Tuesday, February 25, 2014

தம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்

திருமலை இ.மதன்

வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ மிகவும் பிரபலியமான இடமாகும். ‘கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி’ என்று இத்திடலை கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தகைய சிறந்த ‘கூட்டாம்புளியில்’ புகழ் பெற்ற நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வி இந்திராணி அவர்களுக்கும் இந்திரசூரிய பிரேமச்சந்திரன் அவர்களுக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் நமது மதிப்பிற்குரிய ‘பாதை மாறிய பயணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் திரு.இ.மதன் அவர்கள்.

இவரது இயற்பெயர் அசோக் என்பதாகும். தனது சகோதரன் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட இவர் தனது புனைப்பெயராகத் தம்பியின் பெயரையே சூட்டிக் கொண்டாராம். தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆரம்பித்த இவர் உயர் கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ணமிசன் இந்துக்கல்லூரில் தொடர்ந்து இன்று திருகோணமலை தளவைத்திய சாலையில் உதவி மருத்துவப் பிரிவில் இணைந்து மருந்தாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

கல்வி பயிலும் காலத்தில் கட்டுரை எழுதுவதிலும் கதைகள் எழுதுவதிலும் பெரிதும் ஆர்வம் காட்டிய இவர் கடந்த பத்து ஆண்டுகளில் தான் எழுதிய இருபத்தெட்டு சிறுகதைகளைத் தொகுத்து ‘பாதைமாறிய பயணங்கள்’ என்ற சிறுகதைத் தொகுதியை ‘அம்மா பதிப்பகத்தினூடாக’ 2011 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

பாதை மாறிய பயணங்கள்

இத்தொகுப்பிலுள்ள அனேகமான கதைகள் தனிமனித உணர்வுகளையும் பிரச்சினைகளையும் பற்றிச் சிறப்பாகப் பேசுகின்றன. எதிர்காலத்தில் அவர் கைவண்ணத்தில் இன்னும் ஆழமான கருத்துக்கள் நிறைந்த கதைகள் உருவாகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக இந்நூலை ஆய்வு செய்த அறிஞர்கள் தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய சமூகச்சூழலில் தனிமனிதனைப் பாதிக்கின்ற பலதரப்பட்ட விடயங்களை மிக எளிதாக எடுத்துச் சொல்லி ஆதங்கப்படும் ஆசிரியர் அதற்கான தீர்வுகளையும் நாசுக்காகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘முதிர்கன்னி’ ‘குச்சி ஐஸ்’ ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ ‘எதிர்பார்ப்பு’ ‘தரகர் தங்கராசு’ போன்ற கதைகளில் சமூகத்திற்கு இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நளினமாக சுட்டிக்காட்டப் படுகிறது.

உண்மையை விளங்கிக்கொள்வதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் ஆற்றல் அனைவரும் அறிந்ததே. அத்தகைய ஆற்றல் கதாசிரியர் திருமலை மதன் அவர்களுக்கு நிறையவே உண்டு. தான் சமுதாயத்தில் பெற்ற அனுபவங்களை கற்பனைக் கலவையோடு சுவையாகத் தந்திருக்கிறார் கதாசிரியர் திருமலை மதன் அவர்கள்.ஏறக்குறைய தொடர்ச்சியாக பத்தாண்டுகள் அவர் எடுத்த முயற்சியின் பலன் இது. மண்வாசைன நிறைந்த அவரதுகதைகள் நமது மனதை நெருடிச் செல்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள அனேகமான கதைகள் தனிமனித குடும்பப் பிரச்சினைகள் பற்றியவையே. சுமூக அவலங்கள் மீதான விழிப்புணர்வும் சிந்தனையும் இன்று எங்கள் வாசகர்களுக்கு அவசியமானவையாகும். இவற்றையே கருப்பொருளாகக் கொண்ட கதைகளை எழுதி வாசகப் பெருமக்களைக் கவர்ந்து எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கியப் படைப்பாளியாக திருமலை மதன் அவர்கள் வருவார், வரவேண்டும் என வாழ்த்துவோம்.

வேலாயுதம் தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dear Dr.
    It is very good start to introduce new comers to the field of creative literature. Thanks a lot to your father 'Thanka'
    Kernmipiththan

    ReplyDelete