Tuesday, January 10, 2023

எல்லைக்கல் - (ஆதினி பகுதி 4)


வழமைபோலவே வாசுதேவ வாய்க்காலுக்கு வந்த ஆதினி  எந்த அச்சமும் இன்றி முதலை அவளைக் கடிக்கத் துணிந்த அதே மரத்தின் கீழ் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல அந்தக் காலைப் பொழுதில் எந்த அதிசயமும் நடக்காததால் வழக்கம்போல தோல்பையில் கீரைவகைகளை பறித்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானாள். அப்போது அவள் பின்னால் இருந்து ஒரு குரல் ‘உனக்கு பயமே வரவில்லையா’ என்று கேட்டது. திரும்பிப் பார்த்தாள் நேற்றைய தினம் தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞன் எதிர்க்கரையில் நின்று கொண்டிருந்தான்.

“தைரியசாலிதான் நீ, உன் பெயர் என்ன?”  என்றான் அந்த இளைஞன். ஆதினி தன் பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்தியதோடல்லாமல் முதல்நாள் தன்னைக் காப்பாற்றியதற்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டாள். “ஏன் பெண்பிள்ளைகள் தைரியமாக இருக்கக் கூடாதா?” என்று கேட்டாள் அவள். “அப்படி இல்லை உன் தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த இடம் ஆபத்தானது”என்று கூறிய அந்த இளைஞன் தனது பெயர் நந்தன் என்றும், தனது ஊர் அதோ தொலைவில் தெரிகிறது என்றும் அடையாளம் காட்டினான். நந்தன் காட்டிய திசையில் வண்ணாரச்சேரி இருந்தது. அதில் மூன்று ஊர் இருப்பதாக அறிவாட்டி சொல்லியிருந்தது ஆதினிக்கு ஞாபகத்திற்கு வந்தது.

“ஏன் உங்கள் ஊரவரெல்லாம் சேர்ந்து இந்தப்பகுதி வாய்க்காலை தூர்வாரக்கூடாது” என்று கேட்டான் நந்தன்.

“தெரியவில்லை... இங்கு யாரும் முயற்சிக்கவில்லை” என்று ஆதினி வருத்தத்துடன் சொன்னாள்.

“சதுர்வேதி மங்கலத்து வாசுதேவ வாய்க்கால் எவ்வளவு சுத்தமாக இருக்கும் தெரியுமா?” என்று கேட்டான் நந்தன். பின்னர் “உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் அவன்.

ஆதினி சிரித்தவாறே “அதுதான் வருடா வருடம் பெருங்குறிப் பெருமக்களால் ஆழப்படுத்தி சுத்தப்படுத்தப்படுகிறதே அதால அழகாகத்தான் இருக்கும்” என்றாள்.

‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்’ என்று நந்தன் வியப்புடன் கேட்டான்.

‘அறிவாட்டி பாட்டியிடம் இருந்து கேட்டறிந்தேன்’ என்றாள் ஆதினி.

கந்தளாய் சதுர்வேதி மங்கலத்தில் இருக்கும் பெருங்குறிப் பெருமக்களின் ஊரவர் கூட்டமைப்பு வருடத்தில் ஒரு முறை கூடி கந்தளாய்க் குளத்தின் வாய்க்கால்களையும், கண்ணாறுகளையும் பராமரிப்பதற்கான முடிவுகளை எடுக்கும். இந்தப் பெருங்குறிப் பெருமக்கள் சபை சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களை அங்கத்துவர்களாகக் கொண்டது. கந்தளாயில் உள்ள ஏனைய சேரிப்புற மக்களின் சார்பாக ஊர்த்தலைவர்கள் அதில் கலந்து கொள்வார்கள். அனைத்து ஊர் மக்களாலும் வழங்கப்படும் வரியினால் கந்தளாய் குளத்து கால்வாய் தொடங்கும் பகுதியிலிருந்து சதுர்வேதி மங்கலத்துக்குள்ளிருக்கும்  வாய்க்கால்கள், கண்ணாறுகள் அனைத்தும் கிரமமான முறையில் தூர்வாரப்பட்டு செப்பனிடப்படும். இதனால் மழை நாட்களில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவானதாக இருக்கும். ஏனைய பகுதிகளுக்கு ஊடாக ஊடறுத்துச் செல்லும் கால்வாயின் பகுதிகள் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் மழை  வெள்ளம் ஏற்படும் நாட்களில் இப்பகுதி வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவது வழமையாகி இருந்தது.

நந்தனுடனான உரையாடலால் வீடுசெல்ல வேண்டிய நேரம் சற்று தாமதித்து போயிருப்பதை மரநிழலின் அளவிலிருந்து ஆதினி புரிந்துகொண்டாள். அவசரஅவசரமாக நந்தனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு ஆதினி வீடு நோக்கி விரைந்தாள். அன்றைய நாளின் நந்தனுடனான சந்திப்பு ஆதினியின் மனதுக்குள் ஒருவித இனம்புரியாத  கிளர்ச்சியை உருவாக்கி விட்டிருந்தது. அது என்னவென்று அவளால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

ஆதினியை வழியனுப்பிய பின்பு வசதியான மரக்கிளை ஒன்றில் ஏறிக்கொண்ட நந்தன் நீண்டு, நெளிந்து ஓடிவரும் வாசுதேவ வாய்க்காலை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தான். பொழுது புலராத காலை வேளைகளில் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து சேரிப்புறங்களுக்கு ஊடாகப்பாயும் இந்த வாய்க்காலின் முழுப்பகுதியையும் கால்நடையாகச் சென்று பார்த்து வந்திருக்கிறான். மழை கூடிய காலங்களில் கந்தளாய்க்குளத்தில் நீர்மட்டம் உயரும்போது வாய்க்கால் மதகுகள் அதிக அளவில் திறந்துவிடப்படும். அப்போது இந்த சேரிப்புறங்களெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி தரும். அந்த வெள்ளம் மண்குடிசைகளில் வாழும் மனிதர்களை இடம்பெயரச் செய்வதோடு, அவர்களது கால்நடை வளர்ப்புகளையும் அலைக்கழிக்கும். வெள்ளப்பெருக்கினாலும், அதனைத் தொடர்ந்து வரும் நோயினாலும் ஒவ்வொரு வருடமும் பலர் மரணிப்பதை அவன் நேரில் பார்த்திருக்கிறான்.

பெருங்குறிப் பெருமக்கள் சேர்க்கும் காசு சதுர்வேதி மங்கலத்து கால்வாய்களை மட்டுமே புணரமைக்கப் பயன்படுகிறது என்று முணுமுணுத்துக்கொள்ளும் சேரிப்புற மக்கள் ஏன் தாங்களாகவே முன்வந்து வருடத்தில் ஒருமுறையேனும் தங்கள் பகுதிக்கு ஊடாக செல்லும் கால்வாய்களையும், கண்ணாறுகளையும் தொண்டு அடிப்படையில் சீர் செய்ய முயல்வதில்லை என்பதுதான் அவனுக்குப் புரியாத புதிராக  இருந்தது. ஆனாலும் தனது சிந்தனையில் தெளிவு உள்ளவனாக தன் வயதையொத்த பல இளைஞர்களுடன் இணைந்து தங்களது பகுதி வாய்க்காலில் ஒரு சிறு பகுதியை முழுமையாகத் தூர்வாரி சில மாதங்களுக்கு முன்னர் சீர்செய்திருந்தான். அதை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய பகுதிகளையும் துப்பரவு செய்ய அவனது ஊர் மக்களை தூண்டிய போதும் அது அத்தனை தூரம் பயனளித்திருக்கவில்லை.

அவனது சிந்தனைகளைக் கலைப்பதுபோல் தூரத்தில்  மங்கலவாத்திய ஒலிகள் கேட்டது. திரும்பிப் பார்த்தான். சதுர்வேதி மங்கலத்துக்கும் இடையர்கல்லுக்கும் உரிய எல்லைப்பகுதியில் சிலர் கூடி நின்று ஏதோ செய்வதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அடுத்தநாள் காலை கிரமவித்தன் என்கின்ற பிராமணன் தலைமையில் அங்கு எல்லைக்கல் நாட்டப்பட இருப்பதாக ஊருக்குள் பேசிக்கொண்டது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. நிச்சயம் அந்த நிகழ்வைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவனாக மரத்திலிருந்து இறங்கி ஊரை நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் மிகுந்த உற்சாகத்துடனும் ஒருவித எதிர்பார்ப்புடனும் ஆதினி வாசுதேவ வாய்க்காலை நோக்கி விரைந்தாள். தூரத்தில் வரும்போதே நந்தன் வாய்க்காலின் எதிர்ப் பக்கத்தில் இருக்கும் பருத்த மரத்தின் கிளையில் இருந்தபடி சதுர்வேதி மங்கலம் அமைந்திருக்கும் திசையை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பதை காண்டாள். வாய்க்கால்கரையை வந்தடைந்த ஆதினி ‘என்ன விசேஷம் அப்படிப் பார்க்கிறீர்கள்’ என்று கேட்டாள். ‘இன்றைக்கு அங்கே எல்லைக்கல் நாட்டப்போகிறார்கள்’ என்றான் நந்தன். ‘ஏன் நாட்டுகிறார்கள்?  எப்படி நாட்டுவார்கள்?’ என்று  ஆர்வத்துடன் கேட்டவாறே நிகழ்வினைப் பார்ப்பதற்காக ஆதினி மரக்களையில் ஏறத்தொடங்கினாள்.

முன்னம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஒன்றில் இடையர்கல்லில் இருந்த எல்லைக்கல் நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டு வீசப்பட்டதோடு , சிதைந்தும் போனது என்பதால் அதனைச் சம்பிரதாயபூர்வமாக மீண்டும் நாட்டுவதற்கான விழாதான் இதுவென்றான் நந்தன். எல்லைக்கல் நாட்டவேண்டிய இடத்தில் தண்ணீர் ஊற்றி பெண் யானையை அழைத்துவந்து அதன் கால்களால் நிலத்தினை உழுவார்கள். பின்னர் அந்த இடத்தில் எல்லைக்கல் நாட்டப்படும். இந்நிகழ்வினை  சதுர்வேதி மங்கலத்து கிரமவித்தன் என்ற பிராமணன் தலைமையேற்று நடத்த இருக்கிறார் என்ற தகவல்களை நந்தன் விவரமாகச் சொல்லி வந்தான். 


கிரமவித்தன் என்றதும் ஆதினிக்கு அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் உருவானது. தன் தந்தை மிகுந்த கடன் சிரமத்தில் இருக்கும்போது காப்பாற்றியவரை வாழ்வில் ஒருமுறையேனும்  பார்த்துவிடவேண்டுமென்று ஆதினி ஆசை கொண்டிருந்தாள். அது இத்தனை சுலபத்தில் நிறைவேறிவிடும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. எனவே தான் அமர்ந்திருந்த கிளையில் இருந்து விடுவிடுவென்று எறி எல்லைக்கல் நாட்டுமிடம் நன்றாகத் தெரியக்கூடிய கிளையொன்றில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டாள்.

அவள் கிளையை அடையவும் மேளதாளங்கள், நாதஸ்வரம் முதலான மங்கல வாத்தியங்களின் ஒலி முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துவரும் நிகழ்வு ஆரம்பித்திருந்தது. சற்று நேரத்தில் அங்கு ஒரு பல்லக்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஒரு உயர்ந்த மனிதர் இறங்கினார். தூரம் அதிகமென்பதால் அவரது முகத்தினை துல்லியமாக ஆதினியினால் பார்க்க முடியவில்லை.  அவர்தான் கிரமவித்தன் என்பதை நந்தனின் பேச்சு உறுதிப்படுத்தியது. அவரது வருகையின் பின் சுமார் மூன்று நாழிகைநேரம் நந்தன் கூறியதுபோல் சடங்குகள் இடம்பெற்று பின்னர் எல்லைக்கல் நிறுவப்பட்டது.

‘எல்லைக்கல்லை ஏன் நாட்டுகிறார்கள் ?’ என்று ஆதினி கேட்டாள்.

‘உங்களுடைய எல்லை அந்தக் கல்லுடன் முடிந்துவிடுகிறது’ என்று கொடுப்புக்குள் சிரித்தவாறே நந்தன் பதிலளித்தான்.

வர்ணம் என்ற பாகுபாட்டால் ஒவ்வொரு மனித பிரிவுகளும் தமக்குத்தானே வட்டங்களைப் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அறிவாட்டிப் பாட்டி அவளுக்குச் சொல்லியது ஞாபகத்துக்கு வந்தது. தொடர்ந்து வந்த நாட்களிலும் உரையாடல்கள் தொடர்ந்தன. வாழ்க்கை எனும் பெருவெளியில் அது ஒரு சிறிய பகுதிதான் என்றாலும் ஆதினியின் வாழ்வில் மகிழ்ச்சியான மறக்க முடியாத நாட்கள் அவை. அறிவாட்டிப் பாட்டியைப்  போலவே நந்தனிடமிருந்து ஆதினி கற்றுக்கொண்டவைகள் ஏராளம். ஆடல், பாடல், ஆலயத்தொண்டு முறைகள்,  புராணங்கள் என்பன அறிவாட்டிப் பாட்டியிடமிருந்து ஆதினிக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஆனால் நந்தனுடைய பார்வை வித்தியாசமானது. சமூகம் சார்ந்தது. சமூக முன்னேற்றம் பற்றிய அவனது கனவுகள் ஆதினிக்குப் புதியவை. அவன் தன்னுடன் இணைந்து செயற்படக்கூடிய சிலரைச் சேர்த்துக் கொண்டு தனது சிற்றூரின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் விரிவாகச் சொல்லிவந்தான்.

ஆதினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது சமூக எல்லைகளை மீறி அவனுக்குள் பெரிய கனவு இருந்தது. வாழ்நாளில் தான் ஏதோவொரு பெரிய சாதனையைச் செய்வேன் என்று அவன் உறுதியாக நம்பிக்கொண்டு இருந்தான். சாதனை செய்ய வேண்டும் என்று உறுதி கொண்ட ஒருவருக்கு இந்த எல்லைக்கல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல் நந்தனுடைய பேச்சுக்கள் அமைந்திருந்தன.

தொடரும்.

                                                             நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  தை  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )



ஒலி வடிவில் கேட்க..........



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment