Thursday, August 02, 2012

காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்


எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது தம்பலகாமம். ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முன்பு வணிகப் பெருநகராக தம்பலகாமம் விளங்கியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இதற்கு “தம்பலகாமம் கல்வெட்டு” சான்று பகருகின்றது.

இத்தகைய சிறப்புப் பெற்ற பெரு நகரில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் புகழோங்க வாழ்ந்தவர்தான் காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்.
தென்னகத்து சினிமா உலகில் புகழ் பெற்ற “கிட்டப்பாவின்” குரல் வளத்தை உடைய காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார் தனது இனிய பாடல்களால்இ தம்பலகாமம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.

இந்த கால கட்டத்தில்தான் இந்தியாவிலிருந்து ஆர்மோனிய வித்துவான் சின்னையாசாய்வும், மிருதங்க வித்துவான் மதறிசாவும், வாய்ப்பாட்டுக்காரர் கரீம் பாயும் தம்பலகாமம் வந்து தங்கியிருந்தார்கள். பின்னாளில் வேல்நாயகம், எஸ்.ஆர்.கமலம் ஆகியோர்களும் இவர்களுடன் வந்து கலந்து கொண்டனர். இவர்களை கணபதிப்பிள்ளை அண்ணாவியார் கல்விமேட்டில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து வந்தார் என விசயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் உள்ளுர் கலைஞர்கள் ஒரு சிலரை தம்முடன் இணைத்துக் கொண்டு கோயில் குடியிருப்பில் தரமான நாடகங்களை மேடையேற்றினார்கள். அனுமதிச் சீட்டுக்களும் இங்கேயே விற்பனை செய்யப்பட்டன.

இதே வேளையில் ஆர்மோனிய வித்துவான் சின்னையா சாய்வு, ஆர்வம் நிறைந்தவர்களுக்கு ஆர்மோனியத்தைக் கற்றுக் கொடுத்தார். இவர்களிடம் முறையாக ஆர்மோனியம், மிருதங்கம் ஆகிய வாத்தியங்களைக் கற்றவர்கள்தான், பிற்காலத்தில் சிறந்த கலைஞர்களாக விளங்கினார்கள். பெரும்பாலும் தம்பலகாமத்தில் வாழ்ந்த அண்ணாவிமார்கள் அனைவரும் ஆர்மோனியம் வாசிப்பதில் கை தேர்ந்தவர்களாக விளங்கினர். இந்தத் திறமையால்தான் அவர்கள் நினைத்த போதெல்லாம் நாடகங்களை நெறிப்படுத்தவும், மேடையேற்றக் கூடியதாகவும் இருந்தது.

பெரும்பாலும் இங்கே வாழ்ந்த அண்ணாவிமார்கள் கலைத்துறையில் சாதனை படைத்ததுபோல, சுதேச வைத்தியத்துறையிலும் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்கினார்கள். உதாரணமாக கல்விமேட்டில் வாழ்ந்த கணபதிப்பிள்ளை அண்ணாவியார், நாயன்மார்திடலில் வாழ்ந்த வேலுப்பிள்ளை அண்ணாவியார் போன்றவர்கள் சிறந்த புகழ் பெற்ற சித்த வைத்தியர்களாகவும், தலைசிறந்த கலைஞர்களாகவும் விளங்கினார்கள்.
தம்பலகாமத்தில் “கல்விமேடு” வரலாற்றுத் தொடர்புடன் பின்னிப் பிணைந்த இடமாகும். ஆரம்பத்தில் “கள்ளிமேடு” என அழைக்கப்பட்ட இந்தக்கிராமம், காலப்போக்கில் கல்விமேடாக மாறியதாகச் சொல்லப்படுகிறது.

வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலின் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாக கல்விமேட்டு ‘ஆலயடி மைதானம்’; விளங்குகிறது.
கண்ணகி கோவலன் மணவிழா

இந்த ஆலயடி மைதானத்தில் மேள தாள சீர்வரிசைகளுடன் கன்னிக்கால் நட்டுப் பல கொட்டகைகள் அமைத்து கோவலன் கண்ணகி மண விழாவாக பத்தினித் தேவி விழா பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு நாளும் விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் வெள்ளை விரித்துப் பந்தி வைத்து திருமணச் சாப்பாடு வழங்கப்படும். தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் வயல் மானியம் பெறும் ஏவி அடப்பனும் குடும்பமும், பொன்னாலை அடப்பனும் குடும்பமும், கொட்டியாபுரத்திலுள்ள சிந்து நாட்டு அடப்பன் குடும்பமும் புத்தாடையணிந்து மேள, தாள, மேற்கட்டி நிலப் பாவாடை சீர்வரிசைகளுடன் பச்சை எடுத்தல் நோன்பு நோர்த்தல் போன்ற கிரிகைகளை அடிப்படையாகக் கொண்டு பல கிரிகை வைபவங்கள் நடைபெறும். இந்த விழாவுக்கான சகல செலவுகளையும் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலே செலவிடுவதுடன் இவ்விழாவில் ஊழியம் புரியும் தொமும்பாளர்களுக்கு வயல் மானியங்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது இவ்வெளிச்சுற்று வழிபாட்டு முறை அருகி வருகிறது.

புனிதமான இவ் வழிபாட்டுத் தலம் தனது பழமைப் பெருமையை இழந்து வெறிச்சோடிக்; கிடக்கிறது. இந்தக் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வரலாற்றுப் புகழ் மிக்க இப்புண்ணிய தலத்தை கரப்பந்தாட்ட மைதானமாக அசிங்கப்படுத்தி வருகின்றனர். ‘மழை வேண்டும் பொழுது மழையும், வெயில் வேண்டும் பொழுது வெயிலும்’ பெற்றுக் கொள்ளக் கூடிய அற்புதமான வழிபாட்டுத் தலமாக குளக்கோட்டு மன்னனால் உருவாக்கப்பட்ட இத்தலம் இன்று அதன் பெருமைகளை இழந்து வெறிச்சோடிக் கிடப்பது பெரும் வேதனைக்குரியது.

கல்விமேட்டில் குடியிருக்கும் ஏவி அடப்பன் திரு.ந.மனோகரன் அவர்கள் இத்தலத்தின் புனிதத்தை பேணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய பரிபாலன சபையும் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் இவ்வழிபாட்டை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும்.

தம்பலகாமத்தில் புகழ்பூத்த அண்ணாவிமார்களில் பெரும்பாலானோர் கல்விமேட்டைச் சேர்ந்தவர்களே. குறிப்பாக அண்ணாவிமார்களில் தலைசிறந்த ‘கணபதிப்பிள்ளை அண்ணாவியார்’ கல்வி மேட்டில் பிறந்தவர். சிறந்த கலைஞராகவும், அதிசிறந்த ஆயுள் வேத வைத்தியராகவும் தனது காலத்தில் நாடகங்களை மேடையேற்றி மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெறவும் இவரால் முடிந்தது. இவரைப் போல காளியப்பு முருகுப்பிள்ளையும் கல்விமேட்டைச் சேர்ந்தவரேயாகும்.

கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கும் திரு.க.மகாலிங்கம், சண் இசைக்குழுவின் இயக்குனர் கலைஞர் திரு.ச.முருகமூர்த்தி, வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கும் கலைஞர் திரு.ம.நாகராசா போன்றோர்களும் கல்வி மேட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். ‘வாலர்’ என்ற பெயரில் ஒரு கவிஞர் வாழ்ந்ததாகவும் அவர் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் மீது பதிகம் பாடியதாகவும் கூறும் சிலர் அவர் பாடிய பாடல்கள் சிலவற்றைப் பாடியும் காட்டுகின்றனர்.

காவடிச்சிந்து என்னும் அற்புதமான பாடல்களை கேட்போர் வியக்கும் வண்ணம் பாடும் ஆற்றல் மிக்க திரு.லிங்கராசா அவர்கள் பிறந்த இடமும், வாழ்ந்த இடமும் கல்வி மேடுதான். குருவில்லாமல் சிற்பக்கலையைப் பயின்று நம்பமுடியாத வண்ணம் சிற்பங்கள் வடிக்கும் திரு.க.கிருபானந்தம் கிராமசேவகர் அவர்களின் தாயகமும் இந்தக் கல்விமேடுதான். பழமையில் குறுநில மன்னர்களுக்கான செல்வாக்குடன் வாழ்ந்த தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஏவியடப்பன் திரு.ந.மனோகரன் அவர்கள் வாழும் இடமும் இந்தக் கல்விமேடுதான்.

இத்தகைய சிறப்புப் பெற்ற கல்வி மேட்டில் காளியப்பு முருகுப்பிள்ளைக்கும் அவரது தர்மபத்தினி தெய்வானப்பிள்ளைக்கும் ஆறு பிள்ளைகள். நால்வர் பெண்கள், இருவர் ஆண்கள். இவர்களில் பாக்கியம் என்பவரின் மகள் பெயர் ஜெயப்பிரியா. நல்ல குரல் வளத்தோடு சிறப்பாகப்பாடும் திறமை பெற்றிருந்த போதும் இவர் இசைத்துறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. பின்னாளில் தனக்கு ஒரு வாரிசு இருக்க வேண்டும் என்ற நோக்கில் தனது மகன் முறையான கந்தசாமி என்பவரை முறைப்படி சங்கீதக் கலையைப் பயிற்றுவித்தார் எனினும் அம்முயற்சி கூட சரியாக நிறைவேறவில்லை.

திருகோணமலை, நிலாவெளி, சம்பூர், கட்டைபறிச்சான், ஆலங்கேணி, பாலம்போட்டாறு போன்றவிடங்களில் இவரது இசைக்கச்சேரிகள் இடம் பெற்று மக்களின் அமோக ஆதரவைப் பெற்றன. “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”; என்பது ஆன்றோர் வாக்கு. இவரது அபரிதமான பாடுந்திறனை அறிந்து கொண்ட திரு. சரவணமுத்துப் பண்டிதர் அவர்கள் தாம் தலைவராக இருந்த காலப்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாகர் கோயிலில் பஜனைகளை ஒழுங்காக மேற்கொள்வதற்காக ‘பிராமணகீத்து’ என்னும் இரண்டு ஏக்கர் வயற்காணியை மானியமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த ஆர்மோனியக் கலைஞராகவும், பாடகராகவும் தமது காலத்தில் விளங்கிய கலைஞர் காளியப்பு முருகுப்பிள்ளைக்கு ஒரு வாரிசு இல்லாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.

  வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment