Saturday, December 18, 2021

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் - வரலாறும், வழமைகளும் - நிலாந்தினி செந்தூரன்



  ஒரு சமூகம் தன் பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் அடையாளப்படுத்த முனையும் போது அங்கு ஆலயம் துளிர்விட்டுத் தளைக்கின்றது. பண்பாடும், நம்பிக்கைகளும் என்ற  இரு எளிமையான சொற்களுக்குள் ஒரு சமூகத்தின் மிக பெரிய தொன்மம் வித்துக்களாக புதைந்திருக்கும். இந்திய ஞான மரபுகளில்  கிளர்ந்தெழுந்த ஆலயங்கள்   நெஞ்சுருகி ஆணவங்களைக் கரைத்து முத்திக்கு வழிதேடும் கூடங்கள்  என்ற மனச்சித்திரமே நமது பொது பண்பாட்டில் உண்டு.  ஆனால், அங்கு தான்  இசையும் நாட்டியமும் செவ்வியலாகின. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு செறிவூட்டின. சிற்பங்கள் பேச ஆரம்பித்தன.  கட்டடக் கலையின் பெருமையாக கோபுரங்கள்  உயர்ந்து நிமிர்ந்து நிற்கத் தொடங்கின.   மலைகள், நதிகள், விருட்சங்கள் என இயற்கையோடு ஒட்டியதாக எழுந்த ஒவ்வொரு தலங்களும் மானுட வரலாற்றையும், சிந்தனைகளையும் உரத்து கூவத் தொடங்கின.  விருட்ச வழிபாடு சைவ நெறிக்குள் உள்வாங்கப்பட்ட காலத்தில் இருந்து ஆலயங்கள் பல விருட்ச அடைமொழியுடன் சேர்த்து அழைக்கும் மரபும் உருவாகத் தொடங்கியது.   இந்து  வழிபாட்டு மரபில் ஒவ்வொரு மூலவரும், தலங்களும் விருட்சங்களினால் அடையாளப்படுத்தப்படுவது பொது  வழக்காகியது. ‘கொக்கட்டிச் சோலை’  தான்தோன்றீஸ்வரம் விருட்சத்தினால் அடையாளப்படுத்தப்படும் கிழக்கின் தொன்மை மிகு ஈஸ்வரமாகும்.

இதுவரை வெளிவந்த   இலங்கைத் தல வரலாற்று ஆய்வுகளில்  அநேகமான   ஆலய வரலாறுகள்  செவ்வியலாக்கம் பெறவில்லை. இதற்கு  மரபு வழிச் செய்திகளையும் புராண இலக்கியங்களையும் வரலாற்று ஆவணங்களாக கையாள்வதில் மிக நுட்பமான திறன்  தேவைப்படும். இல்லையேல்  ஆய்வுகள் வரலாற்றின்  பக்கங்களைத் தடையுடைத்து முற்றிலும் பக்தியின் பக்கம் சாய்த்துவிடும்.  புராணங்களும், இதிகாசங்களும் சைவ நெறிகளையும், அறநெறிகளையும் பாமர உள்ளங்களுக்குள் எடுத்துதுரைக்கப் பயன்பட்ட இலக்கியச் சித்திரங்களாகும். எனவே தல புராண இலக்கியக்கியங்களில் இருந்து வரலாற்றுச் சான்றுகளைத் கட்டமைக்கும் போதும்  இந்த எச்சரிக்கை உணர்வு அடிப்படை அறிவாக அவசியமாகின்றது.

மிக நீண்ட காலமாக இலங்கை வரலாறு ஒரு கோட்டோவியமாக பெரு வரலாற்றையே பேசுகின்றது.  அநேகமான வரலாற்றாய்வுகளில்  சிற்றூர்களும், சிறு தலங்கள், குளங்கள்  அதிகம் கவனிக்கப்படுவதில்லை. சிற்றூர்கள் பெரு வரலாற்றோடு இணையும் போது தான் தேச வரலாறு மக்களோடு நெருக்கமடையும். தங்கள்  காலடிபட்ட மண்ணின் தொன்மங்களை அம்மக்கள் உணரும் போது அகவெழுச்சி  கொள்வார்கள். அந்த மண் அடிமைப்பட்டிருந்தால் அதன் தொன்மத்தை மீட்க போரிடுவார்கள்.  அதன் வழியாக தங்கள் அடையாளங்களை தக்க வைக்கத் துடிப்பார்கள்.  இதுவே இதுவரை நடந்த உலகப் போர்களின் வேர்களில் பிறந்த கதைகள். இந்த வரிசையில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரமும் அடங்குகின்றது.


இந்நூல் தல வரலாற்றில் இருந்து மண்ணின் வரலாற்றைத் தேட முற்படுகின்றது. அதன் வழியாக  நம் முன்னோர்களின்  கதையைப் பேச முயல்கின்றது. வரலாற்று ஆய்வாளர்கள் இதை நுண்வரலாற்றியல்  ஆய்வு எனக் கூறுகின்றார்கள். சிறு அலகுகள் வழியாக  பெரு வரலாற்றை செறிவுபடுத்தும் முயற்சி தமிழுக்கு இப்போது தான் அறிமுகமாகின்றது. இலங்கை வரலாற்றாய்வாளர்களில் வெகு சிலரே நுண்வரலாற்றியலில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.  சிற்றூர்களையும், தலங்களையும்  பெரு வரலோற்றோடு இணைக்கும் போது பிரதேச வரலாறு மாத்திரமின்றி பெரு வரலாறும்  செறிவூட்டப்படுகின்றது.

 இந்நூலில் கொக்கட்டிச் சோலை திருபடைப்பத்ததி இன்னும் முழுமையான வரலாற்று வாசிப்புக்கு உள்ளாகவில்லை என்ற ஆசிரியரின் ஆதங்கம் ஆழமான கவனத்தை ஈர்க்கின்றது. குறிப்பாக அவர் ஒப்பிட்டுக் குறிப்பிடும் கோணேசர் கல்வெட்டு வரலாற்றாய்வுக்கு உட்பட்டதன் மூலமே  கோணேஸ்வரத்தின் மரபுகளும், வழக்காறுகளும் உயிர்ப்படைந்தன. 13ம் நூற்றாண்டில் இருந்து நமது பண்பாடில் தல புராணங்கள் வழியாக வரலாற்றைப் பதிவு செய்தல் பெரு வழக்காக  தொடங்கியது. ஆக, கொக்கட்டிச்சோலை ஈஸ்வரத்தின் உண்மை வரலாறு மீட்டெடுக்கும் போது சமூகமும் தலமும் நெருக்கமடையும். பொதுவாக  நாம் ஆலயங்களின் பரிணாம வளர்ச்சி, தோற்ற அமைப்புகள் குறித்த மிக எளிமையான புரிதல் கூட இல்லாமல் வாழ்கின்றோம். சைவ ஆலயங்களின் தோற்றமும் வளர்ச்சியும் இந்திய பெருநிலப் பரப்பில் முகிழ்விட்ட காலங்களில் இலங்கை மண்ணிலும் தளிர்த்திருக்கவேண்டும். இன்றைய வளர்ச்சியை பல்லவர், சோழர்காலத்தில் இருந்து தெளிவாக அவதானிக்க முடியும். அவ்வாறே தேர்களின் பரிணாம வளர்ச்சி சோழர்காலத்தில் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். எனினும்  பேராசிரியர் சி.பத்மநாதன்  இந்த ஆலயத்தின் இன்றைய  கட்டடத் தோற்றக்காலம்  பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு உரியது எனவும் இலங்கையில் உள்ள தேர்களில் மிகப் புராதனமானது என்ற இந்த ஆலயத் தேர்கள் என வரலாற்றுச் சான்றளிக்கின்றார். 

தல இலக்கியங்களின்  மையச் சரடான இதிகாசங்கள் சார்ந்த வரலாறும், மக்களிடையே புழங்கும் வழக்காறுகளும்  பக்திமயமான  சித்திரத்தையே  மக்களுக்கு  அளித்துவிடுகின்றது. அநேகமாக அவை கேள்விகளுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. ஆலயங்களைச் சார்ந்தே  பெரு நகரங்கள் மாத்திரமின்றி சிற்றாலயங்களும் எழுந்தன. மட்டக்களப்பின் தனித்துவத்திற்கு ஆலயங்கள் அளித்துள்ள மகத்தான பங்களிப்புக்கள் ஊர்தோறும் ஆராயப்பட வேண்டும். 

இந்நூலில் மன்னர்கள், பொதுமக்கள்  அளித்த  நிலதானங்கள் ஊர்க்கொடைகள் ஆகியவற்றின் செய்திகளை எடுத்து  தல வரலாற்றுடன் ஆசிரியர் பிணைக்கின்றார்.பின்னிணைப்பு அளிக்கும் தகவல்கள் இவை.   இந்நூலில் உள்ள சிறப்பான கூறு என்பது அரசர்களை மட்டுமல்ல பெரும்பாலான  தேசத்து வன்னிமைகளையும், பொதுமக்களையும் தொகுத்து  நிலாந்தினி  விரிவாகச் சொல்லிச் செல்கிறார் என்பது தான். இது இயல்புவாத வரலாற்றின் மற்றொரு எல்லையாகப் பார்க்க முடியும். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர வரலாற்றைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்த மனச் சித்திரத்தை அடைய விரும்புபவர்களுக்கு மிக ஆதாரமான நூல் நிலாந்தினி செந்தூரனின் இந்த ஆக்கம்.


நிலாந்தினி செந்தூரன்

சிரேஷ்ட விரிவுரையாளர்

கிழக்குப் பல்கலைக்கழகம்.

நூலாசிரியரைத் தொடர்புகொள்ள

chensrj@gmail.com



வெளியீடு : குமரன் புத்தக இல்லம். கொழும்பு. 

முகவரி :

குமரன் புத்தக இல்லம் (Kumaran Book House)

மின்-அஞ்சல் : kumbhlk@gmail.com

தொடர்பு எண் : 94112364550

முகவரி :39,36 வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு – 6, இலங்கை



குமரன் பப்ளிஷர்ஸ்

3, மெய்கை விநாயகர் தெரு, வடபழனி

வழி: குமரன் காலனி, 7வது தெரு

சென்னை – 600026

இந்தியா

தொடர்பு எண் : 914423622680





நூலாய்வுகலாநிதி கனகசபாபதி சரவணபவன்.

நுண்வரலாற்றியலின் தேவை நிறைவு பெற்றுவிடும். 

அதன் உச்சத்தை தொட்டிருக்கின்றார் திருமதி நிலாந்தினி செந்தூரன். 

 பவன் - 

 



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: