Sunday, September 23, 2012

நள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்

தம்பலகாமம்

இரவு பதினொரு மணி பௌர்ணமிக்கு முதல்நாள் ஆகையால் நிலவு பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. நித்திரை வராததால் சித்திரா பாயில் புரண்டுகொண்டு கிடந்தாள்.சித்திராவின் இளம் மனதைப் பலவிதமான இன்ப துன்ப நினைவுகளும் யோசனைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

அவளுக்கு ஒன்பது வயது ஆகிக்கொண்டிருந்த போது அவள் தாய் சிவகாமிப்பிள்ளை நோய் வந்து இறந்து போனாள். அன்று தொடக்கம் பதினெட்டு வயதை எய்திய இந்நாள் வரை தாய் இல்லாத குறைதெரியாமல் அவள் அப்பா தாயாகவும் தந்தையாகவும் பரிவு காட்டி வளர்த்து பெரியவளாக்கி விட்டார்.

ஊரில் நோய் கண்டவர்களுக் கெல்லாம் மருந்து கொடுத்து நோய்தீர்த்த பிரசித்த நாட்டு வைத்தியரான அவரை வாத நோய் ஒரே அமுக்காக அமுக்கிப் பாயில் கிடத்திவிட்டது. இன்னொரு நாட்டு வைத்தியரான கணபதிப்பிள்ளை பரியாரியாரிடம் தொடர்ந்து வைத்தியம் செய்ததில் இப்போது சற்று குணமேற்பட்டுக் கோலூன்றி நடக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

சித்ராவின் தந்தையான நமச்சிவாய வைத்தியருக்கு கொஞ்சம் பூர்வீகச் சொத்திருந்தது. அவர் இவ்வளவு காலமும் வாழ்ந்த வகையில் கரைந்து போனவை போகத் தம்பலகாமம் தெற்கு ஊர் வெளியில் மூன்றேக்கர் வயல் மட்டும் மிஞ்சியிருந்தது. அந்த வயலை கூலியாட்களைக் கொண்டு செய்கை பண்ணி விதைத்து ஒரு மாதமாகியும் பயிருக்கு ‘கங்களவு’என்னும் முதல் நீர் பாய்ச்ச முடியவில்லை. பயிருக்கு கங்களவு என்னும் முதல் நீர் பாய்ச்சுவது தம்பலகாமத்தில் பெரிய பிரச்சனையாகவே இருக்கும். பொருட்பலமும்; உடற்பலமும்; உள்ளவர்களே இந்த கங்களவு பாய்ச்சும் போட்டியில் வெற்றிபெறுவார்கள்.

இந்த கங்களவு நீர் பாய்ச்சும் காலத்தில் விவசாயிகள் ஆத்திரமுற்று ஒருவர் தலையை இன்னொருவர் மண் வெட்டியால் தாக்கி உடைத்து விடுவதும் உண்டு. பொதுவாக இந்த கங்களவு நீர் பாய்ச்சும் காலத்தில் நீதி நியாயம் என்றெல்லாம் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

தம்பலகாமம்

நமச்சிவாயப் பரியாரியாரின் வயல் மட்டுமல்லாமல் அப்பகுதியிலுள்ள இன்னும் சிலரின் வயல்களும் முதல் நீர் பாயாததால் பாளம் பாளமாக வெடித்துப் பயிர்கள்கருகிச் செத்துக் கொண்டிருந்தன. வைத்தியர் பலரிடம் தம் வயலுக்குக் கூலிமுறையில் நீர் பாய்ச்சித் தருமாறு கேட்டிருந்தும் அவர்களாலும் ஒன்றும் முடியவில்லை.

வைத்தியருக்கு நோய் கடுமையானதை தொடர்ந்து வைத்தியரின் விதவைத் தங்கை ஒருவர் கொட்டியாபுரத்திலிருந்து வந்து அண்ணருக்கும் மருமகளுக்கும் உதவியாக இருந்து வந்தார். அந்தப்பெண்ணும் தன் பிள்ளைகளைப் போய்ப் பார்த்துவரக் கொட்டியாபுரம் போய் இருந்ததால் வீட்டில் வைத்தியரும் மகளும் மட்டுமே இருந்தனர்.

பாயில் தூக்கமில்லாமல் விழித்துக் கொண்டு கிடந்த சித்திரா பக்கத்தில் துப்பட்டியால் உடல் முழுவதையும் மூடிப்படுத்துக்கிடக்கும் தந்தையைப் பார்த்தாள். சாளரத்தினூடாகச் சந்திர ஒளி பாய்ந்து அவ்விடத்தைப் பிரகாசமடையச் செய்துகொண்டிருந்தது. பகல் முழுவதும் நீரின்றிச்சாகும்; தன் வயலைப்பார்த்துப் பார்த்து வேதனையுறும் நமச்சிவாய பரியாரியார் இப்போது வயல் கவலையை மறந்து குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.

தன்னை தாயாகவும் தந்தையாகவும் தனித்துப் பாடுபட்டு வளர்த்த அந்த அன்புருவத்தைப் பார்க்கும் போதெல்லாம் சித்திராவுக்குப் பெரும் வேதனையாக இருந்தது. ‘நான் ஒரு ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் அப்பா நடக்கமுடியாமல் முடங்கியஇக்காலத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சி தந்தையாருக்கு உதவியாக இருந்திருப்பேனே? பெண்ணாகப் பிறந்து விட்ட என்னால் என்ன செய்ய முடியும்?’ என்றெண்ணிச் சஞ்சலமடைந்தாள்.

“ஏன் என்னால் ஒன்றும் செய்யமுடியாதா? பகல் போல் எறிக்கும் இந்த நிலவில்போய் மேலாற்றில் கட்டியிருக்கும் மறிப்பை முறித்துவிட்டு வந்தால்
விடிவதற்குள் நம்வயலுக்கு நீர்பாய்ந்துவிடும் அப்பாகாலையில் வந்து வயலைப்பார்த்து சந்தோசப் படுவார்.”

என எண்ணினாள்.உடனே அவளுக்கு சந்தேகமும் வந்து விட்டது. “நம்மால் இந்த நடு இரவில் துணிந்துபோய் ஆற்றுக்கட்டை முறித்து தண்ணீர் கொண்டுவர முடியுமா? ஏன்முடியாது?

ஜான்ஜிராணி லட்சுமிபாய் சமர்முனையில் சக்திவாய்ந்த பிரிட்டிஸ் சைனியத்தையே கதி கலங்கச் செய்யவில்லையா? அவரும் நம்மைப் போன்ற இளம் பெண்தானே? கேவலம் இரவில் போய் ஆற்றுநீரை முறித்துவிடுவதற்கு நாம் அஞ்சலாமா?ஆற்றை மறித்தவர்கள் கூட இவ்வளவு நேரத்திற்கும் அங்கிருக்க மாட்டார்கள் வீட்டுக்குப் போயிருப்பார்கள். என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்தாள்.கொடியில் அப்பாவின் நான்குமுழ வேட்டி சட்டை சால்வை போன்றவைகள் கிடந்தன. இவைகளைக் கண்டதும் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

தூங்கும் தந்தையை ஒரு முறை பார்த்துவிட்டுக் கொடியில் கிடந்த வேட்டியை எடுத்து தான் உடுத்திருக்கும் ‘சோட்டிக்கு’மேலாக சுற்றிக்கட்டிக் கொண்டாள். சட்டையைப் போட்டுக் கொண்டாள்.சால்வையை எடுத்து தலையில் முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு அங்கு மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.தனது அழகான பெண் உருவம் வேட்டி சால்வை அணிந்த மீசை இல்லாத அழகான இளைஞன் போலத் தோன்றியது. சத்தம் செய்யாமல் வெளியே வந்த சித்திரா அங்குகிடந்த மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு பனையடி அற்றோரமுள்ள வயல் பாதை வழியே ‘பெத்திராசு’ முகவணையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.மாசு மறுவற்ற துல்லியமான நீல வானில் நிலவு பகல்போலக் காய்ந்துகொண்டிருந்தது அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

தம்பலகாமம்

தம்பலகாமத்திலுள்ள பெரிய கமக்காரர்களில் நாகப்பாப் போடியாரும் ஒருவர். அவரிடம் ஒரு கிராமியச் செல்வந்தரிடம் இருக்கவேண்டிய அட்ட ஐஸ்வரியங்களும் இருந்தன. அவரது வயல்நிலங்களை பல செய்கைக்காரர்கள் செய்கைபண்ணியிருந்தனர். பேராற்றின் மேற்குப்பகுதியில் நடுவுப் பகுதி என்னும் வயல் பிரதேசத்தில் இருபது ஏக்கர் வயல் சொந்தமாக இருந்தது.அந்த வயலை நாகப்பாப் போடியார் தம் கணக்கில் செய்கைக்கார்களையும் கூலியாட்களையும் கொண்டு செய்கைபண்ணியிருந்தார்.

இந்த வயல்பகுதி சற்று மேடாக இருந்ததால் விதைத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தண்ணீர்பாயவில்லை.வயல்பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. நாகப்பா தனது வயலுக்கு தந்திர முறையில் நீர் பாய்ச்ச ஏற்பாடு செய்திருந்தார். சண்டியன் கதிர்காமனின் தலைமையில் நீர் பாய்ச்ச ஒழுங்குகள் செய்து சண்டியருடன் தனது செய்கைக்காரர்கள் சிலரையும் அவர்கள் இரவுமுழுவதும் ஆற்றைமறித்து நீர் பாய்ச்சுவதற்கு தேவையான சாமான்களையும் பெத்திராசு முகவணைக்கு அனுப்பியிருந்தார்.

சண்டியனின் துணையுடன் நாகப்பா தம் வயலுக்கு நிர் பாய்ச்சுகிறார் என்ற விசயம் விவசாயிகளுக்கு தெரிந்து விட்டதால் அன்று இரவு இந்த ஆறுகளில் தண்ணீர் கொண்டுபோக யாருமே வரவில்லை.ஆறுகளில் வெள்ளம்போல் மேலுயர்ந்த நீர் நாகப்பாவின் வயலில் பாய்ந்து கொண்டிருந்தது. சண்டியரும் செய்கைக்காரர்களும் முகவணையிலுள்ள மணற்றிடலில் வண்டியில் கொண்டுவந்திருந்த பெரிய கொள்ளிக்கட்டைகளை அடுக்கி தீ மூட்டிக்கொண்டு இரவு உணவுடன் சாராயமும் அருந்தி மது போதையில் கதைத்துப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே இருந்த இடத்தில் சாய்ந்தவாறே உறங்கிப் போய் விட்டார்கள்.

சீறி மேலெழுந்து பற்றிய நெருப்பு தணிந்து நீறுபூத்த நெருப்பாக இருந்தது. நாகப்பா கமக்காரர் இவ்வளவு ஏற்பாடுகள் செய்து தமது வயலுக்கு நீர் பாய்சுவதைப் பற்றி அறியாத யுவதியான சித்திரா ‘இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழிக்கேற்ப சரிசாமவேளையில் பகல்போல் எறிக்கும் நிலவில் பெத்திசாசு முகவணையை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். அப்போது திருமால்கை ஊரிலுள்ள மரங்களிலிருந்து ஆந்தைகள் மனிதர்கள் போல ‘ஊம் ஊம்’ என்று அலறின. கோயில் குடியிருப்பு பக்கமாக உள்ள வயல்களில் நண்டுபிடித்துத் தின்றுகொண்டிருந்த நரிகள் கூட்டாகச் சேர்ந்து ஊளையிட்டன.இந்தச் சத்தங்களைக் கேட்டு சித்திரா அச்சமடைந்தாள்.

‘இனிஎன்ன செய்வது வந்து விட்டோம். திரும்பிச் செல்வதானாலும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும். துணிந்து வந்த நாம் கட்டையாவது முறித்துவிட்டுப் போவோம்.’

என்று எண்ணியவளாக மனதைத்திடப்படுத்திக் கொண்டு முகவணையை நோக்கி வேகமாக நடந்தாள். இரவில் மனிதர்களே இல்லாத இடத்தில் தன்னந்தனியாகச் செல்கிறோமே என்ற அச்சஉணர்வு அவளை வாட்டி வதைத்தது. பனி பெய்துகொண்டிருக்கும் அவ்வேளையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

வெள்ளமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பெத்திராசு முகவணையை நெருங்கிய சித்திரா அங்கும் இங்கும் பார்த்தாள். அங்கே மணல் நிறைந்த திட்டியில் பலர் துணியால் போர்த்தவாறு குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆற்றை மறித்துக் காவலுக்காக அவர்கள் அங்கே இருக்கின்றனர் என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட அவள் பூனை போல சத்தம் செய்யாமல் மறிப்பருகே நடந்து சென்று அடுக்கியிருக்கும் களிப்புட்டிகளில் இரண்டு மூன்றை எடுத்து விட்டாள். அவ்வளவுதான் அந்த மறிப்புக்கட்டில் சுரந்து மேலெழுந்து நின்ற நீர்ப்பிரவாகம் ‘சலார்’ என்ற ஓசையுடன் பனையடியாற்றில் குதித்தோடத் தொடங்கியது. நித்திரை கொள்பவர்கள் நீர் அரவம் கேட்டு எழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வந்த வழியே சித்திரா ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி விரைந்தாள்.

அதே சமயம் நாகப்பாப் போடியாரின் மகன் வரதராசன் தண்ணீர் எந்தமட்டும் பாய்ந்திருக்கிறது என்று பார்ப்பதற்காக வயலின் தெற்குப்பக்கம் வரை சென்று முகவணைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அணையின் அருகே ஒரு வெள்ளை உருவம் தோன்றியது போல வரதராசனுக்குத் தெரிந்தது. பிரகாசித்துக் கொண்டிருக்கும் சந்திரனை மேகக்கூட்டம் மறைத்ததால் அந்த வெள்ளை உருவை இன்னதென்று வரதராசனால் அறிந்து கொள்ள முடியவில்லை. கையில் ‘டோச்லைற்’ இருந்தாலும் அதை அவன் உபயோகிக்கவில்லை.

அணைக்கட்டை நெருங்கியபோது களிப்புட்டிகள் சில அகற்றப்பட்டு அந்த இடைவெளிக்குள்ளால் பனையடியாற்றில் நீர் சீறிப்பாய்வதை அவன் கண்டான். “அடே!தண்ணீர் பாய்ச்சுவதற்கு சண்டியர் பொறுப்பாக இருக்கிறார் என்பதை அறிந்தும் யாரோ வந்து பயமில்லாமல் புட்டிகளை அகற்றி தண்ணீரை ஓடவிட்டிருக்கிறார்கள்” என எண்ணியபோது அவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்த துணிந்த மனிதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வரதராசன் வந்தவழியே சத்தம் செய்யாமல் அந்த உருவத்தைப் பின் தொடர்ந்தான்.

சோளகக்காற்றின் ஆரவாரமான சல சலப்புச் சத்தத்தால் தனக்குப் பின்னால் ஒருவன் தொடர்ந்து வருவதை சித்திராவால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. முன்னே போகும் உருவம் ஒரு இளம் பையன்போலத் தெரிந்ததால் தைரியமடைந்த வரதராசன் “யார் நீ” என்று கேட்டவாறே அவன் தோளிலிருக்கும் மண்வெட்டியின் பின்புறத்தைப் பிடித்து இலேசாக இழுத்தான்.

வெகு சமீபத்திலிருந்து ஒரு ஆண்குரல் கேட்டதுடன் மண்வெட்டி பிடித்திழுக்கப்படுவதையும் கண்டு திகிலடைந்து புள்ளிமான் போல் துள்ளித் திரும்பியபோது புல் தடக்கி சித்திரா விழுந்துவிடப் போனாள். யாரோ பையன் என்று எண்ணியிருந்த வரதராசன் கைகளை நீட்டி விழுந்து விடாமல் அந்த உருவத்தை தாங்கி நிறுத்தினான். தலையில் கட்டியிருந்த தலைப்பாகை இந்த நிலைகுலைவில் அவிழ்ந்து விழுந்துவிட்டதால் வேட்டி சட்டை போன்ற உடைக்குள் மறைந்திருந்த சந்திரவதனம் நிலவொளியில் பளிச்சிட்டது. நடு இரவில் ஒரு அழகிய யுவதி வேட்டி சட்டை அணிந்து ஆண்வேடத்தில் தன்னந்தனியாக ஆற்றுக் கட்டுக்கு வந்திருப்பதைக் கண்டு வரதராசன் வியப்புக்குள்ளானான். அப்பெண் யார் என்றும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.

வரதராசன் படிக்கும் முயற்சியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அதிகமாக தங்கியிருக்க நேரிட்டதால் தம்பலகாமத்திலுள்ளவர்களை சரிவரத்தெரியாது. ஆயினும் விடுமுறை காலங்களில் அவன் ஊர்வந்தபோது அவன் நண்பர்கள் நமச்சிவாய வைத்தியரின் மகள் சித்திரா பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்கள். தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர கலைப்பிரிவில் அவள் பயின்றபோது கலைவிழாக்களில் பங்கேற்று நடித்து பெரும்புகழ் பெற்றிருந்ததையும் அவளின் நிகரற்ற வனப்பையும் அடிக்கடி கூறியிருக்கிறார்கள். வரதராசன் ஓரிரு தடவை நண்பர்கள் காட்ட சித்திராவைக் கண்டான் எனினும் அவளை நன்றாகப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவளை தனிமையில் கண்டு பேசும் வாய்ப்பு கிடைக்காதா? என்றும் எதிர்பார்த்திருந்தான். சித்திரா பற்றிய நண்பர்களின் புகழ் உரையாலும் நேரில் ஓரிரு சமயம் தான்கண்ட சித்திராவின் வசீகரத் தோற்றத்தாலும் வரதராசன் கவரப்பட்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

குளிர்ச்சியான நிலவில் மிகச்சமீபமாக எதிரும் புதிருமாக நின்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். சிறிது நேரத்திற்குப் பின் வரதராசனே கொஞ்சம் தைரியத்தை வரவளைத்துக் கொண்டு பேசினான்.
“நீங்கள் நமச்சிவாய வைத்தியரின் மகளல்லவா?” என்றான்.

‘ஆம்;’ என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தாள் சித்திரா.

“ஏன் இந்த நடு ராத்திரியில் இந்தக் கோலத்தில் வந்தீகள்?” என்றான் வரதராசன்

அவள் தட்டுத்தடுமாறித் தந்தை நடக்கமுடியாமல் இருக்கும் நிலையையும் தாங்கள் செய்த வயல் நீரில்லாமல் சாவதையும் ஓரளவு எடுத்து கூறினாள்.

தான் நாகப்பா போடியாரின் மகன் வரதராசன் என்று தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்ட அவன் “இனி நீங்கள் அந்த வயலைப்பற்றியோ? அல்லது குடும்ப நிலை பற்றியோ? கவலைப்பட வேண்டாம்.அவைகளை நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறி சித்திராவை அழைத்துக் கொண்டுபோய் பத்திரமாக அவளை வீட்டில் சேர்த்துவிட்டு அவளிடம் விடைபெற்றுக்கொண்டு முகவணைக்குத் திரும்பினான்.

மறுநாள் காலையில் கண்விழித்த வைத்தியர் செத்துக் கொண்டிருக்கும் தம் வயலுக்கு நாகப்பா போடியாரின் இரு செய்கைக் காரர்கள் தண்ணீர் பாய்சுவதைக் கண்டு வியந்தார். சித்திரா தான் தண்ணீர் முறித்துவரப் போன கதையை ஒன்றும் விடாமல் தந்தையிடம் கூறினாள்.அதைக் கேட்ட நமச்சிவாயப் பரியாரியார் வியப்புக் கடலுள் வீழ்ந்து கரையேற விரும்பாமல் மகிழ்ச்சியில் திணறினார்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்
( சிந்தாமணி -  1982   )
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment