Monday, February 06, 2023

தம்பை நகர்


தம்பலகாமத்தினை தம்பை நகர், தம்பை ஊர் எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை நிலைபெற்று இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. தம்பை என்ற சொல் இடப்பெயராக நீண்ட காலமாக இலங்கையிலும்;, தமிழ்நாட்டிலும் வழங்கி வந்திருக்கிறது.

கி.பி 1220 முதல் கி.பி 1354 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இருந்த இராச்சியங்களில் ஒன்று தம்பதெனிய இராச்சியம். இங்கு அரசாண்ட நான்காம் பராக்கிரமபாகு மன்னன் அவனது கல்வியறிவின் காரணமாக பண்டித பராக்கிரமபாகு என அழைக்க ப்பட்டான். இக் காலத்தில் பல இலக்கியங்கள் உருவாக இம்மன்னன் அனுசரனை வழங்கினான்.

தேனுவரைப் பெருமாள் என்னும் போசராச பண்டிதரால் நான்காம் பாரக்கிரமபாகு பூபன் என்னும் மன்னன் முன்னால் சரசோதிமாலை எனும் சோதிட நூல் கி.பி.1309 இல் அரங்கேற்றப்பட்ட இடத்தின் பெயர் தம்பை என்பதாகும். இன்று இந்த இடம் தம்பதெனியா என அழைக்கப்படுவது குறிப்பிட த்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை போகும் பிரதான வீதியில் தெருமூடிமடம் அமைந்திருக்கிறது. மடத்தின் தூண்களில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை இவை. தெருமூடிமடத்தின் கட்டுமானத்துக்கு உதவியவர்களின் பெயர்கள் அவர்களது ஊர்ப்பெயரோடு அங்கே பொறிக்கப்பட் டுள்ளது. அதிலுள்ள ஒருவரின் பெயர் ஸ்ரீ  மு.சுப்பிரமணியம், அவரது ஊர்ப்பெயர் தம்பை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பருத்தித்துறையில் இருக்கும் தம்பசிட்டி எனுமோர் ஊரின் பெயராக கருதப்படுகிறது. 

இதுபோலவே தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை  அடுத்துள்ள வாலிகண்டபுரத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்கு கி.பி.1629 ஆம் ஆண்டளவில் விஜயநகர மன்னர் ஸ்ரீராமதேவமகாராயரின் ஆட்சிகாலத்தில் எழுதப்பட்ட  கல்வெட்டொன்று உள்ளது. இக்கல்வெட்டு சேலத்தைச் சேர்ந்த சின்னமநாயக்கரின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவர் இவ்வாலய வழிபாட்டுக்குச் செய்த தானம் பற்றிச் சொல்கிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் தம்பை என்ற ஊருக்கு வெங்கஸ்வரபுரம் எனப் பெயரிட்டு அவ்வூர் முழுவதையும் இக்கோயிலுக்கு தானமாக வழங்கியதைத் தெரிவிக்கிறது.

இவ்வாறு இலங்கையிலும், தமிழகத்திலும் தம்பை எனும் ஊர்ப்பெயர் இருந்தாலும் தம்பலகாமத்தினை உயர்த்தி சிறப்பித்துக் கூறும் சந்தர்ப்பங்களிலேயே தம்பை நகர்  தம்பை ஊர் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டதைக் காணக்கூடியதாக உள்ளது.

பதினேழாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியமான வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் ஆசிரியர் தன்னை தம்பலகமத்து வீரக்கோன் முதலி என அறிமுகப்படுத்தும் அவர்  இந்நூலின் இறுதிப்பாவில் தக்கபுகழ் பெற்றிலங்குந் தம்பையூர் வாழியவே(1) (எல்லோராலும் போற்றதக்க புகழினைப் பெற்று விளங்குகின்ற தம்பையூர் எனப்படும் தம்பலகாமமும் வாழ்வதாக) என்று தான் பிறந்த ஊரினை வாழ்த்தி நூலினை நிறைவு செய்கிறார்.

தம்பையூர் என்று தம்பலகாமம் இந்நூலில் பதிவு செய்யப்பட்டது போல் தம்பை நகர் என்று திரிகோணாசலப் புராணம் பதிவு செய்து இருக்கிறது. திருக்கோணஸ்வரத்துடன் தொடர்புடைய பக்தி இலக்கிய மரபினைப் பிரதிபலிக்கும் மூன்று நூல்கள் உள்ளன. கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசலப் புராணம் என்பவை அவை. இவற்றுள் திரிகோணாசலப் புராணம் காலாத்தால் பிந்தியது.


திரிகோணாசலப் புராணம் 20 படலங்களையும், 1491 செய்யுள்களையுங் கொண்டமைந்தது. நாயக்கர் கால இலக்கியங்களுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்க இப்புராணத்தின் ஆசிரியர் பெயரும், எழுதப்பட்ட காலமும் நூலில் குறிப்பிடப் படவில்லை. இதன் இருபதாவது படலம் தம்பை நகர்ப் படலமாகும் இப்படலம் தம்பலகாமத்தினைப் பல்வேறு முறைகளில் சிறப்பித்துக் கூறுகிறது.

1. கன்னல் வேலி வரம்பு உடுத்த

கழனி சூழும் தம்பை நகர் ( கன்னல் - கரும்பு ) (2) 

2. குறையா வளம் சேர் தம்பை நகர்க் (3)  

3.  கரிய குவளை மலர் மேய்ந்து

    கடவாய் குதட்டித் தேன் ஒழுக

    எருமை கிடந்து மூச்சு எறியும்

    எழிலார் தம்பை வள நாட்டின் 

    (குவளை – அல்லி ) (4) 

பலநூற்றாண்டுகளுக்கு முன் இக்கிராமத்தின் இயற்கை வளத்தின் குறையாத தன்மையினைப் பதிவுசெய்யும் இந்நூலின் மேற்குறிப்பிட்ட செய்யுளின் காட்சிகளை இன்றும் நீங்கள் தம்பலகாமத்தில் காணலாம். இன்றும் மதிய நேரத்தில் வீடு திரும்பும் வேளையில் எல்லாம் கடந்துபோகும் வயல்வெளிகளில் இக்காட்சியைக் நான் காண்கின்றேன். வயல் உழுது முடிந்த களைப்புடன் வயல்நிலங்களுக்கு இடையில் கால்வாய்கள் பாயுமிடங்களில் உருவாகி இருக்கும் சிறிய குட்டைகளில் அசைபோட்டபடி எருமைகள் சேற்றுக் குளியலில் ஈடுபடும் காட்சியை காணும் ஒவ்வொரு முறையும் இப்பாடல் நினைவலைகளில் வந்து செல்லும்.


இத்தனை சிறப்பு பொருந்திய இடம்மென்பதால் இந்நூலாசிரியர் தனது வாழ்த்துப்பாவில் ஊர் வாழி திருத்தம்பை நகரம் வாழி(5) என்று தம்பலகாமத்தை வாழ்த்திப் பாடி இருக்கிறார். இங்கு திரு என்ற அடைமொழி மேன்மை, போற்றுதற்குரியது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடதக்கது. அத்தோடு திரு என்பது திருகோணமலையை குறிப்பதாகவும் கருதலாம்.  

தம்பை நகர்ப்படலம் தவிர்ந்து மேலும் இரு படலங்களில் தம்பை நகரின் புகழ் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தளாய்க் குளத் திருப்பணிகள் தொடர்பான விபரங்களைத் தரும் திரிகோணாசலப் புராணத்தின் பன்னிரண்டாவது படலமான திருக்குளம் கண்டபடலம் நீர் நிறை வளம் சேர் தம்பைமா நகரும்(6), பன்னரும் சீர்த் தம்பை நகர்(7) எனத் தம்பலகாமத்தை விபரிக்கிறது. இது போலவே திருப் பொலிந்திடு தம்பை மாநகர்(8) என்று நிமித்திக்கப்படலம்  உரைக்கின்றது.

திருப் பொலிந்திடு தம்பை 

மாநகர்க்கு ஒரு சிறையின் 

அருப்பம் உள்ளன குறைத்து 

நல்ல அணிபெறத்திருத்தி

 

ஆயிரத்து முன்னூற்று ஐம்பான் 

அமணநெல் விரைத்தும் 

சேய மாநிலம் செம்மை 

செய்து உயர் திருக்குளநீர் 

பாயும் ஆறுகள் பழனங்கள் 

பற்பல வகுத்துக் 

தூயதாகிய குடிபடை 

சூழ்வர அமைத்து 

 

ஆங்கு அவர்க்கு வேண்டிய 

பல வளங்களும் அளித்துத் 

தேங்கு நீர்ச் செறு எங்கணும் 

பயிரிடச் செய்தே 

பாங்கர் வாழை மா 

தெங்கு பூகம் பலவாதி 

ஓங்கும் ஊதியம் உற 

நனி மகிழ்வினோடு உஞற்றி 

 

விதி அதாய் அரன் பூசனை 

விளங்குறப் புரியும் 

முதன்மை கொண்டவர் 

ஏனையார் யாவர்க்கும் முறையே 

குதிகொள் நீர்ச் செறு  

அவரவர்க்கு ஆம் படி கொடுத்திட்டு 

அதிக மாநிதி பூண்களும் 

அளித்தனன் அரசன் 

 

ஈசன் பூசைக்கும் அதிக 

நெல் விளை நிலம் ஈந்து 

வாச மென்மலர்ச் சோலை 

நந்தவனம் வகுத்துத் 

தேசு உலாவு பொன்முதல் 

உலோகங்களாற் சிறந்த 

பாசனங்கள் மற்று எனவும் 

பற்பல படைந்தே.

என்று திரிகோணாசல புராணம் கஜபாகு மன்னன் செய்த திருப்பணிகள் தொடர்பில் விபரித்துக் கூறுகிறது. இங்கு மன்னனால் தம்பை மாநகரில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் திரிகோணசல புராணம் மேற்குறிப்பிட்டவாறு  பதிவு செய்திருக்கிறது.

வளம் நிறைந்த தம்பலகாமத்திலே ஒரு பகுதியினைத் திருத்தி 1350 அமணம் விதைப்பு நெல் வயலாக்கி அதனை தேவதானமாக கஜபாகு மன்னன் அமைத்தான். கந்தளாய்க் குளத்தில் இருந்து அதற்கு நீர்ப்பாசனஞ் செய்ததற் பொருட்டு கால்வாய்கள், கண்ணாறுகள் என்பவற்றை அமைத்துக் கொடுத்தான். 

அந்த வயல் நிலத்தைச் சூழக் குடியிருப்புக்களை உருவாக்கிக் குடிகளுக்குத் தேவையான வசதிகளையும் மன்னன் செய்து கொடுத்தான. நன்செய் நிலங்கள் எல்லாவற்றையும் செய்கை பண்ணுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் அவன் செய்தான். வாழை, மா, கமுகு, தென்னை முதலானவற்றைச் செய்கை பண்ணும் தோப்புக்களையும் அங்கு உண்டுபண்ணிக் கொடுத்தான். 



முதன்மைக்கும் கோயிலிற் தொழும்புகள் புரிவோருக்கும் ஏற்றவாறு வயல்நிலங்களைக் கொடுத்து அவற்றோடு வேறு பொருட்களையும் கஜபாகு மன்னன் வழங்கினான் என்று திரிகோணசல புராணத்தின்; மேற்கூறிய பாடல்பகுதி கஜபாகு மன்னன் தம்பை மாநகரில் செய்த பணிகளைப் பதிவு செய்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் அமணம் என்ற சொல் இருபதினாயிரங் கொட்டைப் பாக்குகளுக்குச் சமனானது எனப் பொருள் கொள்ளலாம். எனவே கஜபாகு மன்னன் தம்பை மாநகரின் ஒரு பகுதியைத் திருத்தி 1350 அமணம் விதை நெல் பயன்படுத்த வேண்டிய வயல் தரையாக அவற்றை மாற்றினான் எனக் கொள்ளலாம்.

போர்த்துக்கீசர் ஆட்சியில் திருகோணமலையின் தம்பலகாமப் பற்றில் 10,000 அமணம் நெல் இருபோக விதைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதை அவர்களது ஆவணங்கள் ஆதாரப்படுத்துகின்றன(9). இங்கு குறிப்பிடப்படும் கஜபாகு மன்னனது ஆட்சிக் காலத்திற்கு சுமார் 500 ஆண்டுகள் பிந்தியது போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பு என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே கஜபாகு மன்னன் 1350 அமணம் நெல் வயலாக்கி அதனை தேவதானமாக திருக்-கோணேச்சரத்துக்கு வழங்கினான் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைகிறது.

நெல்வயல்;கள் மட்டுமல்லாது அவற்றுக்கு நீர்ப்பாச்சுகின்ற கந்தளாய்க் குளக்கால்வாய்கள், மக்கள் குடியிருப்புகள், தோப்புக்கள் என்பன கஜபாகு மன்னனால் புணரமைக்கப்பட்டதை திரிகோணாசல புராணம் விரிவாகப் பதிவு செய்கின்றது. 

இன்றைய தம்பலகாமம் கள்ளி மேட்டிலுள்ள ஆலயடிப் பத்தினி அம்மன் வேள்வி வளாகம் கஜபாகு மன்னனால் வழங்கப்பட்ட கொடை என வாய்மொழி வரலாறுகள் சொல்வதினை மேற்கூறிய திரிகோணசால பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் அவை பொருத்தமானவையாகத் தோன்றுகின்றது.

பராக்கிரமபாகு மன்னனிடம் பெலநறுவையை இழந்த கஜபாகு மன்னன் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு கந்தளாயில் அரண்மனை அமைத்து சுகமாக வாழ்ந்தான் என்பதனை மகாவம்சம் கூறுகிறது. எனவே தம்பைமாநகர் மீது கஜபாகு மன்னன் அதிக செq221ல்வாக்கு செலுத்தியதற்கு இதுவும் ஒரு காரணமெனலாம்.

பதினேழாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கிய நூல்களினை ஆதாரமாக கொண்டு தம்பை நகர், தம்பையூர், தம்பைமாநகர், திருத்தம்பை நகர் போன்ற சொற்கள் தம்பலகாமத்தை சிறப்பித்துக் கூறும் தருணங்களில் பயன்படுத்தப்பட்டவை என அறியக் கூடியதாக உள்ளது. இன்றும் கவிதைகளிலும், வாழ்த்துப்பாக்களிலும் தம்பைநகர் என்ற பதம் தம்பலகாமத்தைக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.

நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com

உசாத்துணை

(1) வெருகல் ஸ்ரீ சித்தரவேலாயுதர் காதல், பக்கம் 158, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 2000

(2) திரிகோணாசால புராணம், பக்கம் 361, செய்யுள் 37, இந்துசமய  கலாசார அலுவல்கள் திணைக்களம், 1997

(3) மேலது பக்கம் 361 செய்யுள் 38

(4) மேலது பக்கம் 364 செய்யுள் 47

(5) மேலது பக்கம் 364 செய்யுள் 50

(6) மேலது பக்கம் 230 செய்யுள் 68

(7) மேலது பக்கம் 237 செய்யுள் 97

(8) மேலது பக்கம் 343 செய்யுள் 16

(9)காலனித்துவ திருகோணமலை, பக்கம் 27, கலாநிதி கனகசபாபதி சரவணபவன், 2010



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment