Friday, August 30, 2013

ஆர்மோனியக் கலைஞர் திரு.சி.கனகரத்தினம்


தம்பலகாமம் தெற்குப்பகுதியில் ‘பச்சைப் பசேலென’ வயல்களால் சூழப்பட்ட இடமாக அமைந்துள்ளது மாக்கைத்திடல். புழமையில் ‘திருமால் கை’ என்னும் கிருஷ்ணகோயில் இத்திடலில் அமைந்திருந்ததாகவும் காலப்போக்கில் இக்கோயில் சிதைவுற்று அழிந்து போனதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. திருமால் கை என்னும் கோயில் அமைந்திருந்த இடம் திருமால்கை என வழங்கப்பட்டது.

திருமால்கையே காலப்போக்கில் சிதைந்து மாக்கைத்திடலாக மாறியது. சிதைவுற்ற இக்கோயிலின் அழிபாடுகள் கலைஞர் கனகரத்தினத்தின் மூத்த சகோதரரின் காணிக்குள் காணப்படுகிறது. தம்பலகாமத்தில் பெரிதும் பேசப்படுகிற ‘குடமுருட்டி ஆறு’ இக்கிராமத்தின் எல்லை அருகாக ஓடுகிறது.
கலைஞர் கனகரத்தினத்தின் தந்தை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் பஜனைபாடும் குழுவில் முன்னணிப்பாடகராக விளங்கினார். பிரபலியமான ஆர்மோனிய வித்துவான்களாகிய திரு.பத்தினியர் வேலுப்பிள்ளை கள்ளிமேட்டைச் சேர்ந்த திரு.க.கணபதிப்பிள்ளை போன்ற தம்பலகாமத்தின் இசை மேதைகள் இந்த பஜனையில் தவறாமல் கலந்து கொள்வார்கள். இவர்களுடன் இணைந்துகொண்டு கலைஞர் கனகரத்தினமும் ஆர்மோனியம் பழக ஆரம்பித்தார். அதில் ஓரளவு தேர்ச்சிபெற்ற பிறகு மெல்லிசையில் அவர் நாட்டம் சென்றது. தந்தையிடமிருந்த ஆர்மோனியப் பெட்டியில் தாமாகவே மெல்லிசைப் பாடல்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

 இந்தப்பழக்கமே அவர் ஒரு சிறந்த ஆர்மோனியக் கலைஞராக வரக் காரணமாயிற்று. இடைவிடாத ஈடுபாடும் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி தி.க.சண்முகலிங்கம்  அவர்களின் மேலான ஆலோசனைகளும் அவர்கள் இணைந்து கலந்து கொண்ட இசைக் இசைக்கச்சேரிகளின் விமர்சனங்களும் சின்னத்தம்பி கனகரத்தினத்திற்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

இளைஞர்கள் கலைஞர் கனகரத்தினத்தின் ஆர்மோனிய வாசிப்பையே பெரிதும் விரும்பினார்கள். இளமையில் இவரை அவரது நண்பர்கள் ‘சுழல் துப்பாக்கி’ என்றே அழைப்பார்கள். கரப்பந்தாடும் பொழுது இவர் சுழன்று அடிப்பதைப்பார்த்து அவரது நண்பர்கள் இப்பெயரைச் சூட்டியதாகக் கூறுகின்றனர்.

மிகச்சிறந்த கலைஞராக நம்காலத்தில் விளங்கிய கலைஞர் கனகரத்தினம் அவர்கள்  இளைமைக்காலத்திலேயே எம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.அவரது பிரிவு தம்பலகாமத்தின் இசைப்பாரம்பரியத்திற்கு பேரிழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலாயுதம் தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment