Tuesday, February 07, 2023

தமனதோட்ட TAMANATOTA


இணையத்தில் இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற ஆய்வுத் தொகுப்பினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

Traditional Sinhala place names in Sri Lanka and their Tamilized forms. (http://dh-web.org) - Tampalakamam (Sirigonakanda [Trincomalee]) TAMANATOTA, TAMPALAGAMA, TAMBALAGAMUWA  - Meaning. In Tamil "kamam" has no immediate meaning, (Hist. Emerson Tennent: Tambalagamuwa ), see P. Arunachalam, "Sketches of Ceylon History", reg. "Tamanatota"  This was the port of the then province of  "Tamankaduwa".

தம்பலகாமம் தொடர்பான பல தகவல்களைத் தேடிக் களைத்துப் போயிருந்த காலமது. தமனதோட்ட  என்ற இந்தப் புதிய தகவல் மீண்டும் எனது தேடல்களில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலான வரலாற்று ஆய்வுகள் இன, மத, மொழி அடிப்படைகளை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை இதுவரை காலமான எனது வாசிப்பனுபவங்கள் கற்றுத்தந்திருக்கிறது. இலங்கைக்கான ஒரு பொதுவான வரலாற்றை கட்டியெழுப்புவதற்குப் பாரிய தடையாக இருப்பதும் இந்த சிந்தனைதான்.

இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற அந்த ஆய்வானது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்கள இடப்பெயரின் தமிழ் வடிவம் அதிலுள்ள காமம் இடப்பெயர் சார்ந்த எந்த பொருளையும் கொண்டிருக்கவில்லை என்று மிக இலகுவாக தம்பலகாமம் என்ற புராதனமான பெயரினை கடந்துபோயிருந்தது. அதுபோலவே தமனதோட்ட என்ற இடப்பெயரினையும் மேலோட்டமாக  கடந்து செல்ல மனம் விரும்பவில்லை. எனவே தமனதோட்ட தொடர்பில் கொஞ்சம் விரிவாகத் தேடிப் பார்க்கலாம் என ஆசைப்பட்டேன்.

தமனதோட்ட தொடர்பான எனது தேடல்களின் போது பல ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. அவற்றின் சாராம்சம் ஒரு பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. பழமையில் தமனதோட்ட என்று இருந்த பிரதேசத்தினை போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பின் பின்னர் தமிழர்கள் குடியேறி தம்பலகாமம் என பெயர்மாற்றிக் கொண்டார்கள் என்பதே அக்குற்றச்சாட்டின் சாராம்சமாக  இருந்தது. இது வடகிழக்குப் பிரதேசங்களில் இருந்த சிங்கள குடியிருப்புகள் சோழராட்சியின் பின் தமிழ் பிரதேசங்களாக மாற்றப்பட்டதோடு அப்பிரதேசப் பெயர்களும் மாற்றப்பட்டன என்ற வாதத்தினைப் போன்றதொரு குற்றச்சாட்டாகும்.

இலங்கையில் இருந்து போர்த்துக்கீசரின் ஆட்சி அதிகாரம் 1658 இல் முற்றாக அகற்றப்பட்டது. இதற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதான தம்பலகாமம் கல்வெட்டு இவ்வூர்ப் பெயரினையும் அங்கிருந்த தமிழ்க் குடியிருப்பு தொடர்பான விபரங்களையும் பதிவு செய்திருப்பதனால் இக்குற்றச்சாட்டினை இலகுவில் கடந்துவிட முடிகிறது. எனினும் தம்பலகாமம் தமனதோட்ட என அழைக்கப்பட்டதன் பின்ணணி பற்றி பூரணமாக அறிந்து கொள்வதன் மூலமாகவே இக்குற்றச்சாட்டின் பின்ணணியில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

தமனதோட்ட என்றதும் எனக்கு நினைவுக்கு வந்த பெயர் ஊராத்துறையாகும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஊர்காவல்துறை என்ற தீவின் பண்டைய பெயர் ஊராத்துறையாகும். ஊராத்துறை என்னும் பெயர் வடிவம் மிகவும் புராதனமானதென்று கொள்ள முடிகின்றது என்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கருதுகிறார். ஊர் என்னுஞ் சொல்லுடன் கிழமைப் பொருள் வேற்றுமை விகுதியான என்பதைக் கூட்டி அதனுடன் துறை என்ற சொல்லைச் சேர்க்கும்போது ஊராத்துறை(1) என்ற இடப்பெயர் கிடைக்கும். அது ஊர்களின் துறை, ஊர்களுக்கு இடையிலான துறை, பேரூராகிய பட்டிணத்துக்குரிய துறை போன்றவற்றினைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது. 

ஊராத்துறையினை 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்த சிங்கள நூலான பூஜாவலிய ஊறாதோட்ட என்று பதிவு செய்கிறது. இது பென்தோட்ட, அம்பலாந்தோட்ட, ஹம்பாந்தோட்ட போன்ற சிங்களப் பெயர் வடிவங்களை ஒத்தது.

துறை என்ற தமிழ்ச் சொல்லினை சிங்களத்தில் மொழி பெயர்க்கும் போது தோட்ட என்றாகிவிடுகிறது. இந்தப் பெயர்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தமனதோட்ட என்ற பெயர் தம்பலகாமம் ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட பெயர் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும்.


தம்பலகாமம் துறைமுகமாக பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிலவரங்களை தெளிவாகப் புரிந்துகொள்வதன் மூலமாகவே தமனதோட்ட என்ற பெயருக்கான முழுமையான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

தம்பலகாமத்திற்கு தமனதோட்ட என்ற பெயர் வழங்கப்பட்ட காலப்பகுதி கண்டி அரசன் இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சியின் இறுதிப்பகுதியாகும். 15ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (கி.பி. 1469) இலங்கையின் மத்திய பகுதியில் உருவாகி கி.பி 1815 வரை நிலைத்திருந்த அரசு கண்டி இராச்சியமாகும். கண்டி இராட்சியத்தின் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவர் இரண்டாம் இராஜசிங்கன். இவரது ஆட்சி கி.பி. 1635 முதல் கி.பி.1687 வரை சுமார் 50 ஆண்டு காலம் நீடித்திருந்தது. தனது வாழ்நாள் முழுவதும் ஐரோப்பியரின் காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிராகப் போர் புரிந்த மன்னனான இரண்டாம் இராஐசிங்கன் கிழக்கிலங்கை வரலாற்றிலும் குறிப்பட்டத்தக்கதொரு இடத்தினைப் பெற்றிருக்கிறான்.

இம்மன்னன் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தினை நிர்மாணிக்கப் பொருளுதவி வழங்கியமை, வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு நிலங்களைத் தானமாக வழங்கியமை போன்ற விடயங்களை இலக்கியங்கள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. இவை இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் திருகோணமலை மீது கண்டி இராச்சியம் கொண்டிருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

இக்காலமளவில் கண்டி இராட்சியம் நேரடியாகப் பயன்படுத்திய துறைமுகங்களாக திருகோணமலை, கொட்டியாரம் என்பன இருந்தன. கண்டி இராட்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த தம்பன் கடவைப் பிரதேசம் பயன்படுத்திய துறைமுகமாக தம்பலகாமம் இருந்தது. தம்பன் கடவைப் பிரதேசத்தின் துறைமுகமாகப் பயன்பட்ட காலத்திலேயே தம்பலகாமம் அதன்மீது மேலாதிக்கம் செலுத்தியவர்களால் தமனதோட்ட என்றழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தோட்ட என்பது துறைமுகத்தினைக் குறிப்பதை முதலிலேயே பார்த்திருந்தோம். தமன என்பது தம்பன் கடவையை (சிங்களத்தில் தாமன்கடவ) குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.


18th century map of Trincomalee Bay

அரச நிர்வாக ரீதியில் இப்பிரதேசம் தமனதோட்ட என்று அழைக்கப்பட்டாலும் இங்கு சமகாலத்தில் எழுந்த இலக்கியங்கள் இதனை தம்பலகமம், தம்பைநகர் என்று குறிப்பிட்டிருப்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் ஸ்ரீ சித்திரவேலாயுத காதல், திரிகோணாசல புராணம் என்பன இக்காலப்பகுதியினைச் சேர்ந்தவையாகும். எனவே ஊர்மக்களின் பயன்பாட்டிலும் அப்பெயர்களே வழக்கில் இருந்திருக்கும் என்பதனை ஊகிக்கலாம்.

தம்பலகாமம் தமனதோட்ட என்று அழைக்கப்பட்டதனைப் பதிவு செய்திருப்பவர் ஒல்லாந்து வரலாற்று ஆசிரியர் Francois Valentyn அவர்கள்.  இவர் ஒல்லாந்து அமைச்சராகவும், சிலகாலம் இராணுவத் தளபதியாகவும் பணியாற்றியவர். ஒரு முறையேனும் இலங்கைக்கு வந்திராத இவர் டச்சு ஆவணங்களின் மூலப் பிரதிகளின் துணையுடனேயே இலங்கை பற்றிய விபரங்களை தனது 'Old and New East India' என்ற நூலில் பதிவு செய்திருந்தார். இக்காலப்பகுதியில் டச்சுக்காரர்கள் தம்பலகாமத்தினை Tamblegam என்று அழைத்தார்கள். Tamblegam  என்ற பெயர் டச்சுக்காரர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயேர் ஆட்சியிலும் நிலைத்திருந்தது.

தம்பலகாமம் தமனதோட்ட என்று அழைக்கப்பட்டதாக  Francois Valentyn பதிவு செய்திருப்பதனை Sir. பொன் அருணாச்சலம் அவர்கள் தனது நூலான SKETCHES OF CEYLON HISTORY   என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்(2). இதுவே 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் எழுதப்பட்ட சில சிங்கள இடப்பெயர் ஆய்வுகளில் Sir. பொன் அருணாச்சலம் அவர்களின் கூற்றினை அடிப்படையாக வைத்து தம்பலகாமத்தின் பண்டைய பெயர் தமனதோட்ட என்று மேற்கோள்காட்டுவதற்கு காரணமாக அமைந்தது.

தம்பலகாமம் என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடும் கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியது என்பதும் தமனதோட்ட என்ற பெயர் நிலவிய காலப்பகுதி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதும் இக்காலப்பகுதியில் எழுந்த தமிழ் பக்தி இலக்கியங்கள் இவ்வூரின் பெயரினை தம்பலகமம், தம்பைநகர், தம்பையூர் என குறிப்பிடுவதும் நினைவில் கொள்ளவேண்டிய விடயங்களாகின்றன.

நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

உசாத்துணை 

1. இலங்கை தமிழ்ச் சாசனங்கள் பேராசிரியர் சி.பத்மநாதன், பக்கம் 343, இந்த சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 2006

2.  Sketches of  Ceylon History, Page 08, Sir Pon.Arunachalam, 2002



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment