Friday, July 19, 2013

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை

கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம்  கோணேசர் ஆலய கட்டடச் சிதைவுகளில் ஒன்றாகும். இது நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாசனம் திருகோணமலையின் வரலாற்று ஆர்வலராகிய திரு.நா.தம்பிராசா அவர்களினால் கண்டறியப்பட்டு திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம் என்போரால் வெளிப்படுத்தப்பட்டது.

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு
நிலாவெளி தான சாசனம் 

ஸ் (வஸ்தி ஸ்ரீ)…
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
406 ம் பக்கம்

நிலாவெளி தான சாசன விளக்கம்

‘கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் ,சந்திரனும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும்.

வரலாற்றுத் திருகோணமலை
கனகசபாபதி சரவணபவன்
பக்கம் 125-126

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு

நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு

1. திருகோணமலை - வரலாற்றில் இப்பெயரினைப் பதிவுசெய்த ஆவணங்கில் இதுவே மிகப்பழமையானது.
2. கோணமாமலை - திருகோணமலைக்கு 7 ம் நூற்றாண்டுமுதல் வழங்கபட்டுவந்த இந்தப் பெயர்வடிவம் ( உ+ ம்  - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் திருக்கோணமலைப் பதிகம் ) இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
3. மச்சகேஸ்வரம் -  திருக்கோணேச்சரத்திற்கு புராணகாலம் முதல் வழங்கிவந்த பெயர்களில் ஒன்றான மச்சகேஸ்வரம் இச்சாசன காலத்தில் வழக்கில் இருந்ததை இது அறியத்தருகிறது.
4உரகிரிகாமம், கிரிகண்டகாமம் - என்னும் நிலாவெளிக்குள் அடங்கிய தற்போது வழக்கொழிந்துபோன இரு இடப்பெயர்களை அறியக்கூடியதாக இருக்கிறது.
5. நில எல்லைகள் - இச்சாசம் எழுதப்பட்ட காலத்தில் நில எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததை அதன் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.
6. தானம் - திருக்கோணேச்சர ஆலயத்திற்கு சுமார் 250 வேலி ( 1700 ஏக்கர் ) நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் இச்சாசனம் திருகோணமலை வரலாற்றுத்தேடலில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

 1. Nalla seithikalai pirasurithu thonmaiyai eduththuk kaaddiya Dr Valka
  Kernipiththan

  ReplyDelete
 2. திரு கோணமலையில் தமிழர்கள் - சிங்களவர்கள் கலந்து வாழ்ந்துள்ளனரோ? அதன் பழம் பெயர்களான உரோகிரிகம, கிரிகண்டகம மற்றும் எத்தகம்பே போன்ற சிங்கள பெயர்கள் வந்துள்ளனவே.

  ReplyDelete
 3. உரகிரிகாமம், கிரிகண்டகாமம்

  காமம் என்று முடிவுறும் பெயரை கம ஆக்கிவிட்டீர்கள். பண்டைய வரலாற்றில் இருந்து இன்றுவரை காமம் என்று முடிவுறும் தமிழ் ஊர்ப் பெயர்கள் கொடிகாமம்,தம்பலகாமம் ,பழுகாமம்,பனங்காமம், வீமன்காமம், மேன்காமம்...... இன்னும் பல.
  இங்கு காமம் என்பது சிற்றூரைக்குறிக்கும்.


  எத்தகம்பே(எட்டம்பே) எந்த இடத்தினைக்குறிக்கிறது என்று தெரியவில்லை.


  இச்சாசனம் தமிழ்,கிரந்தம் ஆகிய இரு வடிவங்களும் கலந்து எழுதப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 4. கிராம என்ற சமற்கிருத பெயரின் பாளி/பிராகிருத வடிவமே காம, சரி தானே. அதன் தமிழாக்கம் காமம். பண்டைய தமிழில் காமம் என்றால் காதலைக் குறிக்கும். அதோடு காமம் என எந்த தமிழ் ஊரும் தென்னிந்தியாவில் இல்லை. கிராமம் என்பது கூட அண்மைய மாற்றமே. ஆக, இது இலங்கையில் மட்டும் உடைய வழக்கு. அத்தோடு கிரிகண்ட, உரோகிரி என்பது எல்லாம் கூட தமிழில்லை. தம்பல என்பது வெற்றிலையைக் குறிக்கு வடசொல், ஆக, மிகுந்த வடமொழித் தாக்கம் அங்கு இருந்துள்ளதே. சரி தானே ஐயா !

  ReplyDelete
 5. //கிராம என்ற சமற்கிருத பெயரின் பாளி/பிராகிருத வடிவமே காம//

  காமம் என்ற இலங்கைத் தமிழ்ச்சொல் தொடர்பில் இரண்டு வாதங்கள் உள்ளன.....
  கும்= கூடுதல்
  கும்> கும்பல் (மக்கள் கூட்டம்)
  இந்த தமிழ் வேரிலிருந்து தான்

  கும்>கம்>கம> கமம்> காமம் வந்ததே தவிர சமக்கிருத்திலிருந்தல்ல.
  காமம் என்றால் மக்கள் வாழுமிடம், குடியிருப்பு என்பதையும் குறிக்கும். அதனால் தான் இலங்கைத் தமிழில் காமம் என்ற சொல்லில் இடப்பெயர்கள் உண்டு.

  என்ற வாதமும்....

  காமம் என்ற இலங்கைத் தமிழ்ச்சொல் சமக்கிருத '(g)கிராம" என்ற சொல்லிலிருந்து உருவானது. இன்னுமொரு தமிழ்ச்சொல்லாகிய கிராமம் என்ற தமிழ்ச்சொல்லும் அப்படி சமக்கிருதத்திலிருந்து உருவானதே. காமா என்பது சிங்களத்திலும் பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது, அதுவே ஈழத்தமிழில் காமம் என்று வழங்கப்பெற்று வருகிறது.

  என்ற வாதமும் உள்ளது.


  எனினும்
  இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற இடம் தமிழ்ச்சொல்லே, தமிழர்கள் அங்கு பண்டு தொட்டு வாழ்ந்தார்கள் என்பது புதைபொருளாராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கதிர்காமம் என்ற ஊர்ப்பெயரில் காமம் என்ற சொல் இங்கு இடப்பெயரே தவிர காதல் அல்லது பாலியல் சம்பந்தமானதல்ல. உ+ம்: கொடிகாமம், பளுகாமம் என்னும் இடப்பெயர்கள்.

  /// காமம் என எந்த தமிழ் ஊரும் தென்னிந்தியாவில் இல்லை///

  புதுச்சேரியில் அமைந்துள்ள கதிர்காமம்


  // தம்பல என்பது வெற்றிலையைக் குறிக்கு வடசொல்//

  தம்பல் - அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்
  தம்பலடித்தல் - பயிரிடுதல், உழவு செய்தல்
  தம்பலாடல் - சேறடித்தல் அல்லது சேறாடால்.

  ReplyDelete
 6. கும் - கம் என்ற வேர்ச் சொல் ஏற்புடையதாய் படவில்லை கம, காம, காமம் என்ற சொல் இலங்கை முழுவதும் இருப்பதாய் அறிகின்றோம். அதாவது சிங்களத்தில் கூட, ஆக இது கிராம என்ற வடசொல்லின் பிராகிருத வடிவமே. தர்ம > தம்ம என்பது போல, கார்த்திகேய கிராமம் என்பதே பின்னர் கத்திர காமம் > கதிர் காமம் என்றாகி இருக்க வேண்டும். புதுவையின் கதிர்காமம் இலங்கையின் ஊர்ப்பெயரால் எழுந்தது, அங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துறவி சென்ற நூற்றாண்டில் வாழ்ந்ததன் விளைவு (?).. இலங்கையைப் பொறுத்தவரை தமிழை விட பிராகிருதத் தாக்கம் மிகுந்துள்ளதை அதன் ஊர்ப் பெயர்கள் நன்கு விளக்குகின்றன. பல பிராகிருத ஊர்ப் பெயர்கள் பிற்காலத்தில் தமிழ் மயமாக்கப்பட்டும் உள்ளதல்லவா? வெலிகாம > வலிகாமம். வெலிபுர > வல்லிபுரம், பவானிவாவி > வவனியா, சில ஊர்ப் பெயர்கள் தமிழ் - சிங்களம் கலந்தும் எழுந்துள்ளன, இகல புளியங்குளம் போன்றவை.. தமிழ் - பிராகிருத மோதல் ஊர்ப்பெயர்களில் தெளிவாகின்றன.

  ReplyDelete

 7. வெலிகாம > வலிகாமம்.

  வலிகாமம்
  வலி + காமம் = மணல் கிராமம்
  வால் என்பது பழந்தமிழில் உள்ள பாலைக்குறிப்பிடும் குறிப்புப்பெயரெச்சமாகும். சங்கத் தமிழில் வால் எக்கர் என்பது வெள்ளை மணல் திட்டுகள் அல்லது வெள்ளை மணல் தொடர்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். சிலப்பதிகாரத்தில் வாலுகம் என்று வெள்ளை மணலை அழைப்பதைக் கவனிக்கலாம்.  வெலிபுர > வல்லிபுரம்,

  புரம் என்ற ஈற்றுப்பெயருடைய கிராமங்களும் நகரங்களும் தமிழகத்திலே தொன்மைக் காலம் முதலாக இருந்துள்ளன. புரம் என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாக நெடுநாள் வழக்கிலுள்ளது. அந்தப்புரம், சந்தைப்புரம் போன்ற வழக்குகளையும் காண முடிகிறது. கபாட புரத்தில் இரண்டாம் தமிழ்வ் சங்கம் இருந்ததாகவும், அது கடலுள் மறைந்து விட்டதாகவும் அறிஞர் கூறுவர்.சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும் என்றும், அது போன்றே 'புரம்” என்னும் சொல்லும் சிறந்த ஊர்களைக் குறிப்பிதாகும். என்னும் ரா.பி. சேதுப்பிள்ளை (1976: 46) குறிப்பிட்டுள்ளார். “புரம்” என்பதற்குச் சமனான “புரி” என்பதும் தமிழ் நாட்டில் அநேக இடங்களில் ஈறாகவும் அமைந்துள்ளது.

  யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து இடப்பெயர்கள் “புரம்” என்ற ஈறு பெற்றமைந்துள்ளன. இப்பெயர்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  தெய்வஞ் சார்ந்தவை
  உமையாள்புரம், உருத்திரபுரம், கணேசபுரம், கனகபுரம், கனகாம்பிகைபுரம், காஞ்சிபுரம், குமரபுரம், வல்லிபுரம்.

  வரலாறு சார்ந்தவை கழிபுரம், தொல்புரம்.

  தனிமனிதப் பெயர் பெற்றவை:
  இராமநாதபுரம், ஸ்கந்தபுரம்.

  நிகழ்வு குறிப்பன: தர்மபுரம், மாவிட்டபுரம், வசந்தபுரம்.

  வல்லிபுரம்
  வல்லிபுரம் என்ற பெயர் இக்கிராமத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது. நூலாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது. அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
  வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கொள்ளப்படுகிறது.

  ReplyDelete