Wednesday, December 01, 2021

கிழக்கின் பழங்குடிகள் - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

திருகோணமலை வரலாற்றினை வரலாற்றுத் திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை, இது குளக்கோட்டன் சமூகம் போன்ற நூல்கள் ஊடாக பதிவு செய்திருந்த வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களால் 2020இல் வெளியிடப்பட்ட கிழக்கின் பழங்குடிகள் என்ற நூலினை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

வரலாற்றுப் பதிவுகள் என்றாலே எட்டடி தள்ளி நின்று எட்டிப்பார்க்கும் எம் சமூகத்திற்கு ஏற்றாற்போல் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் ஒரு புனைவு போல உரையாடல்களோடு நூலினை நகர்த்திச் சென்று இருப்பது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. இருந்தாலும் வாசிக்கத் தொடங்கிய பின்னர்தான் இது புனைவோ, நாவலோ இல்லை எம் கண் முன்னால் எமது பிரதேசத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தின் வாழ்வியல் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நாம் அன்றாடம் கடந்து செல்கின்ற சக மனிதர்களான அவர்களது பேச்சு வழக்கு மொழியில் இடம்பெறும் உரையாடல்கள் ஊடாக அம்மக்களின் பண்பாட்டு அம்சங்களையும், வாழ்விடம், தொழில், சமூக உறவுகள், இயற்கையோடு நெருங்கிய அவர்களது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்,  ஏனைய  சமூகங்களின் பண்பாட்டு அம்சங்கள் அவர்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், இருபத்தோராம் நூற்றாண்டின் வளர்ச்சியோடு இணைந்து செல்லும் அந்த சமூகத்தின் இன்றைய நிலை என்பன பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

போன்ற அத்தியாயங்கள் ஊடாக பழங்குடிச் சமூகத்தின் வாழ்வியலோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் நூலாசிரியர். வெறுமனே உரையாடல்கள் ஊடான ஒரு தகவல் திரட்டாக இல்லாமல் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய பேச்சு நடையில் அச்சமூகம் கடந்து வந்த பாதையை ஒரு சித்திரமாக வரைந்து இருக்கிறது இந்நூல்.

பெருங்காட்டின் நடுவில் பாலை மரத்தடியில் சடங்கிற்காக ஒரு குழந்தையைச் சுற்றி கூட்டம் காத்திருந்தது. கசகசவென ஒரு கலர் மங்கிய சீலையும் பரட்டைத்தலையுமாக இருந்த ஒருத்தி ஒரு குழந்தையை மடியில் வைத்திருந்தாள். வீங்கிய வயிற்றுடன் கை,கால் சூம்பி மூக்கு வடிந்து காய்ந்து கொண்டிருந்தது.

எம் புள்ளைய குடாநீலி புடிச்சு நச்சுப்பால் கொடுத்திட்டுது என்றவளின் கண்களில் சோகம் நெகிழ்ந்தது.

குடாநீலியா ? முருகன் மௌனமாக இருந்தான்.
தலையாட்டினாள் அவள்.

குடாநீலி பேயா ? என்றான் முகிலன்.

அப்படியே வச்சுக்கோ 

மருந்து இல்லையா ?
 
கப்புறாளைதான் குடாநீலியை விரட்ட வேணும். குடாநீலி, மாநேரி இரண்டுமே அக்கா தங்கைதான். காட்டில குடியிருக்கும். குடாநீலி கண்வச்சா குடி கெட்டதுதான்.

ஏன் குடாநீலி குழந்தையை பிடிச்சது ?

என்று நீளும் உரையாடலைக் கேட்டபடி நம்மையும் அறியாமல் முகிலனருகில் நாமும் போய் உட்கார்ந்துகொள்வோம்.

குடாநீலி கெட்டதுதான் நினைக்கும். அது கண் பட்டாலே புள்ளைகளுக்கு நோய் கொடுத்து உசிரைப் பறிச்சிடும். அது காட்டில உறைஞ்சு இருக்கிறதால பெருங்காட்டிலதான் குடாநீலிக்கு பொங்கல் வைச்சு விரட்டுவாங்க. ஊருல பொங்கல் வச்சு விரட்டினா குடாநீலி  ஊருக்குள்ள சுற்றித்திரியும்.

முருகன் முகத்தில் பீதி பரவி இருந்தது.


பழங்குடி சமூகத்தில் இருந்த பழமையான நம்பிக்கைகளை,  இயற்கை வாழ்வியலோடு அவர்கள் அதனைக் கடந்து வந்த கதையினை மிக இலகுவான வசன நடையில் மனதில் பதிய வைக்கிறது இந்நூல். பழங்குடி சமூகத்தின் வாழ்வியலில் இருந்து இன்றைய நாட்களில் முற்றாக மறைந்து போய்விட்ட பல்வேறு அம்சங்களை பாத்திரப் படைப்புகளுக்கு ஊடாக நம் மனக்கண்ணில் சித்திரமாக படிய வைத்துவிடுகிறார் நூலாசிரியர்.

இவற்றோடு போத்துக்கீசரால் இலங்கையில் கொண்டுவரப்பட்டு காலனித்துவ இலங்கையின் பல வரலாற்றுப் பக்கங்களை நிரப்பிய காப்பிரி சமுகத்தின்  பூர்வீகம், வாழ்வியல் முறை, பண்பாடு, கலாச்சார நடைமுறைகள், அவர்களுக்கேயுரிய தனித்துவமான துள்ளல் இசை, நடனம் என்பனவற்றோடு அச்சமூகம் ஏனைய சமூகங்களுடன் கலந்து தனது தனித்துவத்தை இழந்து போன வரலாற்றையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. இவற்றோடு பழங்குடி மக்களின் பாடல்கள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக ஐரோப்பிய நாடோடிக் குறவர்கள் பற்றிய அறிமுகத்தோடு நூல் நிறைவு பெறுகிறது.

கிழக்கின் பழங்குடிச் சமூகம் கடந்து வந்த பாதையை இலகுவாக மீட்டு பார்ப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் இந்நூல் சமூக ஆர்வலர்கள்  கட்டாயம் படிக்கவேண்டிய நூலாகும்.

திருகோணமலைப் பிரதேச வரலாறு தொடர்பில் ஆர்வம் காட்டும் எந்தவொரு நபரும் கட்டாயம் வாசித்துப் பாதுகாக்க வேண்டிய நூலாசிரியரின் ஏனைய நூல்களான வரலாற்றுத் திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை, இது குளக்கோட்டன் சமூகம் ஆகியவற்றின் நூல் அறிமுகத்தினை வாசிக்க கீழ் உள்ள படத்தினைச் சுட்டுங்கள்.

Click Here
இது குளக்கோட்டன் சமூகம்

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
கிழக்கின் பழங்குடிகள் நூல் கிடைக்குமிடங்கள் 


Poobalasingham Book Depot (பூபாலசிங்கம் புத்தகசாலை)
Phone: 0112 422 321

Rasakia Book Shop   Trincomalee
Phone: 0262 220 231


நூலாசிரியரைத் தொடர்புகொள்ள

+94779356888  (WhatsApp)

kanaga346@googlemail.com 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: