெண்ணாக வளர்வாள் என்று ஆருடம் கூறினார்கள். பின்னர் அவள் வாளர்ந்து வரும்போதுதான் தைரியம் மட்டுமில்லை பிடிவாதமும் அவளுடன் கூடப்பிறந்திருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

நீண்ட காலம் தவமிருந்து பெற்ற பிள்ளையை ஊரவர் சர்ப்பதேவி என்று அழைப்பது கேசவனுக்கு சங்கடம் தருவதாக இருந்தது. எனவே அவளுக்கு நல்ல ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று அவன் அறிவாட்டியிடம் வேண்டிக்கொண்டான். அறிவாட்டி நீண்ட காலம் விஜயராஜ விண்ணகரத்தில் தேவரடியாராகக் கடமையாற்றியவர். பல கலைகளை கற்றுத்தேர்ந்தவர். அவர் வைத்த பெயர்தான் ஆதினி.

உன்னுடைய குடும்பத்தின் “தொடக்கமானவள்” என்ற பொருள்பட ஆதினி என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று அறிவாட்டி சொன்னபோது கேசவன் மகிழ்ந்து போனான்.  நம்மைப்போல் இல்லாமல்  இவள் புகழோடு நீண்டநாள் வாழ்வாள் என்று  வாழ்த்தினாள் அறிவாட்டி. ஆதினிக்கும் அறிவாட்டிக்கும் இடையிலான பந்தம் அன்றுமுதல் ஆரம்பமானது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆதினி அறிவாட்டியின் வீட்டிலிருப்பாள். அறிவாட்டியின் நெருக்கத்தால் ஆதினியின் அறிவு வயதை மீறி வளர்ந்து வந்தது.

அறிவாட்டியின் வீட்டினைத் தவிர்த்து அவள் செல்லும் இடங்கள் அவள் குடும்பத்தின் உணவுத் தேவைக்கு ஏதோவொரு விதத்தில் உதவி செய்வதாக இருக்கும். சில சமயம் அவள் ஊருக்கருகில் இருக்கும் காட்டோரங்களில் கிடக்கும் காய்ந்த விறகுகளை சேகரிப்பாள், சில சமயம் ஊரவர் தோட்டங்களில் இருக்கும் காய்கறிகளைப் பறிக்க உதவி செய்வாள். அதில் அவளுக்கு வீடு கொண்டு செல்ல சிறு சன்மானங்கள் கிடைக்கும். மாலையானதும்  வாசுதேவ வாய்க்காலில்  விளையாடுவது அவளுக்கு பிடித்த விடயம். வீடுசெல்லும்போது துணியினால் வலைகட்டிப் பிடித்த மீன்களை இரவு உணவுக்காக எடுத்துச் செல்வாள். இடைச்சேரியிலுள்ள இடங்களெல்லாம் ஆதினிக்கு பரிச்சயமானது என்றாலும் அவளது வீட்டினை தவிர்த்து ஆதினியின் மனதுக்குப் பிடித்தமான இடங்கள் இரண்டுதான். ஒன்று அறிவாட்டியின் வீடு, மற்றையது வாசுதேவ வாய்க்கால்.

கந்தளாய்க் குளத்தில் இருந்து வெளிவரும் வாசுதேவ வாய்க்கால் சதுர்வேதி மங்கலத்துக்கூடாக ஊடறுத்து ஓடிவருகின்றது. அதில் இருந்து பல கிளைகள் பிரிந்து சதுர்வேதி மங்கலத்தின் பெரும்பகுதிக்கு நீர்பாய்ச்சுகிறது. சதுர்வேதி மங்கலத்தினைக் கடந்துவரும் வாசுதேவ வாய்க்கால் கம்மாளச்சேரியூடாக இடைச்சேரியை அடைந்து பறைச்சேரி, வண்ணாரச்சேரிகளைத் தனித்தனியாகப் பிரித்தபடி  பெரும் வயல் வெளிகளூடாகப் பயணித்து தம்பலகாமத்தினைச் சென்றடைகிறது.


இடைச்சேரியூடாகச் செல்லும் வாசுதேவ வாய்க்காலில் மக்கள் குளிப்பதற்கான பகுதிகள் மூன்று இருக்கின்றன. அவை எந்நேரமும் ஊரவர்களால் நிறைந்திருக்கும். கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கென தனியான பகுதி இருக்கிறது. ஆதினி விளையாடிக்கொண்டிருக்கும் ஆலமரத்தடி ஊரவர் குளிக்கும் இடங்களிலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது. முன்னம் மிகுந்த அகலமான வாய்க்காலாக இருந்த அந்தப்பகுதி நீண்ட காலம் சரியாக தூர்வாரப்பட்டு செப்பனிடப்படாததால் இன்று குறுகியதாகவும் பற்றைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

விழுதுகள் நிறைந்த மிக உயர்ந்த ஆலமரமும் அதை அண்டிய பகுதிகளில் ஆளுயர பிரப்பம் பற்றைகளும்,  வாய்க்கால் ஓரங்களில் உணவுக்குப் பயன்படுத்தக்கூடிய கீரை வகைகளும், மருத்துவக்குணம் நிறைந்த மூலிகைச் செடிகளும் இங்கு நிறைந்து காணப்படும். அந்த இடம் இயற்கை வனப்பு நிறைந்ததோடு   பறவைகளினதும், வண்டுகளினதும் ஒலிகளால் நிரம்பிய ஒரு இரம்மியமான பிரதேசமாகக் காட்சிதரும். அத்தோடு இங்கு ஆற்றில் வாழும் மீன்களைப் பிடிப்பதும் சுலபமாக இருக்கும். தனிமை விரும்பியான ஆதினிக்கு அந்த இடம் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கையில் வைத்திருந்த தோல்பைக்குள் அன்றைய காலை உணவுக்குத் தேவையான கீரைவகைகளை பறித்துக்கொண்டிருந்த ஆதினிக்கு தன் முதுகுப்பக்கம் இருந்து யாரோ உற்றுப்பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். கால்வாயிலோ அல்லது புதரிலோ எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அது தனது மனப்பிரமை என்று எண்ணியவாறே பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி தனது வேலையில் மூழ்கியிருந்தாள் அவள். திடீரென ‘முதலை’ என்று கத்தியபடி பின்னாலிருந்து வந்த திடகாத்திரமான இளைஞன் ஒருவனின் கை அவளது தோள்பட்டையைப் பிடித்து கால்வாய் அணைக்கட்டிலிருந்து கீழே தள்ளி விட்டது. கணநேரத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வில் அதிர்ச்சியாகி உருண்டு விழுந்தவள் உடைகளைச் சரிசெய்தவாறு எழுந்தாள். அப்போதுதான் ஆதினி கவனித்தாள் அவள் அமர்ந்திருந்து கீரைகளைப் பறித்துக்கொண்டிருந்த இடத்துக்குச் சற்று அருகாமையில் வாய் பிளந்தபடி முதலை ஒன்று ஆக்ரோசமாக இருந்தது. அந்த முதலையின் கீழ்த்தாடையில் பெரிய தடியொன்றினால் குத்தியபடி இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். தடி தாடையில் அழுத்தியதால் ஏற்பட்ட வலியினால் துடித்த முதலை ஒருமுறை தலையை பக்கவாட்டில் வேகமாக அசைத்து அந்தத் தடியினை வாயினால் கவ்வியபடி கால்வாய் நீருக்குள் சென்று மறைந்தது.

தனக்கு அருகில் சிதறிக்கிடந்த கீரைவகைகளை அள்ளி தோல்ப்பையில் போட்டுக்கொண்டு விறுவிறுவென்று ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஆதினி. இதற்குள் முதலை என்ற சத்தத்தையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் கேட்டு அருகில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடிவருவதையும், தன்னைக் காப்பாற்றிய இளைஞன் கால்வாய்க்கு குறுக்காகப் போடப்பட்டிருந்த பனங்குற்றியின் உதவியினால் கால்வாயின் அடுத்த பக்கத்திற்கு விரைந்து செல்வதையும் அவதானித்தபடி ஆதினி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். தன் உயிரைக் காப்பாற்றியவனின் பெயரையும் கேட்காமல், நன்றியும் சொல்லாமல் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டிருப்பது அவளுக்கு குற்ற உணர்வை தந்தது.

அடுத்தநாள் பொழுது வழமைபோலவே புலர்ந்தது. ஆதினிக்குத்தான் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. முன்னைய நாள் தன் உயிரைக் காப்பாற்றிய இளைஞனை மீண்டும் சந்திக்க முடியுமா? அவனிடம் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கமுடியுமா? அவன் யார்? எங்கிருந்து வந்தான்?  போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் அவள் மனதை குடைந்தவண்ணம் இருந்தன.

தொடரும்.

                                                             நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  மார்கழி  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )


 ஒலி வடிவில் கேட்க..........


 

 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment