Wednesday, July 10, 2013

'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு

'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2  @ கோணேசர் கல்வெட்டு

குளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே காரணம் எனப் பலரும் அபிப்பிராயங்களை வெளியிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கின்ற பொழுது அவனது செல்வாக்குக்கு வேறு சில காரணிகளும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன என்பதே உண்மையாகும்.

மேலும் வாசிக்க

குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை


கைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.
கோணேசர் ஆலய நிர்வாகம் தங்கு தடையின்றி;ச் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து வன்னிபம் தானத்தார் வரிப்பத்து கருகுலக்கணக்கர் மற்றும் தொழும்பாளர்கள் ஆகியோர்களை அழைத்து வந்து அவரவர்களுக்குரிய கடமைகளை வகுத்து வழங்கியதோடு கடமையிலிருந்து தவறுபவர்களுக்கான தண்டனைகளையும் குளக்கோட்டன் வகுத்திருந்தான்.

திருகோணமலை கட்டுக்குளப்பற்று ஆகிய பிரிவுகளின் அதிபர்களாக வன்னிபங்கள் நியமிக்கப்பட்டனர். தான் அமைத்த கோணேசர் கோயிலின் ஆராதனைகளையும் ஆலய சேவைகளையும் கங்காணித்து அவை சிறப்பாக நடைபெறச் செய்வது திருகோணமலை வன்னிபத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். கோயில் காரியங்கள் தொடர்பாகத் தானத்தார் வரிப்பத்து இருபாகைமுதன்மைக் குருக்கள்மார்; நாட்டவர்கள் முதலியோரை அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே வன்னிபம் விசாரணைகளை நடத்தியதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.
'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2  @ கோணேசர் கல்வெட்டு

திருகோணமலை வன்னிபங்கள் “பூபாலகட்டு” என்னும் இடத்தில் மாளிகைகளில் வாழ்ந்தனர் எனக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். கொலை புரிவோர்களுக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரமும் திருகோணமலையை ஆட்சிசெய்த தனியுண்ணா பூபால வன்னிபத்திற்கு குளக்கோட்டன் வழங்கியிருந்தான். மேலும் கோயில் தொழும்பாளர்கள் குற்றங்கள் செய்தால் அல்லது அவர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டால் அவற்றைத் தீர விசாரித்து தீர்த்து வைப்பதும் குற்றங்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் மிகவிரிவாக ‘பெரியவளமைப் பத்ததிச் செப்பேடுகளில’ பொறித்து வைத்திருந்தான். இவை கனகசுந்தரப் பெருமாள் என்பவரிடம் வழங்கப்பட்டிருந்தன.

இவர் நிலாவெளியில் வாழ்ந்து வந்தார். கோணேசர் கோயில் தொடர்பான முக்கிய கூட்டங்களில் இவ்விபரங்கள் தேவைப்படின் கனகசுந்தரப் பெருமாளை சகல மரியாதைகளுடன் அழைத்து வரும் நடைமுறைகள் பழமையில் பேணப்பட்டு வந்தன. தற்பொழுது இந்த பெரியவளமைப் பத்ததியை நாம் காணக்கூடியதாக இல்லை. இச்செப்பேடுகளிலுள்ள விபரங்களையே கோணேசர் கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது.

'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2  @ கோணேசர் கல்வெட்டு

கோணேசர் கல்வெட்டு என்னும் இவ்வரிய நூலின் உரைநடைப்பகுதியில் உன்னச்சகிரியை ஆட்சி செய்த ஆடகசவுந்தரியைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவள் தனது அமைச்சரை அழைத்து “குளக்கோட்டன் அமைக்கும் ஆலயத்தை அழித்துவிட்டு அவர்களையும் கப்பலேற்றி அனுப்பிவிட்டு வருமாறு” ஆணையிடுகிறாள்.

அமைச்சர், படைபலத்துடன் சென்று குளக்கோட்டன் செய்யும் அற்புதமான ஆலயப்பணிகளை கண்டு வியந்து படைகளை ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தன்னந்தனியனாக குளக்கோட்டனைச் சந்தித்து “உன்னச்சகிரியை ஆட்சி புரியும் எங்கள் அரசி தாங்கள் செய்யும் தெய்வீகப் பணிக்கு உதவி வருமாறு எங்களை அனுப்பி வைத்தனள்.” என்று கூறுகிறான்.

அதனைக் கேட்ட குளக்கோட்டனும் சந்தோசத்துடன் சம்மதமளிக்க இந்த இரு அரசுகளின் உறவால் கந்தளாய்க்குளம் உருவாகியது. பின்னர் குளக்கோட்டன் ஆடகசவுந்தரியை திருமணம் செய்து கொண்டு திருக்கோயில் வரை தனது ஆலயப்பணிகளை மேற்கொள்ளுகிறான். அவர்களுக்கு சிங்ககுமாரன் என்றொரு மகன் பிறக்கிறான்.இந்த விபரங்கள் அனைத்தையும் கோணேசர் கல்வெட்டு உரைநடைப் பகுதியில் காணக்கூடியதாக இருக்கிறது.

கோணேசர் கல்வெட்டில் சில இடைச்செருகல்கள் உள்ளதாக இதனை ஆய்வு செய்த வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுவது போல ‘இலங்கையிலே தமிழ் மொழியில் எழுதப்பெற்றுள்ள வரலாற்றுச் சார்புடைய நூல்களிலே கோணேசர் கல்வெட்டு தனித்துவமானது’ என்ற கருத்து மிகப் பொருத்தமானதாகும்.

'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2  @ கோணேசர் கல்வெட்டு
திருக்கோணேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட நந்திதேவர் சிலை

தொடரும்.


வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: