Monday, July 15, 2013

குளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4

 குளக்கோட்டன் வகுத்த அருவ உருவ வழிபாடுகள் பகுதி 4

வசிட்ட மாமுனிவரால் வடிவமைக்கப்பட்ட உருவ ,அருவ வழிபாடுகள் ஒருவித குறைபாடுகளுமின்றி திருகோணமலை கோணேஸ்வரத்தில் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. குளக்கோட்டன் காலத்திற்குப் பிறகும் இவ்வாலயச் செயற்பாடுகள் செம்மையாக நடைபெற்றன.

கோணநாயகர் கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது தமது சமயத்தைப் பரப்ப முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட போத்துக்கீசர் திருகோணமலையில் உள்ள கோணநாயகர் கோயிலை இடித்துத்தரைமட்டமாக்கினர்.
இந்தக் கொடிய செயலை முன்கூட்டியே அறிந்திருந்த பாசுபதர்களும் தொழும்பாளர்களும் இணைந்து கோணநாயகர் திருவுருவையும் வேறு சில விக்கிரகங்கங்களையும் இரவோடிரவாக எடுத்துச் சென்று தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள மலைத்தொடரிலுள்ள ‘சுவாமிமலையில் ஒழித்து வைத்து பிறர்அறியாமல் வழிபாடியற்றி வந்தனர். இதைக் ‘களனிமலை’ எனவும் கூறுவர்.

பின்னர் தம்பலகாமத்தில் ஆலயம் கட்டப்பட்டு இத்திருவுருவங்கள் தம்பலகாமம் கோணேசர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருகோணமலை கோணநாயகர் கோயிலில் இருந்த ஆதி மூலமான கோணநாயகரே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோயில் ‘ஆதி கோணநாயகர் கோயில்’என அழைக்கப்பட்டு வந்தது வருகிறது.

ஆதி கோணநாயகர் கோயில்
உருவ அருவ வழிபாடுகள்
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் வழிபாடு உலகிலுள்ள இந்து ஆலய சிவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகள்போல் அல்லாது மகுடாகமக் கிரியை முறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவ ,அருவ வழிபாடாக இருவிதமாக அமைந்துள்ளது. ஆலயத்தில் நடைபெறும் பூசை அபிஷேகம் வருடார்ந்த விழா போன்றவை உருவ வழிபாடுகளாகும். இவற்றை ஆலய பிரதம குருமார்களான இருபாகை முதன்னைக் குருமார்கள் இணைந்து செய்து வந்தனர். இவர்கள் மகுடாகம முருமார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தளாய் நீர்த்தேக்க ‘கால்நாட்டு மண்டபம்’ என்ற இடத்தில் ‘கன்னிக்கால்’ நட்டுக் கொட்டகைகள் அமைத்து ‘இலட்சுமி நாராயண திருமணமாக’ மாதக்கணக்காக நடைபெறும் மகா வேள்வி ,தம்பலகாமம் நாயன்மார் திடலிலுள்ள வேள்வி வளாகத்தில் இடம் பெறும் ‘மடை வைபவம்’ ,நெருஞ்சித்தீவு வேள்வி கள்ளிமேட்டு வேள்வி வளாகத்தில் நடைபெறும் ‘பத்தினித்தேவி விழா’, மாகாமத்தில் நடைபெறும் ‘மூர்க்காம்பிகா விழா’ ,போன்றவை திறந்தவெளிச் சுற்று ஆராதனைகளாகிய அருவ வழிபாடுகளாகும்.

ஆதிகோணநாயகர் ஆண்டுவிழாவை மையமாக வைத்து வருடத்திற்கு ஒன்றாகச் சுற்று ஆராதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற நியதிகள் உள்ளன. உருவ ,அருவ வழிபாடுகள் தவறாமல் குறைவின்றிச் செய்யப்பட்டால் துன்பம் அற்று மக்களெல்லாம் சுகமாக வாழ்வார்கள் என்று கோணேசர் கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது.

“அன்னவரன்பூசை அபிஷேகம் விழா முதலியன அழகாய்ச் செய்தால்
மின்னு நிறை விளக்கேற்றிக் கிராமதேவதை பூசை விளங்கச் செய்தால்
இன்னலின்றி மக்களெல்லாம் இருநிதி சந்ததியுடன் இனிதாய் வாழ்வர்
சொன்ன இந்த முறை தவறின் விளைவழிந்து துன்பமுற்றுச் சோருவார்கள்”

(கோணேசர் கல்வெட்டு)

தொடரும்.
வே.தங்கராசா


மேலும் வாசிக்க

1. குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை
2 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு
3.  குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு'  -  பகுதி 3 @  திருகோணாசலப் புராணம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment