Wednesday, August 21, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4

கலிங்க மாகன்
கலிங்க மாகன்
முதலாம் விஜயபாகு ( கி.பி 1055 - 1110 )மன்னன் காலத்தில் கந்தளாய் விஜயராசச் சதுர்வேதி மங்கலம் என்றும் அங்குள்ள சிவன் கோவில் விஜயராஜ ஈஸ்வரம் என்றும் அழைக்கபட்டது. கி.பி 1097 இல் நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை வர்ணிக்கிற சாசனம் முதலாம் விஜயபாகுவின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டதாகும்.(1)
இதனைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கஜபாகு (கி.பி 1132 - 1153)மன்னன் கோகர்ணத்தில் இருந்த சிவாலயத்திற்கு (திருக்கோணேச்சரம் ) தொண்டுகளைச் செய்தான் என கோணேசர் கல்வெட்டும் , ஶ்ரீ தக்க்ஷிண கைலாசபுராணமும் சொல்கிறது. அத்தோடு கந்தளாயில் உள்ள சாசனங்கள் அவன் விஜயராஜ ஈஸ்வரத்துடன் கொண்டிருந்த தொடர்புகளை உணர்த்துகிறது.

மேற்கூறிய காலப்பகுதிகளில் தம்பலகாமம்,கந்தளாய்,திருகோணமலை என்பன சிங்கள ஆட்சியாளர்களின் மேலாண்மையை ஏற்றிருந்த போதும் அங்குவாழ்ந்த மக்களின் மொழி,சமய,பண்பாட்டு வழக்கங்களில் இடையூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்றே கருதவேண்டி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தம்பலகாமம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாக கருதப்படும் தம்பலகாமம் கல்வெட்டு ஆகும். கலிங்க மாகன் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்(1215), அக்காலத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டான் என்பது வரலாறு. எனினும் இச்சாசனத்தில் அரசனின் பெயர் அடையாளங் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமாகப் பதினொரு வரிகளைக்கொண்ட துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில்  5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

இச்சாசனம் தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அத்தோடு இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்  உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் அதேவேளை  ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது  ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இங்கு இருந்துள்ளது என்பதனையும் இந்தச் சாசனத்தின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

எனவே தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாசன வழக்கில் இருந்ததை மேற்கூறிய தம்பலகாமம் கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

கந்தளாய் ,கொட்டியாரம்,கட்டுக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் , புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி,சிங்கள வரலாற்று நூல்கள் சொல்கின்றன. தம்பலகாமம் அக்காலப்பகுதியில் ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீரபட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக ‘தம்பன் கோட்டை’ என இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடம் பழமையில் சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் தம்பலகாமத்தைச் சேர்ந்த வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.(2)

‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் இவன் கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை  ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ள பகுதியாகும்.
உதயனை யானை போட்ட கல்நெருக்கம்
உதயனை யானை போட்ட கல்நெருக்கம்
இக்காலப்பகுதியில் குதிரைப்படைக்குத் தலைமைதாங்கிச் சென்ற இரத்தினாவதி தேவியின் மகனான உதயகுமாரனும் படைகளும் கந்தளாயில் இருந்து தம்பன் கோட்டைக்குத் திரும்பி வரும் போது உதயகுமாரனை கல்நெருக்கம் என்ற இடத்திலேயே யானை தாக்கியது. கல்நெருக்கம் என்ற இடம் தம்பலகாமத்துக்கும் கந்தளாய்க்கும் இடையே உள்ள வயல்பகுதியில் இருக்கிறது.

இந்த வரலாற்றாதாரம்தான் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் ரங்கநாயகியின் காதலன் என்னும் குறுநாவலின் அடிப்படை என்பது இங்கு குறிப்பிடத்தக்தாககும்.

          த.ஜீவராஜ்                                                                                தொடரும்.....

ஆதாரங்கள்
1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
2. தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள் - வே. தங்கராசா


மேலும் வாசிக்க
   வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dear Dr
    This piece of research is very interesting and describe our history. I was very happy to read and feel proud of Thampalakamam. I have already read the work of well known author late Veleuthanar'. Thanks a lot for reminding once again
    Kernippiththan

    ReplyDelete