Saturday, April 01, 2023

வைராவியர் குலமகள் (பூமகள்) - (ஆதினி பகுதி 7)


நரபலி கதையை அறிவாட்டிப் பாட்டி சொல்வதாகச் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆதினி குட்டி போட்ட பூனையாக அறிவாட்டியின் வீட்டில் நாள்தோறும் வலம் வந்து கொண்டிருந்தாள். அறிவாட்டியை தனிமையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. உறவு என்று சொல்ல யாருமே இல்லாமல் இடையர்கல்லிற்கு வந்த அறிவாட்டிப் பாட்டியின் ஆரம்ப நாட்கள் பற்றி முன்னம் கோமதி சொல்ல ஆதினி கேட்டிருக்கிறாள்.வாசுதேவ வாய்க்கால் பெருக்கெடுத்து பயிர் நிலங்களையும், கால்நடைகளையும் நாசம் செய்து ஊரில் பஞ்சம் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நாளொன்றில் அறிவாட்டி ஊருக்கு வந்ததாகச் சொன்னாள்.

அறிவாட்டியின் வருகையை ஊரிலுள்ள வயது வந்த பெரியவர்கள் அனைவரும் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறார்கள். விஜயராஜ விண்ணகரத்தில் அறிவாட்டி தேவரடியாராக தொண்டாற்றிய காலத்தில் அவளது நடன திறமைக்கு கிடைத்த பொன்னையும், பொருளையும் கொடுத்து ஆறு மாட்டு வண்டில்களில் தானியங்களையும், கிழங்குகளையும் ஊருக்கு கொண்டு வந்ததை கோமதி ஞாபகப்படுத்தினாள். அன்றைய நாட்களில் அவளது வருகையை ஊரே கொண்டாடி வரவேற்றிருக்கிறது. அந்த நன்றியை ஊர்மக்கள் என்றும் குறையாமல் வைத்திருந்தார்கள். 

ஊரவர் துணையுடன் தனக்கான குடிசையை அமைத்துக் கொண்ட அறிவாட்டி, அவளது தேவைக்கு அதிகமானதாகக் குடிசையின் திண்ணைப் பகுதியை அமைத்தது ஊரில் பலருக்கும் வியப்பை தந்தது. ஆரம்ப நாட்களில் அறிவாட்டியின் பூர்வீகத்தையும், அவளது எண்ணங்களையும் புரிந்து கொள்ள முயற்சி செய்த ஊரவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தம்பலகாமத்து தடித்த தோல்காரி என்ற சொற்பதம் அறிவாட்டியைக் குறிக்க ஊரில் வழக்கத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம். இருந்தாலும் ஊரவர் அவர்மேல் வைத்திருக்கும் அன்புக்கும், மரியாதைக்கும் எந்தக் குறைவும் அதனால் ஏற்பட்டதில்லை.

அறிவாட்டி தன் குடிசையின் திண்ணைப் பகுதியை ஏன் பெரிதாக அமைத்தாள் என்பதை ஊரவர் புரிந்து கொள்ள மூன்று மாதங்கள் எடுத்திருக்கிறது. விஜயராஜ விண்ணகரத்தில் தான் கற்றுத் தேர்ந்த மருத்துவத்தை ஊர் மக்களுக்கு வழங்க அந்த இடத்தை அவள் உபயோகப்படுத்தத் தொடங்கினாள். ஓய்வு நேரங்களில் தனக்குத் தெரிந்த கைவினை நுட்பங்களை ஊர்ப் பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவும் அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். இவற்றிற்கெல்லாம் ஊரவர் காட்டும் நன்றி உணர்ச்சிதான் ஆதினி அறிவாட்டியை நெருங்குவதற்கு தடைக்கல்லாக இருந்தது.

ஒரு நாள் மதிய நேரம் யாரும் எதிர்பார்க்காத கண நேரத்தில் வானம் கறுத்து மழை கொட்டத் தொடங்கியது. அறிவாட்டி வீட்டில் உதவி செய்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் அவர்களது வீடு நோக்கி ஓட வேண்டியதாகிப் போனது. தனது வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அப்போதுதான் வந்திருந்த ஆதினிக்கு அது வசதியாகப் போனது. திடீரெனப் பெய்த மழை மண்ணை நனைத்த வாசம் குடிசை முழுவதையும் நிறைத்திருந்தது. வாசல் கதவைப் பூட்டிவிட்டு சுவரோரமாக உட்கார்ந்த அறிவாட்டிக்குப் பக்கத்தில் சென்று ஆதினி அமர்ந்துகொண்டாள்.

பாட்டி.......... பாட்டி......... ஆதினி ராகம் பாடினாள்.

நரபலியா ? எனக்கு நீ வீட்ட சுற்றி சுற்றி வரும்போதே தெரியும்.

சொல்லுங்க பாட்டி. சொல்லுங்க பாட்டி. எனக்கு கேக்காட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு.

ஒரு நீண்ட மௌனத்தின் பின் பாட்டி மீண்டும் பேசத் தொடங்கினாள். கனகாலத்துக்குப் பிறகு நினைச்சுப் பாக்கிறன். இடையில கேள்வி கேட்டு என்னக் குழப்பக் கூடாது.

இடைமறித்தாள் ஆதினி. என்ன பாட்டி உங்க ஊர்ல இப்படித்தான் கத சொல்லத் தொடங்குவாங்களா ? 

இல்ல இது கதை இல்ல. உன்ன மாதிரி நான் இருக்கக்குள்ள எங்களுக்கு நடந்தது. திரும்ப நினைக்கவே உடம்பெல்லாம் நெருப்பா கொதிக்குது. அறிவாட்டிப் பாட்டியின் சொற்களில் இருந்த உஷ்ணம் ஆதினியை பேச்சிழக்கச் செய்தது. மீண்டும் அந்த குடிசையை அமைதி ஆக்கிரமித்துக் கொண்டது.

நன்றாக நினைவிருக்கிறது. அது ஒரு மாலை நேரம். தம்பலகாமத்தின் கரிக்கட்டை மலையாற்று வெளியில் நானும், பூமகளும் வயல்வெட்டின் பின் சிதறிக் கிடந்த நெற் கதிர்களை சேகரித்துக் கொண்டிருந்தோம். கரிக்கட்டை மலையாற்று வெளி ஒரு பரந்த வயல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல்களால் நிறைந்த பிரதேசம். வயல்வெளியின் எல்லையாக இருந்த காட்டு மரங்கள் காற்றில் அசையும் ஓசை ஒருவித பய உணர்வை பதிதாக வருபவர்களுக்குத் தரவல்லது. எங்கள் இருவருக்கும் நினைவு தெரிந்த நாளில் இருந்து அது விளையாட்டுப் பிரதேசமென்பதால் கலகலப்பாக சிரித்த வண்ணம் இருந்தோம்.


என் தோழி பூமகள் துடிப்பானவள். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக வளர்ந்து வந்ததால் என் மனதுக்கு நெருக்கமானவள். பூமகள் திருக்கோணேச்சரத்தில் தொழும்பு செய்யும் வைராவியரின் ஒரே மகள். நிலத்தை ஆழப் பிறந்த நிலமகள் என்பதால் தன் தந்தை தனக்கு பூமகள் என்று பெயர் வைத்ததாக என்னேரமும் பெருமை பேசிக்கொள்வாள். 

நாங்கள் இருவரும் பாட்டு பாடிக்கொண்டே கதிர்களை சேகரித்துக் கொண்டிருந்த பொழுது எனது தம்பி மாதவன் வேர்க்க விறுவிறுக்க தூரத்தில் ஓடி வருவது தெரிந்தது. நான் அதிர்ச்சியாகிப் பின் அவனை நோக்கி அம்மா.......... என்று கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினேன். பூமகள் என்னைத் தொடர்ந்து ஓடி வந்தாள்.

சில மாதங்களாக எங்கள் ஊரில் ஒரு வகை நோய் பரவி இருந்தது. திடீரென ஏற்பட்ட வயிற்றோட்டத்துடன் கூடிய வாந்தியைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதன் முதலில் பெரிய திடலில் ஒருவர் இறந்து போனார். பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த திடல்களிலும் அதே மாதிரியான மரணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழத்தொடங்கி இருந்தது. நாங்கள் வசித்த நாயன்மார் திடலில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இதேபோல ஒருவர் இறந்து போயிருந்தார். அன்று காலை நான் வரும்போது அம்மாவுக்கு இலேசாக மூச்சுத் திணறல் இருந்தது ஆனால் வயிற்றோட்டமோ, வாந்தியோ இருக்கவில்லை. நான் பலமுறை சொல்லியும் அம்மா ஓய்வெடுக்க விரும்பவில்லை. வழக்கம் போல எல்லா வீட்டு வேலைகளையும் செய்து கொண்டிந்தாள். நான் அவளுக்கு முடிந்தவரை ஒத்தாசையாக இருந்து உதவிட்டே பூமகளுடன் வயலுக்கு வந்திருந்தேன்

அருகில் வருவதற்கு முன்னரே ‘பூமகள் அக்காவை அவசரமாக வரச் சொன்னாங்க’ என்று கூவிக் கொண்டு வந்த மாதவனின் சத்தம் என் ஓட்டத்தை தளர்த்தி நடையாக்கியது. ஆனால் அந்த செய்தியைக் கேட்ட பூமகள் திடீரென நிற்க முயற்சித்து நிதானம் தவறி வயல் வரம்பில் விழுந்தாள். நல்ல வேளையாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. நானும், மாதவனும் பூமகள் எழுவதற்கு உதவினோம். ‘வைரவர் பூசையில் கலந்து கொள்ள அவசரமாக பூமகள் வரவேண்டுமாம்’ இதுதான் பூமகளின் தந்தை மாதவனிடம் சொல்லியனுப்பியிருந்த செய்தி.

ஊரெல்லாம் நோய் பரவியதிலிருந்து வைரவருக்கு மடை வைக்க வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுத் தொடங்கியிருந்தன. வைரவரின் கோபம்தான் இந்த நோய்க்கு காரணம் என்று ஊரில் பலரும் பேசிக்கொண்டதை நாங்கள் அறிந்திருந்தோம். விடயத்தைச் சொல்லி முடித்த மாதவன் அவனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக உற்சாகத்தோடு ஊரை நோக்கி ஓடத் தொடங்கினான்.

மாதவா...

என்னக்கா ? எரிச்சலோடு கேட்டான்.

யாரெல்லாம் வந்திருக்காங்க ?

பூமகள் அக்காட உறவுக்காரங்க எல்லாம் பக்கத்து ஊர்களில இருந்து வந்திருக்காங்க. ஊர்த் தலைவர்மாரெல்லாம் கூடியிருக்கிறாங்க.

என்னத்துக்கு ?

வைரவருக்கு மடை வைக்கத்தான்.

அதுக்கு ஏன் பூமகள் ?

மாதவனிடம் பதில் இல்லை. அவன் திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போய்விட்டான்.

பூமகளுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஊருக்காகச் செய்யும் பூசையில் தன்னையும் முக்கியப்படுத்தி தந்தை அழைத்திருக்கிறார் என்பதே அவளுக்கு பெருமிதம் தருவதாக இருந்தது. அவளது துள்ளல் நடையிலும், மகிழ்ச்சியான முகத்திலும் அதனைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இருவரும் விரைவாக வயல்வெளியைக் கடந்து மாக்கைத் திடல் ஊடாக குஞ்சடப்பன் திடலுக்கு வந்து கோயிலடியை அடைந்தோம். வைராவியரின் வளவு முழுக்க மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். இருவரும் தயங்கித் தயங்கி வீட்டின் அருகே சென்றோம்.

‘பூசை நடக்கிற நேரம் இப்படியா காடு மேடெல்லாம் திரிஞ்சிட்டு வருவ. ஓடிப்போய் குளிச்சிட்டு வா’ என்று அதட்டினாள் பூமகளின் பாட்டி. வீட்டுக்குள் இருந்து விறுவிறுவென வந்த பூமகளின் தாய் அவசர அவசரமாக பூமகளை உள்ளே இழுத்துச் சென்றாள். பூமகளுடன் உள்ளே செல்ல எத்தனித்த எனது தலைமுடியை கொத்தாகப் பிடித்து ஒருவர் இழுத்தது வலித்தது. நிமிர்ந்து பார்த்தேன். பூமகளின் பாட்டியின் கண்டிப்பான பார்வையைப் புரிந்து கொண்டு வீட்டுக்கு வெளியில் வந்தேன்.

வைராவியர் வீட்டு முற்றம் முழுவதும் ஆண்களும், பெண்களுமாகப் பலர் கூடி நின்று ஏதோவொரு முக்கிய விடையமொன்றைப் பேசிக்கொண்டிருந்தார்கள். வளவின் ஒரு மூலையில் சிறுவர் பலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பூமகள் இல்லாமல் எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை. எனவே முற்றத்தில் நின்ற சிறிய தென்னை மரத்தின் நிழலில் இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கனகவல்லிப் பாட்டியின் அருகில்போய் அமர்ந்து கொண்டேன்.

யார் பாட்டி இவங்கெல்லாம் ? பொறுமை இழந்தவளாக  கனகவல்லிப் பாட்டியிடம் கேட்டேன். பாட்டி ஊர் விடயங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவள் என்று பெயர் எடுத்தவள்.

வைராவியரிட சொந்தங்கள்தான். திருகோணமலை, நிலாவெளி, குச்சவெளி, கொட்டியாரம், கந்தளாயில இருந்து எல்லோரும் வந்திருக்காங்க.

ஏன் பாட்டி திடீரெண்டு

உனக்குத் தெரியாதா ? வைரவருக்கு மடை வைக்கப் போறாங்க.

ம்... தெரியும் அதுக்கு பூமகள் என்னத்துக்கு.

பூக்கட்டிப் பாக்கத்தான்.

குடவோலை எடுக்கும் போதுதானே சின்னப்பிள்ளைகளை எடுக்கச் சொல்லுவாங்க. பூக்கட்டிப் போடிறதுக்கு ஏன் பூமகள் ?

உனக்கு விசயமே தெரியாதா ? கனகவல்லிப் பாட்டி என்னை அதிசயமாகப் பார்த்தாள்.

எனக்கும், பூமகளுக்கும் ஒன்றுமே தெரியாது பாட்டி. திடீரெண்டு வரச்சொன்னாங்க என்று நான் பதட்டத்துடன் சொன்னேன்.

வைராவியர் குலத்தில நாலு கன்னிப்பெண்கள் இருக்கிறாங்க. அதில உன்ர தோழி பூமகளும் ஒருத்தி. இந்த நான்கு பேரில ஒருவர மடைக்கு தெரிவு செய்யத்தான் பூக்கட்டிப்போடப்போறாங்க.

மடையில பூமகளா ? என்ன பாட்டி சொல்லுறீங்க. சாதாரணமாக பூசை வைக்கக்குள்ள பூசாரி சாமியாடினாலே பூமகள் மயங்கி விழுந்திடுவாளே பாட்டி என்றேன்.

ஏதோ சொல்ல வந்த பாட்டி எச்சில் விழுங்கினாள்.

அந்த நேரம் பார்த்து வைராவியர் வீட்டின் வாசல் பக்கமாக சலசலப்புக் கேட்டது. எல்லோருடைய கவனமும் அங்கு குவிந்தது. முதலில் வைராவியர் வந்தார். அவரைத் தொடர்ந்து ஆண்கள் சிலர் வந்தனர். அவர்களது அங்க அமைப்புகள் வைராவியரின் உறவினர்கள் அவர்கள் என்பதை உணர்த்துவதாய் இருந்தது. இவர்களைத் தொடர்ந்து வெண்ணிற சேலையணிந்த சின்னப் பெண்பிள்ளைகள் நடக்கத் தெரியாமல் கால்கள் தடக்க குனிந்த தலை நிமிராமல் முன் சென்றவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அதில் மூன்றாவதாக பூமகளும் இருந்தாள். பூமகள்........ என்று கத்திக்கொண்டு நான் எழும்பி ஓட எத்தனித்தபோது என்னை இறுக்கி கனகவல்லிப் பாட்டி பற்றிக்கொண்டாள். என்னால் அசைவே முடியாமல் போனது. அப்போதுதான் பார்த்தேன். என்னைப் போலவே சிறியவர்களும், பெரியவர்களுமாகப் பல பெண்களை அருகில் இருந்தவர்கள் பற்றிப் பிடித்திருந்தார்கள். பல்வேறு பெயர்களைச் சொல்லி பிடிபட்டிருந்தவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.

பாட்டியின் பிடியில் இருந்தவாறே தலையைத் திருப்பிக் கேட்டேன். ‘உண்மையைச் சொல் பாட்டி இங்க என்ன நடக்குது?’ அடக்க முடியாமல் அழுகை வந்துவிடும்போல் இருந்தது.

உட்காரு சொல்கிறேன் என்றாள் கனகவல்லிப் பாட்டி.

வரிசையாகச் செல்பவர்களுக்குப் பின்னால் முற்றத்தில் கூடி நின்றவர்களும் செல்வதைப் பார்த்துக் குழம்பி நின்றேன்.

கிராம சாந்தி வைரவரிட்டதான் போறாங்க. இவங்க யாரையும் அங்க விடமாட்டாங்க என்ற பாட்டியின் குரலைக் கேட்டு வேறுவழியின்றி அவள் காலடியில் அமர்ந்தேன்.

உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கி இருந்தது. பாட்டி அதனைப் புரிந்து கொண்டு பயப்படாத இப்ப பூக்கட்டிப் பார்க்கத்தான் போறாங்க என்றாள்.

பூ விழுந்தவங்கள என்ன செய்வாங்க பாட்டி ? நடுங்கும் குரலில் கேட்டேன்.

நாளை காலையில வைரவர் மடையில பலி குடுப்பாங்க. 

என் கண்ணுக்குள் பல பயங்கர உருவங்கள் வந்து போனது. நான் ஆகாயத்தில் இருந்து தவறி விழுவது போல உணர்தேன். பயந்து அலறிக் கத்தியபோதும் சத்தம் ஏதும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. கை, கால் என்று உடலின் ஒரு அங்கத்தையும் அசைக்க முடியாமல் இருந்தது. திடீரென முகம் முழுக்க குளிர்ந்த நீர் பரவ திடுக்கிட்டு விழித்தேன். கனகவல்லிப் பாட்டி தன்மடியில் என்னைக் கிடத்தி தலையைக் கோதிக்கொண்டு இருந்தாள்.


தொடரும்...............


நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

நன்றி   -  2023  சித்திரை  தாய்வீடு இதழ்


நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )
ஒலி வடிவில் கேட்க..........இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment