Friday, February 24, 2023

கோணேசர் கல்வெட்டு


கோணேசர் கல்வெட்டு என்கின்ற வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிராஜவரோதயன் அவர்களால் 17ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும், உரைநடைப் பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.

அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் குறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டால் அது கல்வெட்டு என அழைக்கப்பட்டது.

திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும், கோயிற் தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி பெரியவளமை பத்ததி என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும், விரித்தும் கவிஇராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு.


இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அரசர்கள் கோணேசர் கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகள், கோயிற் சேவைகள் பற்றிய ஏற்பாடுகள், கோயிலுக்குரிய உடைமைகள், குடியேற்றம், சமுதாய வழமைகள், வன்னிபங்கள் என்பனவற்றைப் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.

ஏட்டுப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பெற்ற கோணேசர் கல்வெட்டிலே செய்யுள் நடையிலும், உரைநடையிலும் அமைந்துள்ள இருவேறு பகுதிகளுள்ளன. செய்யுள் நடையிலமைந்த முதலாவது பகுதியிலும் இரு பிரிவுகள் உள்ளன. இவற்றுள் முதலாவது பிரிவு கோணேஸ்வரம் தொடர்பாகக் குளக்கோட்டன் புரிந்த திருப்பணிகளைக் கூறுவது. இரண்டாவது பிரிவு, அக்கோயிலுக்குக் கஜபாகுராசன் செய்த திருப்பணிகளைக் கூறுகின்றது.

உரைநடையிலுள்ள இரண்டாவது பகுதியில், கீழ்வரும் 29 தலைப்புக்களின் கீழ் விபரங்கள் அடங்கியுள்ளன: (1) மாணிக்கம்; வரவு, (2) வரிப்பத்தார், (3) கலியாணத்துக்குச் செய் தொழும்பு, (4) தீமைக்குச் செய்தொழும்பு, (5) சூகரவேட்டை, (6) குடிமை வரவு, (7) கயவாகுராசன் உபயம், (8) புவனேக கயவாகு, (9) பரராசசேகரன்-செகராசசேகரன் வரவு, (10) ஆரியச் சக்சரவர்த்தி வரவு, (11) திரவிய இருப்பு, (12) சிந்தூர விருப்பு, (13) எட்டு இராசாக்கள் கொடுத்த திரவிய இருப்பு, (14) சிங்காசனத்துக்கான திரவியம், (15) மகாலிங்க இருப்பு (16) திருமலையின் கீழ்ப்புதினம், (17) திருநாள் (18) கழனிமலை, (19) திருக்குளங் கட்டினது, (20) ஆசாரிமார் வரவு, (21) காராளர் வரவு, (22) புலவன் வரவு, (23) வன்னிபம் வரவு, (24) காரைநகரால் வந்த வன்னிபம், (25) சோழநாட்டு வன்னிபம், (26) மருங்கூர் வன்னிபம், (27) கருகுலக்கணக்கு, (28) ஆலாத்திப் பெண்கள், (29) திருச்சூகர வேட்டைத்தூது.

திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் முக்கியமான நூல்களில் ஒன்றாக கோணேசர் கல்வெட்டு காணப்படுகிறது.

கீழுள்ள படத்தினைச் சுட்டுவதன் மூலம் கோணேசர் கல்வெட்டு (6.69 MB) (PDF வடிவம்) - நூலகத்திட்டத்தினூடாக தரவிறக்கி வாசிக்கலாம்.

நட்புடன் ஜீவன்.

 tjeevaraj78@gmail.com




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment