Wednesday, January 22, 2014

திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்

திருகோணமலை

மானாங்கேணிக் கல்வெட்டும் புராதானச் சின்னங்களான நந்தியும் ஆவுடையாரும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும்  வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது பற்றி பார்த்திருந்தோம்.
சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள் 
இனி 
திருகோணமலையில் காணப்படும் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் பற்றிப் பார்ப்போம். மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும்.

பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர்.  எனினும் அக்கல்வெட்டுக்களுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்த பேரரசன் முதலாம் இராசராசனே ஆவான். இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர்.

சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

திருகோணமலையில் சோழராட்சியின் ஆதாரப்படுத்தல்களாக அவர்களது மெய்க்கீர்த்திகளைச் சொல்லும் மூன்று சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சுவாமி மலையினை அடுத்துள்ள கடற்பகுதியில் சிவலிங்கத்துடன் மீட்கப்பட்ட இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியாகும்.

சிவலிங்கம்
Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979
 Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979

இச்சாசனம் இயற்கையான கற்பாறைகளும் சைவக்கோயிலொன்றின் இடிபாடுகளும் குவிந்து கிடக்கும் கடற்பரப்பிலிருந்து சுழியோடிகளினால் மீட்கப்பட்டது. இங்கு மீட்கப்பட்ட சிவலிங்கம் முற்காலக் கோணேசர் கோயிலின் தொல்பொருள்ச் சின்னமாகக் கருதப்படுகிறது. 1961ஆம் ஆண்டு இவையிரண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போதும் 1972 ஆம் ஆண்டிலேயே இச்சாசனங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் படியெடுத்து வாசிக்கப்பட்ட இச்சாசனம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் ஆரம்பப் பகுதியைக் கொண்டிருந்தது.

1.(குடமாலை) நாடுங் கொல்லமு(ம்)
2.__________ பொழில்________
3.__________எண்டிசை (புகழ்)
4.(நர ஈழமண்)டலந் நின்
5.(டிறல் வென்றித்த) ண்டாற கொண் (டதன்)
6.(னெழில் வள)டூழியுள் ளெ(ல்ல யான்)
7.(டுந்தெ)hழுநம விள(ங்கும் யான்)
8.(டெய் செ)ழியரைத் நே(சு கொண்)
9.(கோ)ராஜ கேசரி வ(ர் மரான)

இச்சாசனம் துண்டமானது. இதனுடைய முதற்பகுதியும் இறுதிப் பகுதியும் உடைந்து விட நடுப்பகுதியே சுழியோடிகளால் மீட்கப்பட்டிருந்தது.
இச்சாசனத்தில் அடங்கியிருப்பது இராஜராஜனின் மெய்க்கீர்த்தியின் சுருங்கிய வடிவமாகும். இது கி.பி .993க்கு முதல் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி வடிவங்களை ஒத்தது என்பதனால் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் கருதப்படுகிறது.

இச்சாசனம் பண்டைய நாட்களில் கோகர்ணத்தில் இருந்த ஒரு சிவாலயம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தானமொன்றினைப் பதிவுசெய்யும் ஆவணமாக வரலாற்றாய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. அத்துடன் இராஜராஜனின் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அதாவது கி.பி.993க்கு முன்பாகவே ஈழமண்டலத்தைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்பதனை உறுதி செய்யும் ஆவணமாகவும் இச்சாசனம் கருதப்படுகிறது.

இராஜராஜனின் மெய்க்கீர்த்தியைப் போன்றே முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பேசும் இரு மெய்க்கீர்த்திகள் திருகோணமலை நகரப் பகுதியில் கிடைக்கப் பெற்றன. இவ்விரு கல்வெட்டுகளும் திருகோணமலையில் புராதானமாக இருந்த கோயில் ஒன்றில் இருந்த தூண்கள் பின்னர் போர்த்துக்கீசரால் தகர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்ததாகக் கருதப்படுகிறது.

Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979
Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979

இவற்றுள் ஒன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கட்டப்பட்ட போது அவ்வாலயத்தில் வைத்துக் கட்டப்பட்ட தூணாகும்.
இந்தத் தூணின் நான்கு பக்கங்களிலும் முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தூணின் ஒரு பகுதி பூச்சினால் மறைந்துவிட ஏனைய மூன்று பக்கங்களிலிருந்த வாசகங்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்வாசகங்களிலிருந்து வரலாற்றுரீதியான முக்கிய விடையங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஒரு ஆலயத்திற்கான நன்கொடைச் சாசனமாகக்கருதமுடியும். திரு.சோமாஸ்கந்த குருக்கள் உதவியுடன் திரு.நா..தமபிராசா அவர்களின் முயற்சியினால் பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டு வீரகேசரி மூலம் 1972 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்ட இக்கல்வெட்டின் நான்காவது பக்கத்தை வாசிப்பதற்கான முயற்ச்சி 2004ஆம் ஆண்டில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது சாசனம் ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சியில் கோணேசர் கோவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தூண்கள் துறைமுக மேடை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்போது 1836 ஆம் ஆண்டு பிரித்தானியக் கடற்படையில் பணியாற்றிய பிலண்ட் என்பவரால் கண்டறியப்பட்ட சாசனமாகும். இச்சாசனம் திருகோணமலை ஒஸ்ற்றென் வேர்க் கோட்டையில் மூன்று தமிழ்ச் சாசனங்களில் ஒன்றாகும்.துண்டமான இச்சாசனங்கள் கோட்டையிலுள்ள பீரங்கிகளின் அடித்தளமான மேடைகளில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979
Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979

இங்கு குறிப்பிடப்படும் மூன்று சாசனங்களும் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட பொழுது பெறப்பட்டவையாகும். இச்சாசனங்களில் ஒன்று முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது.

1.பாக்கையும் நண்ணற் கரு முரண் மண்ணைக் கடக்கமும்
2.பொருகடல் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவர்
3.தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்
4.னவர் வைத்த சுந்தர முடியும் இந்திர நாதமும் தென்டிரை
5.ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கெரளந் முறைமையிற்
6.சூடும் குலதநமாகிய பல புகழ் முடியும் செங்கதிர் மாலையும்
7.சங்கதிர் வெலைத் தொல் பெருங் காவல் பல பழந்தீவும
8.மாப் பொரு தண்டால் கொண்ட கொப்பரகெசரி மன்மான உடையார்
9.சிறி சோழ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு ----வது

என்று வாசிக்கப்பட்ட சிதைந்த துண்டமான அச்சாசனம் திருகோணமலை வரலாற்றைக் குறித்து முக்கியமான தகவல்கள் எதனையும் வழங்காதபோதும் சோழர்களின் நிர்வாகத்தில் திருகோணமலை கொண்டிருந்த முக்கிய இடத்தினைத் தெரிவிப்பதாக உள்ளது.

ஒஸ்றன்பேக் கல்வெட்டு என்று குறிப்பிடப்படும் இச்சாசனம் கங்கை கடாரப் படையெடுப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிராத படியால் இம் மெய்க்கீர்த்தி முதலாம் இராஜேந்திரனின் ஆரம்ப ஆட்சிக்காலத்தில் பொறிக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது.
த.ஜீவராஜ்

தொடரும் .. . .. . ..

மேலும் வாசிக்க

திருகோணமலையிற் சோழர்கள்  
சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள் 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment