Friday, August 02, 2013

குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7


குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் ஆற்றிய பணி இன்றும் திருகோணமலை தொடக்கம் திருக்கோயில் வரை ஒருவித குறைபாடுகளுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கால மாற்றத்தினால் சொல்லமுடியாத அளவுக்கு   இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் துன்பங்களை அனுபவித்து வந்த போதும் அவற்றினைக் கைவிடாமை குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னர்கள் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதும் தமது ஆட்சிக்குட்படுத்துவதும் பின்னர் அவற்றை விட்டு செல்வதும் வழமை என்பது வரலாறு. இருந்தும் குளக்கோட்டன் என்னும் தர்மசீலன் ஆற்றிய பணியானது இன்றுவரை மக்கள் அவனை மறக்காமல் ஒரு தெய்வீக புருசனாகப் போற்றி வணங்கச் செய்திருக்கிறது.
திருக்கோணேஸ்வரம், தம்பலகாமம், வெருகல், கொக்கட்டிச்சோலை ,திருக்கோயில் போன்ற இடங்களில் அவன் அமைத்த கோயிலகள் சிறப்பாகச் செயற்பட்டு இற்றைவரை ஆன்மிகப் பணியை மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றன. திருகோணேஸ்வரத்தில் அவன் திருவுருவச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. மக்கள் அவன்சேவைக்கு மகுடம் சூட்டுவது போல பாடசாலைகளுக்கு, நூலகங்களுக்கு,பூங்காக்களுக்கு,நிறுவனங்களுக்கு ‘குளக்கோட்டன் ’ எனப் பெயர் சூட்டி வாழ்த்தி வணங்கி வருகிறார்கள்.


குளக்கோட்டன் திருப்பணி செய்த திருக்கோணேஸ்வரம் இருக்கும் வரை தமது சமயத்தைப் பரப்ப முடியாது என்பதைப் புரிந்து கொண்ட போர்த்துக்கீசர் அந்த ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனை முற்கூட்டியே அறிந்து கொண்ட தொழும்பாளர்கள் கோணேசர் திருவுருவையும் ஏனைய விக்கிரகங்களையும் நிலத்தில் புதைத்து வைத்தும், தம்பலகாமத்திலுள்ள களனி மலையில் கோணேப்பெருமானை வைத்து இரகசியமாகப் பூசித்தும் வந்தனர். பின்னர் இத்திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டு இன்று திருகோணமலையில் கோணேஸ்வர ஆலயம் மிகச்சிறந்த நிலையில் தனது பணிகளை ஆற்றி வருகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இதே போல களனிமலையில் வைத்து வணங்கப்பட்டு வந்த ஆதிகோணநாயகர் திருவுருவை கண்டியிலிருந்து அரசு செய்த இராசசிங்கன் என்னும் மன்னன் இற்றைக்கு இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தம்பலகாமத்தில் தற்போதுள்ள ஆலயத்தை கட்டிமுடித்து கோணநாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து குளக்கோட்டன் காலத்திலிருந்ததைப் போல சகல காரியங்களும் நடைபெறவேண்டும் என ஆணையிட்டு கண்டிக்குச் சென்று தனது நல்லாட்சியை தொடர்ந்தனன் என திருகோணாசல வைபவம் என்ற நூல் கூறுகிறது.

தனக்கென வாழாது தனது நாட்டு மக்களுக்காக அவர்களது நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் சிந்தித்து கோணநாயகர் வழிபாட்டை தன் மக்களுக்கு வழங்கி ,அவ்வழிபாட்டிற்கான சகல மானியங்கயையும் கொடுத்து, வழிபாடு சிறப்புற்றோங்குவதற்கான சிறந்த கட்டமைப்பையும் உருவாக்கி தன் கடமையில் தன்னிறைவு கண்ட குளக்கோட்டு மாமன்னன் இன்றும் என்றும் தன்னிகரற்ற தர்ம சீலனாக மக்கள் மத்தியில் பிரகாசிப்பான்.
முற்றும்வே.தங்கராசா


உசாத்துணை நூல்கள்.
1. கோணேஸ்வரம். திரு. க.குணராசா.
2. திரிகோணாசலப் புராணம். முத்துக்குமாரசாமிப்பிள்ளை. பதிப்பு அழகக்கோன் 1950.
3. யாழ்ப்பாண வைபவமாலை. மாதகல் மயில்வாகனப் புலவர் பதிப்பு. கலாநிதி .க.குணராசா.
4. யாழ்ப்பாணச் சரித்திரம். செ.இராசநாயகம். புதிப்பு. 1999.
5. வரலாறறுத்திருகோணமலை. கனகசபாபதி சரவணபவன். புதிப்பு.2003.
6. குளக்கோட்டன் தரிசனம். செல்வி க.தங்கேஸ்வரி. பதிப்பு. 1993.


மேலும் வாசிக்க

1. குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை
2 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு
3.  குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு'  -  பகுதி 3 @  திருகோணாசலப் புராணம்
5. திருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5
6. குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. I congratulate the editor and his son Dr.Jeeva. Eventhough Still I search for Kulakottan. Is kulakottan Kalingamagan?
    Koneswaram exist even before Ramayana regime. According to Ramayanam, Ravanan worshiped Lord Konesher. Even the history of SriLanka start with mahavamsa. It is a legend. Most of the news of mahavamsa are from folk stories. Well do more researches and bring them into light.
    Kernypiththan

    ReplyDelete