Friday, November 16, 2012

சரித்திரம் படைப்பாய் என்றார்

குரு

சத்திய காமன் என்னும்
சரித்திர புருசன் ஓர் நாள்
விசித்திர மான எண்ணம்
விரைவாக மனதில் தோன்ற
தாயிடம் சென்று அவள்
தாழினைப் பற்றிச் சொல்வான்
அம்மா நான் பிரமம் பற்றி
அறிய நல்லாவல் கொண்டேன்.

தக்க தோர் குருவை நாடி
தாழினை வணங்கி அந்த
அற்புதக் கலையைப் பயில
ஆசிகள் தந்தருள்வாய்.
என்றவள் பாதம் பற்றி
இறைஞ்சினான் சத்திய காமன்.
தாயும் தன் தனயன் ஆசை
தளைத்திட வழிகள் சொல்வாள்..

நல்லது மகனே! உன்றன்
நலன் தரும் ஆசை வெல்ல
வழிகளைச் சொல்வேன் கேட்டு
மயங்கிட வேண்டா மனதில்
உறுதியை ஏற்றிப் ‘பொய்மை’
உணர்வினை அகற்றிச் சத்திய
வழிதனில் நிற்பா யாகில்
வாய்த்திடும் என்றுரைத்தாள்.

குருவை நீ நாடும் போது
குலமெது? என்று கேட்பார்.
எனது தாய் ‘ஜபாலா’ என்று
எடுத்துரை வீடு வீடாய்
ஏவல் வேலை செய்த
ஏழை என் தாயார் உண்மை
அவ்வளவே தெரியும் என்று
அவரிடம் எடுத்துச் சொல்லு.

செப்பிடு மகனே உன்றன்
திருவாக்கே பலன் அளிக்கும்
என்றவள் துணிந்து சொல்ல
இவனும் அதற் கிணங்கி
சென்றனன் குருவை நாடி
நெஞ்சினில் ஆவல் பொங்க
நீண்ட நாள் அலைந்த காமன்
‘கௌதமர்’ இல்லம் வந்தான்.

அரசனாய்ப் பிறந்தான் இல்லை
அந்தணர் குடியுமில்லை
சென்றவன் குரு தாழ் பற்றி
சிந்தனை யோடு நிற்க
என்னப்பா எங்கு வந்தாய்?
என்றவர் அன்பு பொங்க
இவனிடம் கேட்கச் சத்தியன்
இவ்வாறு கூற லானான்.

‘பிரம வித்தை’ தன்னை
பிரியமாய் அறிய வந்தேன்.
என்னையும் தங்கள் சீடனாய்
ஏற்றருள் புரிக என்றான்.
நல்லது மகனே!உன்றன்
குலமெது? என்று கேட்டு
குருவான அவரும் நோக்க
சத்திய காமன் சொல்வான்.

ஐயனே! என்றன் குலம்
அறிந்திடேன் அன்னை ஜபாலா
பணிப்பெண்ணாகப் பலரிடம்
பணி புரிந்த வேளை
என்னைப் பெற்றெடுத்தாள்
என் தந்தையின் பெயரும் அறியேன்.
அதனால் குலம் பற்றி
அறிந்திலேன் என்று சொன்னான்.

அப்படியா? என்று
அதிர்த்சியில் ஆழ்ந்த குரு
‘உள்ளதை உள்ளதாக
உரைத்திடும் உயர்ந்த பண்பு’
பிராமண குலத்தவரின்
பிறப்பியல் பென்று சொல்லி
சத்திய காமன் தன்னைத்
தழுவிய நிலையில் சொல்வார்.

சத்தியம் காப்ப தொன்றே!
தர்மமும் நெறியுமாகும்.
சத்யமே கடவுளாகும்
சகலரும் அறிவார் இதனை.
மனதிலே கபட மின்றி
வாழ்வியல் உண்மை சொன்ன
சத்திய காமா நீதான்
சரித்திரம் படைப்பாய்! என்றார்.
வேலாயுதம் தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

 1. சிறப்பான வாழ்வியல் உண்மை...

  ReplyDelete
 2. we do have a school in hyderabad by the name "satkama" where values and virtues are taught apart from academics it is primarily value based education that is imparted to students

  r radharishnan

  ReplyDelete
 3. we do have a school by name satkama were value bsduation is imparted to studet

  radakris

  ReplyDelete
 4. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

  ReplyDelete