Friday, January 06, 2023

இடையர்கல் - (ஆதினி பகுதி 2)


கதை கேட்கிற அவசரத்தில 1996 என்று நினைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆதினியின் கதை இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் நடந்தது.

கி.பி 1096 ஆவணி மாதம் நான்காம் திகதி மாலை நேரம்.

மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு பிரம்மாண்டமான அணைக்கட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கந்தளாய் குளம் மாலை நேரச் சூரிய ஒளியில் மனதுக்கு இதமான காட்சியைத் தருகிறது. கந்தளாய்க் குளக்கட்டின் ஊடாகச் செல்கின்ற பெருந்தெரு நம்மை பிராமணர்கள் வாழ்கின்ற சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேயத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.

குளத்துக்கு அருகில் உள்ள மேடான நிலப்பரப்பில் விஜயராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண குடியிருப்பு அமையப்பெற்றிருக்கிறது. குடியிருப்பின்  தாழ்வான சுற்றயல் பகுதிகளில் வடபிடாகை, தென்பிடாகை என்ற இரு பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றில் கம்மாளச்சேரி, பறைச்சேரி, இடைச்சேரி, வலைச்சேரி, தீண்டாச் சேரி, வண்ணாரச்சேரி முதலான பல்வேறு சேரிப்புறங்கள் அமைந்திருக்கின்றன. கந்தளாய் குளத்தில் இருந்து நீரைக் கொண்டுவரும் இரண்டு பெரும் வாய்க்கால்களான விக்ரமசோழ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால் என்பன சதுர்வேதி மங்கலத்தினை ஊடறுத்து விக்ரமசோழ வாய்க்கால் வடபிடாகை ஊடாகவும் வாசுதேவ வாய்க்கால் தென்பிடாகை ஊடாகவும் செல்கிறது. இவற்றிற்கு இடைப்பட்ட பிரதேசங்களை மேற்படி வாய்க்கால்களில் இருந்து வரும் கிளையாறுகளான கண்ணாறுகள்  வளமுள்ளதாக்கின்றன.

விஜயராஜ சதுர்வேதிமங்கலம் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்டமைந்த ஒரு நகரப்பகுதியாகும். ஆலயங்கள், மருத்துவமனை, அரச கட்டிடங்கள்,அங்காடிகள், மடங்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடியிருப்புகள் என்று மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட பிரதேசம். இங்கிருக்கும் ஆலயங்கள் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட கற்றளிகள். நகர மத்தியில் விஜயராஜேஸ்வரம் என்ற மிகப்பெரிய சிவாலயமும் அவ்வாலயத்தில் இருந்து அரைமைல் தொலைவில் கிழக்குப் பக்கமாக முத்தங்கை அம்மன் ஆலயமும் தெற்குப் பக்கமாக சிலமைல் தொலைவில் விஜயராஜ விண்ணகரமும் அமையப்பெற்றிருக்கின்றன. விஜயராஜ விண்ணகரம் ஒரு விஷ்ணு கோயில். இதற்கருகில் இருக்கும் மருத்துவமனைக்கு வீரசோழன் ஆதுலர் சாலை என்று பெயர்.

சதுர்வேதி மங்கலத்தில் இருக்கும் பெருந்தெருக்கள், அங்காடிகள், மடங்கள் என்பனவற்றைப் பார்வையிட்டவாறே ஊரின் எல்லைப்பகுதிக்கு வந்தால் அங்கே செப்பனிடப்படாத குண்டும், குழியுமான வீதிகளைப் பார்க்கலாம். அவற்றில்  முதலாவதாக இடதுபுறம் திரும்பும் அகலமான வீதி  நம்மை இடைச்சேரிக்கு அழைத்துச் செல்லும். தூசு நிறைந்த தெருவில் கால்நடைகளின் கழிவுகளில் மிதிபடாமலும், சிறுசிறு முட்புதர்களில் கால்களைக் கீறிக்கொள்ளாமலும் நடந்து சென்றால் நாம் இடைச்சேரியை அடையலாம். அங்கு அருகருகாக ஆறு சிற்றூர்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இடையர்கல்.

இடைச்சேரியிலுள்ள வீடுகள் களிமண்ணினால் கட்டப்பட்டவை. அவற்றின் கூரை தென்னோலையினால் வேயப்பட்டிருக்கும். பெரிதும் சிறிதுமாக தங்களுக்குரிய வசதிகளுக்கேற்ப இடைச்சேரி மக்கள் தங்கள் வீடுகளை அமைத்து இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்கு அருகிலேயே தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சிறிய பட்டிகளையும் அமைத்திருக்கிறார்கள்.

இடைச் சேரியில் உள்ள தெருக்கள் பெரும்பாலும் மக்களதும், கால்நடைகளதும் நடமாட்டத்தால் உருவானவை. அவை ஒருபோதும் வீதிகளாக அமைக்கப்படாதவை. எல்லாச் சிற்றூருக்கும் பொதுவான பெருந்தெரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட போதும் பல வருடங்களாக செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாகக் காட்சி தருகிறது.


இடைச்சேரியில் பெரும்பாலானவர்களின் வீட்டுக்கு வெளியே கிடாய் தோலினாலான படுக்கையைக் காணக்கூடியதாக இருக்கும். இரவுகளில் வீட்டையும் கால்நடைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கு பொருத்தமான கண்காணிப்பிடமாக அது அமைந்திருக்கிறது. தனிநபர்களின் வீடுகளைத் தவிர பொது கட்டிடங்களை இங்கு காண்பது அரிது. கல்லாலான கோயில் எதுவும் இங்கு காணப்படவில்லை. ஆனால் பொதுவான இடங்களில் உள்ள பெரிய மரத்தின் அடியில் மடை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளைக் காணக் கூடியதாக இருக்கின்றன.

கல்விச்சாலைகள் ஏதும் இல்லாததால் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை நாம் வீதியில் காணக்கூடியதாக இருக்கும். சற்றுப்பெரிய பிள்ளைகள் தங்களது தாய் தந்தைக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். பெண்கள் பெரும்பாலும் தயிர், வெண்ணெய், நெய் உருவாக்குவதில் கவனம் செலுத்துவார்கள். ஆண்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதிலும் தயிர், வெண்ணை, நெய் முதலான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துவார்கள். சிலர் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு கிழங்கு வகைகளையும், காய்கறிகளையும் உற்பத்தி செய்யக்கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான இடைச்சேரி மக்கள் விஷ்ணுவை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு அவர்களிடையே பல்வேறு வகைப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளும் பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. இடைச்சேரி மக்கள் அனைவரும் மந்தை மேய்ப்பதினைத் தொழிலாகக் கொண்டிருக்கின்ற போதும் அவர்களிடையே நார்க்கட்டி இடையர், மணிக்கட்டி இடையர், கல்கட்டி இடையர், சிறுதாலி, பெருந்தாலி இடையர் போன்ற பல்வேறு உட்பிரிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும்.

நாம் வந்து சேர்ந்த நேரத்தில் கேசவன் என்று அழைக்கப்படுகின்ற சுமார் நாற்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க மனிதர் இடையர்கல்லின் பிரதான தெருவில் தனது வீட்டினை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார். கேசவனுடைய நடையில் ஒரு தளர்வு இருந்தது. வீடு நோக்கி செல்கிறோம் என்ற ஆவல் அவருக்கு துளியளவும் இருப்பதாக உணரமுடியவில்லை. கடந்து செல்லும் சகமனிதர்களோ அல்லது கால்நடைகளோ அவரது கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை. எதையோ தொலைத்து விட்ட யோசனையோடு பாதையை வெறித்துப் பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறார்.

நமது கதையின் நாயகி ஆதினியைச் சந்திப்பதாக இருந்தால் கேசவனுக்கு பின்னால் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆதினி கேசவனின் மகள். மாலை நேரங்களில் அவள் எங்கே இருப்பாள் என்று யாராலும் சொல்லிவிட முடியாது. ஆனால் கேசவன் வீட்டு வாசற்படியை மிதிப்பதற்கு முதல் அவள் என்னவோ சாகசங்கள் செய்து வீட்டுக்கு வந்து விடுவாள் என்பது ஊரறிந்த இரகசியமாக இருந்தது.

கேசவன் கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்கொண்ட பல துன்பகரமான திருப்பங்கள் அவர் முகத்தில் பல கவலை ரேகைகளை கீறிவிட்டிருந்ததோடு திடகாத்திரமான அவரது உடலிலும் தனது கைவரிசையை காட்டி இருந்தது. இந்த வயதில் அவர் அறுபது வயது மதிக்கத்தக்கவர் போல தோன்றுவதற்கு இந்தக் குறுகிய காலத்தில் அவர் சுமந்த வாழ்க்கைச் சுமையே காரணமாகிப்போனது.

நீண்ட நாட்களாக சீவப்படாத நரை முடிகள் நிறைந்த தலையும், எதிலும் ஆர்வம் இல்லாது அலட்சியமாக நோக்கும் கண்களும், ஒட்டிப்போன கன்னங்களுமாக காட்சி தருகிறார் கேசவன். கடின உழைப்பினால் உரமேறிப்போய் இறுகியிருந்த அவர் உடம்பில் மாடு, ஆடு மேய்ப்பில் ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் நிறைந்திருக்கிறது. தினமும் வெயிலில் வேலைசெய்து கறுத்துப்போயிருந்த உடம்பின் இடைக்கு கீழான பகுதியை அழுக்கு நிறைந்த வேட்டி மறைத்திருக்கிறது. இடையின் இடதுபக்கத்தில் தீக்கடை கோலினைச் சுமந்த தோல்பையொன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. கழுத்தில் வாடிப்போன காந்தள் மலர்களாலான மாலை காய்ந்து போயிருந்தது. அது அவரது நடைக்கேற்ப அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தது. அவருடைய வலது கையில் துணியிலான பை எதையோ சுமந்தபடி இருக்கிறது. உறிகளைத் தாங்கி மரத்துப் போயிருந்த வலதுபக்க தோளினை அடிக்கடி தனது இடது கையினால் அழுத்திப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தார் கேசவன்.

மாலைநேரம் வீடு திரும்பும் கால்நடைகளாலும் அதன் மேய்ப்பர்களாலும் எழுப்பப்படுகின்ற புழுதிக்கு நடுவில் ஒரு கரு நிழலாக கேசவன் அசைந்து கொண்டிருக்கிறார். அவருடைய நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் அவர் எதிர்கொண்ட துன்பியல் நிகழ்வுகளை மீள அசைபோட்டவண்ணம் இருக்கிறது.

அவரது வாழ்வின் துன்பம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. திருமணம் முடித்து ஐந்தாண்டுகளின் பின் ஆதினி பிறந்த சந்தோசத்தில் கடனுக்கு அதிகளவிலான ஆடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். வீட்டுக்கருகில் இருந்த இடம் போதாமையினால் கந்தளாய்க் குளத்திற்கு அருகில் இருந்த காட்டை அண்டிய மேய்ச்சல் நிலப்பரப்பில் பட்டிகட்டி ஆடுகளை வளர்த்து வந்தார். அருகில் ஒருசிலர் சிறியளவில் ஆட்டுப்பட்டிகளை வைத்திருந்தமை கேசவனுக்கு உதவியாகவும் இருந்தது. ஒரு ஆறு மாதகாலம் எல்லாம் நல்லபடியாகவே உருண்டோடியது. அவர் பல கனவுகளோடு வளர்த்து வந்த ஆட்டுப் பட்டியினை சிறுத்தைகள் குறிவைக்கத் தொடங்கியதில் இருந்து பிரச்சனை ஆரம்பமானது. ஆடுகளை அவர் பாதுகாப்பான பகுதி ஒன்றுக்கு மாற்றிக் கொள்வதற்கு முன்னமே பல ஆடுகளை சிறுத்தைகள் கொன்று விட்டிருந்தன. இந்த விரக்தியில் மிகுதி ஆடுகளை அவர் விற்றுவிட்டார். விற்ற பணம் அவர் எடுத்த கடனின் முதலின் ஒரு பகுதியையும், வட்டிப்பணத்தையும் கட்டமட்டுமே போதுமானதாக இருந்தது. இந்தத் துன்பத்திலிருந்து அவர் மீள்வதற்கு முன்னம் வீட்டுக்கருகில் அவர் ஆசையாக வளர்த்து வந்த பசு மாடுகளுக்கு எப்படியோ நோய் தொற்றிக் கொண்டது. என்னென்னமோ வைத்தியம் பார்த்தும் அவரிடமிருந்த ஐந்து மாடுகளில் இரண்டை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்தது.

இந்தத் தொடர்ச்சியான இடர்பாடுகளுக்கு நடுவில் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் மனைவி கோமதிதான். கடன்காரர்களின் நெருக்குதல், மேலதிக உழைப்புக்காக கூலி வேலைக்குச் செல்லும் போது ஏற்படும் அவமானங்கள், குடும்ப கஷ்டம் இவை அனைத்துக்கும் கோமதி ஆறுதல் தருபவளாக இருந்தாள். கோமதி மீதான அதீத அன்பினால் அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆதினிக்கு நான்கு சகோதரர்கள் கிடைத்தார்கள். முதல் இருவரும் தனித்தனியாகவும் கடைக்குட்டிகளாக இரட்டையர்களும் பிறந்தார்கள். விளைவு நல்ல திடகாத்திரமாக வேலை செய்துகொண்டிருந்த கோமதி நோயாளிபோல் மாறிப்போனாள். எட்டு  வயதுக்குள்ளேயே குழந்தை வளர்ப்பதில் ஆதினி நல்ல தேர்ச்சி பெற்றவள் ஆகிப்போனாள்.

வருசத்துக்கு ஒரு பிள்ளை பெற தெரிகிறது வாங்கிய கடனை கொடுக்க தெரியவில்லை என்ற பரிகாசப் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகிப்போனான் கேசவன். வருடந்தோறும் வயதோடு கடனும், குடும்பச் சுமையும் கூடிக்கொண்டே வந்தன மாறாக உடல் வலுவிழந்து கொண்டுபோனது.

ஆட்டுக்காக் கொடுத்த கடனை ஒழுங்காக கட்டாததால் ஊர் மகாசபை முன்னால் ஒருமுறை கேசவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். கேசவனுக்கு கடன் கொடுத்திருந்த சதுர்வேதி மங்கலத்து பிராமணன் கடும்கோபம் கொண்டவனாக கட்டாத கடனுக்காக அந்தக் கூட்டத்திலேயே கேசவன் தன்னை வாழ்நாள் அடிமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டான். தான் இல்லாமல் போனால் தன்னுடைய ஐந்து பிள்ளைகளும் மனைவியும் நாதியற்றுப் போவார்கள். அதனால் எப்பாடுபட்டாவது கடனை விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூட்டத்தில் இருந்த பெரியவர்களின் கால்களில் எல்லாம் விழுந்து கேசவன் கெஞ்சவேண்டியதாயிற்று. இன்று அதை நினைத்தும் கேசவனின் உடலெல்லாம் சிலிர்த்து உறைந்துபோய்விடுவது போலிருந்தது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுள் போல் வந்து கேசவனை காப்பாற்றியவர் கிரமவித்தன் என்கின்ற பிராமணர். சதுர்வேதி மங்கலத்தில் பெரும் செல்வந்தரான இவர் அரசியல் பலமும் கல்வியில் நிறைய பாண்டித்தியமும் பெற்றவர்  என்று கேசவனின் அறிந்திருந்தான். அவர் இடைச்சேரி ஊர்த்தலைவர்களிடம் கேசவனைப்பற்றி கேட்டறிந்த பிற்பாடு கேசவன் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு தான் பொறுப்பு நிற்பதாக ஊர் மகாசபை முன்னால் வாக்களித்தார்.

அவர் பேசத் தொடங்கியதும் ஊர் மகா சபையில் இருந்த சத்தங்கள் எல்லாம் அடங்கிப்போயின. கடன் கொடுத்த பிராமணரும் அவர் சார்பாக ஆக்ரோசமாகப் பேசிக்கொண்டு இருந்தவர்களும் திடீரென்று அமைதியாகி அமர்ந்து கொண்டார்கள். இறுதியில் தனக்கு சொந்தமான தற்போது ஆலயப் பராமரிப்பில் இருக்கும் சில கால்நடைகளை கேசவன் பராமரிப்பில் விடுவது என்றும் அதில் வரும் பால், தயிர்,வெண்ணெய், நெய் முதலானவற்றில் விஜயராஜேஸ்வரத்துக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு மேலதிகமாக உள்ளதில் ஒருபகுதியை ஆட்டுக் கடன் கழிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் மறுபகுதியை கேசவன் தன்னுடைய குடும்பப் பராமரிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஏற்பாடாகியிருந்தது.

உண்மையில் அந்நேரத்தில் தான் வணங்கும் விஷ்ணுவே கிரமவித்தன் என்ற உருவில் வந்து தன்னை காப்பாற்றியதாக கேசவன் கருதிக் கொண்டார். அன்று முதல் கேசவன் வீட்டில் கிரமவித்தன் புராணத்தை அடிக்கடிகேட்கக்கூடியதாக இருந்தது.

இந்த ஏற்பாடுகள் நிகழ்ந்து ஒரு வருட காலம் ஆகிறது. ஆட்டுக்கடனின் ஒரு சிறிய பகுதியை இந்தக் காலப்பகுதியில் கேசவன் கட்டிவிட்டிருந்தான். ஆனால் அவனைத் துரத்தும் துரதிருஷ்டம் விடுவதாக இல்லை. கடந்த இரு மாதங்களாக வழமைக்கு மாறான வறட்சி கந்தளாயில் நிலவுகிறது. மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் தரைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு போய்க் கொண்டிருக்கிறன. முன்னம் போலில்லாமல் மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலின் அளவும் நன்றாக குறைந்து போய்விட்டது. எனவே கிடைக்கும் பாலில் ஆலயத்துக்கு உரிய பகுதியை வழங்குவதே பெரும்பாடாக இருப்பதால் கடனைச் செலுத்துவதும், குடும்பத்தைக் கொண்டு நடத்துவதும் கேசவனுக்கு கடினமாக இருக்கிறது.

இன்றும் அப்படித்தான் அவன் கொண்டுசென்ற பால், தயிர், வெண்ணை , நெய் முதலான பொருட்களில் ஆலயத்திற்கு உரியதை செலுத்திவிட்டு மிகுதிப் பொருட்களுடன் ஆட்டுக்கடன் செலுத்துவதற்காகச் சென்றான். அங்கிருந்த கணக்குப்பிள்ளையின் புரியாத கணக்கு வழக்குகளுக்குள் அவன் கொண்டுசென்றவற்றில் பெரும்பகுதி போய்விட்டது. மிகச்சிறிய அளவில் எஞ்சிய பகுதியை அங்காடியில் கொடுத்து அதற்குப் பதிலாக விலைமலிவான சிலவகை கிழங்குகளை மட்டுமே அவனால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடந்த இரு மாதங்களில் பல நாட்களாக கிழங்குகளை அவித்து கொடுத்ததில் பிள்ளைகளுக்கு நாவில் சுவை கெட்டுப்போய்விட்டது.  இது வேண்டாம் அப்பா சோற்றுக் கஞ்சியாவது குடிப்போம் என்று பிள்ளைகள் வாய்விட்டு கேட்கத்தொடங்கி ஒரு மாதமாகிறது. ஆனாலும் என்ன செய்வது இயற்கையின் சதியால் அதே கிழங்குகளுடன் கேசவன் இன்றும் வீட்டை நோக்கிச் செல்லவேண்டியதாக இருக்கிறது.

வீட்டுத் தோட்டம் செய்துவந்த கோமதியின் உடல்நிலை குன்றிப்போனதால் வீட்டிலும் காய்கறிகள் கிடைப்பது அரிதாகிப்போனது. இந்தக் கிழங்குகளைக் கண்ட பின்னால் தன்னுடைய பிள்ளைகளின் முகத்தில் ஏற்படப்போகும் ஏமாற்றங்களை நினைத்து பயந்தவனாக கேசவன் தன்னுடைய வீடு இருக்கும் பகுதிக்குள் வந்து சேர்ந்தான்.

இடையர் கல்லில் இருக்கும் வீடுகளில் அளவில் மிகச்சிறியவற்றில் கேசவனின் வீடும் ஒன்று. களிமண்ணினால் சுவர்கள் கட்டப்பட்டு தென்னை, பனை ஓலைகளால் கூரை வேயப்பட்டிருக்கும் அந்த வீட்டுக்குள் எப்படி ஐந்து குழந்தைகளோடு அவன் வசிக்கிறான் என்பதை ஊரவர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள்.

கேசவனைக் கண்டதும் வீட்டுக்கு அருகில் இருந்த மாட்டுத்தொழுவத்தில் இருந்த மாடுகள் அவனை வரவேற்றுக் குரல் கொடுத்தன. வீட்டுக்குள் இருந்த பிள்ளைகள் ஆர்வத்துடன் வாசற்படியை நோக்கி ஓடிவரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தயங்கியவாறு வாசலில் வைக்கப்பட்டிருந்த குடத்து நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு கேசவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கும் திடுதிப்பென்று எங்கிருந்தோ ஓடிவந்த ஆதினி வாசலை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

தினமும் கடன்காரனிடம் ஏற்படும் அவமானம், வளரும் பிள்ளைகளுக்கு நல்ல உணவை கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம், தொடர்ச்சியான வேலைப்பளுவினால் உடலில் ஏற்படும் வலி, எதிர்காலம் பற்றிய பயத்தினால் மனதில் ஏற்படும் குழப்பங்கள் என்ற எல்லா உணர்வுகளின் ஒட்டு மொத்த உருவமாக இருந்த கேசவனுக்கு மகள் மாலை நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு வருகிறாள் என்பதைக் கண்டதும் அதிக ஆத்திரம் உண்டானது.

“பெண் பிள்ளை  மாலைபட்ட நேரத்தில ஊர் சுத்திற்று வாற” என்று கேட்டவாறே பளீரென ஆதினியின் கன்னத்தில் கேசவன் பலமாக அறைந்தான். கேசவனின் கையிலிருந்த கிழங்குப் பையினை வாங்கிக்கொண்டிருந்த கோமதி அதிர்ந்து போனாள். அவள் வாயிலிருந்து ‘ஆதினி’ என்ற வார்த்தை கீச்சிடும் குரலில் வெளிவந்தது. கன்னத்தில் அறை விழுந்த வேகத்தில் சுவரில்போய் மோதப்போன ஆதினியைப் பிடிப்பதற்காக கோமதி பாய்ந்து சென்றாள்.

ஆர்வத்தோடு அப்பாவைக் காண ஓடிவந்த பிள்ளைகள் அப்படியே சிலை போல நின்றார்கள். கடைக்குட்டி இரட்டையர்கள் பயத்தில் அழத் தொடங்கிவிட்டார்கள். ஆதினி விழுந்த வேகத்தில் அவள் மடியில் கட்டியிருந்த துணிப்பை அவிழ்ந்து அதனுள் இருந்த ஆற்று மீன்கள் வீடு முழுவதும் சிதறி விழுந்தன.

ஆதினி அறை விழுந்த அதிர்ச்சியில் இருந்தாளே ஒழிய வாய்விட்டு அழவும் இல்லை அவளது கண்களிலிருந்து கண்ணீர் வரவுமில்லை. கோமதி ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவள் பார்வையில் ஏன் அடித்தீர்கள் என்ற ஆதங்கம் தெளிவாக தெரிந்தது. மற்றப் பிள்ளைகளின் முகத்தினைப் பார்ப்பதற்கு கேசவனுக்கு திரணி இருக்கவில்லை. ஒன்றும் பேசாமல் விடுவிடுவென்று வீட்டுக்கு வெளியில் வந்து மாட்டுக் கொட்டகைக்குள் ஐக்கியமாகிப் போனான். சுதாரித்துக்கொண்ட கோமதி ஆதினியை தேற்றிவிட்டு அவள் கொண்டுவந்திருந்த ஆற்று மீன்களையும், கேசவன் கொண்டுவந்திருந்த கிழங்குகளையும் எடுத்துக்கொண்டு சமையல் கட்டுக்குள் போனாள். குழந்தைகள் அனைவரும் ஆதினியோடு வந்து ஒட்டிக்கொண்டார்கள்.

மாடுகளுக்கு வைக்கோலும் தண்ணீரும் வைத்துக்கொண்டிருந்த கேசவனுக்கு வேலையில் கவனம் ஒட்டவே இல்லை. நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று திரும்பத் திரும்ப மனம்வருந்தியவனாக அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். சாணம் அனைத்தையும் அள்ளிய பின்னும் உடலைச் சுத்தம்செய்துவிட்டு வீட்டுக்குள் செல்வதற்கு அவனுக்கு மிகுந்த தயக்கமாக இருந்தது. இந்தநேர இடைவெளியில் வீட்டுக்குள்ளிருந்து கோமதியின் கைவண்ணத்தில் பொரிக்கப்பட்ட மீன்களின் வாசமும், கிழங்கு அவியலின் வாசமும் சேர்ந்து வீசத்தொடங்கியிருந்தது. பசித்திருந்த பிள்ளைகள் ஆர்வத்தோடு அவற்றைச் சாப்பிடுவதை அவர்கள் எழுப்பிய ஒலிகளில் இருந்து கேசவனுக்கு உணரக்கூடியதாக இருந்தது.

“வீட்டுக்குள் வந்து உணவருந்துங்கள்” என்றழைத்த கோமதியின் வேண்டுதலை புறக்கணித்தவனாக கேசவன் வாட்டிய இலையில் இருந்த இரவு உணவினை அவசர அவசரமாக உண்டுவிட்டு வாசலில் கிடந்த கிடாய்த்தோலில் உறங்க முயற்சித்தான். ஓலைக்குடிசையின் கிடுகு இடைவெளிக்குள் இருந்து உற்றுப்பார்த்த இரு கண்களின் வீரியம் தாங்காமல் கேசவனின் முதுகு கூசிக்கொண்டு இருந்தது.


தொடரும்.

                                                             நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com

நன்றி   -  2022  கார்த்திகை  தாய்வீடு இதழ்

நரபலி   -    (ஆதினி  பகுதி 8)

வைராவியர் குலமகள்  (பூமகள்)  -  (ஆதினி  பகுதி 7)

அறிவாட்டி  (ஆதினி  பகுதி 6)

பெரிய வதனமார்    (ஆதினி  பகுதி 5)

எல்லைக்கல்  -    (ஆதினி  பகுதி 4)

வாசுதேவ வாய்க்கால்  -        (ஆதினி  பகுதி 3)

இடையர்கல்  -    (ஆதினி  பகுதி 2)

பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )ஒலி வடிவில் கேட்க..........இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment