Saturday, July 13, 2013

குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்


திருகோணாசலப் புராணம் கோணேஸ்வரத்தின் தலபுராணமாகும். ‘சிவன் கோணநாயகராக அவதாரம் எடுத்த வரலாற்றை இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டனின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வசிட்டர் என்ற தவசிரேஸ்டர் இந்த அற்புதமான வழிபாட்டை உருவாக்கினார் எனத் தலபுராணமாகிய திருகோணாசலப் புராணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்நூலைத் தொகுத்தவர் திரு.மா.முத்துக்குமாரு என்பவராவர். குளக்கோட்டன் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் கோணநாயகர் திருவுருவைப் பற்றி இந்நூல் கூறும் கருத்துக்களை தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
குளமும் கோட்டமும் கட்டிய மன்னனின் முகத்தில் கவலை சூழ்ந்திருப்பதைக்கண்ட தவசிரேஸ்டரான வசிட்டர் மன்னனை அணுகி “மன்னா உன் மனதில் தோன்றிய வண்ணம் குளமும் கோட்டமும் கட்டிவிட்டாய். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய உன் முகத்தில் வாட்டம் தெரிகிறதே! காரணத்தை நான் அறியலாமா?”எனக் கேட்கிறார். வசிட்டரின் இந்தக் கேள்வி குளக்கோட்டனின் மனக்கிடக்கையை வெளிக்கொண்டு வருகிறது.

ஐய கேள் அடியேன் உன்றன்
அருளினால் இயற்றும் இந்தச்
செய்ய பொன் ஆலயத்தில்
தேவர் மாதவர்கள் போற்றும்
மெய்யனை உமையினோடும்
விழிகளால் தரிசித்தே யான்
உய்ந்திட அருளை ஈவாய்
என்றனன் உவணை வென்றோன்.

திருகோணாசலப் புராணத்தில் ‘திருப்பணிசெய் படலத்தில்’ இப்பாடல் வருகிறது. குளக்கோட்டன் தான் கட்டிமுடித்துள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் இறைவனின் வடிவம் குறித்து பெரிதும் ஆலோசித்தான். தன்னால் உருவாக்கப்பட்ட ஆலயப்பணி குறைவின்றி நடைபெற ‘வேண்டும்போது மழையும் , வெயிலும் தரக்கூடிய’ இரங்கிய நிலையில் மாதுமை பங்கனை வடிவமைப்புச் செய்து தருமாறு வேண்டினான்.இந்த இடத்தில் குளக்கோட்டனின் தர்மசிந்தனை வெளிப்படுகிறது. தான் கட்டிய கோயில் சிறப்புற மக்கள் செல்வச்செழிப்புடன் வாழவேண்டுமென அவன் கருதினான்.

சந்திரசேகரர் , சோமாஸ்க்கந்தர் போன்ற சாஸ்திர ரீதியான சிவவடிவங்கள் இருக்கும் போது மாதுமை பங்கரை வேறுவிதமாக வடிவமைப்புச் செய்து தருமாறு குளக்கோட்டன் வேண்டுவது கவனிக்கத் தக்கது. தன்னால் உருவாக்கப்பட்ட குளமும், கோட்டமும், குடியிருப்புகளும் ஒரு குறைவுமின்றிச் செல்வச் சிறப்போடு இருக்க வேண்டும் என்பதில் அவன் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்தான். பின்னாளில் அவன் வகுத்த திட்டங்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

கோணேசர் கல்வெட்டு பெரியவளமைப்பத்ததி போன்ற நூல்கள் மூலம் இதனைநாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. மன்னன் வேண்டுவதுபோல நெல்விளைவிப்போர் வேண்டும் போது மழை வெயிலைத் தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையை உருவாக்க வேண்டி இறைவனின் திரு உருவில் மாற்றமும் செய்து கிரிகைகளில் மாற்றங்களும் செய்து

‘திண்திறல் அரக்கன் தன்னைச் 
செயித்தருள் செய்தேயாண்ட 
முண்டக மலர்த்தாள் கொண்ட மூர்த்தம்’ 


என இரு கரங்களுடன் வலக்காலைத் தூக்கிய நிலையில் ‘கோணநாயகர் திருவுருவை’ அமைத்து ஆகமங்களுள் தலையாய ‘மகுடாகம கிரியைகளிலான’ உருவ, அருவ வழிபாடாக கோணேஸ்வர வழிபாட்டை இருபிரிவுகளாக்கி வசிட்டமாமுனி குளக்கோட்டனுக்கு வழங்கினார் எனத் திருகோணாசலப்புராணம் கூறுகிறது.

தொடரும்.

வே.தங்கராசா


மேலும் வாசிக்க

1. குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை
2 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment